தியாக பூமி/இளவேனில்/புனர் ஜன்மம்
புனர் ஜன்மம்
அன்று சாயங்காலம் சாரு சாவடிக் குப்பத்துக்குத் திரும்பியபோது குதித்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள். "தாத்தா! தாத்தா! இன்னிக்கு ஒரு சமாசாரம் நடந்தது; உனக்கு அதைச் சொல்லவே மாட்டேன்" என்றாள்.
"நீ சொல்லாமே போனா, நானும் கேட்கவே மாட்டேன்" என்றார் சாஸ்திரி.
"நீ கேக்கா போனா, நான் அழுவேன்" என்றான் சாரு.
அவரது மடியில் உட்கார்ந்து கொண்டு, "தாத்தா! இன்னிக்கு ஒரு மாமியைப் பார்த்தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி" என்று சொல்லிவிட்டு, சற்று மெதுவான குரலில், "அந்த மாமி வந்து என்னைக் கட்டிண்டு முத்தமிட்டா, தாத்தா!" என்றாள்.
"அந்த மாமி யார், சாரு? அவள் பேர் என்ன?" என்று சாஸ்திரி கேட்டார்.
"அவ ரொம்பப் பணக்கார மாமி தாத்தா! பணக்காரா நல்லவாளா இருக்க மாட்டான்னு நீ சொல்லுவயோன்னோ? அது சுத்தப் பொய்!"
"நான் அப்படி எங்கேயம்மா சொல்லியிருக்கேன்? நல்ல மனுஷாளைக் கூடப் பணம் கெடுத்துடும்னுதானே சொன்னேன்? அதனாலே, பணக்காரா எல்லாம் கெட்டவான்னு அர்த்தமா!"
"அதென்னமோ, நாங்க இன்னிக்குப் பார்த்த மாமி ரொம்ப நல்ல மாமி. எங்க கிட்ட இருந்த டிக்கெட் அவ்வளவையும் வாங்கிண்டு, 'அலையாமே வீட்டுக்குப் போங்கோ' அப்படின்னா, தாத்தா! முப்பது ரூபாய் டிக்கெட், தாத்தா!"
"யாரம்மா, அவ்வளவு தாராள மனஸுடையவாள் இந்த ஊரிலே? அவ பேரென்ன?"
"அவ பேரு ஸ்ரீமதி உமாராணியாம்."
இந்தப் பெயர் சம்பு சாஸ்திரி காதிலும் விழுந்திருந்தது. ஒரு தர்மத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த பெண்மணியின் பெயர் காதில் படாமல் இருக்க முடியுமா?
"ஓஹோ! சரிதான்; அந்த அம்மா பம்பாயிலிருந்து வந்திருக்கிறவள். அதனாலே தான் அவ்வளவு தாராளம். இந்த ஊரிலே அந்த மாதிரி யார் இருக்கா? அவ்வளவு பணந்தான் யாரிடத்திலே இருக்கு" என்றார்.
பிறகு, சாரு அன்று நடந்ததெல்லாம் விவரமாகச் சொன்னாள். அவள் கூறியதில் சாஸ்திரியின் மனத்தில் நன்கு பதிந்த விஷயம், உமாராணி குழந்தையை அணைத்து முத்தமிட்டது தான். குழந்தை அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் சந்தோஷப்பட்டாள். 'ஐயோ! இந்தக் குழந்தை, அம்மாவுக்காக எப்படி ஏங்கிப் போயிருக்கிறது?' என்று சாஸ்திரி எண்ணினார். ஒரு வேளை தான் செய்ததெல்லாம் தவறோ? தான் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தது பிசகோ? உடனே போலீஸிலே கொண்டுபோய்க் கொடுத்து அதன் தாயாரைக் கண்டு பிடித்துச் சேர்க்கும்படி சொல்லியிருக்க வேண்டுமோ?
இந்தக் குழந்தையின் காரணமாகத் தம்முடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட மாறுதலைச் சாஸ்திரி எண்ணிப் பார்த்தார். தேச யாத்திரை செய்ய வேண்டும், ஊர் ஊராய்ப் போய் இந்தப் புண்ணிய பூமியிலுள்ள க்ஷேத்திரங்களையெல்லாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆசை நிறைவேறும் என்று தோன்றிய சமயத்தில், இந்தக் குழந்தையைப் பராசக்தி அளித்தாள். அதன் காரணமாக அவர் சாவடிக் குப்பத்திற்கு வரவும் இங்கேயே தங்கவும் நேர்ந்தது.
இது மட்டுமா? இந்தக் குழந்தை காரணமாகவே, அவர் நெடுங்கரையையும், கல்கத்தாவையும் அடியோடு மறந்திருந்தார். சாவித்திரி குழந்தையாயிருந்த போது அவளை வளர்ப்பதற்கென்று மங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், பிறகு, 'ஐயோ! எப்படிப்பட்ட தவறு செய்தோம்?' என்று பல முறை வருந்தியதும் அவர் ஞாபகத்தை விட்டு அகல முடியாதல்லவா? எனவே, இந்தக் குழந்தையை அந்தக் கதிக்கு ஆளாக்கக் கூடாதென்று தீர்மானித்திருந்தார். 'வேண்டாம்; மங்களமும் அவள் தாயாரும் சௌக்கியமாயிருக்கட்டும். நாம் இல்லை என்பதற்காக அவர்கள் ஒன்றும் உருகிப் போக மாட்டார்கள். நல்ல வேளையாய், அவர்கள் நிராதரவாக இல்லை; சாப்பாட்டுக்குத் துணிக்குப் பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறோம். எப்படியாவது அவர்கள் சௌக்கியமாயிருக்கட்டும்.' இந்த எண்ணத்தினால் அவர் நெடுங்கரைக்குக் கடிதம் போடவும் இல்லை; அவர்களை வரவழைத்துக் கொள்ள முயலவும் இல்லை.
