உள்ளடக்கத்துக்குச் செல்

தியாக பூமி/இளவேனில்/வந்தாரே தீக்ஷிதர்!

விக்கிமூலம் இலிருந்து

வந்தாரே தீக்ஷிதர்!

இதற்கிடையில், சம்பு சாஸ்திரியும் சாருவும் தமிழ் நாட்டின் கிராமங்களில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கால் நடையாக நடந்தும், சாலையில் போய்க் கொண்டிருந்த போக்கு வண்டிகளில் ஏறிக்கொண்டும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும், சாஸ்திரி குழந்தையுடன் ஊர்ச் சாவடியிலோ, கோவிலிலோ அல்லது குளக் கரையிலோ உட்கார்ந்து கொள்வார். யாரோ பெரியவர் வந்திருக்கிறாரே என்று ஜனங்கள் வந்து சேர்வார்கள். அவர்களிடம் பேசத் தொடங்குவார். நமது பாரத தேசம் முன்னே எவ்வளவு மேன்மையாக இருந்தது என்பதை எடுத்து விவரிப்பார். இந்தக் காலத்தில் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வையும் ஜனங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தீய பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டுவார். சாதி, மத துவேஷங்களினால் விளையும் தீங்குகளையும், மதுபானத்தினால் உண்டாகும் கெடுதிகளையும் விவரிப்பார். தாம் சொல்வதற்கெல்லாம் ஆதாரமாக, புராண இதிகாசங்களிலிருந்தும், திருமந்திரம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவார். இடையிடையே, குழந்தை சாருவும் தாத்தா சொல்லிக் கொடுத்த பாட்டு ஏதாவது சொல்வாள்.

சீக்கிரத்தில் இவர்களுடைய கீர்த்தி நெடுகப் பரவத் தொடங்கியது. "ஒரு பெரியவரும் குழந்தையுமாக ஊர் ஊராக வருகிறார்களாம், அந்தப் பெரியவர் ரொம்பப் படித்தவராம். சாஸ்திரங்களில் கரை கண்டவராம். தேசிய விஷயங்களை அவர் சொல்கிறது போல் அவ்வளவு மனத்தில் படியும்படி பெரிய பெரிய தலைவர்கள் கூட சொல்கிறதில்லையாம்" என்று கிராமங்களில் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.

"தீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா சொல்கிறாரோ, இல்லையோ? அதைப்பற்றி மற்றவர்கள் யாராவது பேசினால் ஜனங்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சம்பு சாஸ்திரி பேசுகிறபோது எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கத்துக்கு நம்ம சாஸ்திரங்களிலே இடங் கிடையாதென்று அவர் அவ்வளவு தெளிவாய் எடுத்துச் சொல்கிறார்" என்று சீர்திருத்தப் பற்றுள்ளவர்கள் சொன்னார்கள்.

"அவரோடு ஒரு குழந்தை வருகிறதல்லவா? அதைப் பார்க்கிறதற்குப் பதினாயிரங் கண் வேணும். அந்தக் குழந்தை காந்தி பாட்டுப் பாடுகிறது. அந்தப் பாட்டைக் கேட்கிறதற்கு இருபதாயிரம் காது வேணும்" என்று வேறு சிலர் சொன்னார்கள்.

"சம்பு சாஸ்திரிதானே? ஓஹோஹோ! அவர் சாதாரண மனுஷரா என்ன? யோகின்னா அவர்? மந்திர சக்தியுடையவராச்சே? அவர் வாயாலே சாபங் கொடுத்தாலும் கொடுத்ததுதான்; அநுக்ரஹம் பண்ணினாலும் பண்ணினதுதான்" என்ற வதந்தி ஒரு பக்கத்தில் பரவிக் கொண்டிருந்தது.

