உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

மூன்றாம் பதிப்புக்கான
பதிப்புரை


சில ஆண்டுகளுக்கு முன் காலமான இந்திய விடுதலைப் போராட்ட இயக்க வீரர். ப. ராமஸ்வாமி அவர்கள் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் குறித்து மூன்று நூல்கள் எழுதியுள்ளார். அதிலொன்றுதான் அயர்லாந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய கெரில்லாப் போர்வீரன் தான்பிரீன் (டேன் பிரையன்) வரலாறும் ஆகும். நூலாசிரியர் எழுதிய முன்னுரையிலிருந்து அந்த நூல் 1947ல் தான் முதன் முதலில் வெளியிடப்பட்டது என்று அனுமானிக்கலாம். அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகத்தாரின் விபரம் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்த நூலைக் கண்டறிந்தவர் அதனுடைய இரண்டாம் பதிப்பினை வெளியிட்ட மறுமலர்ச்சிக் கழகம், யாழ் பல்கலைக் கழகம் தனது பதிப்புரையில் கூறுவது போல ஓர் ஈழப் போராளியாவார். அதனைப் படி எடுத்தவரும் ஒரு ஈழப் போராளியே. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இந்த நூலின் அருமை தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகிலுள்ள எல்லாத் தேசியப் போராட்டங்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்வது அயர்லாந்து விடுதலைப் போராட்டமாகும். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களிற் பலருக்கு அயர்லாந்துப் போராட்டம் முன்னெடுத்துக்காட்டாக இருந்தது போலவே இன்று ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் அது உத்வேகமும் உற்சாகமும் தந்து வருகின்றது. தமிழ்நாட்டிலும் அயர்லாந்துப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடையே அதிகரித்து வருகின்றது.

அந்த ஆவலை நிறைவு செய்யும் வகையில் தோழர் எஸ். வி. ராஜதுரை 'தமிழர் கண்ணோட்டம்' ஏட்டில் தொட்ர்கட்டுரை எழுதி வருகின்றார். அயர்லாந்து மக்களின் நீண்ட புரட்சிப் போராட்டத்திலே களம் புகுந்து வீரச் செயல்கள் பல புரிந்த நாயகர்களில் ஒருவரான தான்பிரீனின் வரலாறும் ஓரளவு இப்பணியைச் செய்யும் என்பதால் இந்நூலின் மூன்றாம் பதிப்பை வெளியிட முடிவு செய்தோம்.

தான்பிரீன் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத அயர்லாந்து போராட்ட வரலாற்றினையும் தான்பிரீன் பற்றிய குறிப்பொன்றினையும் ஈழ அறிஞர் உதயன் இரண்டாம் பதிப்பில் சேர்த்திருந்தார். அவையும் அப் பதிப்பிற்கான பதிப்புரையும் அப்பதிப்பில் இடம் பெற்றிருந்த இரண்டு கவிதைகளும் இம் மூன்றாம் பதிப்பிலும் இடம் பெறுகின்றன.

இரண்டாம் பதிப்பில் 10 ஆம் அந்தியாயத்திற்குரிய சில பகுதிகள் தவறுதலாக 11ஆம் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன. அந்தத் தவறு மூன்றாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டு, அப்பகுதிகள் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல கெரில்லாப் போர் முறை குறித்து நூலாசிரியர் பிழையாக விளங்கிக் கொண்டிருந்த விஷயங்கள் திருத்தப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு வாசகர்களைக் கருத்தில் கொண்டு சில சொற்பிரயோகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளைச் செய்து முடித்த தோழர் எஸ். வி. ராஜதுரைக்கு என் நன்றி.

அச்சுக் கோப்புச் செய்த 'தலித் முரசு', அட்டை அமைப்பு வடிவமைத்த செய்த தோழர். வசந்த குமார் ஆகியோருக்கும் எனது நன்றி.

கோவை

பெ. சிவஞானம்

27.2.99

விடியல் பதிப்பகம்