ஆனால், சாவித்திரி! அவளை மறக்க முடியுமா? ஒரு நாளும் முடியாது. ஆரம்பத்தில் அவளை எண்ணி எண்ணி அவர் மனம் உருகிற்று. 'ஐயோ! இந்தக் குழந்தையை நாமே வளர்ப்பதுபோல் சாவித்திரியையும் வளர்த்திருக்கக் கூடாதா?' என்று அடிக்கடி எண்ணமிடுவார். 'எப்படியோ, அவளைப் புருஷன் வீட்டுக்கு அனுப்பி விட்டோ ம். அங்கே அவள் சௌக்கியமாயிருப்பாள்!' என்று எண்ணி ஆறுதல் கொள்வார்.
சாவித்திரிக்கு அவர் அச்சமயம் கடிதம் எழுதவில்லை. எழுதினால் தாம் இருக்கிற இடம் சம்பந்திகளுக்குத் தெரிந்து போய் விடும். சம்பந்திகளுக்குத் தெரிந்தால், நெடுங்கரைக்கும் தெரியாமல் இராது. அப்படித் தெரிந்தால், மங்களமும் சொர்ணம்மாளும் இங்கே வராமல் இருப்பார்களா? முதலிலே, "இந்தக் குழந்தையை எங்கே பிடிச்சயள்!" என்று மாமியார்காரி கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது? இதை நினைத்தாலே, சாஸ்திரிக்கு உடம்பு நடுங்கிற்று. வேண்டாம், வேண்டாம்! எல்லாரும் அவரவர்கள் இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும்.
இவ்வாறெல்லாம் யோசித்து, தனக்கு இது ஒரு புனர் ஜன்மம் என்றும், தமது பழைய வாழ்க்கைக்கும் இந்த புதிய வாழ்க்கைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று சாஸ்திரி தீர்மானித்துக் கொண்டார். இது பராசக்தியின் ஆக்ஞை என்றும் அவர் மனப்பூர்வமாக நம்பினார். அந்த நம்பிக்கையிலேயே ஆறு, ஏழு வருஷ காலம் கழிந்து விட்டது.
அந்த நம்பிக்கை ஒரு வேளை பொய்யோ? பராசக்தியின் ஆக்ஞையென்பதெல்லாம் வெறும் பிரமையோ! இந்தக் குழந்தையை அப்பொழுதே போலீஸாரிடம் ஒப்புவித்திருந்தால், ஒரு வேளை அதன் தாயாரைக் கண்டுபிடித்து ஒப்புவித்திருப்பார்கள் அல்லவா? அப்படிக் குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்து வைத்த பாவத்தை நாம் செய்து விட்டோ மோ? அக்கினி சாட்சியாக மணந்த மங்களத்தை விட்டுப் பிரிந்திருப்பதும் குற்றமோ? தாயே இதென்ன மாயை! ஒன்றும் புரியவில்லையே!
"சாமி! வாருங்கோ! என்ன உள்ளேயே இருக்கீங்களே?' என்று வாசலில் நல்லானின் குரல் கேட்டது. சாஸ்திரியாரின் பூர்வ ஞாபகமும் கலைந்தது. வாசலில் வந்து பார்த்தார்.
அன்று ஸ்ரீராம நவமி. சாஸ்திரியின் இஷ்ட தெய்வங்கள் பராசக்தியும் ஸ்ரீராமபிரானும் ஆதலால் சாவடிக் குப்பத்தில் நவராத்திரியும் ஸ்ரீராம நவமியும் விசேஷமாய்க் கொண்டாடுவது வழக்கம். ஆகையால் சாவடிக் குப்பம் அன்று அற்புதமான தீபாலங்காரத்துடன் காட்சியளித்தது.
வாசலில், சாவடிக் குப்பத்துக் குழந்தைகள் அழகாக அலங்காரம் செய்து கொண்டு வந்து பாட்டுச் சொல்லிக் கும்மி அடித்தார்கள்.
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் சாஸ்திரியாருக்கு மனநிம்மதி உண்டாயிற்று. ஆறு வருஷத்துக்கு முந்தி தாம் சாவடிக் குப்பத்துக்கு வந்த போது குப்பம் எப்படியிருந்ததென்பதையும், இப்போது எப்படியிருக்கிறதென்பதையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்தார். தாம் வாழ்க்கையில் வேறு என்ன தவறு செய்திருந்த போதிலும், சாவடிக் குப்பத்தில் வந்திருந்தது மட்டும் வீண் போகவில்லையென்று அவருக்கு உறுதி ஏற்பட்டது.