உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழின்பம்/புறநானூறு மகாநாடு

விக்கிமூலம் இலிருந்து

2. புறநானூறு மகாநாடு[1]

தலைமை உரை

மெய்யன்பர்களே! செந்தமிழ்ச் செல்வர்களே!

இந் நாள் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்னாள் ஆகும். தமிழ்த் தாயைப் போற்றும் அன்பரும் அறிஞரும் நூற்றுக்கணக்காக இங்கே நிறைந்திருக்கின்றார்கள். தமிழ் நாடெங்கும் தமிழ் முழக்கம் செழித்து வருகின்றது. எங்கும் தமிழ்மணம் கமழ்கின்றது. சிந்தைக்கினிய செவிக்கினிய செந்தமிழைத் தமிழ்நாட்டார் சீராட்டத் தொடங்கிவிட்டார்கள். பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தொண்டர் பல்லாயிரவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உணர்ச்சியின் வடிவமே இம்மகாநாடு. தலைசிறந்த ஒரு தமிழ் நூலின் திறத்தினை எடுத்துரைப்பதே இம் மகாநாட்டின் கருத்து. புறநானூறு என்னும் பெருமை சான்ற நூலைப் பற்றிப் புலவர் பலர் இங்கே பேச இசைந்துள்ளார்கள். அவர்தம் நல்லுரைக்கு முன்னுரையும் பின்னுரையும் நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்திருக்கின்றது. இம்மகாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகின்றேன்.

பழந் தமிழ்நாட்டின் தன்மையை எடுத்துக்காட்டும் தொகை நூல்களில் தலைசிறந்தது புறநானூறு என்பர். அந் நூலில் படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரைக் காணலாம்; கொடைத்திறம் வாய்ந்த வள்ளல்களைக் காணலாம்; கற்றறிந்து அடங்கிய சான்றோரைக் காணலாம்; பழந்தமிழ்க் குலங்களையும் குடிகளையும் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பழந்தமிழ் நாட்டைப் புறநானூற்றிலே காணலாம்.

கவிதையும் காவலரும்

முற்காலத் தமிழ் மன்னரிற் பலர் பொன்மலர், மணமும் பெற்றாற் போன்று, புவிச்செல்வத்தோடு கவிச்செல்வமும் உடையராப் விளங்கினார்கள். முத் தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியருள் பலர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலே காணப்படும். கற்பின் செல்வியாகிய கண்ணகியின் சிற்றத்தால் ஆவி துறந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கவிபாடும் திறம் பெற்ற காவலருள் ஒருவன். மக்களாகப் பிறந்தோரெல்லாம் கல்வி கற்று மேம்படல் வேண்டும் என்ற ஆசையை அம் மன்னன் ஒரு பாட்டால் அறிவிக்கின்றான்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்ற பாட்டு, அவ்வார்வத்தைக் காட்டுகின்றது.

இனி, சோழநாட்டு அரசனாகிய கோப்பெருஞ்சோழனைச் சிறிது பார்ப்போம். அவனும் கவிபாடும் திறம் பெற்றவன்; தமிழுணர்ந்த புலவவர்களைத் தக்கவாறு போற்றியவன். அச்சோழன், செல்வத்திலே தனக்கு நிகரான ஒருவரைத் தோழராகக் கொண்டான் அல்லன்; பிசிராந்தையார் என்னும் தமிழ்ப் புலவரையே உயிர் நண்பராகக் கொண்டான். அம்மன்னன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா நோன்பை மேற்கொண்ட பொழுது அவன் மனம் பிசிராந்தையாரை நாடிற்று. தோழர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்து ஆவி காத்திருந்தான் அவன்; எப்படியும் பிசிராந்தையார் வந்தே தீர்வாரென்று அருகே இருந்த அன்பரிடம் அகம் குழைந்து கூறினான்.

செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன்”

என்பது அந் நிலையில் அவன் பாடிய பாட்டு. இங்ஙனம் ஏங்கி நின்ற நல்லுயிர் நீங்கிப் போயிற்று. பிற்பாடு, ஆந்தையார் வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணா நோன்பிருந்து தம் உயிர்கொண்டு சோழன் நல்லுயிரைத் தேடச் செல்வார் போல ஆவி துறந்தார்.

