தியாக பூமி/இளவேனில்/பராசக்தி லீலை!

விக்கிமூலம் இலிருந்து

பராசக்தி லீலை!

நெடுங்கரை வந்ததிலிருந்து சம்பு சாஸ்திரியார் ஈசனுடைய கருணைத் திறத்தை மேலும் மேலும் உணரும்படி நேரிட்டது. அக்கிரகாரத்து ஜனங்களின் மனோபாவத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு மிகவும் வியப்பை அளித்தது. தீக்ஷிதர் நெடுங்கரைக்கு இன்னும் திரும்பி வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் சம்பு சாஸ்திரியை இப்போது மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார்கள். சாஸ்திரி புரிந்து வந்த தேசத் தொண்டைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்குச் செய்தி எட்டியிருந்தது. அவருக்கு வந்த பெருமையெல்லாம் தங்கள் ஊருக்கு வந்ததாகவே கருதி அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட மகானை ஒரு காலத்தில் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தோமே என்பதைக் குறித்து அவர்களில் பலருக்கு வெட்கமாயும் இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாக, இப்போது மங்களத்தின் அந்தியக் கிரியைகளை நடத்துவதற்கு அவர்கள் சம்பு சாஸ்திரிக்கு வேண்டிய ஒத்தாசை புரிந்தார்கள். அது விஷயமாக அவருக்கு அவர்கள் ஒரு கவலையும் வைக்கவில்லை. அக்கிரகாரத்து ஸ்திரீகளுடைய மனோபாவமும் பெரிதும் மாறிப் போயிருந்தது. வீட்டுக்கு ஒரு நாளாகச் சமையல் செய்து சாஸ்திரிக்கும் சாருவுக்கும் கொண்டு வந்து வைத்தார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு, குழந்தை சாருவுக்கு வேண்டியதெல்லாம் செய்து வந்தார்கள்.

குடியானத் தெருவையும், சேரியையும் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. சாஸ்திரி ஐயா திரும்பி வந்ததைப் பற்றி அவர்களுக்கெல்லாம் ஒரே உற்சாகம். "அந்த அம்மா சாகப் போகிற சமயத்துக்கு வந்துட்டாங்க பாத்தியா? ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது?" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் பார்த்த சம்பு சாஸ்திரியார் இனி நெடுங்கரையிலேயே தங்கி விடலாமா என்று யோசித்தார். இதற்கு ஒரே ஓர் எண்ணந்தான் குறுக்கே நின்றது. சாவித்திரியின் க்ஷேமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவருடைய உள்ளம் துடிதுடித்தது. ஏழு வருஷத்துக்கு முன்னால் நெடுங்கரைக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றவள் என்ன ஆனாள்? எங்கே போனாள்? சௌக்கியமாய்க் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருப்பாளோ?...

சாவடிக் குப்பத்துக்குப் போன புதிதில் தாம் அங்கே இருப்பது நெடுங்கரைக்குத் தெரியக் கூடாதென்று சாஸ்திரி எண்ணினாரல்லவா? ஆகையினால், அந்தச் செய்தி, கல்கத்தாவுக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைத்து, சாவித்திரிக்கும் கடிதம் போடவில்லை. ஆனாலும், அவளுடைய க்ஷேமசமாசாரத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு ரொம்பவும் ஆவல் இருந்தது. நல்லானைக் கொண்டு கடிதம் எழுதச் சொன்னார். நல்லானுக்கு சாவித்திரி கட்டாயம் பதில் எழுதுவாளென்று அவர் நினைத்தார். ஆனால் நல்லான் எழுதிய இரண்டு மூன்று கடிதத்துக்கும் கல்கத்தாவிலிருந்து பதில் வரவில்லை. பிறகு, தாமே கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை. ஆகவே, ஒரு வேளை ஜாகை மாற்றிக் கொண்டு போயிருப்பார்கள், அதனால் தான் பதில் வரவில்லையென்று தீர்மானித்து, பகவானுடைய அருளால் எப்படியாவது சௌக்கியமாயிருந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார். நல்லான் முதன் முதலில் உமாராணியைப் பார்த்தபோது, "பெரிய குழந்தைதான் நம்மை அடியோடு மறந்துடுத்துங்க" என்று சொன்னதில், தன்னுடைய கடிதங்களுக்குச் சாவித்திரியிடமிருந்து பதில் வராத தாபத்தைத்தான் வெளியிட்டான்.

