தமிழின்பம்/வண்மையும் வறுமையும்

விக்கிமூலம் இலிருந்து

25. வண்மையும் வறுமையும்

பழந் தமிழ்நாட்டு வள்ளல்களாய் விளங்கிய பாரியும் ஒரியும், ஆயும் அதிகனும், மலையனும் பேகனும் மாண்ட பின்னர், முதிராத வளமுடைய முதிர மலைத் தலைவனாகிய குமணன் அருஞ்சுரத்தினிடையே அமைந்த செழுஞ்சுனை போல் இலங்கினான். பழுமரம் தேரும் பறவை போன்று வறுமையால் வருந்திய மக்கள் இவ் வள்ளலை வந்தடைந்தார்கள்: தமது குறையைக் கரவாது எடுத்துரைத்தார்கள். பசி நோயால் அன்னையும் மனைவியும் மக்களும் வாடி வருந்தக் கண்ட புலவர் ஒருவர் குமணனிடம் போந்து தம் குறையை முறையிட்டார்:

‘ஐயனே! ஆண்டு பல கண்ட என்னுடைய அன்னை, போகாத தன் உயிரோடு புலந்து தண்டூன்றித் தள்ளாடி முற்றமளவும் செல்லமாட்டாத முதுமையால் வருந்துகின்றாள். வறுமையால் வாடித் தளர்த்து. ஒருவரையும் பழியாது ஊழைப் பழிக்கும் உத்தமியாகிய என் மனையாள், குப்பைக் கீரையின் கண்ணிலே முளைத்த முதிராத இளந்தளிரைப் பறித்து. அதனை உப்பின்றி அவித்து உண்டு, உலர்ந்த மேனியோடு உயிர் வாழ்கின்றாள். பால் மணம் மாறாத பாலன், உடல் வற்றிய தாயிடம் பால் காணாது வருந்தி அடுப்பருகே யிருந்த சோற்றுப் பானையிடம் தவழ்ந்து, அதன் வெறுமை கண்டு வெதும்பி அழுகின்றான். பசியாலழும் பாலனைக் கண்டு மனம் பொறாத என் மனையாள் வானிலே விளங்கும் வளர்மதியைக் காட்டியும், புலி வருமென்று பயமுறுத்தியும் அவன் கருத்தை மாற்ற முயல்கின்றாள்; மதியையும் புலியையும் மனத்திற் கொள்ளாது ஓயாமல் அழுகின்ற மைந்தனை நோக்கி மனம் குழைகின்றாள்' என்று குமணனிடம் தன் குறையை உருக்கமாக எடுத்துரைத்தார். கவி நலம் சான்ற அறிஞரைப் பற்றிய வறுமையை அறிந்த குமணன், மனம் வருந்தி அவரது குறையை அகற்றப் போதிய பரிசளித்தான்.

வள்ளலது பரிசின் வளம் கண்ட புலவர் பெருமித முற்று மலர்ந்த முகத்தோடு தம் மனையகம் போந்து மனையாளை நோக்கி, "மாதே! இதோ குமணன் கொடுத்த கொடையைப் பார்! இப் பொருள்களெல்லாம்,

"பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே"

இவற்றை வறுமையால் வருந்தும் உற்றார்க்கும் உறவினர்க்கும் எடுத்து வழங்கி இன்புறுவாயாக!" என்று புலவர் கூறும் மொழிகளில் குமணனது கொடைத்திறம் இனிது விளங்கக் காணலாம்.

இவ்வாறு இரவலர்க்கு இல்லை யென்னாது ஈந்த வள்ளலது புகழ் தமிழ்நாடெங்கும் பரவிற்று. கொடையிற் சிறந்தவன் குமணன் என்று கற்றோரும் மற்றோரும் முதிரமலை வள்ளலை மனமொழி மெய்களால் வாழ்த்திப் போற்றினார்கள்.

குமணனிடம் பரிசு பெற்ற புலவர்கள். பற்றுள்ளம் செய்யும் மற்றைய சிற்றரசர் சிறுமையை அவ்வள்ளவின் வண்மையோடு ஒப்பு நோக்கிப் பழித்துரைத்தார்கள். இளவெளிமான் என்னும் சிற்றரசனிடம் பரிசு பெறச் சென்ற புலவர் ஒருவர் அவனது எளிய கொடையை ஏற்றுக்கொள்ளாது மறுத்து, குமண வள்ளலிடம் சென்று யானைப் பரிசு பெற்று, மீண்டும் இளவெளிமானிடம் போந்து,

"இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவலர் உண்மையும் காண், இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண். இனி நின்னுார்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே!”

“அரசே! இரப்போர்க் கீந்து பாதுகாப்போன் நீயுமல்லை; இரப்போரைப் புரப்போர் இவ்வுலகில் இல்லை யென்பதும் இல்லை. இரப்போரைக் காப்போர் இவ்வுலகில் உண்டென்னும் உண்மையை இப்பொழுதே காண்பாயாக. நின்னுார்க் காவல் மரம் வருந்த யாம் கட்டிப் போந்த களிறு குமண வள்ளல் கொடுத்த கொடையாகும். இனி யான் என் ஊரை நோக்கிச் செல்வேன்" என்று செம்மாந்து உரைத்த புலவர் மொழிகளில் குமணனது பரிசின் செம்மை சீர்பெற இலங்குகின்றது.

