உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/கொலைக்கூட்டத்தின் முயற்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

18
கொலைக்கூட்டத்தின் முயற்சிகள்


தலைநகரில் இருந்த தொண்டர்கள் படைத்தலைமை அதிகாரிகளிடம் தான்பிரீன் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்திட்டத்தின்படி 'பறக்கும் தொண்டர் படை' யென்று சில படைகளை நியமிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காது, தேசம் முழுவதும் சுற்றித்திரிந்து எங்கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரிடும்; எல்லையற்ற கொடுமைகள் செய்யும் அதிகாரிகள் எந்த ஊரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும்; எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ எங்கெல்லாம் அதிகாரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிறார்களோ, அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மக்களையும் அதிகாரிகளையும் தட்டி எழுப்பிவிடும். அடிமை நாட்டில் அமைதி நிலவியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம். ஆதலால், விடுதலை வேட்கையுள்ள மக்கள் ஆட்சி முறையை எப்பொழுதும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை பெரிய உதவியாயிருக்கும் என்று தான்பிரீன் கருதினான்.

தொண்டர் படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பலர் தங்களுடைய சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு இடையிடையேதான் தேசிய வேலைக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்டன. நாக்லாங்கில் ஸீன் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும்படி தான்பிரீன் திப்பெரரிக்குச் சொல்லியனுப்பி ஏமாந்து போனதன் காரணம் இதுவே. பாதிநேரம் வேலை செய்தவர்கள், திடீரென்று வெளிவந்து எந்தக்காரியத்திலும் கலந்து கொள்ள முடியாது. அவர்கள் பகல் முழுவதும் சொந்தத் தொழில்களைப் பார்த்து விட்டு, இரவில்தான் தேச ஊழியத்திற்கு வரமுடிந்தது. மேலும் மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க்கிலும் ஒரு பெருங்குறை அவர்களிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதியான நேரத்தை அமைதியான வாழ்க்கையிலே கழிந்து வந்ததால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்பட வில்லை. எப்போழுதும் போரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவனையும் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவர்களே வீராவேசத்துடன் இருக்க முடியும். ஆதலால் முழுநேரமும் தொண்டு செய்யக்கூடியவர்களை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப் பயிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரிகளின் கீழ் கட்டுப்பட்டிருக்கும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அதன்படி வாலிபர்களும் நூற்றுக்கணக்காக முன்வந்தனர்.

'பறக்குந் தொண்டர்' படைகளை ஏற்படுத்தியதால் திப்பெரரியிலும் கார்க் பகுதியிலும் இருந்த வாலிபவீரர்கள் மிகவும் பிற்போக்காயிருந்த கில்கென்னி, வாட்டர் போர்டு பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற்பாட்டினால், தேசத்தில் ஒரு பகுதியில் ஊக்கமும் மற்றொரு பகுதியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும் ஆவேசத்தைப் பரப்ப வழி ஏற்பட்டது.

தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னிலேஸி என்னும் அவனுடைய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடவேயிருந்து உதவி செய்து வந்தான். லேஸி தேசத்திற்கே உழைக்கவேண்டுமென்று ஜன்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச்செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்றான். திப்பெரரிப் பகுதியிலுள்ள கோல்டன் கார்டன் (தங்கத்தோட்டம்) என்பது அவனுடைய சொந்த ஊர். அவன் மிக்க தேகக்கட்டோடு விளங்கியதோடு, ஓட்டத்திலும், கால்பந்து விளையாட்டிலும் பெரிய சூரனாயிருந்தான். அவனுடைய வீடு தான்பிரீனுடைய வீட்டிலிருந்து அரைமைல் துரத்திலிருந்தது. தான்பிரீனும் அவனும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஓருயிரும் ஈருடலுமாகப் பழகிவந்தார்கள். வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலைபார்த்து வந்தான்.

1920ஆம் ஆண்டுமே மாதம் கில்மல்லக்கில் நடந்த போராட்டத்தில் அவன் கலந்து கொண்டான். அதுமுதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீரப்போராட்டங்களைக் கேட்டுப் 'பிளாக் அன்டு டான்' பட்டாளத்தார்.அவனைப்பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் செய்தனர். திப்பெரரியில் அவன் சிலநாள் தங்கியிருந்த வீட்டைக்கூட அவர்கள் கொழுத்திவிட்டனர்! பிரிட்டிஷாருடைய குண்டுகளுக்கெல்லாம் லேஸி தப்பிவிட்டான்! (ஆனால் பின்னால் நடந்த உள்நாட்டுக் கலகக்கில் 1923ஆம் ஆண்டு அவன் பிரீஸ்டேட் படைகளுடன் செய்த போராட்டத்தில் தன்நாட்டவர்களாலேயே உயிர் பறிக்கப்பட்டு மாண்டான்.)

