தமிழ்நாடும் மொழியும்/தமிழ் மொழி வளர்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7. தமிழ்மொழி வளர்ச்சி


தோற்றுவாய்
மிழின் தொன்மை காலங் கடந்த ஒன்று. நினைப்பிற் கெட்டா நெடுங்காலத்தையும் கடந்து செல்லுகிறது தமிழின் வரலாறு. அக்காலத்திலிருந்தே தமிழ் படிப்படியாக வளர்ந்தும், தளர்ந்தும், புதிய துறை பலவற்றிற் புகுந்தும் வருகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் தமிழ் வளர்ந்த விதத்தையறியப் போதிய சான்றுகள் இல்லை; கிடைப்பன எல்லாம் அரை குறையாகவே உள்ளன. எனினும் களவியல் உரைமூலம் தமிழ் வளர்ந்த விதம் ஓரளவுக்குத் தெரிகின்றது. அக்காலத்தே தமிழ்ச்சங்கம் பல இருந்தன. அரசர்கள் ஆதரவினாலும், புலவர் போற்றுதலினாலும் தமிழ் வளர்ந்தது. அடுத்து கி.பி.க்கு முன்னர் தமிழ் எப்படி வளர்ந்தது என்பதை அறியத் தெளிவான சான்றுகளாக விளங்குவன சங்க இலக்கியங்களே. சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழ் வளர்ச்சியை நன்கு காட்டுகின்றன. தமிழ் இயல், இசை, நாடகம் என்ற முத்துறைகளாகப் பிரிவுற்று வளர்ந்தது. இயலைப் புலவர்களும், இசையைப் பாணர்களும், நாடகத்தைக் கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோரும் நன்கு காத்து ஓம்பினர். இம் முத்தமிழையும் அவர்கள் வளர்த்துப் பெருக்க அவர்கள் வறுமையால் வாடாமல் இருத்தற் பொருட்டு வள்ளல்களும், குறு நில மன்னர்களும், முடி மன்னர்களும் பொன்னும் பொருளும் பிறவும் வாரி வாரி வழங்கினர். எனவே வயிற்றுக்கவலை இல்லாத பாணரும், புலவரும், கூத்தரும், தமிழை உயிரினும் மேலாகக் கருதி வளர்த்து வந்தனர்.

சங்க காலத்தையடுத்த நூற்றாண்டுகளிலே எழுந்த நூல்களாகக் காட்சியளிப்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாம். இவற்றைப் பாடிய புலவர்களை அரசர்கள் ஆதரித்த தாகத் தெரியவில்லை. காரணம் அவர்களிருவரும் அரசர் தம் ஆதரவு பெறவேண்டிய நிலையில் இல்லை என்பதாகும். எனினும் இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இளவல்: சாத்தனர் நண்பர். பின்னர் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் தமிழகம் களப்பிரர் ஆட்சியின்கீழ் இருந்தது. தமிழின் வீழ்ச்சி களப்பிரர் காலத்திலிருந்து தொடங்குகிறது என்ன லாம். களப்பிரர்கட்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் வடமொழி, பாகதம் என்ற அயல் மொழிகளைத்தான் போற்றிக் காத்தனரே தவிரத் தமிழைச் சிறப்பாக ஆதரிக்கவில்லை. பிற்காலப் பல்லவர்களில் நந்திவர்மன் போன்ற ஒரு சிலரே தமிழை ஒரளவுக்கு வளர்க்கலாயினர். பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய இரு காலங்களிலும் சமனரும் , பெளத்தரும், சைவரும், வைணவரும் தமிழை வளர்த்தனர். பல்லவர் காலத்திலே சமணர்கள் திராவிட சங்கம் என்றொரு சங்கம் வைத்தே தமிழை வளர்த்தனர். பிறகு முகமதியர் ஆட்சிக் காலத்திலும், விசயநகரப் பேரரசர் காலத்திலும், நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் குறுநில மன்னர்கள் சேதுபதி போன்ருேர்) தமிழை வளர்த்தனர்; சைவ,வைணவ மடங்களும் தமிழை வளர்த்தன. இக்காலத்திலே கல்லூரி களும், அரசியல் கட்சிகளும், தனிப்பட்ட கழகங்களும், தமிழை வளர்த்து வருகின்றன. இவ்வாறு தமிழ் மொழியானது வளர்ந்து வருகின்றது.

சங்க காலம்

சங்க காலத்தினைத் தமிழின் பொற்காலம் என்றே கூறலாம். ஆட்சியிலும் அறமன்றங்களிலும், கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி தனி நடமும், களி நடமும் புரிந்தது. சங்ககாலத்திலே புலவர்கள் மட்டும் பாக்கள் பல புனைந்து பைந்தமிழை வளர்க்கவில்லை. வணிகர், குயவர் முதலிய பல்வேறு குலத்தினரும், அரசரும் தமிழை வளர்த்தனர். அரசாங்க அலுவலர் தமிழ்ப்பாப் புனைந்தனர். கூத்தர் தமிழை ஒம்பினர். இவர்களுக்கெல்லாம் வள்ளலும் அரசரும் பொருள் வழங்கி, மென்மேலும் தமிழ்மொழியை வளர்க்குமாறு ண்டினர். பெருஞ்சித்திரளுர் என்ற புலவரைக் குமணன் என்ருெரு வள்ளல் ஆதரித்தான். கபிலரைப் பாரி போற்றிப் புரந்தான். ஒளவையாரை அதியன் உயிர் நண்பராக எண்ணிப் பொருள் வழங்கிக் காத்தான். இவ்வாறு அரசர் ஆதரவைப் பெற்ற புலவர்கள் கவலையின்றித் தமிழ்ப்பாக்கள் பலவற்றைப் பாடித் தமிழ் வளர்த்தனர். சங்க காலத்தில் தமிழ் வளர்த்த நல்லிசைப் புலவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தினர் அல்லர். மேலும் அவர்கள் தாங்கள் பிறந்த ஊரிலிருந்து கொண்டே முறையே தமிழ் நூற்களைக் கற்றுப் பின்னர் மதுரை வந்து மதுரயில் வாழ்ந்த புலவர்களடு கலந்து பழகி, அவர்களுடன் ேசர்ந்து நூல்களை ஆராய்ந்து தமிழ் வளர்த்தனர் எனத் தெரியவருகின்றது. மேலும் இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகத் தமிழைக் கற்ற தாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைச் செய்து வந்தனர். அத்துடன் தமிழையும் வளர்த் தனர். இதன் காரணமாகத்தான் பாண்டிய அரசர்களும், சோழப் பேரரசர்களும் புலவர்களைத் தங்கள் உயிர் நண்பர் களாகவும், அமைச்சர்களாகவும் கொண்டு வாழ்ந்தனர். இப்புலவர்கள் பல்கலைக்குரிசில்களாக விளங்கியமையால் அரசியல் வாழ்விலும் மன்னர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கினர்.

