தியாக பூமி/பனி/கோட்டை இடிந்தது!

விக்கிமூலம் இலிருந்து

கல்கத்தாவில் ஸ்ரீதரனுடைய வீட்டில் ராஜாராமய்யர் தம்முடைய வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புறத்திலிருந்து 'லொக்கு லொக்கு' என்று இருமுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது, ராஜாராமய்யரின் கவனம் பத்திரிகையில் செல்லவில்லை. "தங்கம்; தங்கம்!" என்று கூப்பிட்டார்.

"ஏன் கூப்பிட்டேள்?" என்று கேட்டுக் கொண்டே தங்கம் அறைக்குள் வந்தாள்.

"ஏண்டி! இந்தப் பொண்ணு இப்படி வாய் ஓயாமல் இருமிண்டிருக்கே! பிள்ளைத்தாச்சிப் பொண்ணை இப்படிக் கவனிக்காம வச்சுண்டிருந்தா, ஏதாவது இசை கேடா முடியப்போறதேடி!" என்றார் ராஜாராமய்யர்.

"இதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அந்த எழவு, சம்பந்திப் பிராம்மணன் வந்து பொண்ணை அழைச்சுண்டு போனான்னா தேவலை? உலகத்திலே ஒரு தகப்பனும் இப்படி இருக்கமாட்டான். இந்தப் பொண்ணு பத்து நாளைக்கு ஒரு கடுதாசி போடறதிலே குறைச்சலில்லை. ஒண்ணுக்காவது பதில் கிடையாதாம்.

"அங்கே அவருக்கு என்ன தொல்லையோ, என்னமோ?"

"என்ன தொல்லை வந்துடுத்து, உலகத்திலே இல்லாத தொல்லை? பணச்செலவுக்குச் சோம்பிண்டுதான் இப்படி வாயை மூடிண்டு இருக்கார்! வீட்டிலே இரண்டு லங்கிணிகள் இருக்காளே, அவா போதனையாயிருந்தாலும் இருக்கும்."

"சரி, அதுக்காக நாம் என்ன பண்றதுங்கறே?"

"நாக்பூர்லேருந்து செல்லத்தை வேறே இங்கே பிரசவத்துக்கு அனுப்பப் போறாளாம்! இரண்டு பிள்ளைத்தாச்சிகளை வைச்சிண்டு நான் என்ன பண்றது? சாஸ்திரத்துக்கும் விரோதம். இந்தப் பொண்ணானா, என்னை ரயிலேத்தி விட்டுடுங்கோ, நான் ஊருக்குப் போறேன்னு சொல்லிண்டிருக்கா, அனுப்பிச்சுடலாமான்னு பார்க்கறேன்."

"என்னடி இது? நிஜமா தானே போறேன்னு சொல்றாளா?"

"நிஜமா வேறே, அப்புறம் பொய்யா வேறயா? உங்களோட எழவு, பொய் சொல்லி இப்ப எனக்கு என்ன ஆகணும்?"

"கோவிச்சுக்காதேடி! அந்தப் பொண்ணு தைரியமாய்ப் போறேன்னு சொன்னா, திவ்யமாப் போகச் சொல்லு, அது ரொம்பத் தேவலை. இங்கே இருந்தா நீங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து அவளைக் கொன்னே விடுவயள். குரங்கு கையிலே பூமாலையாட்டமா, உன் கையிலும், உன் பிள்ளை கையிலும் ஆப்புட்டுண்டாளே பாவம்! பெண்டாட்டியாம், பிள்ளையாம்! தூத்தேரி!" என்று சொல்லிக் கொண்டே ராஜாராமய்யர் எழுந்திருந்து கையிலிருந்த பத்திரிகையைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டு வெளிக் கிளம்பிச் சென்றார்.

தங்கம்மாள் அங்கிருந்து நேரே பின்கட்டுக்குப் போனாள். அங்கே அடிக்கடி இருமிக் கொண்டே, இரும்பு உரலில் மிளகாய்ப் பொடி இடித்துக் கொண்டிருந்தாள் சாவித்திரி.

"ஏண்டி அம்மா, என்னத்திற்காக இப்படி வாய் ஓயாமே இருமறே? வேணும்னு இருமறாப்பலேன்னா இருக்கு?" என்றாள் தங்கம்மாள்.

"இல்லேம்மா! ஏற்கனவே, இருமிண்டிருக்கோன்னோ? ஏன் மிளகாய்ப் பொடி இடிக்கலைன்னு கேட்டேளேன்னு இடிச்சேன். மிளகாய்க் காரத்தினாலே ஜாஸ்தியா இருமறது." "அப்படி என் மேலே பழியைப் போடு. இஷ்டம் இல்லைன்னா, முடியாதுன்னுட்டுப் போயேன். என்னத்துக்காகப் பொய் சாக்குப் போக்கெல்லாம் சொல்றே?"

