தமிழின்பம்/பாரியும் மாரியும்
23. பாரியும் மாரியும்
பழந்தமிழ் நாட்டில் வரையாது பொருள் வழங்கும் வள்ளலார் பலர் வாழ்ந்து வந்தனர். குறுநில மன்னராய அப்பெருந்தகையார் அறிஞரையும் வறிஞரையும் ஆதரித்து என்றும் வாடாத செஞ்சொற் பாமாலை பெற்றார். அன்னவருள் தலைசிறந்தவன் பறம்புமலைக் கோமானாகிய பாரி. இயற்கை வளஞ்சான்ற பறம்புமலை நாட்டில் நெல்லும் கனியும், தேனும் கிழங்கும் நிரம்பக் கிடைத்தமையால் குடிகள் கவலையற்று வாழ்வாராயினர்.
பசியும் பகையும் இன்றி, வசியும் வளனும் பெருகிய அம்மலையின்மீது அமைந்த அரண்மனையில் கருணையின் வடிவமாக வீற்றிருந்தான் பாரி: அற்றார்க்கும் அலந்தார்க்கும் அவன் உற்ற துணைவன்; பசிப் பிணி என்னும் பாவியின் பெரும் பகைவன். கங்கு கரையற்ற அவ் வள்ளலின் கருணை, மன்னுயிர் முதலாகப் புல்லுயிர் ஈறாக உள்ள அனைத்துயிரையும் ஆதரிப்பதாயிற்று. ஒரு நாள் பாரி, தன் அழகிய தேர்மீது ஏறி, நாட்டு வளங்காணப் புறப்பட்டான்; செல்லும் வழியில் ஒரு முல்லைக்கொடியைக் கண்டான்; குறுகிக் கிடந்த அதன் நிலை கண்டு மனம் உருகினான்: தழைத்துச் செழித்துப் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பின்றிக் குழைந்து வாடிய கொடியின் துயர் கண்டு வருந்தினான்; அப் புல்லுயிரின் துன்பத்தைப் போக்கக் கருதித் தன் பெரிய தேரை அதன் அருகே கொண்டு நிறுத்தினான்: கொடியை எடுத்துத் தேர்மீது படரவிட்டு, கவலையற்ற முகத்தோடு தன் கோட்டையை நோக்கி நடந்தான். காட்டில் வாழ்ந்த கொடியும் ஒர் உயிர் என்றுணர்ந்து, அதற்கு உற்ற குறையைக் குறிப்பால் அறிந்து, உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிந்த வள்ளலின் பெருமையை,
"பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி"
என்று புலவர் பெருமானாகிய கபிலர் போற்றிப் புகழ்ந்தார். பாடிவந்த பாவலர்க்குப் பரிசளித்தலோடு அமையாது. வாய்விட்டுச் சொல்ல வகையறியாப் படர் கொடிக்கும் பெருங்கொடையளித்த பாரியின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவிற்று. "கைம்மாறு கருதாது மழை பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகம் போல், எல்லா உயிர்களையும் ஒல்லும் வகையால் ஆதரித்துப் புகழ் பெற்றான் பாரி” என்று புலவர் பலர் பாராட்டினர். அற்றார்க்குப் பொருள் வழங்கி அவர் இன்முகம் கண்டு இன்புற்ற பாரியை,
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
என்று பொய்யறியாக் கபிலர் போற்றிப் புகழ்ந்தார்! "மண்ணுலகைப் பாதுகாத்தற்கு மாரியும் உண்டென்பதை மறந்து, பாரி ஒருவனையே புலவர் அனைவரும் போற்றிப் புகழ்கின்றார்களே" என்று கவிஞர் அவ்வள்ளலை இகழ்வார்போற் புகழ்ந்துள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கதாகும். இவ்வாறு பாரி ஒருவனையே பலரும் புகழக் கண்ட பாண்டியனும் மற்றைய இருபெரு வேந்தரும். பெரிதும் அழுக்காறு கொண்டு அவனது பறம்பைத் தம் படையால் முற்றுகையிட்டார்கள். பல நாள் முற்றியும் பாரியின் பறம்பைக் கவர இயலாது காவலர் மூவரும் கலக்கமுற்றனர். நால்வகைச் சேனையின் நடுவே நின்ற மன்னரை நோக்கி, "ஐயன்மீர்! பாரியின் மலையிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் உம்முடைய களிறுகளைக் கட்டுவீராயினும், பரந்த பறம்பெங்கும் உமது தேரை நிரப்புவீராயினும் படை வலியால் பாரியை வெல்ல இயலாது. அவனை வென்று பறம்பைக் கவரும் வகையையான் அறிவேன். நல்ல யாழைக் கையி லேந்தி இன்னிசைப் பாட்டு இசைப்பீராயின், பாரி தன் நாட்டையும் மலையையும் ஒருங்கே தருவன். இதுவே அவனை வெல்லுதற்குரிய வழியாகும்" என்று பாரியின் வண்மையைப் புகழ்ந்தும், மூவேந்தரது வன்மையை இகழ்ந்தும் கபிலர் நயம்பட உரைத்தார்.
