தான்பிரீன் தொடரும் பயணம்/தொண்டர் படை

விக்கிமூலம் இலிருந்து

2
தொண்டர் படை


ஐரோப்பிய யுத்தம் 1914ஆம் ஆண்டு ஆம்பமாயிற்று. மனித சமூகத்தின் வளர்ச்சியில் - நாகரிகத்தில் - இந்த யுத்தம் மிகமுக்கியமான இடம் பெற்றிருக்கிறது. இதுகாறும் நாம் அரசியல் புரட்சிகளையும். சமூகப் புரட்சிகளையும், ஒடுக்கப்பட்டோர் புரட்சிகளையும், பொதுவாகத் தேசப்புரட்சிகளையும் பற்றியே கேட்டிருக்கிறோம். ஐரோப்பிய யுததம் உலகப் புரட்சிக்கு வித்தாக அமைந்ததே விந்தையாகும். அதை ஆம்பித்தவர்களும் அவ்வாறு ஏற்பட வேண்டுமென்று கனவிலும் கருதவில்லை. சிறிய தேசத்தார்களுடைய சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், உடன்படிக்கைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், உலக சமாதானத்தைப் பாதுகாக்கவும் அவர்கள் போராடுவதாகக் கூறி வந்ததில் எவ்வளவு உண்மை உண்டென்பதை உலகம் தெரிந்து கொண்டது. யுத்தத்தில் பலநாடுகள் தங்களுடன்படிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டதை நாம் கண்ணாற் கண்டோம். சிறு நாட்டார்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தொடுக்கப்பட்ட அறப் போரின் பெரிய நாட்டார்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வல்லரசுகள். தாங்கள் முன்னதாக அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளுக்குப் பிறப்புரிமையாகிய சுதந்திரத்தைக் கொடுக்க மறுத்துத் தங்களுடைய பிடியைத் தளர்த்துவதற்குப் பதிலாக உறுதிப்படுத்தின. புதிய நாடுகளைப் பிடிப்பதில் தங்களுக்குள்ள ஆசையையும் வெறியையும் அவைகள் மறைக்கவும் இல்லை அறத்தை நிலைநாட்டவும் மானிட சமுதாயத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் யுத்தம் தோன்றியதாகக் கூறினார்கள். யுத்தத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தீவுகளின் சுதந்திரத்தைப்பறித்து அவற்றை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜப்பான், கொரியாதேசத்தின் மேல் ஆதிக்கம் செலுத்திவந்தது. ஜெர்மனி, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் தன் கைவசமுள்ள பிராந்தியங்களை விடுவிக்கப் பிரியப்படவில்லை. ஜார்சக்கரவர்த்தியின் ரஷ்யா மண் வெறியே உருவாக விளங்கியது. இந்தியா, எகிப்து, அயர்லாந்து நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இதனை வல்லரசுகளும், சந்திரனைப்போல் தங்கள், குறைதெரியாமல், பிறர் குறைகளை களையும் நோக்கத்துடன் போராடின. இடைவிடாது நான்கு ஆண்டுகள் போராடி உயிரையும் பொருளையும் ஆற்று நீரைப்போல் அள்ளிக்குடித்தன. ஐரோப்பிய யுத்தத்தில் 97,43,914 பேர் மடிந்தனர். 2,09,27,456 மக்கள் காலிழந்தும், கையிழந்தும், கண்ணிழந்தும் அங்கங்களையிழந்தனர். முப்பது இலட்சம் பேர் போன இடமே தெரியவில்லை. மொத்தம் ஏழாயிரம் கோடி பவுண்டு செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு உதிரத்தையும் பொன்னையும் பலியாக விழுங்கிய யுத்தத்தின் முடிவு என்ன?

பிரிட்டிஷ் பிரதம மந்திரியான லாயிட் ஜார்ஜ் உலகத்தில் யுத்தத்தைத் தொலைப்பதற்கே இந்த யுத்தம் தொடுக்கப்பட்டதாக ஒருமுறை, இருமுறையல்ல 76 முறை உலகறியக் கூறினார். பிறநாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வல்லரசுகள் உண்மையில் உலக சமாதானத்திற்காக உழைக்க முடியுமா? உழைத்தாலும் அது பலிக்குமா? யுத்தத்திற்கு இந்தியா பதினான்கு இலட்சம் மனிதர்களையும் இருபதினாயிரம் பவுண்டையும் கொடுத்து உதவியது. அயர்லாந்து 1,34,000 வீரர்களை யுத்தத்திற்குக் கொடுத்தது. ஆனால் யுத்த முடிவில் இந்தியாவும் அயர்லாந்தும் என்ன நிலைமையில் இருந்தன? இந்தியா யுத்தத்திற்கு பின்புதான் அதன் பாடத்தைக் கற்றுக்கொண்டது. அயர்லாந்து யுத்தம் ஆரம்பத்திலேயே உண்மையைத் தெரிந்துகொண்டது. முதல் ஆண்டிலேயே அது தனது சுதந்திரப்போராட்டத்தை தீவிரமாய் நடத்த ஆரம்பித்து விட்டது.

