உள்ளடக்கத்துக்குச் செல்

தியாக பூமி/இளவேனில்/சாந்தி

விக்கிமூலம் இலிருந்து

சாந்தி

சென்னை நகரில் அப்போது அஹிம்சைப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தேசீய பஜனை ஊர்வலமும் சாத்துவிக மறியலும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை உத்தரவுகளை மீறி தேசத் தொண்டர்களும் தேச சேவிகளும் சிறை புகுந்து கொண்டிருந்தார்கள்.

அன்று சிறை புகுவதற்குத் தயாராய்க் கிளம்பிய தேச சேவிகைகளுடன் சாவித்திரியும் சேர்ந்து கொண்டாள். அவர்கள் தேசியக் கொடி பிடித்துக் கொண்டும், தேசிய பஜனை செய்து கொண்டும் சென்னை நகரின் வீதிகளில் ஊர்வலம் வந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவர்களுக்கருகில் போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியுடன் வந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் தேச சேவிகைகளைக் கைது செய்து வண்டியில் ஏறச் சொன்னார்கள்.

வண்டி கிளம்பிக் கொஞ்ச தூரம் சென்றதும், கடை வீதியில் இன்னொரு போலீஸ் உத்தியோகஸ்தர் கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். அந்த இடத்தில் ஜனக் கூட்டம் சேர்ந்திருந்தது. "இந்த வீதியில் தான் மறியல் நடக்கிறது" என்று கைதியான தேச சேவிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

வண்டி நின்ற இடத்தில், போலீஸ்காரர்களால் சூழப்பட்டுச் சில தேசத் தொண்டர்கள் நின்றார்கள். அவர்களையும் அந்த வண்டியில் ஏற்றிக் கொள்ள முடியுமா என்று கீழே நின்ற போலீஸ் உத்தியோகஸ்தர் கேட்டார். வண்டியோடு வந்த போலீஸ் ஸார்ஜெண்ட், 'இடமில்லை' என்று சொல்லவே, வண்டி மறுபடியும் கிளம்பியது.

இப்படி போலீஸ் வண்டி அங்கே நின்ற ஒரு நிமிஷத்தில், சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு மகத்தான சம்பவம் நடந்துவிட்டது. வீதியில் கைது செய்யப்பட்டு நின்ற தேசத் தொண்டர்களின் மீது சாவித்திரியின் பார்வை சென்றபோது, அவர்களுக்கு மத்தியில் ஸ்ரீதரனும் நிற்பதைக் கண்டாள். அவனுடைய உடை மாறியிருந்தது போலவே முகத்தோற்றமும் மாறியிருப்பதைப் பார்த்தாள். சாவித்திரியின் தேகம் புளகாங்கிதம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் துளித்தது.

அதே சமயத்தில் ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் பார்த்தான். அங்கே தேச சேவிகைகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு அளவிலாத வியப்படைந்தான்.

சொல்ல முடியாத ஆதுரத்துடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" என்ற கவியின் வாக்குக்கு அப்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பொருத்தமாயிருந்தது. உண்மையில், இத்தனை நாளும் பிரிந்திருந்தவர்கள் அந்த நிமிஷத்திலே தான் ஒன்று கூடினார்கள். அதாவது, அவர்களுடைய இருதயங்கள் ஒன்றுபட்டன. இரண்டு ஜீவன்களுடைய இதயங்கள் ஒன்றுபட்டனவென்றால், அவர்களுடைய தேகங்கள் வட துருவத்திலும் தென் துருவத்திலும் இருந்தால் தான் என்ன? அவர்களை யாரால் பிரித்து வைக்க முடியும்?

அந்த நிமிஷத்தில் ஸ்ரீதரனுக்கும் சாவித்திரிக்கும் புனர் விவாகம் நடந்தது என்று சொல்லலாம். ஏற்கெனவே, பெரியோர்களுடைய வற்புறுத்தலினால் தேக சம்பந்தமான விவாகம் அவர்களுக்கு நடந்திருந்தது. இன்றைய சுபதினத்தில், அவர்களுடைய ஆத்மாக்கள் ஒன்றையொன்று மணந்து கொண்டன. இந்த ஆத்மீக விவாகத்துக்கு பாரத மாதாவும் காந்தி மகாத்மாவுமே சாட்சிகளாயினர்.