சேர நாட்டை ஆண்ட மன்னருள்ளும் சிலர் செந்தமிழ்க் கவிபாடும் சிறப்பு வாய்ந்திருந்தனர். அன்னவருள் ஒருவன் சேரமான் இரும்பொறை. அம் மன்னன் செங்கண்ணன் என்ற சோழ மன்னனுடன் பெரும் போர் செய்து தோற்றான். வெற்றிபெற்ற சோழன் சேரமானைப் பிடித்துச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான். சிறையிடைத் தேம்பிய சேரன், ஒரு நாள் தாகமுற்று வருந்தினான்; தண்ணிர் தரும்படி சிறை காப்பாளனை வேண்டினான். அவன் காலம் தாழ்த்து, ஒரு கலத்தில் நீர் கொண்டுவந்தான். அத் தண்ணிரைப் பருகி, உயிர் வாழ்வதற்கு அம்மான வேந்தன் மனம் இசையவில்லை. “மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது” என்றெண்ணி அவன் உயிர் துறக்கத் துணிந்தான்; காவலாளன் கொடுத்த தண்ணிர்க் கலத்தைக் கையிலே வைத்துக்கொண்டு ஒரு கவி பாடினான்; உயிர் துறந்தான்.

முற்காலப் போர்முறை

பகைமையும் போரும் எக் காலத்தும் உண்டு. முற்காலப் போர் முனைகளிற் சிலவற்றைப் புற நானூற்றிலே காணலாம். அக் காலத்தில், ஒர் அரசன் மாற்றரசனது நாட்டின்மீது படையெடுத்தால், அந்நாட்டில் வாழும் நல்லுயிர்களை நாசமாக்கக் கருதுவதில்லை. பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளரையும், இவர் போன்ற பிறரையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இந்த அறப்போர் முறை முதுகுடுமிப் பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்ற புலவர் பாராட்டுகின்றார். இன்னும், போர்க்களத்தில், வீரர் அல்லாதார். மேலும், புறங்காட்டி ஒடுவார் மேலும், புண்பட்டார் மேலும், முதியவர் மேலும் படைக்கலம் செலுத்தலாகாது என்பது பழந்தமிழர் கொள்கை. அன்னார்மீது படைக் கலம் விடுத்த பொருநரைப் 'படை மடம் பட்டோர்' என்று தமிழர் உலகம் பழித்துரைத்தது.

கோட்டை கொத்தளங்கள்

முற்காலத்தில் தமிழரசர்கள் கட்டிய கோட்டைகளும் கொத்தளங்களும் புறநானூற்றிலே குறிக்கப் பட்டுள்ளன. பாண்டி நாட்டிலே, கானப்பேர் என்ற ஊரில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. ஆழ்ந்த அகழியும், உயர்ந்த மதிலும், நிறைந்த ஞாயிலும், செறிந்த காடும் அக்கோட்டையின் உறுப்புக்கள்.

கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேர்எயில்”

என்று அதன் பெருமையைப் பாடினார் ஐயூர் மூலங்கிழார். எயில் என்பது கோட்டை. கானப்பேர் எயில், வேங்கை மார்பன் என்ற வீரனுக்குரியதாக இருந்தது. அக்கோட்டையைத் தாக்கி வேங்கையை வென்றான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, அவ்வெற்றியின் காரணமாகக் "கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பாராட்டப்பெற்றான். இந்நாளில் கானப்பேர் என்பது காளையார் கோவில் என வழங்குகின்றது.

கானப்பேர் எயிலுக்கு அருகே ஏழெயில் என்ற கோட்டையும் இருந்ததாகத் தெரிகிறது. ஒருகால் அக்கோட்டையைக் கைப்பற்றினான் நலங்கிள்ளி என்ற சோழன்.

தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை”

என்று கோவூர் கிழார் அவனைப் புகழ்ந்துள்ளார். இக்காலத்தில் 'ஏழு பொன் கோட்டை' என வழங்கும் ஊரே பழைய ஏழெயில் என்று கருதப்படுகின்றது.

