தாய்லாந்து/10

விக்கிமூலம் இலிருந்து

10

திரு மறைக்காடன் அவர்கள் சொன்ன நேரத்துக்குத் தம்முடைய பென்ஸ் காரில் வந்திறங்கினார்.

கோட்டும் ஸூட்டுமாய் உடை. உள்ளேயோ வளமான தமிழ் நெஞ்சம். ‘இன்னும் சற்று தமிழ் பேச மாட்டாரா?’ என்று ஏங்க வைக்கும் நேர்த்தியான பேச்சு.

மறைக்காடனுக்குத் தமிழ்ப் பற்று இருப்பதில் ஆச்சரியமில்லை. மறைமலையடிகளாரின் பேரன் தமிழ்ப்பற்று உடையவராயிருப்பதில் என்ன ஆச்சரியம் வேதாரண்யன் என்ற தமது இயற்பெயரைத்தான் மறைக்காடன் என்று தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்!

ஐ.ஒ.பி.யின் சேலம் கிளையில் கிளார்க்காகச் சேர்ந்த மறைக்காடன் பின்னர் அந்த வங்கியின் ஹாங்காங் கிளையின் உயர் பதவிக்கு மாற்றலாகியிருக்கிறார். ஹாங்காங்கில் நீண்ட் காலம் பணிபுரிந்தபின் ரிடயராகி தாய்நாடு திரும்ப எண்ணிய போது ‘பாங்க் ஆஃப் ஒமன்’ இவரை இந்தியாவுக்குத் திரும்ப விடவில்லை. இவரது திறமை பற்றி அறிந்திருந்த அந்த பாங்க் இவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று இவரை ஒரு சர்வதேச வங்கிப் பறவையாகச் சிறகடிக்க வைத்தது.

இப்போது டெய்ஷ் வங்கியில் அதன் துணைப் பொது மேலாளராக வீற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய பதவி என்பது பலருக்குக் கனவோடு நின்று போகக் கூடிய ஒன்று. அந்த உன்னத சிம்மாசனத்தில் உட்காரும் வாய்ப்புப் பெற்ற தமிழர் அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

அலுவலகப் பணி நிமித்தமாகப் பல்வேறு நாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கும் இவர் தாம் எங்கே இருந்தாலும் தம் குடும்பத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய்

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

மறைக்காடன்

விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த லட்சியத்துக்காகவே தம் இரண்டாவது மகள் நந்தினியை சென்னை எத்திராஜ் கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறார். நந்தினி இறுதியாண்டு எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு மகள், மூத்தவர். திருமணமாகிக் கணவருடன் இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்.

மிகச் சிறந்த வங்கியாளர் என்பதால் பாங்காக்கில் இருந்தபடியே இந்தியப் பொருளாதாரத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க முடிகிறது. இவரால்.

“ஏட்டுச் சுரைக்காய் கொள்கைகளுக்கு இந்தியா உடனடியாக விடை கொடுத்து அனுப்பிவிட வேண்டும். கறிக்குதவும் சிந்தனைகளுக்கு மட்டுமே செயல்வடிவம் தர வேண்டும். தனியார் துறைக்கு இன்னும் வேகமாகக் கதவுகளைத் திறந்து விட வேண்டும். அரசியல் வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஜாதிமத வேறுபாடுகளை, அரசியல் அநியாயத்தை அடியோடு விட்டு விட வேண்டும். இங்கு நான் எந்த இந்தியப் பிரமுகரைச் சந்திக்க நேர்ந்தாலும் இதைச் சற்று உரக்கவே சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார் மறைக்காடன்.

தாய்லாந்து மொழியில் கலந்துவிட்ட தமிழ், சமஸ்க்ருத சொற்களைப் பற்றி இவர் ஒரு குட்டி ஆய்வே நடத்தியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

தாய்லாந்தில் மல்லிகைப் பூவுக்கு மல்லி என்றுதான் பெயராம். செண்பகப்பூ அங்கேயும் ஷெண்பகம் தானாம்!

தாய்லாந்து மக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். வாரத்தில் ஒருநாள் சாப்பாட்டை வீட்டுக்கு வெளியில் வைத்துக் கொள்வது என்பது இந்நாட்டு மக்களின் பழக்கம்.’தி வே டு வின் ஹார்ட் இஸ் த்ரூ ஸ்டமக்’ என்பது தாய் மக்களின் தத்துவம்” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

இந்தியா பற்றி இவருடைய கணிப்பு ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.