"பொய் இல்லேம்மா, இருமி இருமி மாரெல்லாம் வலிக்கிறதம்மா, தலையைக் கூடச் சுத்தறது."

"இப்படி வெறுமனே உடம்பு உடம்புன்னு என் பிராணனை வாங்காதே! சாயங்காலம் அழைச்சுண்டு போய் ரயில்லே ஏத்தி விட்டுடறேன்; பேசாமே பொறந்தாத்துக்குப் போய்ச் சேரு."

"பொறந்தகம் சவரணையாயிருந்தா நான் ஏன் அம்மா இப்படி இருக்கேன்? போட்ட கடுதாசி ஒண்ணுக்காவது தான் அப்பா பதிலே போடலையே? அது தான் நீங்க பரிகாசம் பண்றயள்."

"பரிகாசமில்லேடி! உன்னோடு வந்து நான் பரிகாசம் பண்றேனாக்கும்? நான் கூடச் சொல்லலே. எல்லாம் உன் மாமனார் உத்தரவு! நீ லொக்கு லொக்குனு இருமறது அவருக்குச் சகிக்கவில்லையாம். இன்னி ராத்திரியே ரயில் ஏத்தி அனுப்பிவிடச் சொல்கிறார். நகை நட்டுன்னு ஒண்ணும் எடுத்துண்டு போகப்படாது. பிழைச்சுக் கிடந்து வந்தால் பூட்டிக்கலாம். மாத்திக் கட்டிக்கறதற்கு ஒரு புடவையை எடுத்துண்டு கிளம்பறத்துக்குத் தயாராயிரு"

இதைக் கேட்டதும் சாவித்திரியின் முகத்தில் வியப்பும் துயரமும் ஒருங்கே தோன்றின. "என்ன அம்மா! நிஜமா, மாமாவா என்னைத் தனியா ரயிலேத்திவிடச் சொன்னார்?" என்றாள்.

"இதென்னடி எழவு! எல்லாருக்கும் என்னைப் பார்த்தா பொய் சொல்றவ மாதிரி தோணறாப்பலே இருக்கே!" என்றாள் தங்கம்மாள்.

"இல்லை, அம்மா! அவர் ஒண்டிக்காவது என் பேரிலே கொஞ்சம் இரக்கம் இருந்ததுன்னு நினைச்சுண்டிருந்தேன். அதனாலே கேட்டேன்" என்று சாவித்திரி சொன்னபோது அவள் குரலில் துயரமும் கோபமும் கலந்திருந்தன.

தங்கம்மாள் உடனே ஆங்காரமான குரலில், "ஓகோ! அப்படியா நினைச்சுண்டிருக்கே மனஸிலே! மாமனார் மகராஜன், மாமியார் மூதேவின்னு நினைச்சுண்டிருக்கயாக்கும்! அதான் ஸ்வாமி உன்னை இந்த நிலைமையிலே வச்சிருக்கார். இல்லாட்டா, உலகத்திலேயெல்லாம் ஆம்படையான் பொண்டாட்டின்னு சவரணையாயில்லையோ? அவன் ஏன் உன் மூஞ்சியைக்கூடப் பார்க்கப் புடிக்கல்லே என்கிறான்? உன்னைத் தாலி கட்டினதிலேயிருந்து சனியன் புடிச்சுதடிம்மா, புடிச்சுது!" என்றாள்.

நெடுங்கரையிலிருந்து சாவித்திரி கல்கத்தாவுக்குக் கிளம்பி வந்தபோது என்னவெல்லாமோ ஆகாயக் கோட்டை கட்டிக்கொண்டு வந்தாள். அந்தக் கோட்டை சென்ற இரண்டு வருஷ காலத்தில் ரொம்பவும் இடிந்து சிதைந்து போயிருந்தது. இப்போது அது அஸ்திவாரம் உள்படப் பெயர்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாயிற்று!