தொண்டை நாட்டில் முற்காலத்திருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்கோட்டத்தைச் சேர்ந்ததே காஞ்சி மாநகரம். எயிற்பதி என்று அந்நகரைச் சேக்கிழார் குறித்துப் போந்தார். இன்னும், சோழநாட்டின் ஆதித் தலைநகராகிய திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அது தேவாரப்பாடல் பெற்ற பழம்பதி. சோழ மன்னர்கள் அவ்விடத்தில் பெருங்கோட்டை கட்டியிருந்தார்கள் என்று தோற்றுகிறது. அவ்வூர் ஒகைப்பேரையூர் எனவும் வழங்கும்.

கோட்டையின் பல கூறுகளும் உறுப்புக்களும் புறப்பாடல்களால் புலனாகின்றன. கோட்டையின் சிறந்த அங்கம் மதில். மதிலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் பலவாகும். அவற்றுள் ஆரை, எயில், இஞ்சி, நொச்சி, புரிசை என்பன புறநானூற்றில் வழங்குகின்றன. மதில்களில் செப்புத் தகடுகளைச் செறித்துத் திண்மை செய்யும் முறை முற்காலத்தில் கையாளப் பட்டதாகத் தெரிகின்றது. இலங்கை மாநகரின் திண்ணிய மதில்களின் திறத்தினையும், அம் மதிலாற் சூழப்பட்ட நகரத்தின் செழுமையையும், செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் என்று கூறிப்போந்தார் கம்பர். தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலியில், பாண்டிய மன்னர் கட்டியிருந்த கோட்டையின் குறிகள், பல இடங்களில் உள்ளன. அவற்றுள் ஒன்று பொருனை ஆற்றின் கரையில் அமைந்த செப்பறையாகும். செப்பறை என்பது செம்பினால் செய்த அறை என்ற பொருளைத் தரும். செப்பறை என்ற இடத்தில் இக்காலத்தில் குடிபடை ஒன்றுமில்லை. அழகிய கூத்தர் கோவில் ஒன்றே காணப்படுகின்றது. ஆயினும், அக்கோவிலைச் சுற்றிச் சிதைந்த மதில்களும், மேடுகளும் உண்டு. செப்பறைக்கு எதிரே, ஆற்றின் மறுகரையில், மணற்படை வீடு என்ற ஊர் அமைந்துள்ளது. படை வீடு என்பது அரசனது படை தங்கி இருக்கும் பாசறையாகும். பாண்டிய மன்னன் சேனை தங்கிய் படைவீட்டுக்கு அண்மையில் செப்பறை அமைந்திருத்தலை நோக்கும் பொழுது, அவ்விடம் பாண்டியனார்க்குரிய கோட்டைகளுள் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது

மதிலுறுப்புகளில் ஞாயில் இன்றியமையாத தொன்றென்பது தமிழ்நாட்டார் கருத்து. படையெடுத்து வரும் பகைவன்மீது மறைந்துநின்று அம்பு எய்வதற்குரிய நிலையங்களே ஞாயில்கள் எனப்படும். மதிலுக்கு ஞாயிலே சிறந்த உறுப்பென்பது புறநானூற்றுப் பாட்டு ஒன்றால் விளங்குகின்றது.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீர்இன் மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே”

என்று ஒரு புலவர் கோட்டையின் நிலையைக் கூறுகின்றார். பாழாய்க் கிடந்த ஒரு பழங்கோட்டையின் தன்மையை இப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கோட்டையைச் சூழ்ந்த அகழியில் தண்ணிர் இன்றிப் புல்லும் புதரும் செறிந்திருக்கின்றன. மதில்கள் ஞாயில் இன்றிப் பாழ்பட்டிருக்கின்றன என்பது இப்பாட்டின் கருத்து.

அகழி சூழ்ந்த இடத்தைக் கிடங்கில் என்று கூறுவர். முற்காலத்தில் கிடங்கில் என்னும் கோட்டை, கோடன் என்ற சிற்றரசனுக்கு உரியதாக இருந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படையில் பாராட்டப்படுகின்ற தலைவன் இவனே. இவ்வரசனை நன்னாகனார் பாடிய பாட்டுப் புறநானூற்றிலே தொகுக்கப்பட்டிருக்கின்றது. கிடங்கில் என்னும் கோட்டை, இப்பொழுது திண்டிவனத்திற்கருகே அழிந்துகிடக்கின்றது. சிதைந்த அகழியும் இடிந்த மதிலும் அதன் பழம் பெருமையை எடுத்துரைக்கின்றன. 'திண்டிவனம்’ என்ற சொல் புளியங்காடு என்ற பொருளைத் தரும். அவ்வனம், முற்காலத்திருந்த கிடங்கிற் கோட்டையின் காட்டரணாக இருந்தது போலும்! அக் காடு நாளடைவில் நாடாயிற்று. பழைய கோட்டையும் ஊரும் அமைந்திருந்த இடம் பாழ்பட்டது.

