தமிழ் நூல்களில் பௌத்தம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு + சமயம் = மனிதன். எனவே, மனிதனுக்குச் சமயம் இன்றியமையாதது.

அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்குஞ் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச் சமயம் பலவாகவே தோன்றும். மெய்யறி வல்லாத பிறவறிவு கொண்டு, பொருளுண்மையை ஆராய்வோர்க்கு, அவ்வுண்மை, அவரவர் அறிவாற்றலுக்கேற்ற அளவில், இன்றைக்கொரு விதமாகவும், நாளைக்கொரு விதமாகவும் விளங்கும். அவர்கள் நிலைத்த முழு உண்மையை உணராமையான், அவர்கட்குப் பல சமய உணர்வு பிறக்கிறது. மெய்யறிவு விளங்கப்பெற்றதும் அப்பன்மை உணர்வு பொன்றும்.

"உலகில் நானாபக்கங்களிலுந் தோன்றி உண்மை ஞானத்தை அறிவுறுத்திய சமய குரவர்கள் பலரும் மெய்யறிவு பெற்றவர்கள் அல்லவோ? அவர்கள் அறிவுறுத்திய சமயக் கொள்கைகள் ஒன்றோடொன்று முரண்பட்டுப் பன்மை உணர்விற்கு நிலைக்களனாக நிற்றற்குக் காரணம் என்னை?" என்று சிலர் வினவலாம். சமய குரவர்கள் அனைவரும் அறிவுறுத்திய உண்மை ஒன்றே. ஆனால் அவ்வுண்மைப் பேற்றிற்குரிய முறைகளில் வேற்றுமை உண்டு. அடிப்படையான உண்மையையும், முறைப்பாட்டையும் ஒன்றெனக் கொண்டு பலர் வாதம் புரிகிறார். அவ்வாதப் போர் ஈண்டு எற்றுக்கு?

உண்மை, என்றும் ஒரு பெற்றியா இலங்குவது. முறைப்பாடுகள் காலதேச வர்த்தமானத்தை யொட்டிக் கோலப்படுவன. அவைகளில் வேற்றுமை யிருத்தல் இயல்பு. அவைகள் மாறுந் தகையன. மாறத்தக்க முறைகளையே அடிப்படையான உண்மையென்று கோடல் அறியாமை. இந் நுட்பம் விளங்கப்பெறுவோர்க்கு, "உண்மையில்" பன்மை  உணர்வு தோன்றுதல் அரிது. விளக்கம், அடியேனால் எழுதப் பெற்ற "மனித வாழ்க்கையுங் காந்தியடிகளும்", "சைவத்தின் சமரசம்", "முருகன் அல்லது அழகு", "கடவுள் காட்சியும் தாயுமானாரும் " என்னும் நூல்களிற் காண்க.
சமயம் ஒன்றே. முறைகள் பல. முறைகளிற் சிற்சில வேளைகளில் மாசு படிவதுண்டு. அம்மாசைப் போக்கப் பெரியோர்கள் தோன்றுவது வழக்கம். நமது பாரத நாட்டிலும், சமயம் என்னும் உண்மை நெறிக்குரிய முறைகளில் திரிபு நேரும்போதெல்லாம், பெரியோர்கள் தோன்றித் திரிபைப் போக்கி முறைகளைச் செம்மை செய்தார்கள். அப்பெரியோருள் புத்தர் பெருமானும் ஒருவர்.
புத்தர் பெருமான் எந்தாளில் தோன்றினார்? உண்மையை உணர்த்தும் அறிவெனுங் கருவியை "வேதம்" என்னும் ஒரு நூலாகக்கொண்டும், உண்மையை விளங்கச் செய்யுந் தியாகத்துக்குரிய "யக்ஞம்" என்னும் யாகத்தைக் கொலைக்குழியாக்கியும், பிறப்பில் சகோதரர்களாகத் தோன்றிய மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தும், உண்மைக்கு மாறுபட்ட இழிவுகள் இன்னோரன்ன பல நிகழ்த்தியுஞ் சமயத்துறைகட்குச் சிலர் சூழ்ந்த கேட்டால், மன்பதை இருளில் மூழ்கி இடுக்கணுற்ற வேளையில், புத்தரென்னும் பெருஞாயிறு தோன்றிற்று. அஞ்ஞாயிறு, அக்கால தேச வர்த்தமானத்துக்கேற்ற வழியில், அறமுறைகள் கோலி, உண்மைமீது படர்ந்திருந்த பனிப்படலத்தை நீக்கிற்று. சுருங்கக்கூறின், "சீலம் என்பதன் வழிப் புத்தர் உலகைச் செம்மை செய்தார் என்று கூறலாம். அந்நாளில் சீலம் மறக்கப்பட்டமையான், சீலம் வலியுறுத்தப்பட்டது.