“டாக்டர் மன்மோகன்சிங் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தனியார் துறையை ஊக்கப்படுத்தினால் வெளிநாட்டு மூலதனம் நம்மைத் தேடி வரும். தாய்லாந்தைப் பாருங்கள். இன்றைக்கு இந் நாட்டின் வளர்ச்சியைப் போல கிழக்கில் வேறெங்குமே இல்லை. ஜப்பானைச் சேர்ந்த பெரிய பெரிய தொழிலதிபர்களின் பார்வை இப்போது தாய்லாந்து மேல் விழுந்திருக்கிறது. இன்னும் பத்தே ஆண்டுகளில் தாய்லாந்தின் தொழில் முகம் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிடும். ஜப்பானுக்கே சவால் விட்டாலும் ஆச்சரியமில்லை.”

திருப்பாவையும், திருவெம்பாவையும் இங்கே நம் ஊர்போலவே ஓதுகிறார்கள். அப்படி ஓதுகிறவர்கள் தமிழகத்திலிருந்து வந்த பிராம்மணர்களாய்த்தான் இருக்க வேண்டும். அரச குடும்பத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் இவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. அரசர் பங்கேற்கும் விழாக்களில், அவர் தொடங்கி வைக்கும் சடங்குகளை நடத்தி வைப்பதும் இவர்கள் தான்.”

திருப்பாவை, திருவெம்பாவை பற்றி மறைக்காடன் குறிப்பிட்ட போது காஞ்சிப் பெரியவர் தம்முடைய அருள் வாக்கில் சொல்லியுள்ள ஒரு செய்தியை அப்படியே நினைவு படுத்திக் கொண்டேன்:

“ஹிந்து நாகரிகச் செல்வாக்கானது பல தேசங்களில் குறிப்பாக கீழ்த்திசை நாடுகளில் ஜீவகளையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்தக் காலகட்டத்தில்தான் அங்கோர் வாட், பேரா புதுர், ப்ரம்பானன் போன்ற பெரிய பெரிய தமிழ்நாட்டுக் கோவில்கள் அங்கே எழும்பின. இந்த கட்டத்தில்தான் நம்முடைய திருப்பாவையும், திருவெம்பாவையும் கூட ஸயாமுக்குச் சென்றிருக்கின்றன.



இதற்குச் சான்றாக இப்போதும் ஸயாம் தேசத்தில் ஆண்டு தோறும் அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் பெருமாளுக்குரிய டோலோற்சவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவது) சிவபெருமான் வேடத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்குச் செய்கிறார்கள். ‘சரி... அவர்களுக்குப் ‘பாவை’ நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?’ என்று கேட்டால் அடியோடு ஒன்றுமே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் இந்த உற்சவம் மார்கழி மாதத்தில் நடக்கிறது என்பதற்காக மட்டும் அதைப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரமில்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்கள் இந்த உற்சவத்துக்குப் பெயரே ‘ட்ரியம்பாவை, ட்ரிபாவை’ என்கிறார்கள். இப்போது பைபிள் படிப்பவர்களுக்கு உபநிடத சமாசாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருப்பது போலத்தான். தாய்லாந்துக்காரர்களுக்கு இப்போது திருப்பாவை, திருவெம்பாவை. பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே மார்கழி மாதத்தில் சிவவேடம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோற்சவத்துக்கு ‘ட்ரிம்பாவை', ‘ட்ரிபாவை’ என்ற பெயர் மட்டும் இருக்கிறது.”

“உண்மைதான்; இங்கே சமீபத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் செய்கிறார்கள். பிராம்மணர்கள்தான் செய்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டிலிருந்து வந்தவர்களாயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. குடுமிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேட்டியைக் கீழ்ப் பாய்ச்சியாகக் கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் போய்ப்பார்க்கலாம்” என்றார் மறைக்காடன்.

“மிகப் பெரிய தமிழறிஞரின் பேரன் நீங்கள். மறைமலையடிகளாரின் குணங்கள், பழக்க வழக்கங்களில் ஏதேனும் உங்களிடம் படிந்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

“அவரது பேரன் என்பது எனக்குத் தனிப் பெருமையே! ஆனால், அவரது பழக்க வழக்கங்களை என்னால் கடைப்பிடிப்பது முடியாத காரியம். அவர் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு எழுந்து பாதம் பருப்பும், சேமியாவும் சாப்பிடுவார். மூன்று மணிவரை விழித்திருந்து படிப்பார். எழுதுவார். பின்னர்

தூங்கப் போய் காலையில் பதினொரு மணிக்குத்தான் எழுந்திருப்பார். அவர் வழியே தனி’ என்றார்.