இவ்வாறு பாடி வந்த பாவலர்க்குப் பகடு பரிசளித்தும் ஆற்றாரது அரும்பசி களைந்தும்,வற்றாத பெருஞ்செல்வமுற்று விளங்கிய குமணனைக் கண்டு அழுக்காறு கொண்டான் அவன் தம்பியாய இளங்குமணன், தமையன் ஆண்ட மலையையும் நாட்டையும் கவர்ந்துகொண்டு அவனைக் காட்டிற்கு ஒட்டினான், குமணனது தலையைக் கொய்து வருவார்க்குப் பரிசளிப்பதாகவும் பறையறைவித்தான். வள்ளலைக் காணாது காலைக் குமுதம்போல் குவிந்து வாடிய குடிகள், வன்கண்மை வாய்ந்த தம்பியின் செயல் கண்டு கண்ணர் உகுத்தார்கள்; குமணனது குலப்பெருமையை அழித்து, அதன் மணத்தை மாற்றத் தோன்றிய இளையோனை, "அமணன்" என்று அழைத்தார்கள். அமணன் ஆண்ட நாட்டின் அருகே வந்த ஆன்றோரும் அறவோரும், புலிகிடந்த புதர் கண்டாற் போன்று புறத்தே போயினர். முதிர மலைக் குடிகள் மனம் வாடி வருந்தினார்கள்.

நாட்டைவிட்டுச் சென்ற குமணன், காட்டில் விளைந்த காயும் கனியும் அயின்று, கானப் புல்லில் துயின்று காலங்கழித்தான். இவ்வாறிருக்கையில் ஒரு புலவர்,

"ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி"

குமணன் கரந்துறைந்த கானகம் போந்தார். அங்கு மரவுரி புனைந்து மாசடைந்த மேனியோடு திரிந்த வள்ளலைக் கண்டு, "ஐயனே! உண்பதற்கு ஒரு பிடி சோறுமின்றி என் மனையாள் வாடுகின்றாள். பசியால் மெலிந்த தாயிடம் பால் காணாத பாலன் தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தேன்" என்று குறையிரந்து கண்ணீருகுத்தார். கவிஞரது கொடிய வறுமையை அறிந்த வள்ளல் மனம் நெகிழ்ந்து, கண்களில் நீர் ததும்ப நின்று.

"அருந் தமிழ்ப்புலவரே! நான் செல்வத்தால் செழித்து வாழ்ந்திருந்த காலத்தில் நீர் வரலாகாதா? இவ் வறுமைக் காலத்தில் வந்தடைந்திரே! இப்பொழுது உமது இன்மையை அகற்றப் பாவியேன் என் செய்வேன்?" என்று மனம் குழைந்தான். ஆயினும் இல்லையென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்த வள்ளல், சிறிதுபொழுது சிந்தனையிலாழ்ந்து, ஈகையால் வரும் புகழே என் உயிரினும் சிறந்ததாகும் என்று தன்னுள்ளே நினைந்து தமிழ்ப் புலவரிடம் தன் உடைவாளை உருவிக் கொடுத்து "ஐயனே! இத்

"தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்து விலைதனை மீட்டுநின் வறுமைநோய் களையே"

என்று முகமலர்ந்து மொழிந்தான். தமிழ்ப் புலவனது வறுமை தீர்த்தற்காகத் தன் தலையையும் அளிக்க இசைந்த தலையாய வள்ளலது செயல் கண்டு தரியாத தமிழறிஞர் கண்ணிர் பெருக்கிக் கதறியழுது அவ்வாளை எடுத்துக் கொண்டு, அம்மன்னனிடம் ஒடிச் சென்று. "ஐயனே! தலையையும் கொடுத்துத் தமிழறிந்த தமியேனது வறுமையைக் களையப்போந்த வள்ளலாய உன் தமையனது பெருமையை என் என்பேன்?"

"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனினும் நனிஇன் னாதென
வாள்தந் தனனே தலைஎனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்"

பாடி வந்த பரிசிலன் வாடிப் பெயர்தல் நாடிழந்ததனினும் இன்னாதென்றெண்ணி, தன் தலையைக் கொய்து உன்னிடம் கொடுக்குமாறு இவ்வாளைத் தந்தான்' என்று கவிஞர் கல்லும் கரைந்துருகும் கனிந்த மொழிகளைக் கூறிய பொழுது, அமணனது உள்ளம் நெகிழ்ந்தது; கண்கள் பாசத்தால் நேசத் தாரைகள் சொரிய நின்றான்; தலையாய வள்ளலைக் கானகத்தில் வருந்த வைத்த தன் சிறுமையை எண்ணி ஏங்கினான்; அப்பொழுது நால்வகைச் சேனையோடும் நகர மக்களோடும் தமையன் வசித்த கானகம் போந்து, அப்பெருந்தகையின் அடிபணிந்து, மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்தான். குமணனும் முன்போலவே அறிஞர்க்கும் வறிஞர்க்கும் ஆதரவாய் அமைந்து என்றும் அழியாத பெரும் புகழ் எய்தினான்.