தம்ம பதம்/புத்த வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் பதினான்கு

புத்தர்

177.எவரும் வெல்ல முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர்; இந்த உலகில் எவரும் அணுக முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர். அவர் எல்லையற்ற உணர்வுடையார்; (பிறப்பும் இறப்புமாகிய) பாதையற்றவர். அத்தகைய புத்தரை வழியில் இழுத்துச் செல்ல முடியும்? (1)

178. வலைபோன்றதும், விஷம் போன்றதுமான ஆசைத்தனை, எதனாலும் வழி தவறாத புத்தரை எல்லையற்ற உணர்வுள்ளவரை-(பிறப்பும் இறப்புமாகிய) பாதையற்றவரை-எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்? (2)

179. கருத்தோடு தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றரற்ற விடுதலையில் திளைப்பவராயுமுள்ள மெய்யறிவு பெற்றவரைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள். (3)

180. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;

அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டால்;
அரிது அரிது புத்த நிலை அடைதல்.

(4)

181. சகல பாவங்களையும் நீக்குதல், நற்கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சுத்தம் செய்தல் - இதுதான் புத்தருடைய உபதேசம். (5)

182. ‘நெடுங்காலம் துன்பத்தைத் தாங்கும் பொறுமையே முதன்மையான தவம் நிகரற்ற உயர்ந்த பதவி நிருவாணமே’ என்று புத்தர்கள் கூறுகின்றனர். பிறரைத் துன்புறுத்துவோன் முனிவன் அல்லன்: பிறரை இகழ்பவன் துறவி அல்லன் (6)

183. நிந்தனையை ஒழித்தல், பிறரை வருத்தாமலிருத்தல் அறத்திற்கு[1] அடங்கியிருத்தல், நிதான உணவு, ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப் பட்டிருத்தல்–இதுவே புத்தருடைய உபதேசம். (7)

184. பொற்காசுகளை மழையாகப் பொழிந்தாலும், ஆசைகள் அடங்காமற் பெருகும். ஆசைகளின் படி அனுபவித்தல் அற்ப இன்பம் என்றும், பின் விளைவு துக்கம் என்றும் அறிந்தவன் ஞானியாவான். (8)

185. பூரண ஞானம் பெற்ற புத்தருடைய சீடன் ஆசைகள் அனைத்தையும் அழிப்பதிலேயே இன்புறுவான்; வானுலக இன்பங்கள் கூட அவனுக்கு உவப்பானவை அல்ல. (9)

186. பயங்கொண்ட மனிதர்கள் மலைகளையும், வனங்களையும், புனிதமான மரங்களையும் புண்ணியத்தலங்களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள். (10)

187. இந்த அடைக்கலம். நல்ல பாதுகாப்பு அல்ல. இந்த அடைக்கலத்தால் மனிதன் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. (11)

188. ஆனால் புத்தரையும், சங்கத்தையும், கருமத்தையும் சரணமடைதலில் நான்கு உன்னத உண்மைகளைத் தெரிந்த ஞானத்தால் தேர்ந்து கொள்கிறான். (12)

189. துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கமாகிய அஷ்டாங்க மார்க்கம்.[2] (13)

190.இதுவே பாதுகாப்பான புகலிடம்; இதுவே தலை சிறந்த சரணம். இந்த அடைக்கலத்தை அடைந்த பிறகு, மனிதன் எல்லா வேதனைகளிலிருந்தும் விடுபடுகிறான். (14)

191. மக்களிலே திலகமான உத்தம புருடர் [புத்தர்] தோன்றுதல் துர்லபம். அவர் கண்ட இடங்களில் பிறப்பவர் அல்லர். அத்தகைய பரம ஞானி எங்கே பிறந்தாலும் அந்தக் குலம் விளக்கமடைகிறது. (15)

192.புத்தர்களின் தோற்றம் நன்மையளிக்கும்; அவர்களின் தரும உபதேசம் நன்மையளிக்கும்; பெளத்த சங்கத்தில் சேர்தல் நன்மையளிக்கும்; சங்கத்தில் சேர்ந்தவர்களின் தவமும் நன்மையளிக்கும். (16)

193. தீமைகளையெல்லாம் வென்று, துக்க வெள்ளத்தைத் தாண்டிக் கரையேறிய வணங்கத்தக்க புத்தரையோ, அவர் அடியார்களையோ வணங்குவோன். (17)

194. நிருவாண நிலைபெற்று, எதற்கும் அஞ்சாது (காற்றைப்போல்) சஞ்சரிக்கும் முத்தர்களை வணங்குவோன்-அடையும் புண்ணியத்தை எவரும் அளவிட முடியாது. (18)

  1. அறம்-பௌத்த தருமம். இதனை விளக்கும் நூல் ‘பாதிமோக்சும்’ என்பது; வடமொழியில், பிரதி மோக்ஷம்.
  2. இதன் விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காண்க
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/புத்த_வக்கம்&oldid=1397963" இலிருந்து மீள்விக்கப்பட்டது