சாஸ்திரி அதையெல்லாம் இப்போது நினைவுபடுத்திக் கொண்டார். 'ஐயோ! சாவித்திரி! புக்ககத்தில் நீ சௌக்கியமாயிருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே? உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா? இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ? என்னவெல்லாம் கஷ்டப்பட்டாயோ? இப்போது எவ்விடத்தில் என்னமாய் இருக்கிறாயோ? ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ?..." இப்படி எண்ணாததெல்லாம் எண்ணி சம்பு சாஸ்திரி மனம் துடித்தார். எந்த விதத்திலாவது சாவித்திரியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவருக்குத் தாபம் பொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, தமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி விசாரிப்பதென்று தீர்மானித்தார். ஒரு நாள் இப்படி அவர் உட்கார்ந்து முதலில் நரசிங்கபுரத்துக்குக் கடிதம் எழுதலாமென்று நினைத்து எழுதிக் கொண்டிருக்கையில், கோர்ட் அமீனா ஒருவன் வந்து, "சாமி!" என்று கூப்பிட்டான்.

சாஸ்திரியார் அவனை உள்ளே வரச் சொல்லி, என்ன விசேஷம் என்று கேட்டார். அமீனா அச்சிட்ட ஒரு கடுதாசியை எடுத்து நீட்டி, "சாட்சி ஸம்மன், சாமி! வாங்கிண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுங்க" என்றான்.

சாஸ்திரி திகைப்புடன், "சாட்சியாவது, சம்மனாவது? எனக்கு முன்னே பின்னே கோர்ட் வாசனையே தெரியாதே, அப்பா! என்னை யாரு சாட்சிக்குக் கூப்பிடறா?" என்று கேட்டார்.

"ஸம்மனை வாங்கிப் பாருங்களேன், சாமி! தானே தெரியறது. யாரோ உமாராணி என்ற சாவித்திரியோ, சாவித்திரி என்கிற உமாராணியோ, பட்டணத்திலே இருக்காளாமே! அவக மேலே கேஸாம்!" என்றான்.

சாஸ்திரி திடுக்கிட்டவராய், "என்ன, என்ன? உமாராணிங்கிற சாவித்திரியா?" என்று கேட்டார்.

"ஆமாங்க, சாமி! இந்தக் கேஸு இப்போ ரொம்ப அடிபடுதுங்களே! காலணாப் பாட்டுப் புத்தகங்கூட வந்துடுத்தே? உமாராணி என்கிறது வடக்கத்திப் பொம்பிளை என்றும் சொல்றாக; இல்லை, தமிழ்நாட்டுப் பொம்பிளைதான் என்றும் சொல்றாக. ஸ்ரீதரன் என்கிற ஒருத்தர், அந்த உமாராணி தன்னுடைய சம்சாரம், தன்னோடு வந்து இருக்கணும்னு கேஸு போட்டிருக்காராம். ஸம்மனை வாங்கிப் பாருங்க, தெரியும்!" என்றான் அமீனா.

சாஸ்திரி நடுங்கிய கைகளுடன் அந்த ஸம்மனை வாங்கிப் பார்த்தார். அதன் தலைப்பில், "வாதி: ஸ்ரீதரன்; பிரதிவாதி: உமாராணி என்கிற சாவித்திரி" என்று போட்டிருந்தது. கீழே மேற்படி கேஸில் சாட்சி சொல்வதற்காக, குறிப்பிட்ட தேதியில் சென்னை ஹைகோர்ட்டில் வந்து ஆஜராக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சிறைவாசத்துக்கும் அதற்கும் மேலான தண்டனைகளுக்குங்கூட உள்ளாக நேரிடுமென்றும் கோர்ட்டு வாசக முறைப்படி எழுதியிருந்தது!

அப்போது அங்கே வந்த சாரு, சாஸ்திரியார் திகைப்புடன் கையிலுள்ள அச்சுக் காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, "தாத்தா! என்ன தாத்தா இது?" என்று கேட்டாள்.

சாஸ்திரி குழந்தையைக் கூட நிமிர்ந்து பார்க்காமல், "இது என்ன என்கிறது எனக்கே தெரியலை. அம்மா! பராசக்தியின் லீலை அவ்வளவு விசித்திரமாயிருக்கு!" என்றார்.