அயர்லாந்து சிறிய தீவு. உலகில் பெரிய ஏகாதிபத்தியத்தையுடைய "கடலரசி“ இங்கிலாந்தை எதிர்த்து அயர்லாந்து சுதந்திரத்தைப் பெறுவது எங்ஙனம்? இங்கிலாந்துக்கு வெளியிலிருந்து ஒரு பெரிய ஆபத்து ஏற்படும் பொழுது அந்நியர் அதைத் தாக்கும்பொழுது, அயர்லாந்து அதை எதிர்த்துப் போராடினால் ஒரு வேளை வெற்றியடையக்கூடும். ஏனெனில் இங்கிலாந்து தன் முழுவலிமையுடன் அதை எதிர்த்து நிற்க அப்போழுது இயலாது போகும். இந்த நோக்கங் கொண்டே அயர்லாந்து 1914 ஆம் ஆண்டு முதல் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. அதன் தலைவர்கள் ஆங்கில ராஜதந்திரிகளுடைய பசப்பு வார்த்தைகளை நம்பவில்லை. ஒரு வல்லரசு துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்பொழுது அதன் வாயில் இருந்து உண்மை, உரிமை, உடன்படிக்கை முதலிய இனிய சொற்கள் வெளிவந்தபோதிலும், பின்னால் துன்பம் நீங்கிய காலையில் அவை காலடியில் மிதிபட்டு இழிவடையும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் போரை விரும்பினார்கள்; போரையும் உடனேயே வேண்டினார்கள்.

1914ஆம் ஆண்டு அயர்லாந்தில் மூன்று விதமான பட்டாளங்கள் இருந்தன. ஒன்று அயர்லாந்தை அடக்கிப் பிரிடிஷ் ஆதிக்கத்தை நிலைநாட்ட உபயோகிக்கப்பட்ட ஆங்கில ராணுவம்; மற்றொன்று ஆரஞ்சுப்படை மூன்றவது ஐரிஷ் தொண்டர்படை அயர்லாந்தின் வட பாகத்திலுள்ள அல்ஸ்டர் மாகாணத்தார் தங்களுக்குத் தனி உரிமைகள் வேண்டுமென்றும், மற்றப்பக்கத்தாரோடு சேர்ந்து வாழமுடியாதென்றும் கூறி, தம் நாட்டாரையே எதிர்ப்பதற்காக ஆரஞ்சுப் படையை வைத்துக்கொண்டிருந்தனர். ஆங்கில அரசாங்கத்தார் அல்ஸ்டர்வாசிகளைத் தங்களுக்குப் பக்கபலமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஐரிஷ் தொண்டர் படை என்பது தேசியவாதிகளான மிதவாதிகளுடைய ராணுவம். அதை ஸின்பீன் படை என்றும் சொல்வதுண்டு. அயர்லாந்து பூரண சுதந்திரம் பெற்றுக் குடியரசை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் போராடுவதற்காக அந்தப் படை அமைக்கப்பட்டிருந்தது.

யுத்த ஆரம்பத்தில் பிரிட்டிஷ் பார்லிமென்டார் அயர்லாந்துக்கு ஒரு சுய ஆட்சி மசோதாவை நிறைவேற்றி வைத்திருந்தனர். அந்தச் சொற்பச் சீர்திருத்தத்தைக்கூடக் கொடுக்கக்கூடாது என்று அல்ஸ்டர்வாசிகள் எதிர்த்தனர். டப்ளின் நகரத்தில் ஒரு பார்லிமென்ட் ஏற்படுத்தப்பட்டாலும், தாங்கள் உயிருள்ளவரை அதை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் கூறினார்கள். தங்களுக்கு ஒரு தனியான பாலிமெண்டும் தனி அரசியலும் வேண்டுமென்று கோரினார்கள். அயர்லாந்துக்கு சுயராஜ்யமே கொடுக்கக்கூடாதென்று பிடிவாதமாகக் கூறிவந்த பெருஞ்செல்வர்களான ஆங்கில கன்ஸர்வேட்டிவ் கட்சியர் அல்ஸ்டர் வாசிகளுக்குப் பொருளுதவியும் பிற உதவிகளும் செய்து அவர்களைப் பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கே விரோதமாகத்தூண்டி விடுவார்கள். அல்ஸ்டார்வாசிகள் துணிவுடன் முன்வந்து வெளிப்படையாக யுத்தப் பயிற்சி பெற்று, ஆயுதம் தாங்கி, ஆரஞ்சுப்படையை அமைத்துக் கொண்டார்கள். அக்காலத்தில் லின்பின் இயக்கம் அயர்லாந்தில் அதிகச் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை. டப்ளின் தலைநகருக்கு வெளியே அதைப்பற்றி ஜனங்களுக்கு அதிகம் தெரியாது. ஐரிஷ் பிரமுகர்களில் பெரும்பாலார் பார்லிமென்டில் சென்று கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். அவர்களுக்கு ஜான் ரெட்மெண்டு என்பவர் தலைவர். யுத்த ஆரம்பத்தில் அவர் தமது அமிதவாதத்தை எல்லாம் பறிகொடுத்துவிட்டு, பிரிட்டிஷாருக்கு உதவிப் பட்டாளம் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றியவர்களும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். ஆரஞ்சுப் படையையோ, முற்றிலும் ஆங்கிலேயருக்கு அநுகூலமானது. இந்நிலையில் அயர்லாந்தின் சுதந்திரத்தைப் பெறவும், ஆங்கிலேயப் படையையும் ஆரஞ்சுப்படையையும் எதிர்த்து நின்று போராடவும் ஒரு தேசியப்படை அவசியம் என பிர்சி, மக்னில் முதலிய தலைவர்கள் கருதினார்கள். அவர்களுக்கு நாட்டில் அதிகச் செல்வாக்கு இல்லாதிருந்தபோதிலும் ஐரிஷ் வாலிபர்கள், அவர்களுடைய கருத்தை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, ஐரிஷ் தொண்டர்படையை அமைத்தனர். ஜெர்மனியுடன் இங்கிலாந்து போராடுவது தர்மத்திற்காக அன்று என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒரே கனவு தாய்நாடு விடுதலை பெற்று சுதந்திரக் காற்று வீச வேண்டும் என்பதே.