சங்க காலத்தில் முத்தமிழையும் சிறப்பாக வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியதாகும். முச்சங்கங்கள் கூட்டி, தமிழ்நாட்டில் மொழியும் கலையும் வளர்த்தவர்கள் பாண்டியப் பெரு வேந்தர்களே; சங்கப் புலவர்களுக்குப் பொன்னும் மணியும் வாரி வாரி வழங்கி அவர்களை வாடாது வாழவைத்த காரணத்தினுல்தான் தமிழ்க் கருவூலங்களாகிய சங்க இலக் கியங்களைத் தமிழ்நாடு பெற முடிந்தது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த புலவரில் பெரும்பாலோர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்களாவர். பாண்டிய மன்னரில் பலர் சிறந்த புலவர்களாகவும் விளங்கினர். பாண்டிய மன்னரில் தலை சிறந்த வணுகிய பாண்டியன் நெடுஞ்செழியன் சிறந்த புலவனுவான். மாங்குடி மருதனுர் இயற்றிய மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் இவனே. புறநானூற்றில் இவனைப் பற்றிய பாடல்களும், இவன் பாடிய பாடல்களும் காணப்படுகின்றன. இவன் புலவர்களிடத்துப் பேரன்பும், பெரு மதிப்பும் வைத் திருந்தான் என்பதைப் பின் வரும் அவனது வஞ்சினப் பாட்டு ஒன்றில் அறியலாம்.

மாற்றாரை ஒருங்குஅகப் படேஎனயின்
மாங்குடி மருதன் தலைவ னாகப்
புலவர் பாடாது வரைக என் நிலவரை!”

மற்றொரு பாண்டிய மன்னனுகிய உக்கிரப்பெருவழுதி காலத்திலேதான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்பர் அறிஞர். பாலை பாடிய பெருங் கடுங்கோ, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் போன்ற பாண்டியரும் சிறந்த புலவர்களாய் விளங்கினர். பாரி மகளிர், பூதப்பாண்டியன் தேவி, போன்ருேர் தமிழ்ப் புலமை பெற்று விளங்கிய அரசகுல மங்கையராவர். பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற இருவரும் முறையே நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களைத் தொகுப்பித்த அரசராவர். சுருங்கக்கூறின் சங்க காலத்தில் முத்தமிழும் முழங்கிய இடம் பாண்டிய நாடே சிறப்பாக மதுரையம்பதியே. இத்தகு சிறப்பிற்குக் காரணமாக இருந்தவர்கள் பைந்தமிழ் வளர்த்த பாண்டியரே. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வாழ்ந்த புலவர்கள் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்கு வந்து தம் புலமைத் திறனைக் காட்டி மக்களிடையே மாண்பும் மதிப்பும் பெற்றனர். பாண்டியர் அளித்த பரிசில்கள் பல அவர்தம் வாழ்க்கையை வளம்பெறச் செய்தன.

தமிழ் வளர்த்த குறுமுனியாகிய அகத்தியர் வாழ்ந்த இடமாகிய பொதிய மலை பாண்டிய நாட்டைச் சேர்ந்தது என்பது நாமறிந்ததொன்றே. இதுவரை கூறியவாற்றல் சங்க காலத்தில் தமிழ் செழித்து வளர்ந்த இடம் பாண்டிய நாடு என்பது நன்கு புலகுைம். இதன் காரணமாகத்தான் பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை என்று பிற்காலத்தில் பாடலொன்று எழுந்தது போலும் !

சமண பெளத்தர்களின் தமிழ்த்தொண்டு

சமணர்

த மி ழ் நா ட் டி ற் கு வந்து பரவிய புறச் சமயங்களிலே தொன்மை வாய்ந்த சமயம் சமண சமயமாகும். இச்சமயவொழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகிய சமண முனிவர்களால் தமிழ்மொழி அடைந்த நன்மைகள் மிகப் பலவாகும். தமிழுக்குப் பிற சமயத்தவரை விட அதிகமாகத் தொண்டு செய்தவர்கள் இவர்களே. சின்னூல்களும், பெருநூல்களும் செய்தும், புதுநெறிக் கருத்துக்களை இலக்கணங்களில் புகுத்தியும், தமது நூல்களில் தம் சமயக் கருத்துக்களைப் புகுத் தியும், இவர்கள் சமயத்தொண்டும், அதே நேரத்தில் தமிழ்த் தொண்டும் புரிந்தனர். இதே போன்றுதான் கிறித்தவர்களும் பிற்காலத்தில் தமிழ்த்தொண்டு புரிந்தனர்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் நல்ல சமணர், நந்தா விளக்காம் சிந்தாமணி எழுதிய திருத்தக்கதேவர் சமணர். நன்னூல் என்பது பவணந்தி முனிவர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. காரிகை என்னும் யாப்பிலக்கண நூலை யாத்தவர் அமிதசாகரர் என்னும் சமணராவார். சின்னுரல் செய்த குண வீர பண்டிதர் சமணரே. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணரால் செய்யப்பட்டவையே. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்ருகிய சூளாமணி சிறந்ததொரு சமணத் தமிழ்க் காப்பியமாகும். முதன் முதலில் தமிழில் நிகண்டுகள் செய்தவர்கள் சமணர்களே. சூடாமணி நிகண்டு என்னும் நூல் இவர்தம் தலை சிறந்த நிகண்டு நூலாகும். இவர்கள் இயற்றிய அந்தாதி, கலம்பகம் போன்ற பல திறப்பட்ட சிற்றிலக்கியங்கள். அனைத்தும் சமண சமயப் பொருள்களையும், சமணப் பெரியோர்களையும் புகழ்ந்து கூறும் சின்னூல்களாகும். மேரு மந்தர புராணம், நரிவிருத்தம், யசோதர காவியம் போன்ற நூற்கள் சமண சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் நன்கு எடுத்துக் கூறுகின்றன. திருநூற்றந்தாதி, திருக்கல்ம்பகம் என்ற இரண்டும் சமணர் போற்றிப் படிக்கும் செந்தமிழ் நூல்களாகும். நாலடியார், அறநெறிச் சாரம், சிறு பஞ்சமூலம் என்பன சமணர்தம் அற நூல்களாகும்.

கடைச் சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடையே வாழ்ந்த சமணர்கள் தமிழகத்தே தம் சமயக் கருத்துக்களைப் பரப்ப எண்ணினர். அதன் காரணமாகத் தோன்றியதே திராவிட சங்கம் என்ற சங்கமாகும். இதனைத் தோற்றுவித்தவர் வச்சிர நந்தியாவார். காலம் கி. பி. 470 ஆகும். அச்சமண சங்க வாயிலாகத் தோன்றிய நூல்களே, பழமொழி, சிறு பஞ்சமூலம், ஏலாதி முதலியனவாகும். இன்னும் பல நூல்கள் சமணரால் இயற்றப்பட்டன. ஆனால் அவையெல்லாம் முற்றிலும் இன்று கிடைக்கப்பெறவில்லை.