திண்டிவனத்திற்கு மேற்கே பதினேழு மைல் தூரத்தில் செஞ்சிக் கோட்டை அமைந்திருக்கின்றது. செஞ்சி என்ற சொல்லின் பொருள் செவ்வையாக விளங்காவிடினும் கோட்டை மதிலைக் குறிக்கும். 'இஞ்சி' என்பது அவ்வூர்ப் பெயரிலே குழைந்து கிடப்பதாகத் தோன்றுகிறது.

தரையில் அமைந்த கோட்டைகளேயன்றி, வானத்தில் ஊர்ந்து செல்லும் கோட்டைகளையும் முற்காலத் தமிழர் அறிந்திருந்தனர். ஆகாயக் கோட்டைகளை 'தூங்கு எயில்' என்று குறித்தார்கள். ஆகாய வழியாகப் போந்த மூன்று பெரிய கோட்டைகளை ஒரு சோழ மன்னன் தகர்த்தெறிந்த செய்தி, புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களால் விளங்கும். பகைவரை அழிக்கும் படைத் திறமைக்கு அவன் செயலையே எடுத்துக்காட்டாகப் புலவர்கள் பாடினர்.

இத்தகைய அருஞ்செயல் புரிந்த சோழனது இயற்பெயர் தெரியவில்லை. அவன் எப்படையைக் கொண்டு ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பதும் துலங்கவில்லை. ஆயினும் அவனுக்கு அமைந்துள்ள சிறப்புப் பெயரைப் பார்க்கும்பொழுது அவன் தோள் வலிமையை அக் காலத்தினர் பெரிதும் பாராட்டினர் என்பது புலனாகும். "தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” என்பது அவனது சிறப்புப் பெயராக விளங்கிற்று.

குறுநில மன்னர்

புறநானூற்றிலே புகழப்படுகின்ற குறுநில மன்னரிற்பலர், குன்று சார்ந்த நாடுகளில் வாழ்ந்தனரெனத் தெரிகின்றது. பாண்டிநாட்டில், பழனிமலையை ஆண்ட தலைவன் பேகன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, கோடை மலையை ஆண்டவன் கடிய நெடு வேட்டுவன்; பொதிய மலையை ஆண்டவன் ஆய் அண்டிரன். சோழ நாட்டில், வல்வில் ஒரி என்பவன் கொல்லிமலையை ஆண்டான்; அதிகமான் குதிரை மலையில் ஆட்சி புரிந்தான்; குமணன் முதிர் மலையின் கொற்றவன்; பெருநள்ளி என்பவன் தோட்டிமலையின் தலைவன். இச்சிற்றரசரிற் சிலர், பேரரசரினும் சாலப் புகழ்பெற்று விளங்கினர்; வறிஞரை ஆதரித்தனர்; அறிஞரைப் போற்றினர். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அதை அடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி. அவன் மனத்தில் அமைந்த அருளுக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், இல்லையென்ற சொல்லே இல்லை. பாரியின் பெருந்தகைமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.

பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைபவரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்.

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்”

என்று அவன் மனப்பான்மையை முடமோசியார் என்னும் புலவர் விளக்கிப் போந்தார். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுத்தான் அவ்வள்ளல். ஆனால், கைப்பொருளைக் கொடுத்து, அறத்தை அதற்கு ஈடாகக் பெறும் வணிக னல்லன் அவன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது. இத்தகைய செம்மனம் படைத்தவர் இவ்வுலகில் நூறாயிரவருள் ஒருவர் அல்லரோ? பாரியும் ஆயும் போன்றவர் பலர் பண்டைத் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். கொல்லி மலையை ஆண்ட ஒரியும், மலையமான் என்னும் திருமுடிக்காரியும், மழவர் கோமானாகிய அதிகமானும், பழனிமலைத் தலைவனாகிய பேகனும், கொங்கர் கோமானாகிய குமணனும், தோட்டிமலை நாடனாகிய நள்ளியும், கொடையிற் சிறந்த குறுநில மன்னர்கள்.