டோனோஹறில் என்னும் கிராமத்தில் தான்பிரீன் 1914 ஆம் ஆண்டு ஐரிஷ் தொண்டர்படையில் முதன் முதலாகச் சேர்ந்து கொண்டான். அவனுடைய சொந்த ஊர் திப்பெரரி நகரம். அவனுக்கு அப்போழுது வயது இருபது. அக்காலத்திலேயே அவனைப் போலிஸார் புரட்சிக்காரன் என்று கவனித்து வர ஆரம்பித்தனர். அவனும் அவன் நண்பர்களும், ஆங்கிலப்படையில் சேரவேண்டுமென்று ஜான் ரெட்மண்ட் கூறிவந்ததைச் சிறிதும் கவனியாமல், தங்களுடைய வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மைதானங்களில் கூடி வெளிப்படையாகத் தேகப்பயிற்சி, யுத்தப் பயிற்சி முதலியன செய்து வந்தார்கள். எப்பொழுதாவது ஒரு காலம் வரும், அக்காலத்தில் தங்கள் பகைவனை ஒரு கை பார்க்கலாம் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. அவர்களுடைய பகைவன் இங்கிலாந்தைத் தவிர வேறெவருமில்லை.

யுத்தம் வளர வளரப் போலிஸார் அவர்களை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களிடம் அதுதாபமுடையவர்கள் என்று பறை சாற்றப்பட்டது. பத்திரிகைகளில் ஜெர்மானியர்கள் மனிதத்தன்மையையே கைவிட்டு அநாகரிகமான கொடுமைகளைச் செய்து வந்ததாகப் பொய்யும் புரட்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததால், ஐரிஷ் ஜனங்கள் அவர்களை வெறுத்து, ஆங்கிலேயரிடம் அனுதாபம் காட்டி வந்தனர். பணக்காரர்களும், கொழுத்த வியாபாரிகளும் பெரிய குடியானவர்களும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள். ஆனால் ஐரிஷ் தொண்டர் படையிலுள்ளவர்கள் ஆங்கிலேயருக்கு எவ்வித உதவியும் செய்ய மறுத்துவிட்டனர். ஆங்கில யுத்த வீரர்களுக்குச் செளகரியங்கள் அமைத்துக் கொடுப்பதாக ஐரிஷ் போலிஸார் சில நிதிகள் சேர்த்து வந்தனர். தான்பிரீன் அந்த நிதிக்கு உதவி செய்ய மறுத்து விட்டான். அதனால் போலிஸார் அவனிடம் வெறுப்படைந்தனர். அப்பொழுது தான்பிரீன் ஒரு பெரிய ரெயில்வே கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். போலிஸார் அவனுடைய மேலதிகாரிகளிடம் இதுபற்றி புகார் செய்தனர்.

ஐரிஷ் போலீஸ் படையைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மற்ற நாடுகளிலுள்ள போலீஸ் படையைப் போலில்லாமல் அது விசேஷ ராணுவப் பயிற்சி பெற்று அயர்லாந்தில் சாதாரணமான குற்றங்களை அதிகமாயில்லாமையால் சுதந்திர விருப்பம் கொண்ட தொண்டர்களைப் பின்பற்றிச் சென்று துப்பறிவதே போலிஸாரின் முக்கிய வேலையாக இருந்தது. அவர்கள் கோயில்களில் பாதிரிமார்கள் செய்த மதப் பிரசங்கங்களைக்கூட சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு போவது வழக்கம். அவர்கள் மொத்தம் சுமார் பதினாயிரம் பேர்கள் இருந்தனர். ஒவ்வொரு கிராமம் அல்லது நகரத்தினுடைய அளவுக்குத்தக்கபடி இரண்டு முதல் இருபது பேர்வரை நாடெங்கும் போலிஸார் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் போலிஸாரின் உதவி இல்லாவிடின் அயர்லாந்தில் இருந்த நாற்பதினாயிரம் ஆங்கிலத்துருப்புகளும் எவ்வித வேலையும் செய்யமுடியாது. ஏனென்றால் படை வீரர்களுக்கு நாட்டைப் பற்றியும் நாட்டிலுள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஜனங்களோடு நெருங்கிப் பழகி உளவறிந்து சொல்வதற்கு ஐரிஷ் போலிஸ்படையே ஆங்கில அரசாங்கத்தின் மூளை என்று சொல்லலாம். இந்தப் படை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்ரொபர்ட்பீல் என்பவரால் அமைக்கப்பட்டதால், ஐரிஷ் போலிஸாரை ஐனங்கள் பீலர்கள் என்று ஏளனமாக அழைப்பது வழக்கம்.