பெளத்தர்

தமிழ்க் குழந்தைக்குப் பல செல்வச் செவிலியர் உண்டு. அவர்களுள் ஒருத்தியே பெளத்தமாது. பெளத்த சமயம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்தமைக்குரிய சான்றுகள் உள. பெளத்தர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். இவர்கள் இலக்கியம், இலக்கணம் ஆகிய இரு துறைகளிலும் பல நூல்கள் இயற்றியுள்ளனர். தமிழ்த்தாயின் திரு இடையை அழகுபடுத்தி நிற்கும் மணிமேகலையைச் செய்த சாத்தனர் புத்த சமயத்தவர். பிற் காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தே, புத்தமித்திரனுர் என்பவர் வீரசோழியம் என்றதோர் இலக்கண நூலைச் செய் தனர். நற்றிணை 72-ஆம் பாட்டினைப் பாடிய இளம்போதியார் என்பவர் புத்த சமயத்தவராவர்.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றியருளிய நாதகுப்தனர் என்பவர் புத்த சமயத்தவர். சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை முதலிய பல நூல்கள் பெளத்தரால் இயற்றப்பட்ட தமிழ் நூல்க ளாகும். ஆல் இவை நான்கும் இன்று பெயரளவிலும், சிற்சில பாட்டுக்கள் அளவிலுமே நிற்கின்றனவே தவிர, முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

பிற்காலச் சோழர் காலத்துத் தமிழ் வளர்ச்சி

சங்க காலத்தில் பாண்டியர்கள் சிறந்த முறையில் தமிழ் வளர்த்ததுபோல் பிற்காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்கள் பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆவர். இவர்கள் காலத்தில்தான் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வளர்ந்தன என்னலாம். எனினும் இவற்றில் சிறப்பாக வளர்ந்தவை கல்வெட்டுக்களாகும். அக்கால வரலாற்றினையும், இலக்கிய வளனையும் தெரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுக்கள் பேருதவி புரிகின்றன. தமிழ் நாட்டின் முப்பெரும் கவியரசர்களாகிய கம்பர், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார் ஆகியோர் வாழ்ந்த காலம் இக்காலமே. சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியும், ஒட்டக்கூத்தர் உலாக்களும், குலோத்துங்க சோழன் சரிதையும் சிறந்த வரலாற்று இலக்கியங்களாகும். கொங்கு வேளிரது உதயணன் கதை, திருத்தக்க தேவரது சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கல்லாடரது கல்லாடம், குலோத்துங்கன் கோவை, தஞ்சை வாணன் கோவை, தில்லை நம்பி திருவிளையாடல்,திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சித்தாந்த சாத்திரங்கள், தனிப்பாடல்கள் பல முதலியன இக்காலத்து எழுந்த இலக்கியங்களாகும். இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் என்ற செய்யுள் நாடகங்கள் இக்காலத்தில் எழுதப்பட்டு, ஊர்தோறும் நடிக்கப்பெற்றன. சோழ நாட்டின் அரசவைக் கவிஞராகிய ஒட்டக்கூத்தர், பிள்ளைத் தமிழ், உலா, தக்கயாகப்பரணி போன்ற பிரபந்தங்களை நமக்குத் தந்து சென்றார், கம்பர் அளித்த இராமாயணமும், செந்தமிழ்ப் புலவர் சேக்கிழார் தந்த பெரிய புராணமும் தமிழர் தம் ஒப்பற்ற இலக்கியங்களன்ருே! நளவெண்பாப் பாடிய புகழேந்தியும், ஆத்திசூடி முதலியன பாடிய ஒளவையும் வாழ்ந்த காலம் சோழர் காலமே.

சைவமும், வைணவமும் இக்காலத்தில் சிறந்து விளங் கியதால் சைவ, வைணவ இலக்கியங்கள் பல சோழர் காலத்தில் எழுந்தன. கலித்துறை, பிரசன்ன காயத்திரி, இராமாநுச நூற்றந்தாதி போன்ற வைணவ நூல்கள். இக்காலத்தில் தோன்றியவையே. இராமாநுசர், பெரிய வாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்கள் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மெய்கண்டார், உமாபதி சிவம் முதலிய சைவ சித்தாந்தப் பெரியார்கள் இக்காலத்தின் இறுதியில் வாழ்ந்தனர். திருமுறைகளில் முதலில் எழுந்தவை இக்காலத்தனவே. திருமுறைப் பாடல்கள் கோவில்கள் தோறும் பாடப்பெற்றன; கல்வெட்டுக்களிற் பொறிக்கப்பட்டன.

சிறந்த இலக்கியங்கள் இக்காலத்தில் எழுந்தன போன்று இலக்கண நூல்கள் பல இக்காலத்தில் எழுந்தன. அமிதசாகரரது யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் என்ற நூல்கள், தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், நம்பியகப் பொருள். சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு, புத்தமித்திரரது வீர சோழியம் போன்ற நூல்கள் இக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சேவைரையர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களில் பெரும்பாலோர் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மேலும் வடமொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் சோழர் காலத்தில் செய்யப்பட்டன. இதுவரை எழுதியவாற்றால் பிற்காலச் சோழர் காலத்தில் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றின என்பது புலனாகும்.


இடைக்காலத்தில் தமிழ் வளர்த்த வள்ளல்கள்

இடைக்காலத்தில் வாழ்ந்த பேரரசர்களும், சிற்றரசர் களும், செல்வர்களும் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித் தமையால், தமிழும், தமிழ் இலக்கியமும் நன்கு வளர்ச்சி அடைந்தன.

ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் ஆகிய இம்மூவர் காலத்திலும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தார் என்பது நாமறிந்ததொன்றே. மேலும் இவர் குலோத்துங்க மன்னனது ஆசிரியராகவும் விளங்கினர். பெரிய புராணம் பாடிய சேக்கிழார், அநபாய சோழனின் பேரன்பைப் பெற்று அறங்கள் பல செய்தார். வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் கம்பர் ஆதரிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கொங்கு நாட்டைச் சேர்ந்த தலைக்காட்டை ஆண்ட கங்கர்கள் சிறந்த தமிழ்ப் பற்றுடையவர்கள். எனவே அவர்களும் தமிழ்ப் புலவர்களைப் போற்றி வாழ்ந்தனர். நன்னூலாசிரியர் பவணந்தி முனிவரை இக்கங்க அரசர்களில் ஒருவனை சீயகங்கன் ஆதரித்தான். கங்க அரசர்கள் அனைவரும் சைனர்கள். இவர்கள் நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நம்பியகப்பொருள், பெருங்கதை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களை இயற்று வித்த பெருமை உடையவர்கள். நளவெண்பா இயற்றிய புகழேந்தியை ஆதரித்தவன் சந்திரன்சுவர்க்கி என்பவனவான். பாண்டிய மன்னனது அமைச்சராகவும், தளபதியாகவும் விளங்கிய தஞ்சைவாணன், தஞ்சைவாணன் கோவை பாடிய பொய்யாமொழிப் புலவரைப் போற்றிப் புரந்தவனுவான். அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த சேந்தன் என்ற வள்ளுரல் திவாகர முனிவரைக் கொண்டு திவாகரம் என்னும் நிகண்டை இயற்றுவித்தார். இவ்வாறு இடைக்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் நன்கு போற்றப்பட்டதால் தமிழ் மொழி மேலும் வளர்ச்சிபெற்றது.

தமிழைப் போற்றிய பிற்காலக் குறுகில மன்னர்கள்

துலுக்கர், நாயக்கர், ஐரோப்பியர், மராட்டியர் போன்ற பல அயல் மக்கள் கி. பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தை ஆண்டனர். இவர்களில் எவரும் சிறப்பாகத் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் போற்றிப் புரந்தது இல்லை. இந்த மக்கள் அகப்பட்ட வரையிலும் சுரண்டுவதிலேயே காலத்தைக் கழித்தனர். இக்காலத்தே தமிழைப் போற்றித் தமிழ்ப் புலவர்களைப் புரந்த பெருமை தமிழகத்துக் குறுநில மன்னர்களையே சாரும். பிற்காலத்தே தமிழை ஆதரித்த குறு நில மன்னர்களிலே குறிப்பிடத்தக்க பெருஞ் சிறப்புடையவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்களாவர்.