பழைய குலமும் குடியும்

பழந்தமிழ் நாட்டில் விளங்கிய குலங்களையும் குடிகளையும் புறநானூற்றிலே காணலாம். மழவர் என்பவர் ஒரு குலத்தார். அவர், சிறந்த வீரராக விளங்கினர். சோழநாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் பழம்பதி. அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது. திருமழபாடி, மூவர் தமிழ் மாலையும் பெற்று மிளிரும் மூதூராகும்; 'பொன்னார் மேனியனே' என்று எடுத்து, மன்னே, மாமணரியே, மழபாடியுள் மாணிக்கமே, அன்னே, உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்று, சுந்தரமூர்த்தி புகழ்ந்து போற்றிய பெருமை சான்றது. மழவர்பாடி என்பதே மழபாடியாயிற்று. மழவர் குலத்திலே அதிகமான் என்னும் பெருமகன் தோன்றினான். அவன், சிவநெறியில் நின்ற சீலன்; பொய்யறியாப் புலவர்களால் புகழப் பெற்றவன். அவன் படைத் திறத்தைப் பாடினார் பானர்; கொடைத் திறத்தைப் பாடினார் ஒளவையார். இக் காலத்தில் சேலம் நாட்டில் தர்மபுரி என வழங்கும் தகடூர், அவன் கடிநகராய் இருந்தது. அவ்வூருக்கு அருகே அதிகமான் ஒரு கோட்டை கட்டினான். அஃது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றது. இந்நாளில் அதமன் கோட்டை என வழங்குகின்றது. இன்னும், கெடில நதியின் வடகரையில் அமைந்த திருவதிகை என்னும் பாடல் பெற்ற பழம்பதியும் அதிகமானோடு தொடர்புடையதாகத் தோற்றுகின்றது.

மற்றொரு பழந்தமிழ் வகுப்பார் பானர். பண்ணோடு இசைபாட வல்லவர் பானர் எனப் பட்டார். பாணரை, அக்காலத்துப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் வரிசை அறிந்து ஆதரித்தார்கள். சோழ நாட்டின் தலைநகராய் விளங்கிய காவிரிப்பூம் பட்டினத்தில் பெரும்பானர் சிறத்து வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. யாழில் இசைபாடும் பாணர் யாழ்ப்பாணர் என்று பெயர் பெற்றார். சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப் பாணர் இக்குலத்தவரே. திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை யாழில் அமைத்துப் பாடி இவர் இன்புற்றார் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றது. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்ற நகரம் யாழ்ப்பானர் பெயரைத் தாங்கியுள்ளது.

இப்பொழுது இக் குலத்தார், தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், பழைய சேர நாடாகிய மலையாளத்தில், பாணர் குலம் இன்றும் காணப்படுகின்றது. ஒணத் திருநாளில் பாணர், தம்மனைவியருடன் சிறு பறையும் குழித்தாளமும் முழக்கிக்கொண்டு, இல்லந்தொறும் போந்து இசை பாடுவார். அன்றியும், திருச்சூர்க் கோவிலுக்கு வெளியே நின்று பாணர்கள் பாட்டிசைத்துப் பரிசு பெறும் வழக்கம் இன்றும் உண்டு என்பர்.

இனி, புறநானூற்றிலே பேசப்படுகின்ற வையாவிக்கோப் பெரும்பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படை அவனைப் போற்றுகின்றது. ஆவியர் குடியிலே தோன்றிய அரசர்களால் ஆளப்பட்டமையால் ஆவிநன்குடி என்பது பழநிக்குப் பெயராயிற்று. நக்கீர தேவர் அருளிய திருமுருகாற்றுப்படையில், திரு ஆவிநன்குடி, முருகனுக்குரிய ஆறு வீடுகளில் ஒன்றாகப் போற்றப்பட்டுள்ளது. வையாபுரி என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆவியர் குடியில் தோன்றிய 'வையாவிக்கோ'வால் ஆளப்பட்ட நகரம் வையாவிபுரி என்று பெயர் பெற்றுப் பின்பு வையாபுரி ஆயிற்று என்பர்.