இனி நம்முடைய சரித்திரத்தைக் கவனிப்போம். யுத்த ஆரம்ப முதல், தான்பிரீனும் அவனுடைய தோழர்களும் தங்களுடைய சொந்த வேலைகளுக்கிடையே அடிக்கடி கூடி யுத்தப்பயிற்சியை இடைவிடாது நடத்தி வந்தார்கள். அத்துடன் துப்பாக்கி, ரிவால்வர் முதலிய ஆயுதங்கள் எங்கு எங்கு கிடைக்கும் என்று தேடிச் சேர்த்து வந்தார்கள். அக்காலத்தில் தொண்டர்களிடம் ஆயுதங்கள் மிகச் சுருக்கமாகவே இருந்தன. 1915 ஆம் ஆண்டு முழுவதும் 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் இவ்வாறு பயிற்சி செய்வதிலும் ஆயுதங்கள் சேர்ப்பதிலும் கழிந்தன. 1916ஆம் ஆண்டு ஈஸ்டர் விழாவின் போது அயர்லாந்தில் சுதந்திரத்திற்காக ஒரு பெரிய கலகம் நடந்தது. அக்காலத்தில் திப்பெரரித் தொண்டர்கள் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போயிற்று. ஏனென்றால் அக்கலகத்தை நடத்திய மேலதிகாரி அவர்களுக்குச் சரியான உத்தரவு அனுப்பவில்லை. ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல உத்தரவுகளினால் அவர்கள் தீவிரமாக எதையும் செய்ய முடியாது போயிற்று.

1916 ஆம் ஆண்டு வருடத்துக் கலகம் ஜனங்களிடையே ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணிவிட்டது. அதுவரை ஸின்பினர்களை மதியாமல் இருந்தவர்கள் திடீரென்று அவர்களிடம் அதிக அபிமானம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் தொண்டர்களுடைய படை அப்பொழுது போதிய வல்லமை பெற்றிருக்கவில்லை. ஆயிரக்கணக்காக தொண்டர்களை அரசாங்கத்தார் பிடித்து நாடு கடத்தி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டனர். தொண்டர்களுடைய ஆயுதங்கள் பலவற்றைப் போலிஸாரும் ராணுவத்தாரும் பறித்துக் கொண்டு போய்விட்டனர். தொண்டர்கள் வெளிப்படையாகப் பயிற்சி பெறவோ, அணிவகுத்துச் செல்லவோ கூடாது ஏன்றும் நாடெங்கும் விளம்பரஞ் செய்யப்பட்டது. சிறிது காலத்திற்குத் தொண்டர்களிடையே குழப்பமும் அயர்வுமே காணப்பட்டன. ஆனால் ஈஸ்டர் கலகத்தில் சம்பந்தப்பட்டுப் போராடிய தொண்டர்கள் பலர் ஆங்கில ராணுவத்தார் வலையில் அகப்படாது தப்பி, தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைப்பதற்காக டப்ளின் நகரில் இரண்டு ரகசிய மகாநாடுகளை நடத்தினர். சில வாரங்களில் மீண்டும் தீவிரமான வேலை ஆரம்பமாயிற்று. தம்பிரீனும் அவனுடைய தோழர் ஸின்டிரீஸியும் தங்களுடைய தொண்டர் படையைச் சீர்திருத்தி அமைக்க முயன்றார்கள். எக்காரியத்தையும் ரகசியமாகவே செய்யவேண்டியிருந்தது. வாரத்திற்கு இருமுறை அவர்கள் ஒரு சிறிய வனத்தில் கூடிப் பயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு 1917ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நடந்து வந்தது. அப்பொழுது தான்பிரீனுடைய படையில் 13 பேர்கள் இருந்தார்கள். அவர்களில் யாருக்கும் போர்முறைகளைப் பற்றித் தெரியாது. வேறு ராணுவப் பயிற்சி உள்ளவர்கள் ஆங்கிலப் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டிருந்ததாலும் கண்டவர்களையெல்லாம் நம்புவது அபாயமானதாலும் அவர்களது ராணுவப்பயிற்சி முற்போக்கு அடையமுடியவில்லை. எனினும், தேகப்பயிற்சி செய்தல், கொடி, குழல் ஊதுதல் முதலியற்றால் அடையாளங்களைக் கற்றுக் கொள்ளுதல், ரிவால்வரால் குறிபார்த்துச் சுடுதல் முதலியவற்றில் அவர்கள் விசேஷப் பழக்கம் பெற்று வந்தனர். இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு உதவியில்லை. அந்தப் புத்தகங்களும் அரசாங்கத்தாரால் ஆங்கிலத்துருப்புகளுக்கும் கொடுக்கப்பட்டவை. அவர்களை எதிர்ப்பதற்கு அவர்களுடைய புத்தகங்களே உதவிபுரிந்தன. தான்பிரீன் கூட்டத்தார் பிரிட்டிஷ் துருப்புக்கள் பயிற்சி செய்யும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கவனிப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். அத்துடன் எங்காவது, யாரிடமாவது ஒரு ரிவால்வர் கிடைக்குமென்று அவர்கள் கேள்விப்பட்டால் என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கி விடுவது வழக்கம். அந்த நேரத்தில் தேவையுள்ள பணமும் எப்படியாவது கிடைத்துவிடும்.