டப்ளின் நடமாடுவது மிகவும் அபாயகரமானதாயிருந்தது எங்குபார்தாலும் இரகசிய பொலிஸாரும் அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களும், உளவாளிகளும் நிறைந்திருந்தனர். தொண்டர்களைப்பற்றி யார் என்ன தகவல் கொடுத்தாலும் ஏராளமான வெகுமதிகள் கொடுக்கபடும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இரகசிய போலிஸ்படை சீர்குலைந்திருந்தால், அதைப் புனருத்தாரணம் செய்வதற்கு அதிகாரிகள் ஓவ்வின்றி முயற்சித்து வந்தர்கள். பார்க்கும் இடமெல்லாம் காக்கி உடையணிந்ததுருப்புகளும், துப்பாக்கிகளும், ராணுவ லாரிகளுமாகவே கூட்டங்கூட்டமாகக் காணப்பட்டன. தெருக்களில் நடமாடுகிறவர்களையெல்லாம் ஒரே நாளில் ஏழெட்டு முறை சோதனை போட்டார்கள் டிராம் வண்டிகளிலும் பஸ் வண்டிகளிலும் படைவீரர் திடீர்திடீர்ரென்று புகுந்து பிராயினிகளை தடைபடுத்தி சோதனையிட்டனர். பட்டாளத்தார் பற்பல வீடுகளைச் சுற்றி பலநாள் சூழ்ந்து நின்று, உள்ளேயிருந்துயாரும் வெளியேறாமலும் வெளியிலிருந்து யாரும் உட்செல்லாமலும் தடுத்து வந்தார்கள். இவையெல்லாம் அத்ததலை நகரிலே தினசரி நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன.

பொது மக்களுடைய கடிதங்கள் தபாற் காரியாலங்களிலே உடைத்துப் பார்க்கப்பட்டன. நிரபராதிகளான மக்கள் டப்ளின் மாளிகைக்கு கொண்டுபோகபட்டு, தொண்டர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு இரகசியமாய் நடத்தபட்ட கொடுமைகளுக்கு அளவேயில்லை. சாப்பாட்டு விடுதிகளிலுள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் சர்க்கார் லஞ்சம் கொடுத்துத் தொண்டர்கள் வந்தால் தகவல் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். பட்டாளத்தாரும் அதிகாரிகளும் டெலிபோன்மூலம் பேசிக் கொள்வதைப் பிறர் அறியாமலிருப்பதற்கு ஓர் இரகசிய பரிபாஷையை அமைத்துக் கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடியின் மத்தியிலே தான்பிரீனும் இடைவிடாது ஒற்றால் பின்பற்றபட்டான். அவன் தனது துப்பாக்கியையும் வீரத்தையுமே துணையாகக் கொண்டு சுற்றி வந்தான். ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கைதுப்பாக்கியைப் பற்றிய வண்ணமாகவேயிருந்தான்.

கடைசியாக ஒருநாள் அவன் பகைவர்களின் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அவன் ஹென்றி திருமுனையிலுள்ள நெல்ஸன் தூண் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் அவன் அன்றிரவு கரோலன் என்பவருடைய வீட்டுக்குச் செல்வதற்காக டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வீடு டிரம்கொண்டராவுக்கும் வயிட் ஹாலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹாலுக்குச் செல்லக்கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்தி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டியிலேறி வருவதையும் அவன் கண்டான்.

அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான். இக்கொலைக்கூட்டத்தார் ஜெனரல் ரியூடர் என்பவலால் நியமிக்கப்ட்டவர்கள். அவர்களுக்கு 'உதவிப் படையினர்' என்று பெயர். ரியூடரே அப்படையினருக்குத் தலைவர். அப்படையினர் செய்து வந்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அவர்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள். தெருக்களில் எந்தப் புரட்சிக்காரரைக் கண்டாலும் சந்தேகப்படத்தக்க நபர்களைக் கண்டாலும் உடனே கண்ட இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டு மென்று இவர்களுக்கு உத்தரவு. அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்குகள் ஏற்படாமல் பாதுகாப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். இந்த இரகசியப்படை அமைக்கப்பட்டிருந்த விஷயம் பீலர்களுக்கும் பட்டாளங்களுக்குங் கூடத் தெரியாது. ஆனால் தொண்டர்களுக்கு அப்படையைப் பற்றியும் அப்படையிலுள்ளவர்களில் யார் யார் எத்தனை கொலைகளையும் கொடுமைகளையும் செய்தனர் என்பதைப் பற்றியும் வெகு நன்றாய்த் தெரிந்திருந்தது. முக்கியமான கொலைகாரர்களுடைய புகைப்படங்களையும் சிரமப்பட்டுக் சம்பாதித்துத் தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தொண்டர் படைகளுக்கும் அனுப்பியிருந்தனர்.