இராம நாதபுர மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர் பலர்; இராமநாதபுர மன்னர்கள் புலவர்களுக்கு வழங்கிய நிலபுலன்கள் இன்றும் அப்புலவர்தம் பரம்பரையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ்ப் பணி செய்துவரும் மதுரைத் தமிழ்ச் சங்கம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரையவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

அமுத கவிராயர், அனந்த கவிராயர் என்போர் இரகுநாதசேதுபதி என்பவரால் ஆதரிக்கப்பட்டனர். அமுத கவிராயராற் செய்யப்பட்ட ஒருதுறைக் கோவை என்ற நூலின் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காய் உருட்டப்பட்டது என்பர். மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி பாடிய அனந்த கவிராயர் என்பவருக்கு மானூர், கலையூர் என்ற இரண்டு ஊர்களும் பரிசாகத் தரப்பட்டன சேதுபதியரசர் ஒருவரால். சவ்வாதுப் புலவர், சக்கரைப் புலவர் முதலிய பல புலவர்கள் இராமநாதபுரத்து மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனர்.

ஊற்றுமலை மருதப்பர் என்ற குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர், நன்னூல் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயராவார். தென் பாண்டி நாட்டிலே ஆட்சி புரிந்த வரதுங்கராம பாண்டியர், அதிவீரராம பாண்டியர், இவர்தம் மனைவியர் ஆகியோர் நல்ல தமிழ்ப் புலமையுடையவர்கள். இவர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் சிலர், தமிழ் நூற்களை எழுதினர். நெல்லை மயிலேறும்பெருமாள் என்பவர் கல்வி மிகவுடையவர்; கல்லாடத்திற்கு உரை செய்தவர். இவரிடம் கற்றவரே இலக்கணக் கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகர்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த பிரபுட தேவர் என்ற ஓர் அரசர், திருப்புகழ் பாடிய அருணகிரியாரைப் புரந்தனர். வெங்களப்ப நாயக்கராலும், சேதுபதிகளாலும் பல கிராமங்கள் அழகியசிற்றம்பலக் கவிராயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டன. பாரதம் பாடிய வில்லியாரைப் புரந்த பெருமை வக்கபாகையெனும் ஊரில் வாழ்ந்த வரபதியாட்கொண்டான் என்பவரைச் சாரும். சொக்கம் பட்டி, மேலகரம், செங்கோட்டை, கண்ணபுரம், எட்டயபுரம், சேற்றூர், சிவகிரி, புளியங்குடி முதலிய ஊர்களை ஆண்ட குறு நில மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் பலராவர்.

திருமடங்கள் தமிழை வளர்த்த வரலாறு

அயலவர் ஆட்சியிலே தமிழை ஓம்பித் தமிழ்ப் புலவர்க்கு உணவும் உடையும் உறையுளும் அளித்துப் பல தமிழ் நூல்கள் வெளிவரச் செய்த அரும்பெரும் செயலிலே திருமடங்களுக்குப் பெரும் பங்குண்டு. திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர் மடம், நெல்லைச் செங்கோல் மடம் என்பன தமிழ் வளர்த்த சைவ மடங்களாகும். இனித் தமிழ் வளர்த்த வீரசைவ மடங்கள் கும்பகோணம், தில்லை, திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களிலிருந்த மடங்களாகும்.

மாதவச் சிவஞான சுவாமிகள், மாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஈசான தேசிகர், கச்சியப்ப முனிவர் முதலிய பெரும் புலவர்கள் அனைவரும் திருவாவடுதுறை மடம் அளித்த அருட்கொடையாவர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், சம்பந்தசரணாலய முனிவர், சீர்காழிச் சிதம்பரநாத முனிவர் முதலியவர்கள் தருமபுர மடத்தின் நல்லாதரவினால் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தனர். இப்புலவர்களேயன்றி மடங்களில் தலைவர்களாக இருந்தவர்களும் தமிழ் கற்றுப் புலமை பெற்றுத் தமிழ் நூல்கள் சில யாத்தும், மடத்து மாணாக்கர்களுக்குத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்பித்தும் தமிழ்த் தொண்டு புரிந்துவந்தனர்.

தசகாரியம், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை , சித்தாந்த சிகாமணி, நமச்சிவாய மாலை, நிட்டை விளக்கம் முதலிய பத்து நூல்களைத் திருவாவடு துறை மடத்துத் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் இயற்றினார். சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், சிவானந்த போதம், பிரசாதக் கட்டளை முதலிய நூல்கள் தருமபுர ஆதீனத்தின் ஆதரவால் வெளிவந்தவையாகும்.

தமிழ்ச் சங்கங்கள்

நான்காம் தமிழ்ச் சங்கம்

பண்டு, பைந்தமிழ் நாட்டில் முச்சங்கங்கள் முத்தமிழையும் வளர்த்தன என்று முன்னர்க் கண்டோம். மூன்றாம் தமிழ்ச் சங்கம் அழிந்த பின்னர், மதுரையில் பன்னூறாண்டுகளாக வேறொரு தமிழ்ச் சங்கம் தோன்றவில்லை. இக்குறையினை முதன் முதலில் நீக்கக் கருதியவர் இராமநாதபுரம் சேது மன்னர்களுடைய வழியில் வந்த பாண்டித்துரையவர்களாவார். இவர் கி. பி. 1901இல் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். மேலும் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு, தமிழாராய்ச்சி செய்தல், நூல் வெளியிடல், செந்தமிழ் என்ற திங்கள் வெளியீடு வெளியிடல், மாணவர்க்குத் தமிழ்க் கல்வி கற்றுக் கொடுத்தல், தேர்வு நடத்தி அதில் தேறியவர்களுக்குப் “பண்டிதர்" என்ற பட்டம் வழங்கல் முதலிய பணிகளைத் தொடங்கிவைத்தனர். பல பழைய நூல்களையும், ஏட்டுச்சுவடிகளையும் திரட்டி ஒரு நூல் நிலையமும் நிறுவப்பட்டது. வித்துவான் பட்டப் படிப்புத் தொடங்குவதற்கு முன்னர் இச்சங்கம் அளித்த “பண்டிதர்” என்ற பட்டம் பெற்றவர்களே பள்ளிகளில் தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பேராசிரியர்களும், செல்வர்களும், வணிகர்களும், தமிழில் ஆர்வம் மிக்கவர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இன்று விளங்குகின்றனர். இச்சங்கத்தின் பணிகளைச் செயற்குழு ஒன்று மேற்பார்த்து வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் திரு. சண்முகராசேசுவர சேதுபதியாவார். திரு. பி. டி. இராசன் அவர்கள் துணைத் தலைவராக விளங்குகின்றார். திரு. சண்முகசுந்தரம் அவர்கள் இதன் செயலராவர். செந்தமிழ்க் கல்லூரி ஒன்று இச்சங்கத்தினரால் தொடங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகின்றன. வித்துவான் பட்டப் படிப்பிற்குரிய முதல் நிலை, இடைநிலை, இறுதிநிலை ஆகிய மூன்று வகுப்புக்களும் உள்ளன. திரு. கி. பழனியப்பன் அவர்களைச் செயலராகவும், திரு. பேராசிரியர் இரா. வே. நாராயணன் அவர்களை, முதல்வராகவும் கொண்டு இக்கல்லூரி சிறந்த முறையில் பணியாற்றுகிறது. தமிழிசையைப் பரப்ப வேண்டி திரு. இல. நாராயணன் செட்டியார் தலைமையில் குழு ஒன்று இதன் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிடும் செந்தமிழ் தமிழ் மாணவர்க்கு நல் விருந்தாகும்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

