உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்த்த நகரங்கள்/நெல்லைத் திருக்கோவில்

விக்கிமூலம் இலிருந்து
9. நெல்லைத் திருக்கோவில்

திருக்கோவில் பெருமை

‘ஊரானார் தேவகுலம்’ என்பது பழைய இலக்கண உரையாசிரியர்கள் எடுத்தாளும் தொடர். ‘தேவகுலம்’ என்ற தொடர் திருக்கோவிலைக் குறிப்பது. தெய்வபத்தி முதிர்ந்த தமிழ்நாட்டில் ஊர்தோறும் இறைவனுக்குக் கோவிலெடுத்து வழிப்பட்டனர் நம் முன்னேர். அதனாலேயே ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற உறுதிமொழி உலக நீதியாக உலவலாயிற்று.

பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் காட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில்.

‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று சொல்லும் தாய்மார்கள் வாய்மொழி பழமொழியாக வழங்கும். திங்கள்தோறும் நெல்லையப்பருக்குத் திருவிழா நடைபெற்றுக் கொண்டே யிருக்கும். ‘தேரோடும் திருவீதி’ யென்றால் திருநெல்வேலித் தேர் வீதிகளைத்தான் சொல்ல வேண்டும். மாதம் தவறினாலும் வீதியில் தேரோடுவது மாதம் ஒருமுறை தவறாது. இந்தக் காட்சியைக் கண்ணுரக் கண்டு களித்த ஞானச்செல்வராகிய சம்பந்தப்பெருமான்,

“சங்கார்ன் மறையவர் நிறைதர
அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே”

என்று. பர்டியருளினர். இங்ஙனம் இடையருத விழாச் சிறப்புடன் விளங்கும் நெல்லையீப்பரைத் திரு நெல்வேலி யுறை செல்வர்’ என்று பத்தியுடன் பத்து முறை சித்தமுருகப் பாடிப் பரவினர் திருஞான சம்பந்தர்.

கெடுமாறன் திருப்பணி

சைவசமய குரவருள் தலைவராய சம்பந்தப் பெருமானால் பதிகம் பாடிச் சிறப்பிக்கப்பெற்ற நெல்வேலிச் செல்வரைத் தரிசித்து மகிழ, மதுரை மன்னனாகிய நின்றசீர் நெடுமாறன் தன் கோப்பெருந்தேவியாகிய மங்கையர்க்கரசியாருடன் நெல்லையின் எல்லையைச் சார்ந்தான். அதுசமயம் இங்கிருந்து ஆண்ட சிற்றரசன், நெடுமாறன்மீது சீறிப்படையொடு போருக்கெழுந்தான். படைத்துணையின்றி வந்த நெடுமாறனைப் பாதுகாக்க நெல்லைநாதன் பூதகணங்களைப் படையாக அவன் பக்கம் அனுப்பினான். நெல்லையப்பர் திருவருள் துணையால் பகைவனை வென்று நெல்லையுட் புகுந்த முடிமன்னனாகிய நெடுமாறனை நெல்வேலி வாழ்ந்த நன்மக்கள், ‘நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் வாழ்க! வாழ்க!’ என வாழ்த்தி வரவேற்றனர். மன்னன் தன் மாதேவியுடன் திருக்கோவிலுட் புகுந்து நெல்லையப்பரையும் காந்திமதித் தாயையும் வழிபட்டுப் பன்னாள் நெல்லையிலேயே தங்கிவிட்டான். அங்ஙனம் தங்கிய நாளில் நெல்லைத் திருக்கோவிலைப் பல்வேறு மண்டபங்களுடன் விரிவாக்கினன். இச் செய்தியைத் திருநெல்வேலித் தலபுராணப் பாடலொன்று வலி யுறுத்துகின்றது.

“நீதிதழைத் தோங்குதிரு நெல்வேலி
காதர்முன்பு நிலைபெற் றோங்கச்
சோதிமணி மண்டபத்தைத் தாயமக
கேளுவெனத் துலங்கச் செய்தே
வேதிகைபொற் படிதுாண்கள் விளங்குதிரு
வாயிலணி விரவிச் சூழ்ந்த
கோதில்மணிக் கோபுரமும் சேண்மதிலும்
வெள்விடையும் குலவச் செய்தான்.”

இப் பாடலால் நெடுமாறன் செய்த திருப்பணிகள் பல புலனாகும்.