"அந்தப் பெரியவரும் குழந்தையும் ஒரே சமயத்தில் மூன்று ஊரில் இருந்திருக்காளாம். மூன்று ஊரிலும் பொதுக் கூட்டத்திலே பேசியிருக்காளாம். கலியுகத்திலே இந்த மாதிரி அதிசயத்தை இதுவரையில் பார்த்ததில்லை" என்றும், "சம்பு சாஸ்திரியை அரெஸ்ட் பண்ணி ஜெயிலிலே போட்டுடறதுன்னு சர்க்காரிலே ஆன மட்டும் பார்த்தாளாம்; முடியலையாமே? போலீஸ்காரன் வந்தானோ, இல்லையோ, தாத்தாவும் பேத்தியும் மாயமாய் மறைஞ்சுடறாளாமே?" என்றும், இம்மாதிரி அவர்களுக்கு ஆச்சரியமான சக்தியெல்லாம் கற்பித்துப் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், "சேச்சே! அதெல்லாம் சுத்தப் பிசகு. இந்த மாதிரி குருட்டு நம்பிக்கைதான் தேசத்தைக் கெடுக்கிறது. சம்பு சாஸ்திரியை என்னத்துக்காகச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வர்றா? அவர் தான், கவர்ன்மெண்ட் பேச்சையோ, வெள்ளைக்காரன் பேச்சையோ எடுக்கறதேயில்லையே? நம்ம ஜனங்கள் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது, சாதி வித்தியாசமெல்லாம் போகணும், தீண்டாமை ஒழியணும், கள்ளுக் குடிக்கக்கூடாது. கதர் கட்டிக்கணும் - இவ்வளவு தானே அவர் சொல்றது. இதுக்காக அவரைச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வருவாளா, என்ன?" என்று உண்மையை எடுத்து விளக்கினார்கள். இப்படிப் பொய்யும் மெய்யுமாக அவர்களைப் பற்றிச் செய்திகள் எங்கும் பரவின. குடிகாரர்களிடையில் குருட்டு நம்பிக்கை பரவுதல் எளிதல்லவா? ஒரு கிராமத்தில் சம்பு சாஸ்திரி பஜனை செய்து கொண்டு ஊரைச் சுற்றி வந்தார். கிராமவாசிகள் கும்பலாக அவரைச் சூழ்ந்து வந்தார்கள். வழியில் ஓரிடத்தில் கள்ளுக்கடை இருந்தது. அங்கே சிலர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அரைப் போதையிலிருந்து ஒருவன், "அடே! அந்தப் பெரியவரும் குழந்தையும் வர்றாங்களாண்டா! குடிக்கிறவங்களை அவர் சபிச்சுப் போடுவாராண்டா!" என்றான். அவ்வளவு தான்; குடிகாரர்கள் அவ்வளவு பேரும் கையிலிருந்த கலயங்களைப் பொத்துப் பொத்தென்று போட்டு உடைத்துவிட்டு ஓட்டம் எடுத்தார்கள். இந்த மாதிரி இன்னும் சில இடங்களிலும் நடக்கவே, சம்பு சாஸ்திரி வரப்போகிறார் என்று அறிந்ததும், கள்ளுக் கடைக்காரர்கள் தாங்களே அன்று கடையை மூடிவிடத் தொடங்கினார்கள். அநேக கிராமங்களில் சாஸ்திரியும் சாருவும் வந்துவிட்டுப் போன பிறகு, குடி அடியோடு நின்று போய்விட்டது.

மனுஷ்யர்களுடைய வாழ்க்கையானது ஜாதக ரீதியாக அந்தந்த கிரகங்களின் சஞ்சாரக் கிரமப்படி நடைபெறுவதாகவும், மனுஷ்யர்களுடைய வாழ்க்கையில் திடீரென்று சில சமயம் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணம் கிரகங்களின் பெயர்ச்சிதான் என்றும் நிச்சயமாய்க் கூறுவோர் உண்டு. சாதாரணமாக இந்த மாதிரி ஜாதக பலன்களிலும், கிரகக் கோளாறுகளிலும் நம்பிக்கையில்லாதவர்கள் கூட, 'ஒரு வேளை அதெல்லாம் உண்மையாயிருக்குமோ?' என்று நினைக்கும்படியான சந்தர்ப்பங்கள் சில நேரிடுகின்றன. சம்பு சாஸ்திரிக்கு இந்தக் காலத்தில் திடீரென்று ஏற்பட்டிருந்த பிராபல்யத்தைப் பார்த்தால், கிரக சஞ்சாரத்தின் பலன் என்றே நினைக்கும்படியாக இருந்தது. நாளாக ஆக, "எங்கள் ஊருக்கு வரவேண்டும்", "எங்கள் ஊருக்கு வரவேண்டும்" என்று நாலு பக்கங்களிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. வரவேற்பு உபசாரங்களும் அதிகமாயின. சம்பு சாஸ்திரி ஓர் ஊருக்கு வருகிறார் என்றால், ஏதோ, திருவிழாக்களுக்கு அலங்காரம் செய்வதுபோல் ஊரே அலங்கரிப்பார்கள். எத்தனையோ நாளாகச் சேர்ந்திருந்த குப்பை கூளங்கள் எல்லாம் போய் ஊரே சுத்தமாகிவிடும். அப்புறம், பெரியவரையும் குழந்தையையும் வைத்து ஊர்வலம் விடுவார்கள். தேசிய பஜனைகள், மேளதாளங்கள் எல்லாம் தடபுடல் படும். சம்பு சாஸ்திரி எவ்வளவுதான் இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வேண்டாமென்று சொன்னாலும் கிராமவாசிகள் கேட்பதில்லை.