தஞ்சையில் இன்று தமிழ் வளர்க்கும் சங்கங்களில் தலையாயது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கமானது கி. பி. 1911இல் சில தமிழார்வமிக்க இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் தனி நிலையைக் காத்தலே இச் சங்கத்தின் முதற்கடமையாகக் கருதப்பட்டது. இச்சங்கம் நடத்திய தனித் தமிழ் விரிவுரைகளும், தனித் தமிழில் இச்சங்கம் வெளியிட்ட அறிக்கை, அழைப்பு முதலியனவும் தமிழ்ப் பெருமக்கள் தனித் தமிழில் ஆர்வம் பெறச்செய்தன. இதன் காரணமாய் தமிழ்மொழியில் கலந்திருந்த ஆங்கிலஆரியச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களை மக்கள் கையாண்டனர். திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட இச்சங்கத்தின் கிளையினால் ஆங்கிலப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் பலர் தமிழ்மீது மாறாக் காதல் கொண்டனர். மேலும் இச்சங்கத்தின் சலியாத உழைப்பினால் தமிழ்நாட்டு இரண்டு பல்கலைக் கழகத்தாரும், அரசியலாரும் தமிழுக்குத் தனிச்சிறப்பு அளித்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் தங்கள் பேரவைக்கு (செனட்) இச்சங்கம் ஒர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க உரிமை வழங்கியுள்ளனர். இச்சங்கத்தினரால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இதுகாறும் பல ஆயிரக்கணக்கான த மி ழ் மாணவர்களைப் பயிற்றி அனுப்பியுள்ளது. ஏழை மாணவர்க்கு உண்டியும், உறையுளும் கொடுத்து, இக்கல்லூரி அவர்களை ஓம்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும் இச்சங்கத்தினரால் நிறுவப்பட் டுள்ள தமிழ் மருத்துவமனை தஞ்சையில் பல மக்களுக்கும் நோய் தீர்த்து வருகின்றது. மேலும் த மி ழ் மருத்துவ முறையை நாடெங்கனும் பரப்ப வேண்டுமென்பது இவர்களுடைய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

இச்சங்கம் திங்கள்தோறும் வெளியிடும் " தமிழ்ப் பொழில் ' என்னும் இதழ் பல அரிய கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. தொல்காப்பியம், தெய்வச் சிலையார் உரை முதலிய அரிய நூல்கள் இச்சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இச்சங்க நூல்நிலையம் பல அரிய தமிழ் நூல்களையும், ஆங்கில நூல்களையும், ஆராய்ச்சி நூல்களையும் கொண்டிலங்குவதால் தமிழாராய்ச்சியாளர்க்கு இந்நூலகம் பெரிதும் உதவுகின்றது.

திரு. வே. இராதாகிருட்டின பிள்ளை, அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியார், தமிழ் வள்ளல் பெத்தாச்சிச் செட்டியார், பண்டிதர் சவரிராய பிள்ளை, சிங்காரவேலு முதலியார், பூண்டி அப்பாசாமிவாண்டையார், சங்கப் புலவர் இரா. வேங்கடாசலம் பிள்ளை, இசைவாணர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் போன்றோர் பலவகை யாலும் இச்சங்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். இச்சங்கத்தால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இன்று சிறந்த தொரு புலவர் கல்லூரியாக விளங்குகின்றது. இக்கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவரும், இன்று பேசும் படத்துறையில் இயக்குநராகவும், கதை, வசனம் எழுதுபவராகவும் விளங்குபவருமாகிய திரு.ஏ.கே. வேலன் அண்மையில் இக்கல்லூரி வளர்ச்சிக்காக25000 வெண்பொற் காசுகள் கொடுத்தமை போற்றுதற்குரியதாகும்.

பிற சங்கங்கள்

தஞ்சைத் தமிழ்ச்சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை, சைவசித்தாந்த மகாசமாசம், தமிழர் பழங்கலை ஆராய்ச்சிக் கழகம், நெல்லைத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் போன்றவைகளும் தமிழ் வளர்ச்சிக்காக நிறுவப் பட்ட சங்கங்களாகும். தஞ்சைத் தமிழ்ச்சங்கம் தமிழகம் என்ற சிறந்த திங்கள் வெளியீட்டை நடத்தி, அதன் வாயிலாகத்தமிழர்க்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டியது. சில ஆண்டுகள் தொண்டாற்றிப் பின்னர், இச்சங்கமானது மறைந்தது. மறையாது நிலைத்து நிற்பவற்றுள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையும், நெல்லைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் குறிப்பிடத் தக்கனவாகும். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினைத் தொடங்கிய பெருமை திரு. பழனியப்பச் செட்டியார் அவர்களைச் சாரும். இவரது தோன்றலாகிய திரு. சாமிநாதச் செட்டியார் அயராது இச்சங்கத்தின் நலனுக்கு உழைத்து வருகிறார். இச்சபையின் சார்பில் புலவர் கல்லூரி ஒன்று நடத்தப்பெறுகின்றது. நெல்லைத் தமிழ்ப் பெரியார் பலருடைய முயற்சியினால் தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது தோன்றியது. இன்று இக்கழகமானது தமிழகத்தில் தலைசிறந்த பதிப்பகமாக விளங்குகின்றது; பழம் பெரும் தமிழ்நூல்களையும் புதிய நூல்களையும் அழகிய முறையில் அச்சிட்டுத் தருகின்றது. சைவசித்தாந்த மகாசமாசம் கி. பி. 1906இல் சென்னையில் பலருடைய முயற்சியால் நிறுவப்பட்டது. பல இடங்களில் சமாசக் கூட்டங்களை நடத்திச் சமயவுண்மைகளைப் பரப்பியும், சித்தாந்தம் எனும் திங்கள் இதழை வெளியிட்டும் தமிழ்த் தொண்டு புரிந்து வந்த இச்சங்கம் சிறிது காலம் தளர்வுற்றுப் பின் தளிர்த்து இன்று மறைந்துவிட்டது. பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களையும், திருப்புகழையும், சங்க இலக்கியங்களையும் இக்கழகம் அழகிய முறையில் வெளியிட்டு அடக்க விலைக்கே மக்களுக்கு வழங்கியமை என்றும் மறக்கற் பாலதன்று. தமிழர் பழங்கலை யாராய்ச்சிக் கழகம் (Tamilian Antiquarian society) திருச்சிராப்பள்ளியில் பல்லாண்டுகட்கு முன்னர் பண்டிதர் டி. சவுரிராயர் அவர்களின் பெரு முயற்சியால் தோன்றியது. இக்கழகச் சார்பில் நடத்தப் பெற்ற தமிழர் தொன்மை தொகுப்போன் (Tamilian Antiquary) என்ற இதழ் தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவை குறித்துப் பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டு வந்தது.

