தியாக பூமி/இளவேனில்/குருட்டுக் கிழவன்

விக்கிமூலம் இலிருந்து

குருட்டுக் கிழவன்

ஒரு நாள் சாரு தான் கற்றுக்கொண்டிருந்த இங்கிலீஷ் நடனத்தை உமாராணிக்கு ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள். உமா அதைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து, 'இப்படிப்பட்ட குழந்தையைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் செய்தோம்!' என்று எண்ணினாள். அதைத் தொடர்ந்து, 'இந்தப் பாக்கியம் நமக்கு நீடித்திருக்க வேண்டுமே? நம்முடைய ஜன்மம் துரதிர்ஷ்ட ஜன்மமாயிற்றே!' என்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்போது வாசலில், "அம்மா! கண்ணில்லாத கபோதி! ரெண்டு பிச்சை போடுங்கோ!" என்று ஒரு குரல் கேட்டது. அது கிழவனுடைய குரல்; அதிலிருந்த நடுக்கம் கேட்பவர்களுடைய உள்ளத்தை உருக்குவதாயிருந்தது.

பிறகு, அந்தக் கிழவனின் குரலும் இன்னொரு சிறு பெண்ணின் குரலுமாகச் சேர்ந்து பாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது;

"தில்லையம்பல ஸ்தல மொண்டிருக்குதாம்-அதைக் கண்டபேர்க்கு ஜனனமரணப் பிணியைக் கருக்குதாம்."

சாரு ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஜன்னலோரமாகச் சென்று பார்த்தாள். அப்போது வாசல் 'கேட்'டுக்கு அருகில் ஒரு கிழவனும் ஒரு சிறு பெண்ணும் நின்று பாடுவது தெரிந்தது. சாரு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பங்களாவின் தர்வான் அங்கே வந்து, "போ! போ!" என்று அவர்களை விரட்டினான். "மாமி! மாமி! இங்கே சுருங்க வாங்கோ!" என்று அடித்துக் கொண்டாள் சாரு. உமா அவள் அருகில் வந்ததும், "மாமி! மாமி! அந்தக் கிழவனையும் பெண்ணையும் தர்வான் விரட்டுகிறான். ஐயையோ! அவா போறாளே! திரும்பி வரச் சொல்லுங்களேன்!" என்று சாரு கூவினாள்.

உமா, "நல்ல பொண்ணடி நீ!" என்று சொல்லிச் சிரித்துவிட்டு, "தர்வான்! அவர்களைக் கூப்பிடு" என்று உத்தரவிட்டாள். தரவான் ஓடிப் போய், "இந்தாங்க; இங்கே வாங்க. உங்க பாடு யோகந்தான்" என்றான். கிழவனும் பெண்ணும் திரும்பினார்கள். கிழவன் ஒரு கையில் கோல் ஊன்றிக் கொண்டிருந்தான். இன்னொரு கையை அந்தச் சிறு பெண் பிடித்துக் கொண்டு முன்னால் வர, கிழவன் பின் தொடர்ந்து வந்தான்.

"மாமி! அந்தப் பொண்ணு ஏன் அந்தக் கிழவன் கையைப் புடிச்சுண்டே வர்றது?" என்று சாரு கேட்டாள்.

"உனக்குப் பார்த்தாத் தெரியலையா, என்ன? அந்தக் கிழவனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டை. அதனாலேதான் அந்தப் பொண் எங்கே போனாலும் அவன் கையைப் புடிச்சு அழைச்சுண்டே போறது" என்றாள் உமா.

"அதுதான் நானும் நெனைச்சேன். கண் பொட்டையாப் போனா ரொம்பக் கஷ்டமில்லையா, மாமி!" என்றாள் சாரு.

அதற்குள் கிழவனும் பெண்ணும் மறுபடியும் 'கேட்'டுக்குப் பக்கத்தில் வந்து நின்று,

"உயருஞ்சிகரக் கும்பம் தெரியுதாம்-அதைப் பார்த்தபேர்க்கு உள்ளங்குளிர கருணை புரியுதாம்"

என்று பாடினார்கள். கண் தெரியாத ஒருவன் இந்த மாதிரி பாடியதால் அதனுடைய உருக்கம் அதிகமாயிற்று. நந்தனுக்கு, தூரத்தில் நின்று கோபுர சிகரத்தைக் காணலாமென்ற நம்பிக்கையாவது இருந்தது. இந்தக் குருடனுக்கு அந்த நம்பிக்கைக்கும் இடமில்லையல்லவா? ஆகையால் பாட்டைக் கேட்டு உமாராணிக்குக் கண்ணில் ஜலம் வந்து விட்டது.

