உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/சமாதானம்

விக்கிமூலம் இலிருந்து

22
சமாதானம்


1921 - ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே சில ஐரிஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்துகொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது. ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சமாதானம் அமுலுக்கு வரவேண்டுமென்று உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

தொண்டர்கள் இந்தச்சமாதானத்தில் கொஞ்சம் ஓய்வுகிடைக்கும் என்றும், பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்கலாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்களிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு. ஓய்வுக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வெடிமருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் தீர்மானித்தனர். சமாதானம் பின்னால் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருத்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. சமாதானக் காலத்தில் தான்பிரீன் தென்பகுதியிலிருந்த குடியரசுப் படையின் 'குவார்ட்டர் மாஸ்டர்' பதவியில் இருந்தான். ஆனால், பின்னால் அப்பதவியை ராஜினாமாச் செய்துவிட்டான். அக்காலத்தில்தான் அயர்லாந்து முழுவதும் சிதறிக்கிடந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க்கப்பட்டன.

சமாதானக் காலத்தில் தான்பிரினும் மற்றத் தொண்டர்களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவ்ர்களை வரவேற்று, சுதந்திர வீரர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தனர். இரண்டு

ஷங்களுக்கு முன்னால் அவர்களைக் கொலைகாரர்கள் என்று கூறிவந்த ஜனங்களே, பின்னால் அவர்களைப் போற்றிப்புகழ நேர்ந்தது!

செப்டம்பர் மாதம் முடிவில் அவன் டப்ளினுக்குச் சென்று தங்கியிருந்த போது, அங்கிருந்த தொண்டர்படைத் தலைவர்கள் அவனுக்கு ஒரு தங்கக்கடிகாரமும், சங்கலியும் பரிசலித்து அவனைப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

சமாதான உடன்படிக்கை கையெழுத்தாவதற்குச் சில தினங்களுக்கு முன்னால் தான்பிரீன் டப்ளினை விட்டுத் தென்பாகத்திற்குச் சென்றான். தொண்டர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போலிச்சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்து விட்டால், தலைவர்கள் அவர்களுக்கு விரோதமாக நடக்க மாட்டார்கள் என்று அவன் நம்பியிருந்தான். தொண்டர்களே அரசியல்வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது.

தான்பிரீன் டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் டப்ளினுக்குச் சென்று லியாம் ஸீன் ஹோகன் முதலிய நண்பர்களைக் கண்டு, சமாதானத்தைத் தொலைத்து, உடனே சண்டையை மறுபடி தொடர்ந்து நடத்துவேண்டுமென்று வற்புறுத்தினாான். குடியரசுப் படையில் பிளவு ஏற்படாமலும், நாட்டுமக்கள் சோம்பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானால், போர் நடத்துவதே உத்தமம் என்பதை விளக்கினான். பிரிட்டிஷாருடன் எவ்விதமான சமாதானம் செய்யப்பட்டாலும் ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், மக்கள் போராட்டத்தினால் பெரும் நஷ்டங்களடைந்து களைப்புற்றிருந்தனர். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன்படி புதிய தேர்தலை நடத்தி, அதன் மூலம் ஜனங்களுடைய அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வது சரியான முறையன்று என்று அவன் வாதாடினான். தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். பழைய நண்பர்கள் பலரும் அவனை இவ்விஷயத்தில் கைவிட்டனர்.

அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந்நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தான். அவனும் ஸீன் ஹோகனும் லண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களை இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், 'ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டுப் போராட்டத்தையே முடிக்காலமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது, நீங்கள் இந்தியாவுக்கு வந்து என்ன செய்துவிட முடியும்?' என்று கேட்டார்கள். இதனால் தான்பிரீன் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக்காவுக்குப் புறப்பட ஏற்பாடு செய்தான். இடையில், அவனுடைய உயிர்த்தோழன் ஸீமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது. தான்பிரீன் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.

அவன் அயர்லாந்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால் குடியரசுப் படையின் முக்கியமான அதிகாரிகளைக் கண்டு, மீண்டும் போரை ஆரம்பிப்பதின் அவசியத்தை வற்புறுத்திக் கூறி, அதை ஆதரிக்கும்படி வேண்டினான். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தால், அவன் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டியிருந்திராது.

தான்பிரீன் நாட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, அதுவரை தானும் நண்பர்களும் செய்துவந்த அரும்பெரும் முயற்சிகள் வீணாக்கப்பட்டதையும், அவர்களுடைய தியாகமெல்லாம் தேசத்தை இரண்டு பிரிவுகளாக வெட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டதையும், அந்நிய அரசனுக்கு 'ராஜா விசுவாசமாக' இருப்பதாகப் பிரமாணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுடைய சுதந்திரமே கிடைத்திருப்பதையும் எண்ணி மனம் வருந்தினான்.