ஆவியரைப் போலவே ஒவியர்கள் என்பாரும் பழந்தமிழ் நாட்டில் இருந்தனர். ஒவியர் குடியில் பிறந்து சிறந்து வாழ்ந்த சிற்றரசன் ஒருவனை, ஒய்மான் நல்லியக்கோடன் என்று புறநானூறு குறிக்கின்றது. ஒய்மான் ஆண்ட நாடு ஒய்மானாடு என்று வழங்கலாயிற்று. இந்நாளில் திண்டிவனம் என வழங்கும் ஊர், ஒய்மானாட்டைச் சேர்ந்ததென்று சாசனங்களால் அறிகின்றோம்.

புலவர் வாழ்க்கை

அக் காலத்துப் புலவர்கள் தம்மை மதியாத மன்னர் அளித்த கொடையை அறவே வெறுத்தார்கள். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கோடைமலைத் தலைவனாகிய கடிய நெடு வேட்டுவனைக் காணச் சென்றார். அவன், உரிய காலத்தில் பரிசில் அளியாது காலம் தாழ்த்தான். அது கண்ட சாத்தனார்,

"முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்டபின் றீதல் யாம்வேண் டலமே”

என்றார்; "கல்வியின் பெருமை யறிந்து பேணிக்கொடுக்கின்ற கொடையையே யாம் பெறுவோம். அன்பற்றவர், முடியுடை வேந்தராயினும், அவர் அளிக்கும் கொடையை ஏற்றுக்கொள்ளோம்” என்று கூறி அவனை விட்டு அகன்றார்.

பெருஞ்சித்திரனார் என்ற புலவர், ஒரு நாள் அதிகமானைக் காணச் சென்றார். அவன், புலவரை மதிக்கும் பெற்றி வாய்ந்தவனாயினும், அப்போது அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தானாதலால், புலவருக்குரிய பரிசிற் பொருளை மற்றொருவரிடம் கொடுத்தனுப்பினான். அப்பரிசைக் கண்ட சித்திரனார் சீற்றம் கொண்டார்; என்னை யாரென்று நினைத்தான் அதிகமான்? அவனைக் கண்டு பரிசு பெற வந்தேனே அன்றிப் பாராமுகமாக அவன் கொடுக்கும் பொருளைக் கொண்டு போக வந்தவன் அல்லேன் யான். பாட்டைப் பாடிவிட்டு, அதற்கு ஈடாகப் பரிசில் பெற்றுச் செல்பவன் வாணிகப் புலவன் ஆவான். அவ்வகையாரைச் சேர்ந்தவன் அல்லன் யான். கல்வியின் சுவையறிந்து அன்புடன், அரசன் தினையளவு பொருள் தரினும் அதனைப் பெரிதாக ஏற்று மகிழ்வேன் என்று உணர்ச்சி ததும்பப் பாடினார்.

இசைத் தமிழ் வளர்ச்சி

இயற்றமிழை ஆதரித்த பண்டைத் தமிழரசர்கள் இசைத் தமிழையும் நன்கு போற்றினார்கள். அக்காலத்து இசைக் கருவிகளில் சிறந்தன குழலும் யாழும், யாழ், பலதிறப்பட்டதாக அமைந்திருந்தது. பாணர் என்பவர் சீறியாழ் என்னும் சிறிய யாழைத் தாம் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்றனர். சிறிய யாழ், எப்பொழுதும் அவர் கையகத்து இருந்தமையால் அது கைவழி என்னும் பெயர் பெற்றது. இசைவாணராகிய பாணரைப் பெருநள்ளி என்ற குறுநில மன்னன் அன்போடு ஆதரித்தான். அவனைப் பாடினார் வன்பரணர் என்ற புலவர்:

நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர்; அதுநீ
பரவுக்கடன் பூண்ட வண்மை யானே!”