மேற்கூறிய சங்கங்கள் தவிர மதுரைத் திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், நெல்லை அருணகிரி இசைக் கழகம், துரத்துக்குடி சைவ சித்தாந்த சபை, தென் காசித் திருவள்ளுவர் கழகம், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ்ச் சங்கங்கள் தமிழ் மாநாடுகள் கூட்டியும், தமிழ் விழாக்கள் நடத்தியும் இன்று தமிழ்த் தொண்டு பல புரிந்து வருகின்றன. இவற்றுள் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தமிழின் வளர்ச்சிக்காகப் பல பணிகள் புரிந்து வருவது நாம் அறிந்ததொன்றே. இதன் செயலாளர் நெல்லை மாவட்டத்து முதுபெரும் புலவர்களில் ஒருவராகிய திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளையாவார்கள். இச்சங்கமானது கலைச் சொற்கள் தொகுத்துக் கொடுத்தமையும், சென்னை அரசினர்க்கு ஆட்சிச் சொற்கள் உருவாக்கிக் கொடுத்தமையும், அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்குரிய சொற்களை ஆக்கியளித்தமையும் தமிழ் வளர்ச்சிக்கு இச்சங்கம் புரிந்த நிலையான தொண்டுகளாகும்.

மேலை நாட்டார் செய்த தமிழ்த் தொண்டு

தமிழகத்திற்கு வந்த மேலை நாட்டு நல்லறிஞர் தம் சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழைக் கற்றனர். தமிழிலே தம் சமயக் கருத்துக்களை எழுதிப் பரப்பினர். இவ்வாறு அவர்கள் தமிழைக் கற்றதன் மூலமாக கிறித்தவம் மட்டுமின்றித் தமிழும் பல நன்மைகளை அடையலாயிற்று. மேலை நாட்டுக் கிறித்தவர்களால் தமிழ் மொழி அடைந்த நன்மை ஒன்றா? இரண்டா? கிறித்தவரிற் சிலர் தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டுக்குக் காட்டினர். வேறொரு சிலர் தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும் விளக்கி அருளினர். மற்றொரு சிலர் இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும் செம்மையையும் துலக்கினர். மேலை நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் மற்றுஞ் சிலர். இன்னுஞ் சிலர் தமிழில் உரை நடை நூல்களைப் பெருக்கினர். இவ்வாறு பல வகையானும் தமிழுக்குத் தொண்டு செய்த பிற நாட்டு நல்லறிஞருள், டாக்டர் போப், டாக்டர் கால்டுவல், வீரமாமுனிவர், எல்லீசர், ரேனியசு ஐயர் என்போர் குறிப்பிடத் தகுந்தோராவர்.

டாக்டர் போப் அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் பலவாகும். இவர் தமிழின் பெருமையினை உலகறியச் செய்ய மிகவும் பாடுபட்டார். திருவாசகத் தேனை ஆங்கில மொழிக் குவளையில் ஊற்றித் தன்னாட்டவருக்கு வழங்கினர். இது போன்றே இவர் நாலடியாரையும், குற ளையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர் பல ஆங்கில வெளியீடுகளில் தமிழினைப்பற்றி பல கட்டுரைகளை எழுதினார்: தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிட்டார். ஆங்கிலத்திலும் அவற்றை மொழி பெயர்த்தார். சுருங்கக் கூறின் டாக்டர் போப் தமிழ் இலக்கியத்தின் பெருமையை மேலை நாட்டு மக்களுக்குக் காட்டினார். இவரைப் போன்றே டாக்டர் கால்டுவல் தமிழ் முதலிய திராவிட மொழிகளின் ஒற்றுமையினை உலகுக்கு அறிவுறுத்தினர். உலகம் உள்ளளவும் திராவிட மொழிகளின் சிறப்பைப் பறையறைய வல்ல திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative grammar of Dravidian languages) என்ற நூலை இயற்றியவர்" இவரே. வீரமாமுனிவர் என்பவர் கம்பனைப் போல ஏசுவின் கதையைத் தமிழிலே காவியமாகப் பாடினார். அதற்குத் தேம்பாவணி என்று பெயர். இது தவிர, இவர் பல சின்னூல்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவரால் இயற்றப்பட்ட சதுர அகராதி குறிப்பிடத்தகுந்ததாகும். எல்லீசர் என்பவர் நம் திருக்குறளை மேலை நாட்டாரும் படித்து இன்புற வேண்டும் என்ற பேரார்வத்தால் திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்க மான விரிவுரை ஒன்று எழுதத் தொடங்கினர். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. ரேனியசு ஐயர் என்பவர் தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவராவர்.

முற்காலத்தில் சமணப் புலவர்கள் நிகண்டு நூல்கள் இயற்றியதைப் போன்றே பிற்காலத்தில் கிறித்தவப் புலவர்கள் நமக்கு அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். இத்தகைய நூலை முதன் முதலில் தமிழகத்திற்கு அளித்த பெருமை சதுர அகராதியை இயற்றிய வீரமாமுனிவரையே சாரும். இதன் பின்னர் பாப்ரீசியர் என்பவரால் விரிவான அகராதி ஒன்று வெளிக்கொணரப்பட்டது. அடுத்து ராட்லர், டெய்லர் என்போரது முயற்சியால் 1400 பக்கங்கள் கொண்ட பேரகராதி ஒன்று வெளிவந்தது. இது வெளி வந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பெர்சிவல் போன்ற பல அறிஞர் பலகாலமாகத் திரட்டியவற்றை வின்சுலோ என்பவர் வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பணியைத் தொடங்கிய பெருமை சாந்தலர் என்பவருக்கே உரியதாகும்.

தமிழ்நாட்டுப் பழமொழிகள் அனைத்தையும் திரட்டித் தந்த பெருமையும் மேலை நாட்டு நல்லறிஞரையே சாரும் பெர்சிவல், லாசரசு ஐயர் என்ற இரு பெரியவர்களும் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகளை எல்லாம் சேகரித்துப் பெரும் நூலாக வெளியிட்டனர். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் கிறித்தவத் தொண்டர்கள் தமிழ் வாழ, வளர வழி செய்தனர்.

வளர்க தமிழ்

உலக மொழிகளிலே செம்மொழிகள் என ஆன்றோரால் அழைக்கப்படுவன ஐந்து. அந்த ஐந்தனுள்ளே தமிழ் மொழியுண்டு. தமிழ்மொழியிலே பல இலக்கியங்கள் உண்டு. தமிழ் மொழிக்கு மூவாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாறுண்டு. தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கணச் செறிவும் தொன்மைச் சிறப்பும் உடைய ஒரு மொழிதான். ஆனால் இன்றையத் தமிழ் மொழியின் நிலையென்ன? நமக்கு அறிவு புகட்டப் பயன்படுகின்ற மொழி எது? நம்மை ஆள்வது எது? தமிழா? அன்று, அன்று. ஏன் இந்த நிலை? ஆங்கிலம்தான் இன்று நம்மை ஆள்கிறது. ஆங்கிலத்திற்கில்லாத தொன்மைச் சிறப்பு தமிழுக்குண்டு. அம்மொழிக்கில்லாத இலக்கிய வளம் நம் மொழிக்குண்டு. அம்மொழி பெற்றிடாத இலக்கணங்கள் நம் அருமை மொழிக்குண்டு. இருந்தும் தமிழால் நம்மை ஆள முடியவில்லை. ஆங்கிலத்தின் இத்துணைச் சிறப்புக்குக் காரணம் ஆங்கிலத்திலே அறிவியல் நூல்களும், பிற கலை நூல்களும் இன்று எத்தனையோ ஆயிரம் பெருகியுள்ளமையே. ஆங்கிலத்திலே தேனிக்களைப் பற்றி மட்டும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உண்டாம். ஆனல் தமிழிலோ? வாய்மூடி மெளனியாக வேண்டியுள்ளது. எனவே இனி நாம் செய்யவேண்டியது என்ன ? தமிழை வளர்க்கவேண்டும். எப்படி? அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கக் கூடாது.


