உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்த்த நகரங்கள்/தமிழ் வளர்த்த சங்கங்கள்

விக்கிமூலம் இலிருந்து

2. தமிழ் வளர்த்த சங்கங்கள்

தமிழ்வளர்த்த நாடும் நகரும்

தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது.

சங்கம் பற்றிய சான்றுகள்

பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த சங்கங்கள் மூன்று. அவை தலை, இடை, கடை யெனக் குறிக்கப்பெறும். இம்மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை இறையனார் களவியல் பாயிர உரையாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக்களாலும், சில சங்க இலக்கிய உரைகளாலும் ஒருவாறு அறியலாம். இவற்றுள் இறையனார் களவியல் உரையே சங்க வரலாற்றைச் சற்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வுரை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதே யெனினும் கருத்துக்கள் அனைத்தும் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரனாருடையனவே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை, சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண்டியர்களையும், அவற்றில் இருந்து தமிழாய்ந்த புலவர்களையும், ஒவ்வொரு சங்கத்திற்கும் உரிய புலவர்களின் தொகையையும், சங்கம் நடைபெற்ற ஆண்டுகளின் அளவையும், முதலிரு சங்கங்கள் நிலவிய நகரங்கள் கடல்கோளால் அழிந்ததையும் எடுத்துரைக்கும் திறம் வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது. அதனாலேயே இவ்வரலாற்றில் நம்பிக்கை கொண்ட பண்டை உரையாசிரியர்கள் பலரும் தத்தம் உரையகத்தே இவ் வரலாற்றுக் குறிப்புக்களை இடையிடையே எடுத்துக்காட்டினர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், “தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தால் செய்யுள் செய்தார்”, “அவ்வழக்கு நூல் பற்றியல்லது மூன்றுவகைச் சங்கத்தாரும் செய்யுள் செய்திலர்” என்று கூறும் உரைகளுள் களவியல் உரையிற் காணும் சங்க வரலாற்றுக் குறிப்புக்களைக் காண்கிறோம்.

மற்றாேர் உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் தாம் வரைந்துள்ள தொல்காப்பிய உரைக்கண், “அவ்வாசிரியராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்” என்றும், புறத்திணையியல் உரையில், "தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க” என்றும் கூறுமாற்றான் களவியல் உரைக்குறிப்புக்களை அவர் எடுத்தாளுந்திறம் புலனாகின்றது.

தலை இடைச் சங்கங்கள்

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கம்” என்றும், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்” என்றும், “முதலூழி இறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது உரைப்பகுதியில் முதலிடைச் சங்கங்கள் இருந்த நகரங்களும் கவியரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம்.


"இவ்வகை யரசரிற் கவியரங்கேறினார்
ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப”


என்ற பழைய பாட்டானும் கபாடபுரத்தில் சங்கமிருந்த செய்தி அறியப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் தாம் இயற்றிய தெய்வத்தன்மை வாய்ந்த பெரியபுராணத்தில், “சாலுமேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்” என்று தலைச்சங்கப் புலவரைக் குறித்துள்ளார். இடை கடைச் சங்கங்கள்

கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந,”

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலங்தரு திருவின் நெடியோன் போல”

என வரும் மதுரைக்காஞ்சி அடிகளால் பாண்டியன் ஒருவன் அகத்தியரைத் தலைவராகக்கொண்டு முதற் சங்கத்தை நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியருக்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடியோனாகிய முடத்திருமாறன் இடைச்சங்கம் நிறுவிப் புலவர்களைக் கூட்டித் தமிழாய்ந்த செய்தியும் விளக்கமாகின்றன.

இடைச்சங்கக் கபாடபுரம்

இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப் பற்றிய செய்தி, வான்மீகி இராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் சுட்டப்பட்டுள்ளது. தென்பாற் செல்லும் வாணர வீரர்க்குச் சொல்லும் இராமன் வார்த்தைகளாக, ‘வானர வீரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துக்களால் அணி செய்யப்பட்டதும் பாண்டியர்க்கு உரிய தகுதியுடையதுமான கபாடபுரத்தைக் காணக் கடவீர்!’ என்று வான்மீகியார் குறிப்பிட்டுள்ளார். வியாசர் தம் பாரத நூலுள், ஒரு பாண்டியன், தன் தந்தையைக் கொன்று கபாடபுரத்தை அழித்த கண்ணனையும் கடிமதில் துவாரகையையும் அழிப்பதற்குப் படையெடுத்த செய்தி யொன்றைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியர் தம் பொருள் நூலில் முத்தின் வகைகளைப் பற்றி மொழியுமிடத்துக் கபாடபுரத் துறையில் குளித்த முத்தின் வகையைப் பாண்டிய கவாடகம் என்று பகர்ந்துள்ளார்.

மதுரையில் கடைச்சங்கம்

இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும் இலங்கிய செய்தியை மாணிக்கவாசகர் தம் திருக்கோவையார் நூலில் குறிக்கின்றார்,


"சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா! தடவரைத் தோட்கென்
கொலாம்புகுந் தெய்தியதே.”