இங்ஙனம் இசை வழியாகப் பாரியை வெல்ல இசையாத மூவேந்தரும், வசை யாற்றால் அவனை வென்றதாக அப்பெருந்தகையின் வரலாறு கூறுகின்றது. தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தண்ணளி வாய்ந்த வள்ளலை வஞ்சனையாற் கொன்று மூவேந்தரும் அழியாப் பெரும்பழியெய்தினர். பாரியைக் கொன்று பறம்பைக் கைப்பற்றிய பகைவேந்தர் செயல் கண்டு மனம் பதைத்த பாரி மகளிர்,
“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையு மிலமே"
என்று இரங்கிக் கூறும் மொழிகள் உள்ளத்தை உருக்குவனவாம். அப்பெண்மணிகள், தந்தையை இழந்து தமியராயினர்; நாட்டையிழந்து நல்குர வெய்தினர். முல்லைக்குத் தேரீந்த வள்ளலின் மக்கள், தொல்லை வினையால் துயருழந்து அரற்றும் மொழிகள் நல்லோருளத்தைக் கரைப்பனவாகும்.
மணப் பருவமுற்ற அம்மங்கையரைப் பாரியின் தோழராகிய கபிலர், இருங்கோவேள் என்னும் குறுநில மன்னனிடம் அழைத்துச் சென்று, "ஐயனே! இவர் இருவரும் பறம்பிற் கோமானாய பாரி ஈன்ற மக்கள். யான் இவர் தந்தையின் தோழன்; அம் முறையில் இவர் என் மக்கள்; இம்மங்கையரை உனக்கு மணம் செய்யக் கருதி இங்கு அழைத்து வந்தேன்" என்று தம் கருத்தை அறிவித்தபொழுது, அக்குறுநில மன்னன், பாரி மகளிரை மணம் புரிய மறுத்துவிட்டான். அப்பால் அருங்கவிப் புலவர், வருந்திய முகத்தோடு அங்கு நின்றும் அகன்று, மற்றொரு குறிஞ்சி நிலக் கோமானிடம் சென்று, அவன் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து, பாரியின் மக்களை மணம்புரியுமாறு வேண்டினார். வள்ளலின் மக்களாயினும், வறுமை யெய்திய மங்கையரை மணம் புரிய இசையா அக் குறுநில மன்னனும் மறுத்துவிட்டான். அவ்விருவரது செயல் கண்டு சிந்தை யழிந்தார் செந்தமிழ்ப் புலவர். அற்ற குளத்து அறு நீர்ப் பறவை போலாது, பாரியின் மக்கள் வறுமை யெய்திய நிலைமையிலும் அவர்க்கு உற்ற துணையாய் நின்று உதவிய புலனழுக்கற்ற புலவர் பெருமை போற்றுதற்குரியதன்றோ?
பாரியின் பொன்றாப் பெருமை பார் எங்கும். பரவுதற்குரியதாகும். வில்லுக்கு விசயன் என்றும், விறலுக்கு வீமன் என்றும் உலகம் விதந்துரைத்தல் போல, பசித்தோர்க்குப் பாரி என்று பாரெல்லாம் போற்றுதற் குரிய பெருமை அவ்வள்ளலிடம் அமைந்திருந்தது.
"மிடுக்கி லாதானை வீம னேவிறல்
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
கூறினும் கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல்அமரர் உலக மாள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே”
என்னும் தேவாரத் திருவாக்காலும் பாரியின் பெருமை இனிது விளங்கும். இப்பொழுதும் பெருந்தன்மை வாய்ந்த குலத்திற். பிறந்த மக்களைப் "பாரிமான் மக்கள்" என்று தென்னாட்டில் வழங்கும் வாய்மொழி பாரியின் பெருமைக்கு என்றும் அழியாத சான்று பகர்வதாகும்.