என்ற பாட்டின் நயம் அறியத் தக்கதாகும். அரசே! பாணர்க்கு நீ பெருங்கொடை கொடுக்கின்றாய். உன் உணவை உண்டு மயங்கி, இசை மரபினை மறந்து விட்டனர் இசைப்பானர்; கைவழி யாழிலே மாலைப் பொழுதிலே பாடுதற்குரிய செவ்வழிப் பண்ணைக் காலைப் பொழுதிலே பாடுகின்றார்கள்; காலையில் பாடுதற்குரிய மருதப் பண்ணை மாலையில் பாடுகின்றார்கள்; இதற்குக் காரணம் நின் கொடையே என்று கூறினார் புலவர். இதனால், பண்டை இசைவாணர், பண்களை வகுத்திருந்ததோடு, அவற்றைப் பாடுதற்குரிய பொழுதையும் வரையறுத்திருந்தார்கள் என்பது இனிது விளங்குகின்றது. பண்ணமைந்த இசை பாடும் பாணர்க்குத் தமிழரசர் வரிசையறிந்து பரிசளித்தார்கள். வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரை மலர் பாணர்க்கு உரிய உயர்ந்த பரிசாகக் கருதப்பட்டது.

சங்ககாலப் பெண்மணிகள்

அக்காலத்தில் கலையுணர்வு பெற்ற பல பெண்மணிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். 'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்' என்பது தமிழ்நாட்டாரது பழங்கொள்கை யன்று என்பதற்குப் புறநானூறு ஒன்றே போதிய சான்றாகும். செவ்விய கவிபாடும் திறம் பெற்ற பெண்பாலார் பாடிய அருமை சான்ற பல பாடல்கள் புறநானுாற்றிலே சேர்க்கப்பட்டுள்ளன. கரிகாற் சோழன் வெண்ணிப் போர்க்களத்திலே பெற்ற வெற்றியை வியந்து பாடினாள் ஒரு பெண். அவள் குயவர் குலத்திற் பிறந்தவள். 'வெண்ணிக் குயத்தியர்' என்று புறநானூற்றிலே அம்மாது போற்றப்படுகின்றாள். இன்னும், நப்பசலையார் என்ற நல்லிசைப் புலமை மெல்வியலார் மலையமான் திருமுடிக் காரியையும் பிறரையும் பாடியுள்ளார். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை மூதூரைச் சூழ்ந்த மாறோக்கம் என்ற நாட்டிலே தோன்றியவர். இன்னும், அக்காலத்திய அரசராலும் அறிஞராலும் பெரிதும் பாராட்டப்பெற்ற ஒளவையாரை அறியாதார் யாரோ? ஆகவே, ஆண் பெண்ணாகிய இரு பாலாரும் முற்காலத்தில் கல்வியறிவால் மேம்பட்டிருந்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

வீரத் தாய்மார்கள்

இன்னும், வெம்மை சான்ற போர்க்களத்தில், அஞ்சாது நின்று அமர் புரியுமாறு, தாம் பெற்ற அருமை மைந்தரை ஊக்கி அனுப்பிய வீரத்தாயரும் அக் காலத்தே விளங்கினர். மாற்றார்க்குப் புறங்கொடாது, மார்பிலே புண்பட்டு இறந்த மைந்தனது மேனியைக் கண்ட நிலையில், பெற்ற போதினும் பெரியதோர் இன்பம் அடைந்தாள் ஒரு தாய். மற்றொரு வீரமாது, முதல் நாள் நடந்த போரில் தமையனை இழந்தாள்; மறுநாள் நடந்த போரில் கணவனை இழந்தாள்; பின்னும் போர் ஒழிந்தபாடில்லை. அவள் குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி நின்றான். முன்னே இறந்துபட்ட தலைவனையும் தமையனையும் நினைந்து அவள் தளர்ந்தாள் அல்லள்; தன் குடியைக் காப்பதற்கு மைந்தன் ஒருவனே உள்ளான் என்பதையும் உணர்ந்தாள் அல்லள்; அருமந்த பிள்ளையை அன்போடு அழைத்தாள்; வெள்ளிய ஆடையை உடுத்தாள்; தலையைச் சீவி முடித்தாள்; வேலைக் கையரிலே கொடுத்தாள்: போர்க்களத்தை நோக்கி அவனை விடுத்தாள்; இவ்விர மங்கையை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண் புலவர் வியந்து பாராட்டியுள்ளார்.

மக்கள் வாழ்க்கை நலம்

இனி, அந் நாளில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைக் குறித்துப் புறநானூறு பல செய்திகள் கூறுகின்றது. 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி' என்றவாறு, முற்கால மக்கள் மன்னனையே பின்பற்றி நடக்க முயன்றார்கள். அரசன் கடமையை அறிவிக்கின்ற புறநானுTற்றுப் பாட்டு ஒன்று இக்கருத்தைக் குறிக்கின்றது. பிள்ளையைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமை என்றும், அவனை அறிவுடையவன் ஆக்குவது தந்தையின் கடமை என்றும், ஒழுக்க நெறியில் நிறுத்துவது அரசன் கடமை என்றும் பொன்முடியார் என்ற புலவர் திறம்படப் பாடியுள்ளார்.

