தியாக பூமி/இளவேனில்/'ஜில்லி! ஜில்லி!'

விக்கிமூலம் இலிருந்து

ஜில்லி! ஜில்லி!

சாரு அன்றிரவு நன்றாய்த் தூங்கவில்லை. இரண்டு மூன்று தடவை விழித்துக் கொண்டு, "தாத்தா! பொழுது விடிந்துடுத்தோ?" என்று கேட்டாள்.

உமாவோ இராத்திரி தூங்கவேயில்லையென்று சொல்லலாம். வெகு நேரம் வரையில், குழந்தைக்கு என்னென்ன உடைகள் வாங்குவது, என்னென்ன ஆபரணங்கள் அணிவிப்பது, எந்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது, எப்படி எப்படியெல்லாம் வளர்ப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இரவு சுமார் இரண்டு மணிக்குத் தூங்கியவள் அதிகாலையில் எழுந்திருந்து, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்குமென்று ஜன்னலண்டை வந்து பார்த்தாள். 'சரி, வெள்ளி முளைத்துவிட்டது; இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் பொழுது விடிந்து விடும். சாருவை அழைத்து வர வண்டி அனுப்ப வேண்டும்' என்று எண்ணினான்.

சாருவை விட்டு இனி மேல் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று உமா தீர்மானித்துக் கொண்டாள். அவளை இனி மேல் தன்னுடன் வைத்துக் கொண்டு தான் வளர்க்க வேண்டும். ஆனால், இந்த எண்ணம் எப்படி நிறைவேறும்? அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா? அதை நினைத்தால் உமாவுக்குப் பயமாயிருந்தது. தன்னுடைய செய்கைகளை அவர் ஒப்புக் கொள்வாரா? பாவி, பதிதை என்று நிராகரிக்க மாட்டாரா? எப்படியும் ஒன்று நிச்சயம்; தான் யார் என்று தெரிந்தால், உடனே இனிமேலாவது புருஷனுடன் வாழ்ந்திரு என்று தான் உபதேசிப்பார் - முடியாது, முடியாது!

ஆகவே, தான் யார் என்று அப்பாவிடம் தெரிவிக்கும் விஷயம் யோசித்துத் தான் செய்ய வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். இது எப்படிச் சாத்தியம்? - குழந்தையை நம்முடன் விட்டு வைக்கச் சம்மதிப்பாரா? - ஏன் மாட்டார்? அவருக்கு என்ன பாத்தியதை குழந்தையின் மேல்? - ஆறு வருஷம் வளர்த்தால் குழந்தை அவருடையதாகி விடுமா? - "இந்த ஐசுவரியத்தையெல்லாம் குழந்தைக்குக் கொடுக்கிறேன்; என்னோடே இருக்கட்டும்" என்று சொன்னால், வேண்டாம் என்று சொல்வதற்கு இவர் யார்?-போதும், போதும். என்னை இவர் வளர்த்துப் பாழுங் கிணற்றில் தள்ளினாரே, அது போதும்! சாருவையும் வளர்த்து அப்படித் தானே செய்வார்? - இம்மாதிரியெல்லாம் எண்ணி எண்ணி அவள் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.

கடைசியாகப் பொழுது விடிந்தது. வண்டியும் சாவடிக் குப்பத்துக்குப் போயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரியும் சாருவும் 'வஸந்த விஹார'த்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

உமா பங்களாவின் வாசலில் காத்திருந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். பங்களா, தோட்டம் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினாள். தோட்டத்திலிருந்த புஷ்பச் செடிகள் சாருவின் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் செடிகளை விட்டு வருவதற்கே சாருவுக்கு மனம் வரவில்லை.

கடைசியாக, பங்களாவின் டிராயிங் ரூமில் வந்து உட்கார்ந்தார்கள்.

சாஸ்திரி உபசாரமாக, "பங்களாவும் தோட்டமும் ரொம்ப அழகாயிருக்கு. மயன் மாளிகையிலே துரியோதனன் தரையை ஜலமென்றும், ஜலத்தைத் தரையென்றும் நினைச்சுண்டு திண்டாடினானே, அந்த மாதிரி நானும் திண்டாடிப் போய்ட்டேன்" என்றார்.

உமா, "ஆமாம் சாஸ்திரிகளே! இவ்வளவு பெரிய பங்களாவிலே நான் ஒண்டிக்காரி தனியாயிருக்கேன், எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும், பார்த்துக்குங்கோ!" என்றாள்.