சாரு இதைக் கவனிக்கவில்லை. அவள் வெளியில் பார்த்தவண்ணமே, "மாமி! அந்தப் பொண்ணைப் பார்த்தா எனக்குப் புடிச்சிருக்கு. எவ்வளவு நன்னாப் பாடறது? அவளையும் நம்மாத்திலே கூப்பிட்டு வச்சுக்கலாமா?" என்று கேட்டாள்.

இந்தக் கேள்வியினால், உமாவின் மனத்தில் ஏற்பட்டிருந்த உருக்கம் மறைந்து விட்டது. சிறிது கடுமையான குரலில், "ரொம்ப அழகாத்தானிருக்கு! தெருவோடு போகிற குழந்தைகளையெல்லாம் நாம் அழைச்சு வச்சுக்கறதா என்ன?" என்றாள். "என்னை மாத்திரம் அழைச்சு வச்சுண்டேளே?" என்று சாரு எதிர்பாராத விதமாய்க் கேட்டதும், உமா திகைத்துப் போனாள். குழந்தையைக் கட்டிக் கொண்டு, "நீ தெருவோடு போன குழந்தையா, சாரு?" என்றாள். அந்த நிமிஷத்தில் உமாவுக்கு, "என் கண்ணே! நான்தாண்டி உன் அம்மா! பத்து மாதம் நான் சுமந்து பெற்ற குழந்தையடி நீ!" என்று சொல்லிக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு அந்த ஆவலை அடிக்கிக் கொண்டாள். அசாத்தியச் சூடிகையாச்சே சாரு? "நான்தாண்டி உன் அம்மா!" என்றால், "இத்தனை நாளும் எங்கே போனே? ஏன் என்னை விட்டுட்டுப் போனே?" என்று ஆயிரம் கேள்வி கேட்பாளே? அதற்கெல்லாம் என்னமாய்ப் பதில் சொல்வது?

இதற்குள், வாசலில் நின்ற பிச்சைக்காரன் பாடுவதை நிறுத்தி, "அம்மா! கண்ணில்லாத கபோதி, அம்மா! ரெண்டு பிச்சை போடுங்கோ, அம்மா!" என்று கத்தினான்.

உமா, சாருவிடம், "இதோ பாரடி, கண்ணு! அந்தப் பெண்ணின் தாத்தாவுக்கு ரெண்டு கண்ணும் தெரியலை, பாரு! அவளையும் நாம் கூட்டி வச்சுண்டுட்டோ மானால், அந்தக் கிழவன் என்னம்மா பண்ணுவான்? நடக்கக்கூட முடியாமே தவிப்பானே? -இந்தா! இந்த ரூபாயைக் கொண்டு போய் அவள் கிட்டக் கொடுத்துட்டு வா, அம்மா!" என்று சொல்லி ஒரு முழு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள். சாரு அதை வாங்கிக் கொண்டு கீழே ஓடினாள்.

ஓர் அணா அல்லது இரண்டு அணா கொடுத்திருந்தால் அந்தப் பிச்சைக்காரப் பெண் வழக்கம்போல், "நீ நன்னாயிருக்கணும், மகராஜியாயிருக்கணும்" என்று ஏதாவது வாழ்த்தியிருப்பாள். ஆனால் சாரு ஒரு ரூபாயை அவளிடம் கொடுத்ததும், அவளுக்குப் பேசவே நா எழவில்லை. சாருவை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே, கிழவனிடம் அதைக் கொடுத்து, "ஒரு ரூவா தாத்தா!" என்றாள். அந்தக் கிழவன் குருட்டுக் கண்களில் கூட அந்தச் சமயம் ஒளி வந்தது போல் தோன்றிற்று. அவன் ரூபாயைக் கையால் தடவிப் பார்த்தபடி ஒரு கணம் நின்றான். பிறகு, கீழே உட்கார்ந்து, ரூபாயைப் போட்டுப் பார்த்தான். கணீரென்று சத்தம் கேட்கவே, அவசரமாய் எழுந்திருந்து, "வா கண்ணம்மா, போகலாம்!" என்று சொல்லிவிட்டு, அவள் கையைப் பிடித்துக் கொள்வதற்குக்கூடக் காத்திராமல் போகத் தொடங்கினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரு, அவன் போகத் தொடங்கியவுடனே, அந்தப் பொண்ணைப் பார்த்து, "இதோ பாரு; நீ இந்த வீட்டிலே என்னோடேயே இருக்கயா? உனக்கு நல்ல பாவாடை, சொக்காய் எல்லாம் வாங்கித் தரச் சொல்றேன்" என்றாள்.