சாவித்திரி புருஷன் வீட்டில் கிருகப் பிரவேசம் செய்த அன்றே அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பார்த்தோம். அந்த வரவேற்பு அவளுக்கு அளவற்ற ஏமாற்றத்தையும் துயரத்தையும் அளித்தது. ஆனாலும், அவள் அடியோடு தைரியத்தை இழந்துவிடவில்லை. தன்னுடைய நடத்தையினால் எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடலாமென்று மனத்தைத் தேற்றிக் கொண்டாள். மாமியார், மாமனார், புருஷன் - இந்த மூன்று பேருடைய பிரியத்தையும் எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு சாவித்திரி புக்கத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள். ஐயோ! இது எவ்வளவு அசாத்தியமான - ஒன்றோடொன்று முரண்பட்ட - காரியம் என்பது அந்தப் பேதைப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இந்த வீட்டில் மாமியார் தான் முக்கியமானவள் என்பதை சாவித்திரி முதலிலேயே அறிந்து கொண்டாள். எனவே, அவளுடைய பிரியத்தைச் சம்பாதிப்பதிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தினாள். வீட்டுக் காரியங்களைச் சரிவரச் செய்வதிலும், மாமியாருக்குச் சுசுரூஷை புரிவதிலும் முழு மனத்துடன் ஈடுபட்டாள்.

இதனால், ஆரம்பத்தில் சில நாள் வரை மாமியாரின் பிரியத்தைச் சம்பாதித்துவிட்டதாகக் கூட அவளுக்குத் தோன்றிற்று. ஆனால், இது வெறும் பிரமை என்பது சீக்கிரத்திலேயே தெரிந்தது.

சாவித்திரி எவ்வளவுதான் பணிவாயிருக்கட்டும், சிசுரூஷை செய்யட்டுமே? என்ன பிரயோஜனம்? அவள் தகப்பனார் எதற்காக இப்படி அச்சுப்பிச்சாயிருக்க வேண்டும்? உலகத்திலே எல்லாத் தகப்பனார்களையும் போல் பெண்ணுக்குச் சவரணையாய் சீர் செனத்தி ஏன் செய்யவில்லை? - இதைப்பற்றித் தங்கம்மாளின் குறை தீராத குறையாயிருந்தது.

"நெடுங்கரைப் பட்டிக்காட்டிலே போய்க் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அப்பவே பிள்ளையாண்டான் முட்டிண்டான். நான் தான் பிடிவாதமாகக் கல்யாணத்தைப் பண்ணி வைச்சேன். அந்த நன்னி எந்த நாய்களுக்காவது இருக்கோ? - என்னெல்லாம் ஊர் சிரிக்க அடிச்சுட்டான் பிராமணன்! பறையனையெல்லாம் வீட்டுக்குள்ளே அழைச்சுண்டு வந்து - ஊரிலே எல்லோரும் சாதியைவிட்டுத் தள்ளிவைச்சு - ஐயையோ! இந்த அவமானத்துக்காகவே ஊர்ப் பக்கம் இத்தனை நாளாய் நான் தலை காட்டலை! - அப்புறம், போனாப் போறது, தகப்பன் பைத்தியமா இருந்தா, பொண்ணு என்ன பண்ணும்னு மனசு இரங்கிப் போய் அழைச்சுண்டு வந்தேன். அப்படியாவது என்னடி அம்மா வந்தது? - கொஞ்சம் வாயைத் திறந்தால் போரும், என் பிள்ளைக்குப் பெண் கொடுக்க நான் நீ என்று ஓடி வருவா. ஏதடா, அப்படியெல்லாம் பண்ணாதிருக்காளேன்னு யாருக்காவது நன்னி விசுவாசம் இருக்கோ? - ராங்கியிலே குறைச்சலில்லை, ராங்கி!" என்று தங்கம்மாள் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

சாவித்திரியிடம் இந்த ஒரு குறை உண்டு என்பதை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம். அவள் ரோஸக்காரி; கொஞ்சம் வாய் அதிகம். அதிலும் அவளுடைய தகப்பனாரைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அவளுக்குப் பொறுக்கவே பொறுக்காது. மாமியார் ஏசிக்காட்டுவதையெல்லாம் சகித்துச் சகித்துப் பார்ப்பாள். கடைசியில், சகிக்க முடியாமல் போய், "என்னை என்ன வேணாலும் சொல்லுங்கோ, அம்மா! எங்க அப்பாவை ஒண்ணும் சொல்லாதேங்கோ. அவர் மாதிரி எல்லாரும் இருந்தாப் போரும். அவர் எனக்குச் செய்தாப்பலே எல்லாரும் அவாவா பொண்ணுக்குச் செய்தால் போரும்" என்று ஏதாவது சொல்லி வைப்பாள். இந்த மாதிரி, பேச்சு வளரும். இதனால், போகப் போக, தங்கம்மாளுக்கு மாட்டுப்பெண் பேரில் எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இந்த எரிச்சலை அதிகமாக்கும்படியான இரண்டொரு சந்தர்ப்பங்களும் ஸ்ரீதரனால் ஏற்பட்டன.