தான்பிரீன் தொடரும் பயணம்/பிரிவும் பிரிவாற்றாமையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

20
பிரிவும் பிரிவாற்றாமையும்


தான்பிரீன் மேட்டர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடைய உயிர்த் தோழன் ஸீன் டிரீஸி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆபத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று, அவன் கண்ணில் எண்ணையூற்றிக்கொண்டு கவனித்து வந்தான். பீலர்களோ, பட்டாளத்தார்களோ ஆஸ்பத்திரிப்பக்கம் சென்றால், உடனே சென்று அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என்பது அவன் தீர்மானம். அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிர்பார்த்திருந்த சோதனை நடந்தது. அவன் அதை முன்கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.

அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று தன்னுடன் ஒர் உதவிப்படை அனுப்பவேண்டும் என்று கேட்டான். அவர்கள் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தனர். டிரீஸி பல நண்பர்களை அழைத்தக்கொண்டு மற்றும் சில முக்கியஸ்தர்களையும் கூப்பிடுவதற்காக வெளிப்பட்டான். தான்பிரீனைக் காக்க வேண்டுமென்ற ஆவலினால் அவன் தன்னை அறவே மறந்து விட்டான். டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாராளமாய் நடந்து சென்றான். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் என்று வேட்டை நாய்போல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் டிரீஸியைப் பின்தொடர்ந்து கவனித்து வந்தனர். அவன் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அவசரமாக நடந்து கொண்டிருந்தான்.

அவன் சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் கடைசியாக டால்பட் தெரு விலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றான். அங்கு சில முக்கியமான தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர்களான டாம் ஹண்டர், பீட்டர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள்.ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக் கொண்டிருந்தார்களே தவிர அவ்விடத்தில்தான் குடியரசுப்படை சம்பந்தமான பல வேலைகளும் செய்து வந்தனர். சுருங்கச்சொன்னால், இந்தக் கடையே தொண்டர்களுடைய சதியாலோசனை மணிமண்டபம் என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர்கள் இரகசியமாய்ப் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.

டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்டாளத்தின் தலைவர்கள் சிலர் ஓர் அவசரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அவன் உள்ளே புகுந்து, கதவண்டையில் நின்று சில தகவல்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் பட்டாளத்தார் கடைப்பக்கம் நெருங்கி விட்டனர். கடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகைவரின் வருகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன். வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஓடினார்கள்.

ராணுவ வாகனங்கள் கடை வாசலில் வந்து நின்றன. அச்சமயத்தில் கடைக்குள்ளிருந்த ஒருவன் வெளியே ஓடினான்; ஒரு சிப்பாய், வாகனத்திலிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென்றான். அப்பொழுது ஒரு ராணுவ ஒற்றன் முன்வந்து, 'அவனை விட்டுவிடு நமக்கு வேண்டியவன்.அதோ நிற்கிறான்' என்று டிரீஸியைச் சுட்டிக்காட்டினான். டிரீஸி அப்பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காலை வைத்து ஏறிக்கொண்டிருந்தான். உடனே ஒற்றன் அவன் மேலே பாய்ந்தான். டிரீஸியா பணிந்து கொடுப்பவன்? இடுப்பிலிருந்த ரிவால்வரை உருவிக்கொண்டு, பகைவனைத் தாக்கலானான். உடம்பு முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும்வரை அவன் பணிய மாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவன் போராட்டத்திற்கு தயாராயில்லாதபொழுது, எதிர்பாராத நிலையில் பகைவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர்.

வாகனங்களிலிருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கிகளை டிரீஸியை நோக்கிப் பிடித்துக் கொண்டு சுட ஆரம்பித்தனர். அவர்களுடைய ஒற்றன் டிரீஸியுடன் போராடிக் கொண்டிருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. ஒரு மனிதனை எதிர்ப்பதற்கு எத்தனை சிப்பாய்கள் எத்தனை இயந்திரத்துப்பாக்கிகள் டிரீஸியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந்தது. அவன் உடலெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக்கிச் சுட்டுக்கொண்டே, அந்த உத்தம வீரன் உயிர்துறந்து பெற்றெடுத்த புண்ணிய பூமியின் மடியிலே சாய்ந்தான் அவனுடன் அவ்வழியாகச் சென்ற மூவர்களும் ராணுவத்தாருடைய குண்களுக்கு இரையாயினர். டிரீஸியுடன் போராடிய ஒற்றனும் படுகாயமடைந்து கீழே வீழ்ந்துகிடந்தான்.

தேசத்திற்கு இதயத்தையும், தொண்டிற்குக் கைகளையும் அர்ப்பணம் செய்து டிரீஸியின் வாழ்க்கை இவ்வாறுமுடிந்தது. தோழனுடைய உயிரைப் பாதுகாக்க அவன் தன் ஆருயிரையே பலிகொடுத்தான் மாளிகைகளில் தங்கி, அறுசுவையுண்டிகளை உண்டு, கோழைகளாயும், அடிமைகளாயும் அந்நியருடைய கொடுங்கோலுக்குப் பணிந்து வாழும் மனிதர்களின் நடுவிலே, பெற்று வளர்த்த தாயின் மானத்தை அந்நியர் குலைத்துக் கொண்டிருக்கும் பொழுது வீரத்திரு மகன் சுகத்தையும் போகத்தையும் விரும்புவானா? ஸீன் அவை ஒன்றையும் விரும்பாது விட்டையும் வாசலையும் விட்டு, உற்றாரையும் பெற்றாரையும் துறந்து பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அலைந்து, பகைவருடன் பற்பல இடங்களில் வீரப் போராட்டங்கள் செய்து, கடைசியாக டப்ளின் கடைத் தெருவில் பகைவருடைய குண்டுகளை நெஞ்சிலேதாங்கி வீர மரணமடைந்தான்!