டிராம் வண்டியில் ஏறிய ஐவரையும் தான்பிரீன் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களில் இருவர் அவன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒருவராக ஒரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டனர். ஒருவன் அவர்களுக்கு முன்னால் சென்று நின்று கொண்டிருந்தான். மற்றும் இருவர் முன்பக்கம் சென்று வண்டியின் முகப்பில் நின்று கொண்டனர். கொலைக்கு அஞ்சாத பாதகர்கள் தனக்கு இரு பக்கத்திலும் அமர்ந்திருந்ததால், எந்த நிமிஷத்தில் என்ன அபாயம் நேருமோ என்று தான்பிரீன் மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலைகாரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா, அன்றித் தாங்களாகவே வேறு வேலைகளுக்காக வந்தார்களா என்பது புலனாகவில்லை. ஆனால் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்காரக் காரணம் என்ன? இவ்வாறு அவனுக்குப் பல யோசனைகள் தோன்றின. என்ன நேர்ந்தாலும் அவன் போராட்டத்திற்குத் தயாராயிருந்தான். உயிரோடு பகைவர்கள் கையிலே சிக்காமல் அரும்போராட்டம் செய்து எதிரிகளில் பலரைச் சுண்டுக்கொன்ற பின்பே தன் உயிரை விட வேண்டும் என்று அவன் வெகு காலத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தான்.

மணி 11 க்கு மேலாகிவிட்டது. ஊரடங்கு உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம். டிராம் வண்டி பார்னல் ஸ்குயர் பக்கம் சென்றது. அப்பொழுது இரண்டு பக்கத்திலும் இருந்த கொலைஞரும் சட்டைப்பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க முயன்றனர். தான்பிரீனுக்கு விஷயம் நன்றாக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் ரிவால்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டான். அவனுடைய நோக்கமும் பகைவர்களுக்குப் புலனாயிற்று. மேற்கொண்டு. அங்கு தங்கினால் உயிருக்கு அபாயம் நேரும் என்று தெரிந்துகொண்டு வண்டியின் உட்புறத்திலிருந்த மூன்று கொலைஞரும், திடீரென்று எழுந்து ஒரு வர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான்பிரீன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். ஆனால் அந்த இடத்தில் சுடுவது அபாயம் என்று கருதினான். அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ளவர்கள் கலவரமடைத்திருப்பார்கள். குண்டுகளின் ஓசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும் பட்டாளத்தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள். அதனால் தான்பிரீனுடைய உயிருக்கே ஆபத்து வந்துவிடும். தெருவும் பல மக்கள் நடமாடக்கூடிய தெரு வாயிருந்தது. தான்பிரீன் தெருவில் குதித்து, செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகேயிருந்த ஒரு தெருவுக்கு விரைந்து சென்றான். அவன் செல்வதைக் கண்ட கொலைஞர் மூவரும் வேறொரு தெருவின் வழியாகச்சென்று, அவனைத் தெருவின் மறுபுறத்தில் மறித்துக் கொள்ளலாம் என்று கருதி ஓடினர். தான்பிரீன் அவர்களுடைய சூழ்ச்சியையறிந்து, அத்தெருவின் வழியே செல்லாமல் திரும்பி வந்து, தெருவில் அப்பொழுதுதான் வந்து நின்ற வயிட் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

அப்பொழுதுதான் அவனுக்கு முன்நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக் கச்சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகைவர்களும் ஓடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புலனாகவில்லை. தங்கள் உயிருக்கே அபாயம் நேரும் பொழுது, அவர்கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள் என்றும் கவனித்து உதவிசெய்ய வருவது வழக்கமில்லை போலும் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது?

அந்த ஐவரில் ஒருவன், பின்னால் தான்பிரீனும் தோழர்களும் டிராம் கொண்டராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின் தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான்பிரீனுக்குப் பின்னால் வேறொரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக்கவுங்கூடும். தான்பிரீன் மறுநாள்காலையில் டிரீஸியிடம் தனக்கு நேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், 'உன்காலம் நெருங்கி விட்டது போலிருக்கிறது; நீ இனிமேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது, என்று வேடிக்கையாகக் கூறினான். ஆனால் பின்னர் இருவரும் அவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்தனர். அன்று முதல் வெளியே செல்வதானால் இருவரும் சேர்ந்து செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். அன்று சனிக்கிழமை. இருவரும் காலையிலேயே பிட்ஜெரால்டு அம்மையின் வீட்டுக்குச்சென்று பகல் முழுவதும் படுத்துறங்கி ஓய்வெடுத்துக்கொண்டனர். அந்த அம்மையும் திப்பெரரியைச் சேர்ந்தவராதலால் அவர்களை அன்புடன் ஆதரித்தார்.