"பௌத்தம்" பூதவாதமென்று சிலவிடங்களில் கருதப்படுகிறது. அது தவறு. பௌத்த நூல்களில் ஏதாவதொன்றைச் சிறிது பார்த்தவரும் இங்ஙனங் கூறார். இது குறித்து நூலினுள் சில உரை பகர்ந்துளேன்.
புத்தர், கடவுளைப்பற்றி ஒன்றுங் கூறாமையான், அவரை நாத்திகரெனச் சிலர் கருதுகிறார். புத்தர், அறமெனுங் கடவுளைச் சீலமெனும் வழிநின்று உணருமாறு அறி வுறுத்திப் போந்தார். கடவுளை வேதமெனும் நூலாகவும், யாகமெனுங் கொலைக்குழியாகவும், சாதியெனுஞ் சாக்கடையாகவும் மன்பதை கொண்டதை மாற்றப் போந்த அறவோர் புத்தர் பெருமானாதலால், அவர் கடவுளை அறமென்றும், அதற்குரிய வழியைச் சீலமென்றும் அறிவுறுத்தினார்.
வேதம் யாகம் முதலியவற்றைத் திரித்துக் கேடு சூழ்ந்த பொல்லாத உலகம், புத்தருக்குப் பின்னைப் பௌத்த தர்மத்துக்குங் கேடு சூழ்ந்தது. பிற்றை ஞான்று பௌத்தம் பலப்பல வழியில் மாறுதலடைந்தது. ஜப்பானிலுள்ள பௌத்தத்துக்கும் இலங்கையிலுள்ள பௌத்தத்துக்கும் பெரும் வேற்றுமை உண்டு. புத்தர் பெருமான் போதனை இப்பொழுது பௌத்தரென்று சொல்லிக்கொள்ளும் பலரிடஞ் சாதனையில் இல்லை என்று சொல்லலாம். புத்தர் பெருமான் போதனை மட்டுமன்று, மற்றும் பல சமய குரவர் போதனைகளும் சாதனையிலில்லை என்றுங் கூறலாம்.
சமய குரவர்கள் சொல்வழி எப்பொழுதும் உலகம் நிற்பதில்லை. சமய குரவர் உருவங்கட்கு மட்டும் வந்தனை வழிபாடுகள் நிகழ்த்தி, அவர்கள் அறவுரைகளைக் குழி வெட்டிப் புதைப்பது உலகின் இயல்பாகிவிட்டது. சமயத்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பலரிடத்தும் இக்குறைபா டிருக்கிறது. இதற்குச் சமய குரவர்கள் என் செய்வார்கள்? சமயம் என் செய்யும்?
அறத்தில் பெரிதும் ஒற்றுமை வாய்ந்த சமண பௌத்தங்களே பின்னாளில் ஒன்றோடொன்று மலைந்து போரிடலாயின. பிற்காலத்திய சமண பௌத்தர்கள் போரைத் தங்கள் அளவிலாதல் நிறுத்திக்கொண்டார்களா? இல்லையே. அவர்கள் தங்களுக்குரிய அறவொழுக்கங்களையும் முற்றும் மறந்து, கடவுள் இன்மை என்பதில் மட்டும் கருத்துச் செலுத்தி, மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி, கடவுளுண்மையில் உறுதியுடையாரைப் பல்லாற்றானுந் துன்புறுத்தினார்கள். "கண்டு முட்டு ; கேட்டு முட்டு" என்பது போன்ற கொடிய வழக்கங்கள் அவர்கள் வாழ்வில் நுழைந்த ஒன்றை ஈண்டுக் குறித்தல் சாலும். சமண பௌத்தர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் தங்களுக்குரிய சீலத்தை விடுத்துச் சினத்தைக் கொண்டார்கள் என்று கூறல் மிகையாகாது. இதற்குச் சமணம் என் செய்யும் ? பௌத்தம் என் செய்யும்?