இப்பாடலில் கூடலெனப் பெயர் வழங்கும் மதுரைமாநகரில் தமிழ்ப் புலவர்கள் சங்கமிருந்து தமிழ்க்கலைத் துறைகளே ஆராய்ந்த செய்தி கூறப்படு கின்றது. ஏழாம் நூற்றாண்டில் திகழ்ந்த திருநாவுக்கரசர், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்’ என்று தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாற்றைத் தம் தேவாரப் பாடலில் குறிப்பிடுகின்றார். இச் செய்திகளால் கடைச்சங்கம் இன்றைய மதுரைமாநகரில் இலங்கியதென்பதும் விளங்குகிறது.

களவியல் உரையில் தலைச்சங்க வரலாறு

இறையனார் களவியல் உரையால் காணலாகும் முச்சங்கச் செய்திகளைச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப் பகுதியில் விளங்கிய தென்மதுரையே பாண்டியர்களின் முதற் கோநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். இம் முதற்சங்கத்தை நிறுவியவன் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன். இதன்கண் அகத்தியனார், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான ஐந்நூற்றுநாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் போன்ற எண்ணிறந்த நூல்கள் ஆக்கப்பெற்றன. இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது. இதில் பாண்டியர் எழுவர் கவியரங்கேறினர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியமாகும். இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன்.

இடைச்சங்க வரலாறு

தலைச்சங்கமிருந்த தென்மதுரை கடல்கோளால் அழிந்தபின், கடுங்கோன் என்னும் பாண்டியன் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த வளநாட்டில் கபாடபுரம் என்னும் நகரைத் தலைநகராக்கினான். அந்நகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழைப் புரந்தான். இதுவே இடைச்சங்கம் எனப்படும். இதன் கண் தொல்காப்பியர் முதலான பல புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்தனர். இச்சங்கத்தில் ஐம்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் கலியும், குருகும், வெண் டாளியும், வியாழமாலை அகவலும் முதலான பல நூல்கள் பாடப்பெற்றன. அவர்கட்கு இலக்கணநூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆகும். இச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் விளங்கிற்று என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கடைச்சங்க வரலாறு

இடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் முடத்திரு மாறன் என்னும் பாண்டியன் இருந்தான். இவனே இன்றைய மதுரைமாநகரைப் பாண்டிய நாட்டின் தலைநகராக்கினான் ; இம்மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கத்தையும் நிறுவினான். இவன் கடல்கோளால் ஏற்பட்ட தன்னாட்டின் குறையை நிறைத்தற்குச் சேர சோழரோடு போர்புரிந்து அவர்கள் காட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். அதனால் இவன் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்று வியந்தேத்தும் சீர்த்தி பெற்றான். இவன் காலமுதல் இன்றைய தென்றமிழ் மதுரை, பாண்டிய நாட்டிற்கே யன்றிப்பைந்தமிழ் நாடு முழுமைக்கும் மொழி வளர்ச்சியில் முதன்மைபெற்றுத் திகழ்வதாயிற்று.

கடைச்சங்கத்தில் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் முதலான நாற்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, கற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலான எண்ணிறந்த நூல்கள் இயற்றப்பெற்றன. அவர்கட்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக விளங்கின. இச்சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது ஆண்டுகள் நின்று நிலவியது. இச்சங்கத்தின் இறுதிநாளில் விளங்கிய மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பான்.

புலவர் கழிவிரக்கம்

இறையனார் களவியல் உரைப் பாயிரத்தால் மூன்று சங்கங்களிலும் தோன்றிய நூல்கள் பலவற்றை அறிகின்றோம். அவற்றுள் முதற் சங்கத்தில் எழுந்த நூல்களுள் ஒன்றேனும் இன்று காணுதற்கில்லை. அச்சங்கத்தில் எழுந்த பேரிலக்கணமாகிய அகத்தியத்தின் ஒரு சில சூத்திரங்களையே உரைகளிடையே காணுகின்றோம். இடைச்சங்க நூல்களுள்ளும் தொல்காப்பியம் நீங்கலாக ஏனையவெல்லாம் கடலுக்கு இரையாயின. இச்செய்தியைக் குறித்து ஒரு புலவர் இரங்கிக்கூறும் பாடல் இங்கு எண்ணுதற்குரியது :

"ஓரணம் உருவம் யோகம்
இசைகணக்(கு) இரதம் சாலம்
தாரண மறமே சந்தம்
தம்பம்நீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள்ளன் றின்ன
மான நூல் பலவும் வாரி
வாரணம் கொண்ட(து) அந்தோ!
வழிவழிப் பெயரும் மாள.”

இப் பாடலால் மூன்று சங்கங்களிலும் பல துறைக் கலைநூல்கள் அளவிலாது எழுந்தனவென்றும், அவற்றுட் பெரும்பாலன கடல்கோளால் அழிக்தொழிந்தன என்றும் அறிகின்றோம்.

சமண பெளத்த சங்கங்கள்

இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னனாகிய உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர்த் தமிழ்ச்சங்கம் பேணுவாரின்றி மறைந்தொழிந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சமணரும் பெளத்தரும் தமிழகத்தே புகுந்தனர். அவர்கள் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழ்மதுரையில் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாக இலக்கண இலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. அவையனைத்தும் சமயச்சார்புடைய நூல்களாகவும் சமயக்கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல்களாகவுமே விளங்கின.