மணிமண்டபம் இசைத்துண்கள்

சுவாமி கோவில் உள் சுற்றுவெளியை யொட்டிச் சங்கிதிக்குள் நுழையும் வழியில் அமைந்த மணி மண்டபம் நின்றசீர் நெடுமாறனால் அமைக்கப் பெற்றதே. அம் மண்டபத்தில் அமைந்துள்ள பத்துத் தூண்களில் ஆறு சிறியன, நான்கு பெரியன. பெருந் தூண்கள் நான்கும் அறுபத்துநான்கு சிறு தூண்களின் இணைப்பாக விளங்குவது வியப்பூட்டுவதாகும். ஒவ்வொரு சிறு தூணும் ஒவ்வொரு விதமான நாதம் எழும் இயல்புடையது. இவைகள் இசைத்தூண்கள் என்று ஏத்தப்பெறும்.

மாக்காளை-நந்தி

சுவாமி கோவில் முன்மண்டபத்தில் பலிபீடத்திற்கும் கொடிமரத்திற்கும் இடையே விளங்கும் வெள்விடை-நந்தி, மாக்காளே யென்று கூறப்படும். இதனை அமைத்தவனும் நெடுமாறனே. மாக்காளை மிகவும் கம்பீரமான தோற்றத்துடன், நோக்குவார் கருத்தையும் கண்ணையும் கவரும் சிறப்புடையது. இதனைக் காணுவார், ‘இது நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே யிருக்கிறது; இது மண்டபத்தைத் தட்டும் அளவு வளர்ந்துவிட்டால் அது உலகம் அழியும் கடை யூழிக்காலமாகும்’ என்று சொல்லிச் செல்லுவர்.

நந்திமண்டபச் சிற்பங்கள்

பலிபீடம், மாக்காளை, கொடிமரம் ஆகிய மூன்றும் ஒன்றன்முன் ஒன்றாகத் தோன்றும் காட்சி, பாசத்தைப் பலியிட்ட பசுவாகிய தூய உயிர், பதியை அணுகும் உண்மையை இனிது புலப்படுத்துவதாகும். இவ் உண்மையை விளக்கும் நந்திமண்டபத்தின் பெருங் தூண்களில் அழகிய சிற்பங்கள் பல காணப்படு கின்றன. ஒரு தூணில் காணப்படும் குறத்தியொருத்தியின் சிற்பம் கருத்தைக் கவர்வதாகும். அவள் தோளில் குழந்தையொன்றைத் தாங்கியிருப்பதும், கையில் கூடையொன்றைப் பற்றியிருப்பதும், நெல்லையப்பரைக் காதலராகப் பெறுதற்குத் துடித்து நிற்கும் தோகை யொருத்திக்கு நல்ல குறி சொல்ல அவள் கூர்ந்து நோக்குவதும், அவள் கொடிபோல் நுடங்கிக் குழைக் தாடி நிற்பதுமாகிய பொற்பான காட்சியைக் கண்டார், அச்சிற்பத்தை அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுடன் அமைத்த சிற்பியைப் போற்றாதிரார்.

மதனும் இரதியும்

மற்றொரு தூணில் மன்மதன் காட்சியளிக்கிறான், அவன் கரும்புவில்லை யேந்திக் கடிமலர்ப் பாணத்தைக் கையில் வைத்து எய்வதற்குத் தயாராக நிற்கும் ஏற்றுக்கோலம் மாற்றார் அஞ்சும் மாவீரக் கோல மாகும். அவன் தாங்கியுள்ள கரும்பு வில்லும் அரும்பு மலரும் எறும்பும் சுரும்பும் மொய்த்தற்கு இடமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் விளங்குவது வியப்பை யளிப்பதாகும். அடுத்து, இன்னொரு தானில் இரதி தேவி இனிய காட்சி தருகிறாள். அவள் அழகுத் தேவனாகிய மன்மதனயே மணாளனாகப் பெற்ற பெருமிதத்துடன் நடை பயிலுவதுபோலச், சிற்பி அவளது வடிவை அழகாகச் சமைத்துள்ளான். அவள் அணிந்துள்ள முத்தாரமும் பட்டாடையும் காற்றில் பறந்து அசைவனபோலக் காட்டியிருக்கும் சிற்பியின் விற்பனத்தை என்னென்பது! சுவாமி கோயில் கொடி மரத்தின் முன்பமைந்த தோரண மண்டபத் தூண்களில் காணப்படும் வீரபத்திரர் சிற்பங்கள் வீரத் திருக் கோலத்துடன் விளங்குகின்றன. அம் மண்டபத்தின் அமைப்பும் நுண்ணிய வேலைப்பாடுகளை யுடையது.