1917 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தான்பிரீன் படையினர் நகரெங்கும் தெரியும்படியாக அணிவகுத்துச் சென்றனர். அக்காலத்தில் ஈஸ்டர் கலக சம்பந்தமாக நாடுகடத்தப்பட்ட பலர் அயர்லாந்திற்கு மீண்டும் வந்து வாலிபர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். அரசியல் விவகாரங்களிலும் குடியரசுக்காரர்களுக்குச் செல்வாக்கு அதிகரித்து வந்தது. குடியரசின் பெயரால் நின்ற இாண்டு அபேட்சகர்களுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னால் லியூஸ் சிறையிலிருந்து விடுதலையடைந்த ஈமன் டி வெலசாவும் குடியரசுக் கட்சியின் சார்பாகப் பார்லிமெண்டின் ஸ்தாபனம் ஒன்றுக்கு அபேட்சகராக நின்றார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆங்கிலப் பார்லிமென்டிற்கே செல்வதில்லை என்று உறுதி கூறினார். அவருக்கு மகத்தான வெற்றி ஏற்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் அவர் திப்பெரரி நகரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். அப்பொழுது தான்பிரீன் படையினர் அனைவரும் ஒரே மாதிரியான பச்சைநிற உடை தரித்து டிவலெராவுக்கு மெய்க் காப்பாளராக நின்றனர். அப்பொழுது திப்பெரரியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்கள் தங்கியிருந்தனர். அதனால் தான்பிரீன் படையினர் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லமுடியவில்லை. அவற்றிற்குப் பதிலாக நீண்ட தடிக் கம்புகளை வைத்திருந்தனர். அக்காலத்தில் ராணுவத்தைப்போல் அணிவகுத்துச் செல்வதும், ஒரேமாதிரியான ராணுவ உடையணிவதும், கைகளில் தடிக் கம்பு வைத்திருப்பதும் குற்றமென்று அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தது. தடிகளையும் தடைசெய்து விளம்பரஞ் செய்யப்பட்டது மிகவும் வியப்பாகும்! அதன் வரலாற்றைக் கவனிப்போம்.

டப்ளின் நகரத்திலே ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இங்கிலாந்திலுள்ள ஐரிஷ் கைதிகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டிக்கவே அக் கூட்டம் கூடியது. பிளங்கெட் என்பவரும் கதால் புருகா என்பவரும் பிரசங்கம் செய்தார்கள். அப்பொழுது டப்ளின் நகரப்போலிஸைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மில்ஸ் என்பவர்.அந்த அமைதியான கூட்டத்தைக் கூடவிடாமல் கலைக்க முயன்றார். அக்கூட்டத்தில் ஹாக்கி விளையாட்டிற்குச் செல்லக்கூடிய வாலிபர்களும் விளையாடி விட்டுத்திரும்பிய வாலிபர்களும் பலர் இருந்தனர். இன்ஸ்பெக்டர் கூட்டத்தைக் கலைத்துப் பேசுகிறவர்களைக் கைது செய்ய வேண்டுமென்று முயற்சித்தபொழுது அவர்மேல் ஒரு ஹாக்கி மட்டை எறியப்பட்டது. அவர் காயங்களடைந்து பின்னால் அக்காயங்களால் இறந்து போனார். இதிலிருந்து அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்களின் சேனாதிபதியாகிய சர் பிரியான் மாகன், யாரும் தெருக்களில் ஹாக்கிக் மட்டைகளைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சட்டம் போட்டு விட்டார்; மனிதர்கள் கம்பு ஊன்றி நடக்கக்கூடாது என்று சட்டமிடுவது எவ்வளவு கேவலமோ, அதைப்போன்றது. இந்த அநாகரிக உத்தரவும். இந்தச்சட்டம் போடுவதற்கு முன்னால் ஜனங்கள் அதிகமாய்த் தடிகள் வைத்திருப்பதில்லை. ஆனால் அதற்குப்பின்னால் நாடு, நகரம் எல்லா இடங்களிலும் ஜனங்கள் ஹாக்கித்தடிகளைத் தாங்கிச் சென்றனர். முன்பின் தடிகள் வைத்திருக்காதவர்களும் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர்.

தான்பிரீன் கூட்டத்தார் திப்பெரரியில் ஹாக்கித் தடிகளைத் தாங்கி ராணுவ உடையில் அணிவகுத்துச் சென்றது, பகைவர்களுக்குக் கலகத்தை உண்டாக்கியதைப் போலவே நண்பர்களுக்கும் கலக்கத்தை உண்டாக்கியது. உள்ளூரில் இருந்த ஸின்பீனர்கள் அதைக்கண்டு திடுக்கிட்டுப்போயினர். அப்போழுது ஸின்பீன் கட்சிக்கு மிகுந்த ஆதரவு ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் தீர்மானங்களைத் தவிர வேறு ஆயுதங்களையும் உபயோகிக்கத் தயாராக இருக்கவில்லை. திப்பெரரியிலிருந்த ஸின்பீனர்கள் தான்பிரீன் கூட்டத்தாரிடம் அதிருப்தி கொண்டதன் காரணம் என்னவெனில் அவர்கள் கூட்டம் கூடித்தர்க்கம் செய்து ஒரு நீண்ட தீர்மானம் இயற்றாமலே ராணுவ உடை தரித்து அணிவகுத்துச் சென்றதுதான். இத்தகைய மந்தபுத்திக்காரர்களால் பின்னாலும் பலதடைகள் ஏற்பட்டன. ஆனால் தான்பிரீன் கூட்டத்தினர் அவைகளைப் பொருட்படுத்தவில்லை.