அந்தப் பெண்ணுக்கு, சாரு ஒரு ரூபாயைக் கொடுத்ததுமே அவள் தன்னை ஏதோ ஏமாற்றப் பார்க்கிறாள் என்று ஒருவித சந்தேகம் தோன்றியிருந்தது. இப்போது அந்தச் சந்தேகம் அதிகமாய்ப் போய்விட்டது.

"நான் என்னத்துக்கு உன் வீட்டிலே இருக்கேன்? என் தாத்தாவோடே நான் போவாண்டாமா?" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் ஓட்டமாய் ஓடிப் போய் முன்னால் போய்க் கொண்டிருந்த தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவர்களிருவரும் அந்தச் சாலையின் கோடி வரையில் போய் மறையும் வரையில் சாரு அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

அன்றிரவு சுமார் பத்து மணிக்கு உமாராணி தன்னுடைய படுக்கை அறைக்குள் வந்தபோது, சாரு வழக்கம் போல் கட்டிலின் மீது மெத்தையில் படுத்துக் கொள்ளாமல், கீழே தரையில் படுத்துத் தூங்குவதைக் கண்டு துணுக்கமுற்றாள். குழந்தையை இரண்டு கையாலும் அணைத்து எடுத்துக் கட்டிலின் மீது போட்டாள். சாரு ஒரு தடவை புரண்டு, வாயோடு, "தாத்தா! தாத்தா!" என்று சொல்லி விட்டு, மறுபடியும் தூங்கிப் போனாள்.

"தாத்தாவைப் பார்க்காமல் குழந்தை ஏங்கிக் கிடக்கிறது. ஐயோ! இவளை இப்படிப் பிரித்து வைத்திருக்கிறேனே, பாவி!" என்று உமா தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். சாருவை அழைத்து வந்த நாளிலிருந்து உமாவின் மனத்தில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டு தான் இருந்தது. அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அவரையும் தன்னுடன் வந்து இந்த வீட்டில் இருக்கச் சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் ஆசை பொங்கிற்று. இன்னொரு பக்கம், 'அப்பா என்ன சொல்வாரோ, என்னவோ? நான் சொல்வதை முதலில் நம்புவாரா? நம்பினாலும், என்னிடம் வெறுப்புக் கொள்ளாமல் இருப்பாரா? ஒருவேளை மறுபடியும், அவர் தேடிக் கொடுத்த அழகான மாப்பிள்ளையுடன் போய் வாழவேண்டுமென்று சொன்னால் என்ன செய்வது?' என்று ஆட்சேபங்கள் தோன்றின. உண்மையை அவரிடம் சொல்வதாயிருந்தாலும் எப்படிச் சொல்வது? நேராகச் சொல்வதற்கு அவளுக்குத் தைரியம் வரவில்லை. ஒரு கடிதம் எழுதி எல்லாவற்றையும் அதில் சொல்லி விடலாமா என்று அடிக்கடி நினைப்பாள். இன்று குழந்தை தூக்கத்தில், "தாத்தா தாத்தா" என்று சொன்னதைக் கேட்டதும், இனிமேல் தாமதிக்கக் கூடாது என்றெண்ணிக் காகிதமும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

"என் அருமை அப்பாவுக்கு உங்கள் பெண் சாவித்திரி அநேக கோடி நமஸ்காரம்..."