அவன் படுக்கும் மெல்லிய பஞ்சனை கல்லறையின் கீழுள்ள சவக்குழி: அவன் உண்ணும் சுவையுள்ள உண்டி நஞ்சினும் கொடியது!

அவன் வாழ்விலும் வீரன், சாவிலும் வீரன். அவனைப்பர்க்கிலும், ராணுவ அறிவும், போர்த்தந்திரங்களும் தெரிந்தவன் அயர்லாந்தில் கிடையாது. 28 வயது நிரம்பும் முன்னரே, அவன் இறந்துவிட நேரினும், அந்த வாழ்க்கையில் அவனுடைய அபாரத் திறமைகளை வெளிக்காட்டி விட்டான். பொதுவாக ஐரிஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த கெரில்லாச்சண்டை வல்லமை மிக்க தலைவர்களால் மிகத் திறமையோடு நடத்தப்பட்டது என்பதை உலகத்தார் அனைவரும் ஒப்புக்கொள்வர். இத்தலைவர்களிலே சிறந்தவன் டிரீஸி. அவனது கூரிய யுத்திகளை வைத்துக் கொண்டே மற்றத் தளகர்த்தாக்கள் அற்புதப் போராட்டங்கள் செய்து பெரும் புகழ் படைத்தனர்.

டால்பட் தெருவில் நடந்த போராட்டத்தைக் குறித்து தான்பிரீனுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல்லன்; அவனிடம் கற்பனா சக்தியும் அதிகமில்லை. அப்படியிருந்தும் 13ஆம் தேதி வியாழக்கிழமை மாலை, அவன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின் உருவம் வந்து நின்றதாகக் கண்டான். இதைக் கேட்டவர்கள் அது கனவு என்றும், மனைவிகற்பம் என்று சமாதானம் கூறி விடலாம். ஆனால் அவனுக்குத் தான் கண்ட காட்சியை என்றும் மறக்க முடியவில்லை.

அன்று, மாலை மைக்கேல் காலின்ஸ் தான்பிரீனைக் காணச் சென்றார். உடனேயே தான்பிரீன், 'டிரீஸி எங்கே?' என்று முதலாவதாகக் கேட்டான். உள்ளதைச் சொன்னால் அவனுடைய புண்கள் ஆறுவதற்கு இடையூறாயிருக்குமென்றும், அவனுடைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி, 'அவன் நாட்டுப்புறத்துக்குப் போயிருக்கிறான், ' என்று காலின்ஸ் கூறினார்.

பத்து நாட்களுக்குப் பின்பு தான்தான்பிரீனுக்கு முழுவிவரம் தெரியும். பிரிட்டிஷார் டிரீஸியின் பிரேதத்தைக் டால்பட் தெருவிலிருந்து படைவீடுகளுக்குக் கொண்டு போய்ப் பரிசோதனை செய்து விட்டு, அதை அவனுடைய நண்பர்களிடம் அெகாடுத்தனர். பிரேதம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப்பட்டு, ராஜாக்களும் கண்டு பொறாமைப்படக்கூடிய முறையில் கெளரவிக்கப்பட்டது. திப்பெரரி வாசிகளில் எவனுக்கும் அவ்விதமான மரியாதைகள் செய்யப்பட்டதில்லை. பல மைல் நீளமுள்ள பெரிய ஊர்வலத்துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச் செல்வப்பட்டது. டிரீஸியின் இறந்த உடலைக் கண்டும் அஞ்சுவது போல், பிரிட்டிஷாருடைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிமுழுவதும் நின்று கொண்டிருந்தன. அன்றையதினம் தென் திப்பெராசிப் பிரதேசம் முழுவதும் துக்கத்தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணீர் பெருக்காத ஜனங்களேயில்லை. டிரீஸியின் சமாதி கில்பிக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத்தில் ஐரிஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனித ஸ்தலமாகி விட்டது!

மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான்பிரீனுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை. அக்காலத்தில் குண்டுப்பட்டுக் காயமடைந்துவர்கள் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டுவரப்பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளிகைக்குத் தகவல்கொடுக்க வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் மூலம் தான்பிரீன் போன்ற நபர்களைப் பிடித்துவிடலாமென்று அவர்கள் மனப்பால் குடித்து வந்தனர். ஆனால் வைத்தியர்கள் தங்களுடைய அரசியல் கொள்கை எப்படியிருந்போதிலும், சர்க்காருடைய உத்தரவை நிறைவேற்றுவதில்லை. அது அவர்களுடைய பெருந்தகைமை.

அடுத்த வெள்ளிக்கிழமையன்று தான்பிரின் மேட்டர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினான். சில நபர்கள்.அவனை நகரின் தென்பகுதியிலிருந்த வேறொரு வைத்தியப் பெண்ணினுடைய வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். ஆஸ்பத்திரியில் மேற்கொண்டு தங்குவது அபாயமாய்ப் போய்விட்டது. புதிய வீட்டில் அவன் குணமடைந்து சிலநாட்களில் எழுந்து பக்கத்தில் நடமாடக்கூடிய வலிமையும் பெற்றான். அவனை வேறிடத்திற்கு அழைத்துப் போகவேண்டிய அவசியமேற்பட்டது. பாரி அம்மையின் விட்டில் அவனுடைய சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரண்டு மூன்று தினங்களில் அந்தத் தெருவையும் பட்டாளத்தார் சோதனை இட்டனர்.