சோமவார மண்டபம்

நந்தி மண்டபத்தின் வடபால் அமைந்த சோம வார மண்டபம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மரத்தில் செய்யத்தக்க நுண்ணிய வேலைப்பாடு களையெல்லாம் இம் மண்டபம் அமைத்த சிற்பி, கல்லில் அமைத்துக் காட்டியுள்ளான். இம் மண்டபத்தின் முன்னல் இருபெருந் துண்களில் எதிரெதிராக அருச்சு னனும் பவளக்கொடியும் காணப்படுகின்றனர். அருச்சுனன், மதுரையாசியாகிய அல்வியை மணந்த மணக் கோலத்துடன் அவள் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நிற்பதும், எதிரேயுள்ள தூணில் பவளக்கொடி பாங்கியர் புடைசூழநின்று காணத்துடன் கடைக்கண்ணுல் நாயகன நோக்குவதும் ஆகா! அந்தச் சிற்பி எவ்வளவு அற்புதமாக அமைத்துள்ளான் !

நடராசர் வடிவம்

சுவாமி கோவில் மணிமண்டபத்தின் வடபால் நோக்கினால் நடராசப் பெருமானின் அழகான செப்புச் சிலையொன்று, அப்பன், அம்மை சிவகாமி காண அற்புத நடனம் ஆடுவதுபோலவே காட்சியளிக்கிறது. பெருமான் திருவடியின் கீழ்க் காரைக்காலம்மையார் பணிந்து கின்று தாளம்போடும் காட்சி மிக நன்முக இருக்கிறது. ஏழடி உயரத்தில் இத் தாண்டவமூர்த்தி காண்டற்கரிய காட்சியுடன் விளங்குகிறார்.

வேய்முத்தரும் இரட்டைப் புலவரும்

இனி, நெல்லையப்பர் மூலத்தானமாகிய கரு வறையை நெருங்கினால், அதன் வடபால் பள்ளத்துள்ளே ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இதுதான் ‘மூல மகாலிங்கம்’ எனப்படும். கோவில் தோன்றுவதற்குக் காரணமான ஆதிலிங்கம் இதுவேயாகும். மூங்கிலடியில் முத்தாக முளைத்த முன்னவர் இவர். அதனால் இவருக்கு வேய்முத்தர் என்பது ஒரு திருநாமம். ஆயனது கோடரியால் வெட்டுண்டு மண்டையில் புண்பட்ட பெருமான் இவர். ஆதலின் இவருக்கு அப்புண்ணையாற்றுவதற்கு மருந்துத்தைலம் காய்ச்சி மண்டையில் பூசுகின்ற வழக்கம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. அதற்காக மேலேக் கோபுர வாசலை யடுத்துத் தைல மண்டபம் ஒன்று காணப் படுகிறது.

இந்தச் செய்தியைப் பிற்காலத்தில் இந் நகருக்கு வந்து நெல்லையப்பரை வழிபட்ட இரட்டைப் புலவர்கள் நகைச்சுவை ததும்பப் பாடியுள்ளனர். குருடரும் முடவருமாகிய அவ் இரு புலவருள் முடவர்,

“வேயின்ற முத்தர்தமை வெட்டினா னே இடையன் தாயீன்ற மேனி தயங்கவே”

என்று உளமிரங்கிப் பாடினார். அதனைக் கேட்ட குருடராகிய புலவரோ ஆத்திரத்துடன்,

“-பேயா, கேள் !
“எத்தனேகா ளென்றே இடறுவான் பாற்குடத்தை
அத்தனையும் வேண்டும் அவர்க்கு”

என்று பாடி முடித்தார். இடையனது பாற்குடத்தைப் பல நாளாகப் பாழாக்கிய அவ் வேய்முத்தருக்கு இதுவும் வேண்டும்; இன்னும் வேண்டும்!’ என்று சொல்லி நகையாடினர் அக் குருட்டுப் புலவர்.