அதற்கு சாஸ்திரி, "உலகமே இப்படித் தான் இருக்கு, அம்மா! சில பேர் இருக்க இடமில்லாமே திண்டாடறா; சில பேர் இருக்கிற இடத்தை என்ன செய்யறதுன்னு தெரியாமே திண்டாடறா" என்றார். உமாவுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவினுடைய சுபாவம் பழையபடியே தான் இருக்கிறதென்று எண்ணிக் கொண்டாள். தீண்டாதவர்களுக்கு மாட்டுக் கொட்டகையில் தங்க இடங்கொடுத்துவிட்டு, அப்புறம் திண்டாடினவர் தானே?

"நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம். இந்தக் காலத்திலே வீடு வாசல் வச்சிண்டிருக்கறவா பாடுதான் ரொம்ப திண்டாட்டமாயிருக்கு. அதனாலேதான் உங்களை ஒரு ஒத்தாசை கேக்கலாம்னு நினைக்கிறேன். ஆனால், நீங்க இஷ்டப்பட்டாத்தான்..."

"எங்கிட்டயா? ஒத்தாசையா? நான் என்னம்மா உங்களுக்கு ஒத்தாசை செய்யப் போகிறேன்?"

"உங்களாலே முடிகிற காரியந்தான் அது. செய்தேள்னா உங்களை என்னிக்கும் மறக்க மாட்டேன்."

"என்னாலே முடியற காரியமாயிருந்தா, கட்டாயம் செய்யறேன்."

"வேறே ஒண்ணும் பிரமாதமில்லை. யாராவது ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. சாருவைப் பார்த்ததிலிருந்து, அந்த ஆசை ரொம்ப அதிகமாயிருக்கு. சாருவுக்கும் அம்மா இல்லேங்கறயள்; எனக்கும் குழந்தையில்லை. ஒருவேளை நீங்கள் அம்பாள், பராசக்தின்னு சொல்றயளே - அந்த அம்பாள் தான் இப்படிக் கொண்டுவிட்டிருக்காளோன்னு கூடத் தோண்றது. நீங்க சம்மதிச்சா, குழந்தையை நானே வச்சுண்டு வளர்க்கிறேன்... என்ன சொல்றேள்?"

சாஸ்திரி ஸ்தம்பித்துப் போனார். அவர் இம்மாதிரி ஒரு கோரிக்கையை எதிர்பார்க்கவில்லை. அதை மறுத்துச் சொல்லவும் அவருக்குத் தைரியம் வரவில்லை. உமா "அம்பாள் - பராசக்தி" என்று சொன்னதும், அவருக்கு வேறொரு ஞாபகம் வந்தது; சாரு ஒரு நாள், "பராசக்தி! நல்ல அம்மாவா எனக்கு ஒரு அம்மா கொடுக்கக் கூடாதா?" என்று பிரார்த்தித்தாளே; ஒரு வேளை பராசக்திதான் குழந்தையின் பிரார்த்தனையை இம்மாதிரி நிறைவேற்றுகிறாளோ? - ஆனாலும் முன்பின் தெரியாத பம்பாய்க்காரியிடம் சாருவை விட்டு விட்டுப் போவதா? அது எப்படி முடியும்?

"என்ன சாஸ்திரிகளே? மௌனமாயிருக்கேளே? உங்களுக்குச் சம்மதந்தானே?" என்றாள் உமா.

சாஸ்திரி தயக்கத்துடன், "குழந்தையையே கேட்டுப் பாருங்கோ, அம்மா! அவளுக்கு இஷ்டமானால், எனக்கு ஆட்சேபணையில்லை" என்றார்.

சாரு அப்போது சற்றுத் தூரத்தில் ஜில்லியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஜில்லி தன் முன்னங்கால்களைத் தூக்கித் தலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டு சாருவின் மேல் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தது. சாரு கலீரென்று சிரித்தாள்.

"பாருங்கோ! இதற்குள்ளே ஜில்லியோடே எவ்வளவு ஸ்நேகமாய்ப் போயிட்டா, குழந்தை! சாரு! இங்கே வா அம்மா!" என்றாள் உமா.

சாரு அருகில் வந்ததும் அவளை எடுத்து அணைத்துக் கொண்டு, "சாரு! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள். "ஓ எஸ்!" என்றாள் சாரு.