தீப்பெரரியில் நடந்த இச்சம்பவத்தைச் சில்லறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுகின்றனர். உடனே குற்றவாளிகளைக் கைது செய்யும்படி உத்தரவு பிறந்தது. தான்பிரீன் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் விருந்தினராகச் சிறைசெல்வதற்கு விரும்பவில்லை. வெளியிலே பல வேலைகள் காத்து நிற்கும் பொழுது, மாமனார் வீட்டில் விருந்துண்ன என்ன அவசரம்? அவனும் ஸீன்டிரீஸியும் வீட்டைவிட்டு வெளியேறி வெளியிடங்களுக்குச் சென்று போலிஸ் புலிகளின் கண்ணில் படாமல் மறைந்தனர். ஆனால் சில நாட்களில் ஸீன் போலிசாரால் கைது செய்யப்பட்டான். அவன் கார்க் நகரத்து ஜெயிலில் கொண்டுவைக்கப்பட்டான். அங்கே வேறு பல புரட்சித் தலைவர்கள் இருந்தனர். ஸீன் அவர்களோடு கலந்து பின்னால் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான். புரட்சிக்காரர்களைச் சிறைகளில் அடைத்து வந்தது அவர்களுக்கு விசேஷ உதவியாக இருந்தது. பல திறப்பட்ட அபிப்பிராயங்களுடைய புரட்சிக்காரர்கள் வெளியிலேயே ஒன்று கூடுவதற்கு வழியில்லாதாகையால் சிறைகளுக்குள்ளே ஒருவருக்குகொருவர் வந்து பேசிக்கொள்வதற்குப் பிரிட்டிஷார் உதவி செய்து வந்தனர். பல புரட்சிக்காரர்கள் சிறையில் வைத்துத்தான் ராணுவப் பயிற்சி பெற்று வெடிகுண்டு செய்யவேண்டிய வழிகளைத் தெரிந்து கொண்டார்கள். ஆதலால் சிறைச்சாலையே புரட்சிக்காரர்களின் சர்வகலாசாலை என்பது பொருந்தும்.

ஸீன்டிரிஸ் ராணுவ நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு இரண்டு வருஷம் தண்டனை அடைந்தான். ஆனால் எட்டு மாதத்திற்குப்பிறகு விடுதலை செய்யப்பட்டான். இந்த விசாரனையெல்லாம் வீண் ஆடம்பரத்தைத் தவிர வேறில்லை. ஏனென்றால் தேசியத்தொண்டார்கள் எதிர் வழக்காடுவதில்லை. பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்குத் தங்களை விசாரிப்பதற்கு உரிமையே கிடையாது என்று அவர்கள் கூறிவந்ததார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கும்; சாட்சிகள் போலீஸார் கட்டிக் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்து அளந்து கொண்டிருப்பார்கள். அதேசமயத்தில் குற்றங்சாட்டப் பெற்றுக் கைதிக் கூண்டில் நிற்கும் தொண்டர்கள் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார்கள். விசாரணையையும் தண்டனையையும் அவர்கள் ஒரு துரும்பாகக்கூட மதிக்கவில்லை. சிரித்த தாமரை மலர் போன்ற முகத்துடன் அவர்கள் சிறைசென்றவண்ணமாயிருந்தனர். அடிமை நாட்டிலும் அந்த ஆட்சியுள்ள நாட்டிலும் கண்ணியமானவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதானே!

சிறைக் கோட்டங்கள் மண்ணுலகில் மனிதனால் படைக்கப்பட்ட நகரங்கள். பெரும்பாலும் கொலை, களவு செய்து சிறைசெல்லுவோர் வாழ்க்கையில் மிகுந்த தாழ்ந்தபடியிலுள்ளவர்கள். அவர்களுக்கே சிறைத் தண்டனை நரக வேதனையாகும். ஆனால் அரசியல் போராட்டத்தில் உயர்ந்த ஒரு கொள்கைக்காக பிறப்புரிமையாகிய சுதந்திரம் பெறுவதற்காக வாழ்வு, செல்வம், பெருமை அனைத்தையும் துறந்து வெளியேறும் தியாகிகளையும் சிறையிலடைப்பது எவ்வளவு அநாகரீகம். ஆனால் உலகம் தோன்றிய நாள்முதல், அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களுக்கும் பழையமூப்படைந்த மூடக் கொள்கைகளை எதிர்பவர்களுக்கும் சிறையே வீடாக அமைந்துள்ளது. விதை கெடாமல் முளைவராது. பிறர் நலம் பேணுவோர் சிலுவையைத் தாங்கித் துன்புறாமல் முடியாது. ஆதலால் நல்லோருடைய யாத்திரா மார்க்கத்தில் சிறை ஒரு படை வீடு: பயிற்சி நிலையம். ஆனால் சிறையில் தேசபக்தர்களுக்கு, ஆடும், மாடும் உண்ண மறுக்கும் ஆபாசமான உணவு கொடுக்கப்பட்டால் யாரிடம் முறையிடமுடியும்? உண்ணாவிரதம் என்னும் உயரிய ஆயுதம் மட்டுமே மட்டுமே அவர்களுக்கு ஆபத்தில் உதவுகிறது. இந்த ஆயுதத்தை அயர்லாந்தின் வீரர்களும் பல சமயம் உபயோகிக்கும் படி நேர்ந்தது.