கங்காளநாதர் காட்சி

சுவாமி கோவில் முதல் உள்சுற்று வெளியின் மேல்பால் கங்காளநாதரின் கவின்மிகு செப்புச் சிற்பம் காணப்படும். அவர் பக்கமாகத் தாருகவன முனிவர் பத்தினியர் கிலேயழிந்து தலைதடுமாறிக் காம பரவசராய் நிற்கும் காட்சி மிகவும் அழகு வாய்ந்ததாகும். நெல்லையில் நிகழும் ஆனிப் பெருந்திருவிழாவில் எட்டாம் திருநாளன்று தங்கச் சப்பரத்தில் தனியழகுடன் எழுந்தருளும் கங்காளநாதர் பிச்சாடனத் திருக்கோலம் காண்பார் கண்களைவிட்டு என்றும் அகலாதிருப்பதாகும்.

நெல்லைக் கோவிந்தர்

நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சங்கிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும். அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு கம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.

தாமிர சபை

சுவாமி கோவில் இரண்டாவது உள் சுற்று வெளியின் மேற்குப் பகுதியில் காணப்படும் தாமிர சபை மற்றாெரு தனிச் சிறப்புடையது. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் ஐந்து சபைகளில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றான். தில்லைப் பொன்னம்பலத்திலும், திருவாலங்காட்டு இரத்தின சபையாகிய மணிமன்றத்திலும், மதுரையில் இரசித சபையாகிய வெள்ளியம்பலத்திலும், நெல்லைத் தாமிர சபையாகிய செப்பு அம்பலத்திலும், குற்றாலச் சித்திர சபையிலும் அக் கூத்தப்பெருமான் ஆர்த்தாடும் தீர்த்தகைத் திகழ்கிருன். கூத்தப் பெருமானுக்குரிய ஐந்து சபைகளுள் ஒன்றாகிய தாமிர சபை நெல்லைத் திருக் கோவிலில் உள்ளதாகும். அது சிறந்த சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்தது. அதற்கு முன்னல் விளங்கும் நடன மண்டபம் கூரை வேய்ந்தது போலக் கல்லால் அமைந்திருக்கும் சிறப்பு, சிற்பியின் அற்புதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்நடனமண்டபத்தில் மார்கழித் திங்கள் திருவாதிரை விழாவில் அழகிய கூத்தப்பெருமான் பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆனந்த நடனமாடும் காட்சி கண்கொள்ளாப் பெருங் காட்சியாகும். தாமிர சபையின் பின்பக்கம் ஒரே கல்லில் அமைக்கப்பெற்ற ஐந்தடி உயரமுள்ள சந்தன சபாபதியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்ததாகும். தில்லைக் கூத்தனை வழிபட்ட திருநாவுக்கரசர், அப்பெருமானது பேரழகை வியந்து பாடிய சிறப்பெல்லாம் ஒருங்கு திரண்டாற் போன்று சந்தன சபாபதி ஒளிவீசி ஆடுகிறார். குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் குமிழும் குறு முறுவல், பனித்த சடை, பவளம்போன்ற திருமேனி, அதில் அணிந்துள்ள பால்வெண்ணீறு, இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் இவையெல்லாம் அப் பெருமானது வடிவில் அமைந்துள்ள சிறப்பை என்னென்பது இதை யடுத்து வடக்குச் சுற்றுவெளியில் அட்ட லட்சுமி திருக்கோவில் அமைந்துள்ளது. தனலட்சுமி, தானியலட்சுமி, செயலட்சுமி, விசயலட்சுமி, சந்தான லட்சுமி, செளபாக்கியலட்சுமி, மகா லட்சுமி, கசலட்சுமி ஆகிய எட்டுத் திருவும் கட்டாக விள்ங்குகின்றனர். இவ் எண்மருள் செளபாக்கியலட்சுமி குதிரைமேல் ஆரோகணித்து அமர்ந்திருக்கும் காட்சி மிக நன்றாக இருக்கிறது. எல்லாச் செல்வங்களும் நிறைந்தவன் எத்துணைப் பெருமித வாழ்வு நடத்துவான் என்பதை அத் திருமகள் வடிவம் நினைவுறுத்துகிறது.