மண்ணையும் விண்ணையும், காற்றையும் ஊற்றையும், கனலையும் புனலையும், காட்டையும் கழனியையும், கடலையும் உடுக்களையும் பற்றி அழகான சொற்களிலே அற்புதமாகப் பாடினால் மட்டும் போதாது. தமிழ் வளராது. மாருகக் கடல் நீரைப்பற்றி, அதன் தன்மையைப் பற்றி ஓராயிரம் நூல்கள் வேண்டும்.

விண்ணின் நிறம் என்ன ? அதற்கு அத்தகைய நிறம் வந்தது எப்படி ? விண்ணிலே உள்ள எண்ணற்ற உடுக்களிலே தண்ணுெளி பெற்றன எத்தனை ? கடைெளி பெற்றன எவை? எவை?உடுக்களோடுவிண்ணிலே உலவும் கோள்கள் எவை? அவற்றிற்கும் நாம் வாழும் நில உலகுக்கும் உள்ள தொலைவு எத்தனை மைல் ? நமது உலகம் எதனால் ஆயது? எத்தன்மையது ? அது தோன்றியது எவ்வாறு ? இந் நிலவுலகில் உயிர்கள் எப்போது தோன்றின? முதலில் தோன் றிய உயிர் எது? நிலத்திலே மலையும் காடும் எவ்வாறு தோன்றின? கால நிலை இடத்திற்கு இடம் வேறு பட்டிருப்பதின் காரணம் என்ன ? மக்கள் எவ்வாறு தோன்றினர் ? எவ்வாறு வாழ்கின்றனர்? அவர்கள் உடலின் கூறுகள் யாவை ? அவற்றின் தன்மை என்ன ? அவை வளர்வது எங்ஙனம்? மக்கள் பெருக்கம் எவ்வாறு ஏற்படுகிறது ? அதனால் உலகுக்கு நன்மையா, தீமையா?

மேலே எழுப்பிய அத்தனை வினாக்களும் நூலின் தலைப்புக்கள்: ஒவ்வொரு தலைப்புக்கும் பல நூல்கள் அழகுத் தமிழிலே உடனே எழுத வேண்டும். யாண்டும், எத்துறையிலும் தமிழன்னை நடம் புரிய வேண்டும்.

"உடல் நூலும் உயிர்நூல் அறிவு நூல்
கணித நூல் உள்ள நூலும்
மடனறுநற் பொரு ணூலும் மரநூலும்
நில நூலும் வான நூலும்
தடையிலா மொழி நூலும் இசை நூலும்
சரித நூல் தருக்க நூலும்
அடைவேநம் தமிழ் மொழியில் அழகியநல்
உரை நடையில் அமைக்க வேண்டும்."

மேலும் ஒரு பெருங்குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் இரு உட் குழுக்கள் அமைக்க வேண்டும். உட் குழுக்களில் ஒன்று உலக நாடுகள் அத்தனைக்கும் செல்லவேண்டும். அங்கங்குள்ள பெரு மன்றங்கட்குச் சென்று தமிழின் அருமை பெருமைகளை அந் நாட்டார் அறிந்து போற்றும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அஃதோடு அந் நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே, தமிழ் கற்க, தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். மற்ருெரு குழு உள் நாட்டிலே பட்டி தொட்டிகளுக்கும், மூலை முடுக்கு களுக்கும் சென்று சொற்பொழிவு வாயிலாகவும், தனி வகுப்புக்கள் வாயிலாகவும் மக்கட்கு தமிழறிவைப் புகட்டல் வேண்டும்.

மேற்கூறிய அத்தனை பணிகளையும் செய்ய வேண்டுமானால் தாய் நாட்டை ஆளும் ஆட்சியாளரின் ஆதரவும் அன்பும் வேண்டும். அதற்கு வழி நாட்டாச்சி தமிழில் நடைபெறவேண்டும். எனவே சட்ட மன்றத்தில், நீதி மன்றத்தில், கல்வி நிலையங்களில் எங்கும் தமிழ் கோலோச்ச வேண்டும். தமிழே படிக்கா வண்ணம் உயர்கலைப் பட்டம் பெறுவதற்கு இன்றையத் தமிழகத்திலே, கல்லூரிகளிலே வாய்ப்பு இருக்கிறது. அது நீக்கப்பட வேண்டும். இத் திட்டங்களை ஏட்டிலே இருந்து நாட்டிலே நடைமுறைக்குக் கொண்டுவந்தால்,

“முத்தமிழும் விரிவடையும் முயற்சியும்
நற்பயன் அளிக்கும் முகமலர்ந்து மெத்தவும்
நம் தமிழன்னை யகங் குளிர்வாள்
தமிழ் நாடும் விளங்கு மன்றே !”

அந்நாளே தமிழுக்கு ஓர் நன்நாள்; பொன்நாள். அந்நாள் என்று வருமோ?

வாழ்க தமிழ் நாடு !

வளர்க தமிழ் !

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

கேள்விகள்

M. P. S. C. Subordinate Services (B. A. Standard)

1. தமிழ் மிகத் தொன்மையானது என்பதற்குச் சான்றுகள் யாவை?
2. செந்தமிழ், கொடுந்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இவற்றிடையே உள்ள வேறுபாட்டைக்கொண்டு தமிழ் மொழியின் இயல்பை எவ்வாறு அளந்தறியலாம்?
3. திணை பால் பாகுபாட்டில் தமிழுக்குரிய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறுக.
4. ’பழையன கழிதலும் புதியன புகுதலும் கீழ் வழுவல கால வகையி னுனே’ என்பதைத் தமிழ் மொழியின் வரலாற்றில் பொருத்திக் காட்டுக.
5. தமிழர்கள் தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதை விளக்கும் சான்றுகள் யாவை?
6 சங்க காலத்துச் சமூக அரசியல் நிலைமைகளைச் சுருக்கி வரைக.
7. பல்லவராட்சியில் தமிழ்நாடு கலைத்துறையில் பெற்ற முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுக. -
8. மகேந்திரவர்மப் பல்லவன் அல்லது முதல் இராசராச சோழன் ஆட்சியைக் குறித்துக் கட்டுரை வரைக.
9. சோழராட்சி ஓங்கியிருந்த காலத்தில் கிராமங்கள் சீரும் சிறப்புமாக இருந்தமைக்குக் காரணம் என்ன?
10. விசயநகர மன்னர்களால் தமிழ்நாட்டு வரலாற்றில் நேர்ந்த மாறுதலை எடுத்துக் கூறுக. [செப். 1948]
11. இந்திய மொழிகளில் தமிழுக்குள்ள சிறப்பியல்புகளைப் புலப்படுத்துக.
12 தமிழ்மொழி இலக்கிய வளம் மிகுந்தது என்பதை ஆராய்ந்து காட்டுக.
13 தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என விளக்குக.
14 ஒரு மொழி பேசுவோர் மற்றொரு மொழியாருடன் கலந்து பழகிய காரணத்தையும் முறையையும் அந்தந்த மொழியே தெரிவிக்கும் என்பர். தமிழ் மொழிக்கு இது எவ்வளவில் பொருந்தும்? ஆராய்க.
15 பல்லவர் ஆட்சியில் கலைகள் வளர்ந்ததோடு அல்லாமல்

மொழியும் வளர்ச்சிபெற்றது என்பதை விளக்குக. [செப். 1950]

16 பிற மொழிச் சொற்கள் தமிழ் மொழியுடன் கலப்பதால் வரும் நன்மை தீமைகளை ஆராய்க.
17 தமிழர் ஐரோப்பியருடன் கொண்ட தொடர்பால் தமிழ் மொழி எவ்வெவ்விதங்களில் வளம் பெற்றுள்ளது?
18 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற பாகுபாட்டின் சிறப்பை எடுத்துக் கூறுக.