“இந்த ஊரில் பழமையான மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறதே, அதைப் போய்ப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் மறைக்காடன்.

“இல்லை; நாளைக்குத்தான் பார்க்கப் போகிறோம்.”

இப்போது மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருப்பணியில் மறைக்காடனின் பங்கும்,உதவியும் மிக அதிகம் என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அதைப்பற்றி விசாரித்த போது, “ஏதோ என்னால் முடிந்த அளவு அணில்பிள்ளை பங்கு!” என்றார் அடக்கமாக,

றுநாள், பொங்கல் திருநாள். 

‘என்ன ரெடியா?’ என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தார் நண்பர் சரவணன். சுறுசுறுப்பான இளைஞர். காரைக்குடியைச் சேர்ந்தவர். கையில் டெலிபோனுடனேயே சுற்றுகிறார். ஜெம் பிஸினஸ் செய்கிறாராம். பெல்ஜியத்தில் சில மாதங்கள் இருந்து. பின்னர் இங்கே கடந்த பன்னிரண்டு வருடங்களாக ‘பிஸினெஸ்’ செய்து வருகிறாராம்.

மாரியம்மன் கோயிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் சரவணன் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் திருப்பணியில் மிகுந்த அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்.

“பாங்காங்கில் உருவான முதல் இந்துக் கோவில் இதுதான். தமிழர்களால் கட்டப்பட்ட ஆலயம்.

இந்தக் கோவில் இப்போது புதுப் பொலிவு பெற்று வருகிறது. ஆலயத்திருப்பணிகள் நடந்து முடிவடையும் தறுவாயில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. அந்தச்சமயம் நீங்கள் இங்கே வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

நவராத்திரி விழாவின் கடைசி நாளன்று இதோ இந்த சிலோம் ரோடு முழுவதுமே மூடப்பட்டு விடும். அன்று அம்மன் ஊர்வலம் நடைபெறும். அதற்காக இந்த ரோடில் போக்குவரத்து முழுமையாக இராது. தாய்லாந்து மக்களின் சொந்தத் திருவிழாக்களில் கூட இப்படி ரோடை அடைப்பதில்லை. இது நம் நாட்டுக்கு அவர்கள் காட்டும் மரியாதை. நம் தெய்வத்தின் மீது அவர்கள் வைத்துள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் அடையாளம். அது மட்டுமல்ல; தாய்லாந்து மன்னரும், அரசாங்கமும் இந்தியருக்குக் காட்டும் ஆதரவையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

“தாய் நாட்டில் பொங்கல் கொண்டாட முடியாது போனாலும், தாய்லாந்தில் அதுவும் நம் தமிழ்க் கோவிலில், பொங்கல் திருநாளன்று இருக்க முடிந்ததைப் பெருமையாகவும் பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என்றேன் நான்.

“சாப்பிடக் கொஞ்சம் பொங்கல் கிடைத்தால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்!” என்றார் ஸ்ரீவே.

“கொஞ்சம் என்ன? நிறையவே கிடைக்கும்!” என்று சொல்லி எங்களைப் பிராகார வெளிக்கு அழைத்துப்போய்

அங்கே ஒரு பக்கத்தில் விநியோகமாகிக் கொண்டிருந்த பொங்கல் பிரசாதங்களை வாங்கி வந்து கொடுத்தார் சரவணன்.

“ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய விருப்பப்பட்டாலும், அதை ஏற்றுக் கொண்டு சாப்பிடும் அளவுக்கு இங்கே எந்த ஏழையும் வருவதில்லை. அதனால் நாங்கள் சமைத்த உணவை அம்மனுக்குப் படைத்து விட்டு எங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.

மகாமாரியம்மன் ஆலயத்தில் நம்மவர்கள் மட்டுமல்ல; சீனர்கள், தாய்லாந்து மக்கள் எல்லோருமே ஒருங்கிணைந்து ஒருமுகமாக வழிபடும் அதிசயக் காட்சி கண்டு வியந்தோம்.

மத நல்லிணக்கம், இந்து முஸ்லிம் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் இங்கே மேடை அதிரப் பேசுகிறோம். பக்கம் பக்கமாக எழுதுகிறோம். இந்த நாட்டில் நமக்குக் கனவாக இருப்பதெல்லாம் தாய்லாந்தில் நனவாகியிருப்பதை நேரில் கண்டு மகிழ்ந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்லாந்து/10&oldid=1058411" இலிருந்து மீள்விக்கப்பட்டது