ஆறுமுகநயினார் கோவில்

சுவாமி கோவில் மேற்கு வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகப்பெருமான் சங்கிதி ஒரு தனிச் சிறப்புடையது. தோகை விரித்தாடும் மயிலின் மேல் ஆறுமுகப்பெருமான் வேல்தாங்கிய வீரனாகக் காட்சி தரும் கோலத்தைச் சிற்பி ஒரே கல்லில் வடித்துள்ளான். ஆறு முகங்களும் ஆறு வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் சிறப்புடன், கருணை பொழியும் முன் திரு முகத்துடன் விளங்கும் அப் பெருமான் அழகே அழகு! ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகன்’ என்று பாடியருளிய அருணகிரிநாதரைப் போல, அவ் ஆறுமுகப்பெருமானது திருக்கோலத்தைத் தரிசிக்க எத்தனை கண்கள் இருந்தாலும் போதா என்றுதான் சொல்லவேண்டும். வழிபடும் அடியார்கள் பெருமானின் ஆறுமுகங்களையும் தரிசிக்கத் தக்கவாறு மண்டபம் அமைந்திருப்பது மற்றாெரு தனிச்சிறப்பு.

புலவர் முழக்கம்

அப்பெருமான் சந்நிதியில் அமைந்துள்ள கலியாண மண்டபம் பல்லாயிர் மக்கள் திரண்டு நின்று தரிசித்தற்கு ஏற்றவாறு இடையில் தூண்களின்றி விசாலமாக அமைந்திருப்பது ஒரு தனி யழகு. இச் சங்நிதியில் எந்த வேளையிலும் செந்தமிழ் முழக்கம் முழங்கிக் கொண்டே யிருக்கும். திருக்குறள் விளக்க முழக்க மென்ன ! திருவாசக உரை முழக்கமென்ன! திருவிளையாடல், கந்த புராண, பெரிய புராண முழக்கங்களென்ன திருப்புகழ், கந்தர் கலிவெண்பா இசைமுழக்கமென்ன! இங்ஙனம் எங்காளும் சங்கத்தலைவனுய் வீற்றிருந்த தமிழ் முருகன் சந்நிதியில் புலவர்கள் முழங்கிக்கொண்டே யிருப்பர்.

சங்கிலி மண்டபம்

சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம். சுவாமி கோவில் தெற்கு வெளிப்பிராகாரத்தின் நடுவே அமைந்துள்ள தெற்குக் கோபுரவாயில் தொடங்கி, அம்மன் கோவில் வரை யமைந்துள்ள நீண்ட தொடர்மண்டபம் முப்பதடி அகலமும் முந்நூறடி நீளமும் உள்ள ஒரு பெரு மன்றமாகும். ஒசங்களில் இருபக்கமும் வரிசையாகத் தூண்கள் அமைந்திருக்கும் அழகு மிகவும் அணி வாய்ந்ததாகும். இதனை முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் நெல்லைப்பகுதியில் அரசு செலுத்திய வடமலையப்பப் பிள்ளையன் என்பார் அமைத்தனர்.

ஊஞ்சல் மண்டபம்

காந்திமதியம்மன் திருக்கோவில் முகப்பில் கோபுர வாயிலை யடுத்து ஊஞ்சல் மண்டபம் விளங்குகின்றது. இது தொண்ணுாற்றாறு திண்ணிய தூண்களால் அமைக்கப்பெற்றது. சமயத் தத்துவங்கள் தொண்ணுாற்றாறு என்ற உண்மையை விளக்கி நிற்பது இம் மண்டபம். நடு மண்பத்தினைத் தாங்கும் இருபத்து நான்கு தூண்களும் வாய்பிளந்து முன் கால்களைத் தூக்கிநிற்கும் யாளிகளுடன் விளங்குவது ஒரு தனியழகாகும். இதனேக் கட்டியவர் பிறவிப் பெருமாள் பிள்ளையன் என்பார்.

காந்திமதியம்மை சங்கிதி

அம்மன் கோவில் கருவறையுள் காட்சியளிக்கும் காந்திமதித்தாய், உலகின்ற அன்னையாயினும் கன்னி யாகவே காட்சி தருவாள். வயிர மணிமுடி புனைந்து, நவமணி அணிகள் பல பூண்டு, பாதச்சிலம்புடன், பங்கயத் திருக்கையால் அஞ்சலென அருள்செய்து நிற்பது, அவள் அரசியாய் உலகிற்கு விளங்கும். திறத்தைப் புலப்படுத்தும். வடிவம்மை என்று வழங்கும் அவளது பழம்பெயருக்கேற்ப அவளது வடிவைச் சிற்பி அழகாகவே வடித்துள்ளான்.