ஸின் முதலிய ஐரிஷ் தேசபக்தர்கள் தாங்கள் அந்நிய அரசாங்கத்தால் மிருகங்களிலும் கேவலமாக நடக்கப்பட்டதை எதிர்த்துப் போராட உண்ணாவிரதத்தையே மேற்கொண்டனர். அவர்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளுக்குரிய மரியாதையையே அவர்கள் வேண்டினார்கள். ஆனால் அரசாங்கத்தார் அவர்களை டப்ளின் நகரச் சிறையில் கொண்டுபோய் வைத்தார்கள். உண்ணாவிரதம் நின்றபாடில்லை. அங்கு அதிகாரிகள் அவர்களுக்குப் பலவந்தமாய் உணவு ஊட்டினார்கள். இக்கொடிய முறையால் மிக்க வீரமுள்ள புரட்சித்தலைவரும் 1916 ஆம் வருடத்திய கலகத்தில் தலைமை தாங்கி நின்றவருமான தளகர்த்தர் டாம் ஆன் உயிர்துறந்தார். இந்தக் கொலை, தேசத்தை எழுப்பி விட்டது. ஜனங்கள் கோபங்கொண்டு பொங்கினர். ஐரிஷ் தேசபக்தர்கள் எண்ணியதை நிறைவேற்றும் உறுதியுடையவர்கள் என்பதையும் அப்பொழுது முதன் முறையாக அரசாங்கத்தார் தெரிந்து கொண்டார்கள். இதன் பின்பு அரசாங்கத்தார் உண்ணாவிரதம் இருந்தவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள இசைந்தனர். அது முதல் அவர்களை அரசியல் கைதிகளாக, யுத்தக் கைதிகளாக நடத்துவதாக அரசாங்கத்தார் உறுதி கூறினர். பின்னால் பலவந்தமாக உணவூட்டும் முறை கையாளப்படவில்லை.

ஸின் சிறையின் புழுங்கிய காலத்தில் அவன் தோழன் தான்பிரீன் சும்மா இருக்கவில்லை. அவன் சுற்றியிருந்த பல கிராமங்களுக்குச் சென்று, தொண்டர் படைகளைத் திரட்டிப் பயிற்சி கொடுத்து வந்தான். அதே வேளையில் நாடு முழுவதிலும் தொண்டர்படைகள் மிகத் திறம்படப் பயிற்சி பெற்றுவந்தனர். 1916ஆம் வருடத்திலிருந்த நிலைமையைப் பார்க்கிலும் அப்பொழுது ஐரிஷ் தொண்டர்படை மிகவும் உயர்ந்துவிட்டது. ஆனால் இடையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய பரம்பரை வழக்கப்படி கைதிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டனர். அப்பொழுது டண்டாக் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த ஸினும் அவன் தோழர்களும் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அவர்கள் பின்னால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வளவு காலமாகத் தொண்டர்படையின் பயிற்சி ரகசியமாகவே நடந்து வந்தது. திடீர்ரென்று பிரிட்டிஷ் படைகள் கிராமங்களுக்குச்சென்று சில தொண்டர்களைப் பிடித்துக் கொண்டு சென்றன. ஆனால் ஸீன் விடுதலையாகி வெளி வந்த பின்பு தொண்டர் பயிற்சி வெளிப்படையாகவே நடக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு தொண்டர்ரையும் அரசாங்கம் கைது செய்து விட்டாலும் கவலைப்படக்கூடாது என்றும் கூறினான். ஏனென்றால் அரசாங்கம் தொண்டர்களை ஒழுங்காகக் கைது செய்ய ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்காக முன்வரும் தொண்டர்களை வைப்பதற்கு அயர்லாந்திலுள்ள சிறைகளும் போதாது. பின் உலகமெல்லாம் இங்கிலாந்தைக் கண்டு எள்ளிநகையாடும். எனவே இங்கிலாந்தும் சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுக்க விரும்பவில்லை.

ஐரிஷ் தொண்டர்களுக்கு ஆயுதம் இல்லாமையே பெருங்குறையாக இருந்தது. 1916ஆம் வருவும் நடந்த கலகத்தில் இருந்து அரசாங்கம் முன்னால் இருந்ததைப் பார்க்கிலும் அதிக கண்டிப்பாக ஆயுதச்சட்டத்தை அமுல் நடத்தியது. தேசத்தில் யாரும் அரசாங்க உத்தரவில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. அடுத்த கலகம் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதை அரசாங்கம் மோப்பம்பிடித்து அறிந்து கொண்டிருந்தது. ஆனால் யாருக்கும் புலப்படாத சில மாய வழிகளின் மூலம் தொண்டர்கள் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள்

அரசாங்கத்தார் அடக்குமுறை ஆவேசத்தில் ஸின் டிரிஸை மீண்டும் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டது முதலே அவன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டான். சிறையில் வேறு பல நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் மைக்கேல் பிரென்னன், ஸீமாஸ், ஓநீல். ஸீன் சிறைப்பட்ட காலத்தில் தான்பிரீன் தொண்டர் படையில் படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களைப் பெற்று கடைசியில் 'பிரிகேட் கமான்டன்ட்' என்ற படைத் தளகர்த்தர் பதவியையும் பெற்றான். தொண்டர் படையில் ஒவ்வொர் அங்கத்தினரும் வாக்குரிமை பெற்றுத்தத்தம் பிரிவுகளுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழக்கம். படையிலும் குடியரசுக் கொள்கையையே அவர்கள் கையாண்டு வந்தனர்.