முதலில், ஒரு கிராமத்தில் ஒரு பெரிய மனுஷர், சம்பு சாஸ்திரியையும், சாருவையும் ஊர்வலமாய் அழைத்துச் செல்வதற்காக, சமீப நகரத்திலிருந்து ஒரு மோட்டார் தருவித்திருந்தார். அந்தச் சமயம் சம்பு சாஸ்திரிக்கு மோட்டார் என்றாலே பயமாயிருந்தது. எந்த மோட்டாரைப் பார்த்தாலும், அது சாருவைத் தம்மிடமிருந்து கொண்டு போவதற்காகவே வந்திருக்கிறதென்று அவர் துணுக்கமுற்றார். ஆகவே, அவர் அந்த மோட்டாரில் ஏறுவதற்குக் கண்டிப்பாக மறுத்தார். "ஒரு கட்டை வண்டி கொண்டு வந்து அதில் ஊர்வலம் விடுங்கள், எனக்குச் சம்மதம், ஆனால் மோட்டாரில் மட்டும் ஏறமாட்டேன்" என்றார். அந்த ஊரிலிருந்த சில உற்சாகிகள் உடனே ஒரு மொட்டை வண்டியைப் பிடித்து அதை அலங்காரம் செய்து கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்த வண்டியில் ஊர்வலம் நடந்தது.

இந்தச் செய்தி பரவவே, மாடு பூட்டிய ரதத்தில் சம்பு சாஸ்திரியை ஊர்வலம் விடுவதென்பது சகஜமாகிவிட்டது. இதில் கிராமத்துக்குக் கிராமம் பெரிய போட்டி.

ஓர் ஊரிலே நாலு மாடு பூட்டிய ரதத்தில் ஊர்வலம் நடந்தால், அடுத்த ஊர்க்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு எட்டு மாடு கட்டிய ரதத்தில் ஊர்வலம் விடுவார்கள். அதற்கு அடுத்த ஊர்க்காரர்கள் பதினாறு மாடு பூட்டுவார்கள்! குழந்தை சாருவுக்கு இதெல்லாம் வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஆனால் சம்பு சாஸ்திரிக்கோ கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இருந்தாலும், இதுவும் பராசக்தியின் ஆக்ஞை என்பதாக எண்ணிக்கொண்டு வேண்டா வெறுப்பாய் ஊர்வல உபசாரங்களுக்கு உட்படுவார்.

இம்மாதிரி சம்பு சாஸ்திரியும் சாருவும் செங்கற்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களில் எல்லாம் பிரயாணம் செய்து, உடையார் பாளையத் தாலுக்காவுக்கு இப்போது வந்திருந்தார்கள். ராசேந்திர சோழபுரம் என்ற கிராமத்துக்கு அவர்கள் அன்று வருவதாக இருந்தது. ஊரில் வீதிகளெல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, வீட்டு வாசல்களில் கோலம் போட்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும் தோரணங்களும், 'நல்வரவு' வளைவுகளும் காணப்பட்டன. ஊரிலுள்ள புருஷர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே, பெரியவரையும் குழந்தையையும் வரவேற்பதற்காகப் போய்விட்டனர். வீட்டு வாசல்களில் எல்லாம் ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொண்டு ஸ்திரீகள் நின்றார்கள். அந்தச் சமயத்தில், அந்தக் கிராமத்து வீதியில் ஒரு மனுஷர் அவசர அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமில்லை; நமது பழைய சிநேகிதர் நெடுங்கரை சங்கர தீக்ஷிதர் தான். "இன்னிக்கு இந்த ஊரிலே என்ன விசேஷம்?" என்று கேட்பதற்கு அவருடைய நாக்கு துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், புருஷர்களே இல்லாமல் வீட்டு வாசல்களிலெல்லாம் ஸ்திரீகளாய் நிற்கவே, "இதென்னடா வம்பு?" என்று அவர் மேலும் விரைவாக நடந்தார். கடைசியில், ஒரு வீட்டிலிருந்து ஒரு பிராம்மணர் வெளியே வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் அவருக்குப் பரம சந்தோஷமாயிற்று.

தீக்ஷிதர் அந்தப் பிராம்மணரை நிறுத்தி, "ஏன், ஸ்வாமி! என்ன ஏக அலங்காரமும் அமர்க்களமுமாயிருக்கே! என்ன விசேஷம்? ஏதாவது உத்ஸ்வம் கித்ஸவம் உண்டா?" என்று கேட்டார்.