போலீஸ் வண்டிக்குள்ளிருந்த தேச சேவிகைகள், "ஜய ஜய பாரத!" என்று கோஷித்தார்கள். வெளியில் நின்ற தேசத் தொண்டர்கள், "மகாத்மா காந்திகி ஜே!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

மறுநாள் 'வஸந்த விஹார'த்தில் குழந்தை சாரு தனியாக உட்கார்ந்து சாவித்திரியின் படத்தை வைத்துக் கொண்டு, "அம்மா! என்னையும் நீ அழைச்சுண்டு போயிருக்கக்கூடாதா? நானும் உன்னோடே வந்து ஜெயிலிலே இருக்க மாட்டேனா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவளைத் தேடி வந்த சம்பு சாஸ்திரி, குழந்தையைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, "கண்ணே சாரு! ஒரே சமயத்தில் உனக்கு அப்பாவும் அம்மாவும் கிடைத்தார்கள். அவாள் இரண்டு பேரையும் ஒரே நாளில் இழந்துட்டே! ஆனால், நீ இதுக்காக வருத்தப்படாதே, குழந்தை! நல்ல காரியத்துக்குத்தான் அவாள் போயிருக்கா. சீக்கிரத்திலே திரும்பி வந்துடுவா. அதுவரைக்கும் நாம் நம்முடைய பழைய இடத்துக்கே போகலாம் வா, அம்மா! இந்தப் பங்களா எல்லாம் நமக்கு லாயக்கில்லை. சாவடிக் குப்பம் தான் நமக்குச் சரி!" என்றார். சாவடிக் குப்பத்தில் சம்பு சாஸ்திரி குடி இருந்த குடிசையை நல்லான் சுத்தமாக வைத்திருந்தான். குடிசைக்குள்ளிருந்த பூஜை மாடத்தையும் பத்திரமாகப் பாதுகாத்து வந்தான். சம்பு சாஸ்திரியும் சாருவும் அந்தக் குடிசைக்கு மறுபடியும் வந்ததும், தங்களுடைய சொந்த வீட்டுக்கு வந்து விட்டதாக எண்ணினார்கள். சாஸ்திரி வாசலில் நின்று நல்லானுடன் பேசிக் கொண்டிருக்கையில், சாரு உள்ளே சென்று, பூஜை மாடத்துக்கு முன்னால் கை கூப்பி நின்று, "அம்பிகே! பராசக்தி! எனக்கு அம்மா வேணும்னு கேட்டேன். அம்மா, அப்பா இரண்டு பேரையும் கொடுத்தே! ஆனா, அவா ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக்கறது எனக்குப் பிடிக்கவேயில்லை. ரொம்பக் கஷ்டமாயிருக்கு. எங்க அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்காம ஒத்துமையாயிருக்கும்படி கிருபை செய்யப்படாதா?" என்றாள்.

முன்னொரு தடவை குழந்தையின் பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டு சம்பு சாஸ்திரி உள்ளே வந்தது போல் இப்போதும் வந்தார். சாருவின் பின்னால் வந்து நின்று கொண்டார். "குழந்தை! உன்னுடைய பிரார்த்தனையைத்தான் ஏற்கெனவே பராசக்தி நிறைவேற்றிவிட்டாளே! உன் அப்பாவும் அம்மாவும் ஒற்றுமைப்பட்டு விட்டார்கள், சாரு! எப்போது இரண்டு பேருக்கும் ஏக காலத்திலே தேச சேவையிலே ஈடுபட வேண்டுமென்று தோணியிருக்கோ, அப்போதே அவாளுடைய மனது ஒற்றுமைப் பட்டுடுத்து. திரும்பி வர்றபோது அவாள் புதுமனுஷாளாயிருப்பாள். அவாளுடைய இருதயம் பரிசுத்தமாயிருக்கும். இரண்டு பேரும் மனம் ஒத்து வாழ்வார்கள், அம்மா!" என்றார்.

அன்று சாவடிக் குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. "சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க" என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடிவிட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரமின்றி, வக்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.

ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்."

"எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்ய மாட்டானோ, மனோ வாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யை யாவள்."

"எவன் (விரோதியையும் நண்பனையும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்."

"எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திட வைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய் மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்."

"எவன் லோபமும் கபடமும் இல்லாதவனோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்."

இந்த கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்று அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. 'ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?' என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்.

ஓம் சாந்தி!


தியாக பூமி முற்றிற்று