அக் காலத்தில் ஐரோப்பிய யுத்தத்தில் ஆங்கிலேயர் மிகுந்த கஷ்ட நஷ்டங்களை அடைந்து வந்தனர். 1918 - ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஜெர்மானியர் பிரிட்டிஷ் படைக்குள் புகுந்து அவற்றைச்சின்னா பின்னப்படுத்தினார். இங்கிலாந்து மிகவும் அவலமடைந்து மூச்சுத்தினறும் அவ்வேளையிலே, ஆங்கிலேயர் அயர்லாந்து ஜனங்களைக் கட்டாயப்படுத்தி யுத்தத்திற்கு இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்று கூவினர். மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? ஆங்கிலேயர் அனைவரும் அயர்லாந்தின் மன்னரன்றோ சில வாரங்களில் தேவையான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது. ஐரிஷ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் அவர்களைப் போர்க்களத்திலே பலிக்குக் கொண்டு நிறுத்தும் அதிகாரத்தை அச்சட்டம் ஆங்கிலேயருக்கு கொடுத்தது. அப்பொழுது முன் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட லார்ட் பிரெஞ்ச் டப்ளின் நகரில் வைசிராயாக இருந்தார்.

பிளவுபட்டு அயர்ந்து கிடக்கும் ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்தி எழுப்பிவிட வேண்டுமானால் அதற்கு சிறந்த உதவி அடக்கு முறையைப் போல் வேறில்லை. கட்டாய ராணுவச்சட்டம், அயர்லாந்தின் கண்ணைத் திறந்துவிட்டது. அதுவரை ஐரிஷ் ஜனங்கள் பிரிட்டிஷாரை அவ்வளவு கடுமையாய் எதிர்த் தில்லை. ஆண், பெண், குஞ்சுகள் யாவரும் அச்சட்டத்தை எதிர்த்தனர். பாமரர் முதல் பாதிரியார் வரை அனைவரும் அதைக் கண்டித்தனர். அதுவரை பிளவுபட்டிருந்த கட்சிகளெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டதுபோல் ஒன்று சேர்ந்து உழைத்தனர். தாங்கவொண்ணாத துன்பம் தலைமேல் விழப்போவதை அறிந்த ஜனங்கள் தொண்டர் படையினர் என்ன செய்கின்றனர்? அவர்கள் துப்பாக்கியும் ரிவால்வரும் கொண்டு பயிற்சி செய்தது வெறும் பாவனைக்காகவோ? என்று கூவினர். இங்கிலாந்தை எதிர்க்கக்கூடியவர்கள். அவர்களே என்று யாவரும் உணர்ந்தனர். ஒரு தொண்டன் உயிரோடிருக்கும் வரை கட்டாய ராணுவச் சட்டம் அமுலுக்கு வர முடியாது என்பதை அயர்லாந்தும் அதை ஆண்டு அடக்கிய இங்கிலாந்தும் நன்கு அறியும்.

தொண்டர் படையில் ஆட்களுக்குக் குறைவில்லை; ஆயுதத்திற்கே முடை! பல்லாயிரம் வாலிபர்கள் அப்படையில் சேர்ந்து கொண்டனர். ஆனால் காற்றுக்கூடப் புகமுடியாதபடி பாதுகாக்கும் ஆங்கிலேயர் கண்முன்பு அத்தனை பேருக்கும் ஆயுதங்களைச் சேர்ப்பது எங்ஙனம்? தொண்டர்கள் திகைத்துத் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கைகள் ஆயுதந்தாங்கத் துடித்துக் கொண்டிருந்தன. கால்கள் போர்க்களத்திற்கு செல்ல முனைந்து நின்றன. அந்நிலையில் அவர்கட்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அயர்லாந்தில் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில பணக்காரர்களும் ராஜவிசுவாசிகளும் துப்பாக்கிகளையும், ரிவால்வர்களையும், பட்டாக்கத்திகளையும், ஈட்டிகளையும் தங்கள் மாளிகைகளிலே சும்மா வைத்துக் கொண்டிருந்தனர். ராஜவிசுவாசிகளுக்கு இத்தனை ஆயுதங்களும் எதற்கு? புரட்சிக்காரருக்கே அவை தேவை! தொண்டர்கள் இதை அறிந்து கொண்டு, ஊரூராய்ப் பிரிந்து சென்று ஆயுதம் சேகரிக்க ஏற்பாடு செய்தார்கள். முதலாவது எந்த ஊரில், யாரிடம், எத்தனை ஆயுதங்கள் உண்டு என்பதற்குக் கணக்கெடுத்தார்கள். கணக்குப்படி ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி ஆங்காங்கு இரவில் சென்று கேட்டார்கள். பலர் சமாதானமாகவே ஆயுதங்களைக் கொடுத்துவிட்டார்கள். பலர் தங்களிடமுள்ள ஆயுதங்களை விரைவாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பும் அனுப்பினார்கள் சிலர் மட்டும் மறுத்தார்கள். மறுத்தவர்கள் மார்புக்கு நேராகத் தொண்டர்கள் துப்பாக்கிகளைப் பிடித்தவுடன், அந்த மறுப்பும் ஒழிந்தது. ஓர் உயிரையும் வதையாமலே தொண்டர்களுக்குத் தேசத்திலிருந்த ஆயுதங்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஆனால் அதிகாரிகள் சும்மா இருக்கவில்லை. இந்நிலை ஏற்படும் என்று தெரிந்ததால் அவர்கள் போலிஸாரை அனுப்பி ஜனங்களிடமுள்ள ஆயுதங்களை வாங்கி வரும்படி பணித்தார்கள். போலிஸார் போன இடமெல்லாம் சில நிமிஷங்களுக்கு முன்னதாகவே புரட்சி வாலிபர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு போன செய்தியைத் தெரிந்து கொண்டு வெறுங்கையுடன் திரும்பினார்கள். இருக்கும் சர்க்காருக்கும் எதிர்காலச் சுதந்திர சர்க்காருக்கும் எவ்வளவு வித்தியாசம்!