"உத்ஸவம் ஒண்ணும் இல்லை. மகான் சம்பு சாஸ்திரி வந்திருக்கார். இத்தனை நேரம் ஊர்வலம் கிளம்பியிருக்கும். அங்கே தான் நானும் போறேன்" என்றார் அந்தப் பிராம்மணர்.

"யாரு? மகான் சம்பு சாஸ்திரியா? அது யாரையா ஒத்தன் அப்படிக் கிளம்பியிருக்கான்?" என்று தீக்ஷிதர் கேட்டார்.

"என்ன, ஸ்வாமி. அவன் இவன் என்கிறீர்? சம்பு சாஸ்திரி, சம்பு சாஸ்திரின்னு எங்கே பார்த்தாலும் பிரசித்தமாயிருக்கே, உமக்குத் தெரியாதா?"

"நான் எங்கேயோ ஒரு பட்டிக்காட்டிலே கிடக்கிறவன். கிணத்துத் தவளைக்கு நாட்டு வளப்பமேன் என்று சொன்னாப்பலே, உலக விஷயங்களை அவ்வளவா நான் காதிலே போட்டுக் கொள்கிறதில்லை. இப்பவெல்லாம் காந்தி கீந்தி, காங்கிரஸ் கீங்கிரஸ் என்றெல்லாம் கூடச் சொல்லிக்கிறாளோல்லியோ? நான் அந்த விவகாரத்துக்கெல்லாம் போறதே கிடையாது. அப்படின்னா, இந்த மகான் சம்பு சாஸ்திரி என்கிறவர் மகாத்மா காந்திக்குப் போட்டியாக் கிளம்பியிருக்காராக்கும்?"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மகாத்மா காந்தியைப் பின்பற்றுங்கோன்னுதான் இவரும் சொல்றார். ஒரு சின்னக் குழந்தையையும் கூட அழைச்சிண்டு போறார். அந்தக் குழந்தைக்குத்தான் சாரு என்று பேரு. இவாள் போற இடமெல்லாம் ஜனங்கள் அப்படியே மாறிப் போயிடறாள். ஊரெல்லாம் சுத்தமாயிடறது. சண்டை, சச்சரவெல்லாம் நின்னு போயிடறது. பாருங்கோ, விருத்தாசலத்துக்குப் பக்கத்திலே, கள்ளுக்கடைக்காராளெல்லாம் சேர்ந்து, 'உமக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துடறோம். குடிக்க வேண்டாம்னு பிரசாரம் பண்றதை மட்டும் நிறுத்திடுங்கோ'ன்னு சொன்னாளாம். அவர், 'அப்படியெல்லாம் பேசிண்டு என் கிட்ட வராதேங்கோ' என்று சொல்லி விட்டாராம். அப்படிப்பட்ட மகான் ஐயா அவர்!"

"ஓஹோ! இருக்கலாம்! உலகம் பலவிதம்னு பெரியவா தெரியாமலா சொல்லியிருக்கா? இந்த மகான் சம்பு சாஸ்திரி என்கிறவருக்கு எந்தத் தேசம், எந்த ஊருன்னு கேள்வியுண்டோ ?"

"தஞ்சாவூர் ஜில்லாவிலேதான் நெடுங்கரைன்னு ஒரு கிராமத்திலே பிறந்ததாகச் சொல்லிக்கிறா. ஆனால் ரொம்ப நாளாய் அவர் சென்னைப் பட்டணத்திலே தான் இருந்தாராம்."

"ஓஹோ! நெடுங்கரை சம்பு சாஸ்திரிதானா? அந்த ஆஷாடபூதியாய்த்தான் இருக்கணும்னுட்டு அப்பவே நினைச்சேன். தன்னைப் பெற்ற தாயார் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள், பிள்ளை கும்பகோணத்திலே கோதானம் பண்ணறான்னு வசனம் சொல்வாளே, அந்தக் கதையாய்த்தான் இருக்கு!..."

தீக்ஷிதர் இப்படிச் சொன்னது அந்த இன்னொரு பிராம்மணரின் காதில் சரியாக விழவில்லை. அதற்குள் எதிரே சம்பு சாஸ்திரி - சாருவின் ஊர்வலம் வந்து விட்டது. ஊர்வலத்திலிருந்து கிளம்பிய, "மகாத்மா காந்திகி ஜே! பாரத மாதாகி ஜே! சம்பு சாஸ்திரிகி ஜே!" என்ற கோஷங்களின் பெரிய சப்தத்தில் தீக்ஷிதரின் பேச்சு அடிபட்டுப் போயிற்று. அந்தப் பிராம்மணரும் தீக்ஷிதரைப் பிரிந்து ஊர்வலக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.