வடிவம்மையின் வாயிலாக நெல்லையப்பர் திருவருளைப் பெறுதற்கு முயன்ற பலபட்டடை அழகிய சொக்கநாதப் புலவர் என்பார், அம்மையை வேண்டும் முறை மிகவும் விநயமாக இருக்கிறது. ‘நெல்லையப்பர் நின்னொடு கொஞ்சிப்பேசும் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக அடியேனுடைய குறைகளைக் கூற லாகாதா ? அங்ஙனம் கூறினால், அன்னையே! நின் வாயில் உள்ள முத்துக்கள் சிந்திவிடுமா ?’ என்று புலவர் பரிவுடன் கேட்கிறார்.

“ஆய்முத்துப் பக்தரின் மெல்லணே
மீதுன் அருகிருந்து
நீமுத்தம் தாவென்(று) அவர் கொஞ்சும்
வேளையில் நித்தநித்தம்
வேய்முத்த ரோ(டு)என் குறைகளெல்
லாமெல்ல மெல்லச்சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ
நெல்வேலி வடிவன்னேயே!”

என்பது அப் புலவரது நயமான பாடல்.

கருமாறித் தீர்த்தம்

காந்திமதியம்மன் கோவில் மேலைச் சுற்றுவெளியில் கருமாறித் தீர்த்தம் உள்ளது. அதனை மக்கள் ‘கருமாதி’ என்று வழங்குவர். துருவாச முனிவரது சாபத்தால் யானையுருப் பெற்ற இந்திரத்துய்மன் என்னும் மன்னன் இத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பழைய வடிவைப் பெற்றான். அதனால் கருமாறித் தீர்த்தமென்றும் கரிமாறித் தீர்த்தமென்றும் வழங்கும். (கரி - யானை)

பொற்றாமரைத் தீர்த்தம்

அம்மன் கோவில் முன்னமைந்த ஊஞ்சல்மண்ட பத்தின் வடபால் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இறைவனே நீர் வடிவாகப் பிரமன் பொன்மலராகப் பூத்த புண்ணியத் தடாகம் இப் பொற்றாமரைத் தீர்த்தம் என்று புராணம் புகலும். முகம்மதலியின் தானுபதியான மாவஸ்கான் என்பவன் மனைவி திராத பிணிவாய்ப்பட்டுப் பெரிதும் வருந்தினாள். சிலர் அறிவுரையின் பேரில் அவள் இப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் மூழ்கித் தன் பெருநோய் நீங்கப்பெற்றாள். அதனால் களிப்புற்ற அம் முகம்மதியத் தானபதி இக் கோவிலின் மேலைச் சுற்றுவெளியில் ஒரு சிறு கோவிலை யமைத்தான். அதில் நெல்லையப்பரையும் வடிவம்மையையும் எழுந்தருளுவித்து, நெல்லையப்பரை அனவரதகாதன் என்று போற்றி வழிபட்டான்.

அப்பருக்குத் தெப்பவிழா

இப் பொற்றாமரைக் குளத்தில் மாசித் திங்கள் மகநாளில் அப்பர்பெருமானுக்குத் தெப்ப விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்பர் தமது வாழ்நாளில் நெல்லைக்கு எழுந்தருளிப் பதிகம் பாடிப் பரவியது ஒரு மாசி மகநாளாகும். அதனை நினைவூட்டவே இத் தெப்பவிழா நிகழ்கின்றது. சமணர்கள் அவரது உடம்புடன் கட்டித் தள்ளிய கல்லையே தெப்பமாகக்கொண்டு, நமச்சிவாயப் பதிகம் பாடிக் கரையேறிய திருநாவுக்கரசருக்குத் தெப்பவிழா எடுக்கும் சிறப்பை இங் நெல்லையிலன்றிப் பிற தலங்களில் காணவியலாது. மக்கள் பிறவிக்கடல் நீந்தி, வீடுபேருகிய இன் பக்கரை அடைவதற்கு இறைவன் திருநாமமே துணையென்னும் உண்மையை இந் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களே யுடைய நெல்லைத் திருக்கோவில், நெல்லை மாநகரின் எல்லை யில்லாப் பெருமைக்குத் தக்க சான்றாகத் தழைத்து வருகிறது.