அவ்வளவுதான் எழுதினாள். அதற்கு மேல் யோசித்து யோசித்துப் பார்த்தும் என்ன எழுதுவது, என்னமாய் எழுதுவது என்று தெரியவில்லை. இரண்டு மூன்று தடவை எழுதினதையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு, கடைசியில், 'நாளைக்கு எப்படியாவது அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து எல்லாவற்றையும் நேரிலேயே சொல்லி விடலாம்' என்று தீர்மானித்தாள். உடனே, "நாளைக்கு என்ன அவசரம்? ஆறு வருஷ காலம் பேத்தியோடு சதா சர்வதாகாலமும் இருந்தாரே, போதாதா? நானுந்தான் கொஞ்ச நாளைக்கு என் பொண்ணை எனக்கே எனக்கென்று வைத்துக் கொண்டிருக்கிறேனே?' என்று நினைத்தாள். 'ஆமாம்; ஆமாம். இன்னும் கொஞ்ச நாள் நன்றாய்க் கஷ்டப்படட்டும். என்னை மட்டும் கல்கத்தாவிலே அந்த ராக்ஷசர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நான் போட்ட கடுதாசிக்கெல்லாம் பதில் போடாமல் இருந்தாரே. அது மட்டும் தேவலையா?' என்று எண்ணினாள். இம்மாதிரி சிறிது நேரம் தனக்குள் தானே கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்து விட்டு, கடைசியில் அசந்து தூங்கிப் போனாள்.

டங், டங், டங் என்று கடிகாரம் இசையுடன் மணி பன்னிரண்டு அடித்து நிறுத்தியது. சாரு கண் விழித்துப் பரபரப்புடன் எழுந்திருந்து உட்கார்ந்தாள். "ஐயோ! தாத்தா! உன் கண் பொட்டையாய்ப் போயிடுத்தா?" என்று முணுமுணுத்துக் கொண்டாள். அவள் கண்ட கனவு, அவள் மனத்தில் தத்ரூபமாய்ப் பார்த்தது போல் தோன்றிக் கொண்டிருந்தது. தாத்தாவுக்குக் கண் குருடாய்ப் போய் விட்டது; சாவடிக் குப்பத்துக் குடிசையில், அம்பிகையின் சந்நிதியில் அவர் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்; கையினால் துளாவுகிறார்; அவர் தேடுகிற பொருள் அகப்படவேயில்லை; நகர்ந்து நகர்ந்து போய், பூஜைக்கு அருகில் வைத்திருந்த குத்து விளக்கில் முட்டிக் கொள்கிறார்; அப்படி முட்டிக் கொண்டபோது 'டங்' கென்ற சத்தம் கேட்கிறது.

சாரு விழித்துக் கொண்டபோது, கடிகாரத்தில் கடைசி மணி அடித்தபடியால், அதன் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அதனால் தானோ என்னவோ கனவில் கண்டது வாஸ்தவத்தில் நடந்தது போலவே சாருவுக்குத் தோன்றியது.

படுக்கையிலிருந்து அவள் மெல்லக் கீழே குதித்தாள். பக்கத்தில் இன்னொரு கட்டிலில் உமா ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப் பார்த்தாள், ஓசைப்படாமல் அந்த அறையிலிருந்து வெளியே போகத் தொடங்கினாள்.

அப்போது, எதிரே சுவரில் இருந்த நிலைக் கண்ணாடியில் அவளுடைய பிரதிபிம்பம் மங்கலாய்த் தெரிந்தது. ஒரு கணம் அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். உடனே, திரும்பி, படுக்கை அறைக்குப் பக்கத்திலிருந்த உடை அணியும் அறைக்குச் சென்றாள். தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி வைத்தாள். சாவடிக் குப்பத்திலிருந்து வந்த போது அவள் அணிந்து வந்த 'கௌன்' அலமாரியில் இருந்தது. தான் போட்டுக் கொண்டிருந்த புது கௌனை எடுத்து வைத்துவிட்டு, அந்தப் பழைய கௌனைப் போட்டுக் கொண்டாள். இவ்வளவும் இரண்டு நிமிஷத்திற்குள் நடந்துவிட்டது. பிறகு, சாரு மறுபடியும் சத்தப்படுத்தாமல் படுக்கையறைக்குள் வந்து, உமாராணியைச் சற்று தூரத்திலிருந்தபடியே ஆவலுடன் எட்டிப் பார்த்து விட்டு, கதவை மெள்ளத் திறந்து கொண்டு வெளியே சென்றாள். அடுத்த இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் 'வஸந்த விஹார' த்தின் வாசலுக்கு வந்துவிட்டாள். அந்த அர்த்த ராத்திரியில், பால் போல் எரிந்த நிலவின் பிரகாசத்தில், முன்னே டிராமா டிக்கெட் விற்பதற்காக வந்த வழியை ஞாபகப் படுத்திக் கொண்டு, குழந்தை தன்னந் தனியாகச் சாவடிக் குப்பத்தை நோக்கிச் சென்றாள்.