மறுநாள் அவர்கள் அரைமைல் தூரத்திலிருந்த கெயிலிக் தேசப்பயிற்சிக் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று பொழுதைப் போக்கினர். அங்கிருந்த நண்பர்களுடன் அவர்கள் சீட்டு விளையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பந்தயப் பணம் அதிகமாயில்லாதால் தான்பிரீன் பணம்வைத்து விளையாடுவதில் சலிப்படையவில்லை. சீட்டாட்டத்திலுங்கூட அதிர்ஷ்டம் அவன் பக்கத்திலிருந்தது. அவன் கையில் கொஞ்சம் பணம் சேரவும் இது ஒரு வழியாயிற்று. அச்சமயத்தில் அவனுக்குப்பிற்கால வேலைகளைப்பற்றி மனதில் முடிவான திட்டம் எதுவுமில்லை. தலைமைக் காரியாலயத்தார் அவனையும் அவன் நண்பர்களையும், சில போலியான காரணங்களைச் சொல்லி, டப்ளினிலேயே பலநாள் தாமதிக்கும்படி செய்தனர். தலைவர்கள் முன்னால் நின்று வழிகாட்டத் தயாராயிருக்கவில்லை; மற்றவர்கள் சுயேச்சையாக வேலைசெய்யவும், வழி விடவில்லை. டின்னி லேலி தான்பிரீனை எதிர்த்த்துத் திப்பெரரியில் தான். தலைமைக் காரியாலயத்தார் பொறுப்பேற்க அஞ்சினதோடு, தான்பிரீனை விரைவாக ஊருக்கு அனுப்பத் தயாராயில்லை. ஆனால், தொண்டர்கள் அடிக்கடி பயிற்சி செய்து வந்ததால், அதிக தைரியத்தையும் பயிற்சிகளையும் பெற்று வந்தனர். அவர்களுடைய குடியரசுப் படை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிரும்பொன்பொல், துன்பங்களை அனுபவித்து, அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுைடயதாகிவிட்டது.

11ஆம் தேதி மாலை தான்பிரீன் டிரீன்லியை அழைத்துக்கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச்சென்றான். அது பொழுது போக்காயிருக்கும் என்று அவன் கருதினான். கொட்டகையில் டிரம்கொண்டராவைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரையும் ஈமன் ஒபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியையும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இருவரையும் பிடிப்பதற்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர்களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலைநகரத்தில் பல்லாயிரம் மக்கள்கூடியுள்ள கொட்டகையில் வந்து நின்றது. பெரும் வியப்பாகவே தோன்றியது. அவர்களை எந்தச் சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க்கார் உத்தரவு போட்டிருந்தது. தான்பிரீன் அந்தப் பெண்களோடு குடும்ப நலங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.

கொட்டகை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்று கொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவன் யாரென்பது தான்பிரினுக்குப் புலனாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னால் டிராம் வண்டியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன். அவன் தான்பிரீன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டே நின்றான். அந்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளிவிடலாமா என்று தான்பிரீன் யோசனை செய்தான். ஒரு வேளை அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்கலாம் என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அவன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாதவன் போல் அப்பெண்களுடன் போய்விட்டான்.

அவர்கள் ஐவரும் டிரம் கொண்டராவுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான்பிரீன் மட்டும் கடைசியாக ஏறினான். பெண்களில் ஒருத்தி அவனைப் பார்த்து 'அதோ, ஒரு நண்பன் தொடர்ந்து வருகிறான்' என்று மெதுவாகக் கூறினாள். தான்பிரீன் திரும்பிப்பார்க்கையில் பழைய சாக்கன்தான் அவனைத் தொடர்ந்து வந்து வண்டியிலேற முயன்று கொண்டிருந்தான். ஆனால் தான்பிரீன் கால்சட்டைப் பையிலிருந்த ரிவால்வரில் கை போட்டுக்கொண்டிருந்த நிலையைக் கண்டு, அவன் மெதுவாகப் பின்வாங்கி நகர ஆரம்பித்தான். நகர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து விட்டான். அந்த இடத்திலேயே தான்பிரீன் அவனைச்சுட்டிருந்தான், பின்னால் அவனால் இடையூறு நேர்ந்திராது. ஆனால் பெண்களின் மத்தியிலே நின்று போராடினால் எதிரியின் குண்டுகள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில் ஒற்றனை உயிரோடு விட்டுவிட்டான்.

அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே அன்றிரவு தான்பிரீன் டிரம் கொண்டராவில் தங்கியிருந்த இடத்தில் சிப்பாய்கள் சென்று தாக்குவதற்குக் காரணமானான்.