மழைநீர் வானத்தினின்றும் புறப்படும் போது எவ்வளவு தூய்மையதா யிருக்கிறது? அது நிலத்தில் வீழ்ந்த பின்னை அஃதடையும் நிலைகளை என்னென்று சொல்வது! இவ்வாறே, ஒவ்வொருபோழ்துஞ் சமயகுரவர்களின் போதனைகள் தோற்றுவாயில் செம்மையாயிருக்கின்றன. அவைகள் மக்களிடைப் பரவும் போது, அவைகள் மீது பலதிற மாசுகள் படர்ந்து விடுகின்றன. குறைபாடு யாண்டையது?
பிற்காலச் சமண பௌத்தர்கள், சீலங்கள் மீது கருத்திருத்தாது, கடவுள் உண்மை கூறுவோரை இடர்ப்படுத்துவதில் மட்டுங் கருத்துச் செலுத்தலானார்கள். நந் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருவள்ளுவர், இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார் முதலியோர்க்குப் பின்னரே நாளடைவில் சமண பௌத்த அறநிலைகள் குலையலாயின என்று கூற லாம். திருவள்ளுவர் உள்ளிட்டார் காலத்தில் சமண பௌத்தங்கள் மக்களை அறவழியில் நிறுத்தி ஆண்டுவந்தன என்பதில் ஐயமில்லை. நாளடைவில் நிலை மாறிவிட்டது.
அறநெறியில் படர்ந்த மாசுகளைத் துடைத்துச் சீலத்தை வலியுறுத்தி யோம்பப் புத்தர் பெருமான் தோன்றியது போலக் கடவுளுண்மையை வலியுறுத்தப் பலவிடங்களில் பல சான்றோர்கள் தோன்றினார்கள். அவருள் திருஞான சம்பந்தருமொருவர். இடபதேவர், மஹாவீரர், புத்தர், அசோகர், திருவள்ளுவர் முதலியோர் காலத்திய சமண பௌத்தங்களை நெஞ்சிற்கொண்டு, சிலர் திருஞானசம்பந்தர்மீது வீண்பழி சுமத்துகிறார். மேற்குறிப்பிட்ட பெரியோர்கள் காலத்தில் நிலவியவாறே சமண பௌத்தங் கள் நிலவி யிருப்பின், திருஞானசம்பந்தர் வருகைக்கே இடன் நேர்ந்திராது.
திருஞானசம்பந்தர், சமண பௌத்தங்களின் பெயரால் மக்களிடைப் படர்ந்த மாசுகளைக் கழுவப் போந்தாரே யன்றிச் சமண பௌத்தங்களையே வேரோடு கல்லப் போந்தாரில்லை. அவர் பாக்களிற்போந்துள்ள சமண பௌத்த மறுப்புரைகள், அவர் காலத்திய சமண பௌத்தங்களைக் குறிப்பன என்க. திருஞானசம்பந்தர் சமண பௌத்தங்களை அழிக்கப் போந்தவராயின், "சமண் சாக்கியம் ஆக்கிய வாறே" என்று பாடியிரார். இத்திருவாக்கால் சமண பௌத்தமும் ஆண்டவனருளால் தோன்றியன என்னும் உண்மையன்றோ புலப்படுகிறது? கால நிலை, மக்கள் நிலை முதலியவற்றை உன்னி, காய்தல் உவத்தல் அகற்றி, ஆராய்ச்சித் துறை நண்ணுவதே அறிவுடைமை. இது காலத்துக்குரிய ஒன்றாகலின், இதை ஈண்டுக் குறிப்பிடலானேன்.