[சூன் 1952]

19 மேலைநாட்டு நல்லறிஞர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டின் திறத்தினை விளக்குக.
20 தமிழ்மொழியில் நாடகம் தோன்றி வளர்ந்த வரலாற் றைக் கூறுக. [சனவரி 1958]
M. P. S. C. Provincial Services
21 சங்க காலத்தில் முத்தமிழ் வளர்ந்த வரலாற்றைக் கூறுக.
22 சமணர்கள் தமிழ் மொழிக்குச் செய்த சேவையைச் சுருக்கமாக எழுது.
23 தமிழ் நெடுங்கணக்கில் சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும் என்பார் கொள்கையை ஆராய்க.
24 இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி வளர்ந்துவரும் பான்மையை உதாரணத்துடன் விளக்குக
25 கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னே தமிழ்நாட்டுக்கும் அயல்நாடுகட்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிகத்தைச் சான்று காட்டி எழுதுக.
26 தமிழகத்தில் கற்கோவில் எழுந்த வரலாற்றைக் கூறுக.
27 மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் இவ்விரு நகரங்களின் பழம் பெருமையைச் சரித்திர வாயிலாக விளக்குக.
28 கி. பி. பத்தாம் நூற்ருண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் கலைக் களஞ்சியங்களாக விளங்கிய நகரங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுக.
29 பயிர்த்தொழிலை வளர்ப்பதற்குச் சேர சோழ பாண்டியர்கள் செய்த முயற்சியை விளக்கிக் கூறுக. [சூலை 1948]
30 நல்ல தமிழின் நீர்மையை விளக்கி உதாரணமும் தருக.
31 ’தமிழ்நாட்டு மூவேந்தருள்ளும் தமிழ் மொழியைச் சிறப்புற வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது" -இதை ஆராய்க.
32. பல்லவர் அரசாண்ட காலத்தில் தமிழ் வளர்ந்த வரலாற்றைச் சுருக்கி வரைக.
33 பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றையும், அச்சங்கத்தினுல் தமிழுக்கு விளைந்த நன்மைகளையும் விளக்கிக் கூறுக.
34 தமிழில் வழங்கும் ஐரோப்பிய மொழிச் சொற்களை வகைப்படுத்திக் காட்டுக. [அக். 1949]
35 "பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே

கிடந்து சங்கத்- - திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை”' -இக்கவியிலுள்ள கருத்துக்களை ஆராய்க.

36 தென்னாட்டில் திருமடங்கள் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றைச் சுருக்கி எழுதுக.
37 “தமிழ்நாட்டுத் திருக்கோவில்கள் கலைக் கோவில்களாகவும் திகழ்ந்தன -இவ்வுண்மையை விளக்குக.
38 திரிசொல், திசைச் சொல்-இவற்றின் தன்மையை விளக்கி உதாரணந் தருக.
39 “தமிழ்நாட்டின் சீர் ஒங்கி இருந்த காலமே தமிழ் மொழி சிறப்புற்றிருந்த காலம்” -இக்கொள்கையை ஆராய்க. [நவ. 1950]
40. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற பாகுபாடு எந்த அடிப்படையின்மேல் எழுந்தது? அதனால் அறியக் கிடக்கும் மொழி வரலாறென்ன?
41 தமிழிலக்கணத்தில் உள்ள உயிர், மெய், ஆய்தம், உயர்திணை, அஃறிணை என்னும் குறியீடுகள் பாராட்டத் தக்க முறையில் அமைந்துள்ளன என்பதை விளக்குக.
42. சமண பெளத்தர்கள்/ தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச்

செய்துள்ள தொண்டு பற்றி ஆராய்க. --

43. தமிழ்நாட்டின் பொற்காலம் என்று போற்றத் தக்கது எது? காரணம் தந்து விளக்குக. [1952]

M. P. S. C. State Services [B. A. (Hons). Standard

44. தமிழ்நாட்டின் வரலாறு அந்நாட்டு மொழியின் இலக்கிய வளர்ச்சியையேனும் அம்மொழியின் வளர்ச்சியையேனும் விளக்குவதை ஆராய்க.
45. தொல்காப்பியர் காலத் தமிழுக்கும் நன்னூலார் காலத் தமிழுக்குமோ (அல்லது) நன்னூலார் காலத் தமிழுக்கும் இந்நாளையத் தமிழுக்குமோ உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவுபடுத்துக.
46. பாண்டியரோ, பிற்காலச் சிற்றரசர்களோ தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்குக. [1954]
47. பல்லவர் அல்லது பிற்காலச் சோழர் சிறந்திருந்த போது தமிழ் வளர்ந்த வரலாற்றை விளக்குக.
48. சங்க காலத்தின் மொழி இயல்பையோ இந்நாளைய

மொழி இயல்பையோ விளக்குக. [1955]

49. சங்க இலக்கியங்களின் வழியாக அறியப்படும் சங்க கால வரலாற்றினை ஆராய்ந்தெழுதுக. [1956]
50. பழந் தமிழ்நாட்டின் எல்லைகளைப் பற்றிய இலக்கியச்

சான்றுகளை வரன்முறையாக எழுது.

51. இருபதாம் நூற்றாண்டில் நாடகத் தமிழ் வளர்ந்த, வரலாற்றைக் கூறுக. [1957]
52. இருபதாம் நூற்றண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் - அல்லது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வளர்ந்த வரலாற்றையும் ஆற்றிய பணிகளையும் விளக்கி எழுதுக. [1958]
BOOKS CONSULTED
1. Administration and Social life under Pallavas Dr. Meenakshi
2. Administration and Social life under Vijayanagar Empire Dr. V. Mahalingam
3. Comparative grammar of Dravidian Languages Dr. Caldwell
4. Dravidian Architecture Dubreil
5. Foreign notices of South India K. A. Neelakanda Sastri
6. History of Tamils P. T. Srinivasa fyengar
7. History of the Pallavas of Kanchi Gopalan
8. Some Contributions of South India to Indian Culture S. K. lyengar
9. South Indian History K. A. Neelakanda Sastri
10. Studies in Pallava History Fr. Heras
11. Tamils 1800 years ago – V. Kanagasabai Pillai
எடுத்தாண்ட நூல்கள்
1. அழகுக் கலைகள் மயிலை. சீனி. வேங்கிடசாமி
2. சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் டாக்டர் உ. வே. சா.
3. தமிழக வரலாறு. அ. மு. ப.
4. தமிழ் மொழி வரலாறு வி. கோ. சூ.
5. பல்லவர் வரலாறு டாக்டர் மா. இராசமாணிக்கனார்
6. பாண்டியர் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார்
7, பிற்காலச் சோழர் சரித்திரம்
8. மொழி நூல் டாக்டர் மு. வ