அரசன் அறநெறி தவறாதவனாய் ஆண்டு வந்தால் குடிகளுக்கு எவ்வகைக் கவலையும் இல்லை என்பதும், அவன் அறநெறி தவறினால், மழை பருவத்திற் பெய்யாது பசியும், பிணியும் குடிகளை வருத்தும் என்பதும் பழந்தமிழர் கொள்கை. இதனாலேயே அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்ற வாசகம் எழுந்தது.

வேளாண்மை என்னும் பயிர்த்தொழில், சிறந்த தொழிலாகக் கருதப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறமும் நாட்டில் நிலைபெறுவதற்கு வேளாண்மை முட்டின்றி நடைபெறல் வேண்டும் என்பது முன்னைத் தமிழ்நாட்டார் அறிந்த உண்மை. அந்நாளில் வேளாளர், சிறந்த குடிகளாகக் கருதப்பட்டார்கள். அறத்தையும் அறிவையும் வளர்ப்பதற்கு இன்றியமையாத உணவுப் பொருள் வளத்தை நாட்டிலே பெருக்கியவர் அவர்களே. இத்தகைய பெருமக்கள் இருத்தலாலேயே உலகம் நிலை பெற்றிருக்கின்றதென்று இளம்பெருவழுதி என்னும் பாண்டியன் பாடினான்.

இன்னும், வாழ்க்கைக்கு உரிய சிறந்த நெறிகளையெல்லாம் எடுத்தோதுகின்ற புறநானூறு, எல்லோரும் கடைப்பிடிப்பதற்குரிய ஒர் அறத்தினைத் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

"பல்சான் றீரே! பல்சான் றீரே!
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!”

என்ற அறவுரையைக் கடைப்பிடித்தல் தமிழ் மக்கள் கடனாகும்.

இலக்கிய நலம்

புறாநானுற்றுப் பாடல்களில் அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் பிற்காலப் பெருங்கவிஞர் பொன்னே போல் போற்றினர். நாட்டில் வாழும் உயிர்களுக்கு அரசனே உயிர் என்ற உண்மை,

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்று புறப்பாட்டிலே கூறப்படுகின்றது. இப்பாட்டின் சொல்லும் பொருளும் கம்பரால் போற்றப்பட்டுள்ளன. இராமனுடைய இனிய பண்புகளை எடுத்துரைக்கப் போந்த கம்பர்.

"கண்ணிலும் நல்லன்; கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்"

என்று அருளிப் போந்தார். இன்னும் புறநானுாற்றுப் பாடல்களைத் தழுவி எழுந்த கவிகளும் நூல்களும் பலவாகும். தமிழறிஞரது துயரைத் தீர்ப்பதற்காகத் தன் தலையைக் கொடுக்க முன்வந்த குமண வள்ளலின் பெருமையை விளக்கிப் பாடினார் ஒப்பிலாமணிப் புலவர்.

"அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே"

என்னும் பாட்டு, புறநானுாற்றுப் பாடலொன்றைத் தழுவி எழுந்ததாகும். இன்னும், பாரி வள்ளலைக் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களையே பெரிதும் ஆதாரமாகக் கொண்டு, பாரி காதை என்னும் பனுவல் இக் காலத்தில் தோன்றியுள்ளது.

ஆகவே, புறநானூறு, தமிழ்ச்சுவை, தேரும் மாணவர்க்கு ஒர் இலக்கியக் கேணியாம்; பழமையைத் துருவுவார்க்குப் பல பொருள் நிறைந்த பண்டாரமாகும்; தமிழ்நாட்டுத் தொண்டர்க்கு விழுமிய குறிக்கோள் காட்டும் மணிவிளக்காகும். இத்தகைய பெருநூலைத் தமிழ் மக்களாகிய நாம் போற்றிப் படித்து இன்பமும் பயனும் எய்துவோமாக.


  1. சென்னையில், தென்னிந்திய சைவு சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் நடத்தப்பெற்றது.