ஸீன் ஹோகன் முன்கூட்டியே லண்டனுக்குச் சென்று அவனுடன் சேர்ந்து கொண்டான். அதுவரை அவன் தேசத்தை விட்டு வெளியேறி எந்த அந்நிய நாட்டையும் கண்டதில்லை. லண்டன் நகரின் புதுமைகள் அவன் தாய்நாட்டைப் பற்றிக் கொண்டிருந்த மனக்கவலையைக் கொஞ்சம் மறப்பதற்கு உதவி செய்தன. அந்நகரில் அவன் இரண்டு வாரம் தங்கியிருந்து, ஆங்காங்கிருந்த விசேஷங்களைக் கண்ணுற்று வந்தான்.

அங்கிருந்து நேராக அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்குச் செல்லமுடியா தென்பதை அறிந்து அவனும் ஹோகனும் முதலில் கனடாவுக்குப்போய், அங்கிருந்து ஐக்கிய மாகாணத்திற்குள் நுழைந்துவிடவேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்களிடம் போதிய பணமில்லை. கனடாவுக்குள் இறங்குவதற்கு அனுமதிச் சீட்டுகளுமில்லை. பின்னால் ஏதோ தந்திரம் செய்து அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.

மூன்று வாரம் கப்பலில் பிரயாணம் செய்து அவர்கள் செளக்கியமாகக் கனடாவையடைந்தனர். அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்குப் போய், சிக்காகோ நகரையடைந்தனர். அங்கேதான்பிரீனுடைய இரு சகோதரர்களான ஜான், பாட் என்பவர்களும் சகோதரியான மேரியும் அவர்களைச் சந்தித்தனர். அவர்கள் பல வருஷங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தவர்கள். வெகுதொலைவிலிருந்த அந்த அந்நிய நாட்டிலும், தான்பிரீன் தம் பந்துக்களின் மத்தியிலே வாழ நேர்ந்ததால், தான் அயர்லாந்திலேயே இருந்ததாக எண்ணிக்கொண்டான். வேறு பல ஐரிஷ் நண்பர்களும் அவனைக் கண்டு மிகுந்த உபசாரம் செய்தனர். நாக்லாங்கிலே அவனுடன் போராடிய ஒ'பிரியன் அவனைக் கண்டு பேசினார். அமெரிக்காவில் பல ஐரிஷ்காரர்கள் ஏராளமான மூலதனங்களைப் போட்டுப் பெரிய தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருப்பதைக் காணத்தான்பிரீன் மகிழ்ச்சியடைக்கான்.

பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங்களைப் பார்வையிட்டான். அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந்தில் நடந்து வந்த விஷயங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச்சந்தர்ப்பம் ஏற்பட்டது. உடன்படிக்கைக்குப் பிறகு அயர்லாந்தின் நிலைமையைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண்டர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாய்த் தெரிந்தது. ஒவ்வொருநாளும் அவர்களுக்குள் மனஸ்தாபம் பெருகிக்கொண்டே வந்தது. அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் காரர்களுக்குள்ளும் பரவிவிட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து நின்றனர்.

மார்ச் மாதம் ஆரம்பத்தில் லிமெரிக் நகரில் தொண்டர்கள் இருபிரிவாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. ஒரு பிரிவினர் உடன்படிக்கையை ஆதரித்தும், மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து விட்டால், தேசம் முழுவதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடும். லிமெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் செய்து கொண்டு தான்பிரீனை உடனே புறப்பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பியிருந்தனர்.

தான்பிரீன் அப்பொழுது கலிபோர்னியாவில் இருந்தான். இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக்காகோவுக்கும் பிலடல்பியாவுக்கும் சென்று, பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, ஹோகனுடன் நியூயார்க் நகரையடைந்தான். அங்கிருந்து கப்பலேறுவது எளிதென்று அவர்கள் கருதியிருந்தனர். போதுமான பனமும் அனுமதிச் சிட்டுக்களும் இல்லாமையால், அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ்டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது.

தான் பிரினும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களை யடைந்து, கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப்நகரை நோக்கிப் புறப்பட்டனர்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடைந்தனர். அங்கு ஒரு நபர் அவர்களைச் சந்தித்து வரவேற்று, தான்பிரீனுடைய மனைவி ஓர் ஆண் மகனைப் பெற்றிருப்பதாயும், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாயும் அறிவித்தார்!