பெயரளவில் சமயங்கள் பலவாயிருப்பினும், அவைகளின் உள்ளுறை ஒன்றையே குறிக்கொண்டு நிற்றலான், எச்சமயத்தையும் அழிக்க எவ்வறிஞரும் முற்படார். மனித வாழ்விற்கு இன்றியமையாத சமயம் என்னும் ஒன்றைக் காக்கவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதை அழிக்க முந்துவார்களோ?
பெரியோர்கள் கோலும் முறைப்பாடுகளில் வேற்றுமையிருத்தல் உண்மை. அம்முறைப்பாடுகள் காலதேசவர்த்தமானத்தையொட்டிக் கோலப்படுவன வாகலான், அவைகளில் வேற்றுமை யிருந்தே தீரும். அவ்வேற்றுமைக்கும் முதலென்னும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
சமய குரவர் என்று சொல்லப்படும் அனைவரும் அண்ணன் தம்பிமார்போல எனக்குத் தோன்றுகிறார். அவர்களிடைப் பகைமை யிருந்ததாகக் கருதும் மனம் எனக்குறவில்லை. எனது அனுபவத்தை உலகிற்குச் சொல்கிறேன். ஏதாயினும் வேற்றுமை காணப்படின், அதைக் காலதேச வர்த்தமானத்தின் பாற்படுத்தி, ஒதுக்கி, ஒற்றுமையை மட்டுங் கொண்டு, உய்யுநெறி காணல் வேண்டுமென்று இயற்கை அன்னை எனக்கு அறிவுறுத்துகிறாள்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலர் அருளிய ஒருமை வழியே எனக்குரிய வழி. எனது சமயம் சமரச சன்மார்க்கம். உலகிலுள்ள சமயம் ஒவ்வொன்றும் இச்சமரச சன்மார்க்கத்தையே அறிவுறுத்துகிறதென்பது எனது கொள்கை. ஆகவே, யான் எச்சமயத்தையும் போற்றுவேன்; எச்சமயக் கூட்டத்துக்குஞ் செல்வேன். எனக்குச் சமயவேற்றுமை யென்பது கிடையாது. எச்சமயப் பெயராலாதல் சன்மார்க்கத் தொண்டு நிகழல் வேண்டுமென்பது எனது உட்கிடக்கை.
இக்கொள்கையுடைய அடியேனைத் தென்னிந்திய பௌத்தசங்கச் சார்பாகச் சென்னைச் "சிந்தாதிரிப்பேட்டை ஹைஸ்கூல்" நிலையத்தில் 1928 வருடம் ஏப்ரல்மீ 6உ, அறிஞர் இலட்சுமிநரசு நாயுடு அவர்கள் தலைமையின் கீழ்க் கூடிய தென்னிந்திய பௌத்த மகாநாட்டில், "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்னும் பொருள் பற்றிப் பேசுமாறு, அச்சங்கத்தார் பணித்தார். அப்பணி மேற்கொண்டு, ஆண்டுப் போந்து, அடியேன் நிகழ்த்திய விரிவுரையே இந்நூலின் உள்ளுறை.
"தமிழ் நூல்களில் பௌத்தம்" என்னும் பொருள் ஒரு மணி காலப் பேச்சில் அடங்குவதன்று. அஃது ஒரு விரிந்த நூலுக்குரிய பொருள். அதை எங்ஙனம் ஒரு மணி நேரத்துள் அடக்குவது? அவ்வொரு மணி நேரத்தில் குறித்துப் பேச எண்ணிய சில பொருளுள்ளுஞ் சில விடுபட்டன. அவைகளுள் இன்றியமையாத இரண்டொன்றை இம்முன்னுரையில் பொறித்துளேன். இது கருதியே முன்னுரை சிறிது விரிவாக எழுதப்பட்டது.
சொற்பொழிவு நூல்வடிவம் பெற்றமையான், அதற்குரிய சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன. புது மாறுதலொன்றும் பெரிதுஞ் செய்யப்படவில்லை. இந்நூலால் சமரச சன்மார்க்க உணர்வு நாட்டிடைப் பரவுதல் வேண்டு மென்பது எனது வேட்கை.

சென்னை
இராயப்பேட்டை திரு. வி. கலியாணசுந்தரன்
16-2-1929