"இந்தப் பங்களாவையும் தோட்டத்தையும் பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள்.

"ஓ! பேஷாய்ப் பிடிச்சிருக்கு."

"ஜில்லியை?"

"ஜில்லியை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு."

"அப்படின்னா, நீ இந்த ஆத்திலேயே என்னோடே இருந்துடேன். உனக்கு அம்மா இல்லேன்னு தாத்தா சொல்றா. நான் உனக்கு அம்மாவா இருக்கேன். ஜில்லியோடே விளையாடிண்டு ஜோராயிருக்கலாம்" என்றாள் உமா.

குழந்தை, பாவம், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் குழந்தையின் உள்ளத்தில் இருந்ததைச் சாஸ்திரி தெரிந்து கொண்டார். அவளுக்கு இங்கே இருக்கத்தான் பிரியம்; ஆனால் சொல்வதற்குத் தயங்குகிறாள்.

"நீங்க சொன்னால் குழந்தை இருந்துடுவள், சாஸ்திரிகளே!" என்றாள் உமா.

சாஸ்திரி கண்ணில் ததும்பிய கண்ணீரைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, "அதுக்கென்ன, குழந்தை இருக்கணும்னு பிரியப்பட்டா இருக்கட்டும்" என்றார்.

"தாத்தா சரி என்கிறார். உனக்குச் சம்மதந்தானே, சாரு? அப்புறம் தாத்தாவைப் பார்க்கவே முடியாதென்னு நினைச்சுக்காதே. தாத்தாவுக்கு எப்போ எப்போ இஷ்டமோ அப்போவெல்லாம் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்" என்றாள் உமா.

சாரு, "அப்படின்னா சரி" என்று சொல்லி விட்டு, "ஜில்லி! ஜில்லி!" என்று கூப்பிட்டுக்கொண்டு ஓடினாள்.

அன்று மாலை சம்பு சாஸ்திரி தம்முடைய குடிசையில் அம்பிகையின் விக்கிரகத்துக்கு முன்னால் கை கூப்பிக் கொண்டு நின்றார். அம்பிகை எதிரில் இருப்பதாகவே பாவித்து அவர் பேசும் வழக்கத்தைப் போல் இன்றும் பேசினார்.

"அம்மா! இவ்வளவு கடுஞ் சோதனையா! இந்த உலகத்தில் நான் யார் யார் பேரில் அதிக பாசம் வைக்கிறேனோ அவ்வளவு பேரையும் இழந்து விட வேணுமா? மீனா - சாவித்திரி - கடைசியில், குழந்தை சாரு - தாயே! இனி என்னால் பொறுக்க முடியாது!" என்று கூறி விட்டு விம்மினார்.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அவருடைய முகம் சிறிது பிரகாசம் அடைந்தது. "இது என்ன பைத்தியம்? - தாயே! நீ கொடுத்தாய்; நீ எடுத்துக் கொண்டாய். நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? அந்தக் குழந்தைக்கு வருகிற பாக்கியத்தைத் தடுப்பதற்கு நான் யார்?" என்றார். இப்படிச் சொன்னபோது அவருக்கு மறுபடியும் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. கண்ணில் தாரை தாரையாய் ஜலம் பெருகி வழிந்தது.

அந்தச் சமயத்தில் வீதியில் கொஞ்ச தூரத்தில் சிலர் பஜனை செய்துகொண்டு வரும் சப்தம் கேட்டது. அது தேசீய பஜனை.

"தாயின் மணிக்கொடி பாரீர்...அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட - வாரீர்!"

என்று தொண்டர்கள் பாடிக்கொண்டு வந்தார்கள்.

இதைக் கேட்ட சம்பு சாஸ்திரிக்கு ரோமம் சிலிர்த்தது. வாசற்பக்கம் சென்று, அந்தப் பஜனை கோஷ்டி மறையும் வரையில் கேட்டுக் கொண்டு நின்றார். திரும்பி அம்பிகையின் விக்கிரகத்தின் முன்னால் வந்து, "அம்பிகே! இதுவா உன் ஆக்ஞை? இந்தத் துர்ப்பலமான சரீரத்தைத் தேச சேவையில் ஈடுபடச் சொல்கிறாயோ? உன் கருணையே கருணை!" என்று சொல்லி நமஸ்கரித்தார்.