தியாக பூமி/மழை/சாதிப் பிரஷ்டம்

விக்கிமூலம் இலிருந்து

சாதிப் பிரஷ்டம்

நெடுங்கரையில் பெருமழை நின்றது. ஆனால் மழை அடியோடு நிற்கவில்லை. சில நாள் காலையிலும் சில நாள் மாலையிலும், இன்னும் சில நாள் இரவிலுமாக விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது.

குடமுருட்டியில் வெள்ளமும் குறைந்து, அதிகாரிகளும் பெரு முயற்சி செய்ததன் பேரில் ஒரு வாரத்தில் அடைப்பு அடைபட்டது.

சம்பு சாஸ்திரியின் மாட்டுக் கொட்டகையில் அடைக்கலம் பெற்ற சேரி ஜனங்கள் இரண்டு நாளைக்குள் களத்துத் திடலில் கொட்டகை போட்டுக் கொண்டு அங்கே போய்விட்டார்கள். உடைப்பு அடைபட்டதும், சேரியில் மறுபடியும் குடிசைகள் போடத் தொடங்கினார்கள். இதற்கு வேண்டிய மூங்கிற் கழி, கீத்து எல்லாம் பெரும்பாலும் சாஸ்திரியார்தான் அவர்களுக்குக் கொடுத்தார்.

உடைப்பினால் சேரி ஜனங்களுக்கு மிகவும் துன்பம் ஏற்பட்டதாயினும், அந்தத் துன்பத்தின் மூலமாகக் கடவுள் அவர்களுக்கு ஒரு நன்மையையும் அளித்தார். சேரியின் ஒரு பக்கத்தில் உடைப்பு வெள்ளம் பாய்ந்த வேகத்தினால், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் ஜலம் தேங்கி நின்றது. அந்தப் பள்ளம் ஒரு பெரிய மூங்கில் கழி ஆழம் இருந்தபடியால், சேரி ஜனங்களுக்கு என்றும் ஜலம் வற்றாத ஒரு குளம் ஏற்பட்டது.

இதனாலும், பழைய குடிசைகளுக்குப் பதில் புதிய குடிசைகள் கிடைத்தபடியாலும் சேரி ஜனங்களுக்கு மொத்தத்தில் உடைப்பினால் நன்மை ஏற்பட்டதென்றே சொல்லலாம். இரண்டு மூன்று நாள் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர்கள் அடியோடு மறந்து, வாழ்க்கையைப் புதிய குதூகலத்துடன் தொடங்கினார்கள்.

குடமுருட்டி உடைப்பு சேரி ஜனங்களுக்குக் குளம் பறித்துத் தந்ததல்லவா? அப்படிப் பறித்தெடுத்த மண்ணையெல்லாம் வெள்ளம் என்ன செய்தது என்று கேட்டால், சேரிக்கு அருகிலிருந்த சம்பு சாஸ்திரியின் வயல்களில் கொண்டு போய்த் தள்ளிற்று. சாஸ்திரியின் நன்செய் நிலத்தில் ரொம்பவும் உயர்தரமான இரண்டு வேலி நிலம் இதனால் பாழாய்ப் போயிற்று!

ஊரிலே வேறு யாருக்கும் இவ்வளவு அதிக சேதம் கிடையாது. சாஸ்திரிக்கு மட்டும் இம்மாதிரி நேரவே ஊரார், "பார்! இவன் செய்த காரியம் பகவானுக்கே பொறுக்கவில்லை. வாயிலே மண்ணைப் போட்டு விட்டார்!" என்றார்கள்.

இந்த உலகத்தில் பகவான் தம்முடைய அத்தியந்த பக்தர்களைத்தான் அதிகமாய்ச் சோதிப்பதைக் காண்கிறோம். இது ஓர் அதிசயம் என்றால், இதைவிடப் பெரிய அதிசயம் இன்னொன்று இருக்கிறது. உலகில் ரொம்பவும் நல்ல மனிதர்களுக்கே கொடுமையான விரோதிகள் ஏற்படுகிறார்கள்! சம்பு சாஸ்திரியின் நிலைமை இப்படித்தான் இருந்தது. அந்தப் பரம பக்தரைப் பகவான் பலவிதத்திலும் சோதனை செய்தார். அந்த நல்ல மனுஷருக்குத்தான் ஊரில் விரோதிகளும் அதிகமாயிருந்தார்கள். அவருடைய நல்ல குணமும், தயாள சுபாவமுமே அக்கிரகாரத்தில் ரொம்பப் பேரை அவருக்கு விரோதிகள் ஆக்கியிருந்தன. இந்த வருஷத்தில் குடியானவர்கள் தகராறு காரணமாக அந்த விரோதம் முற்றிப் போயிருந்தது. ஆகவே, வெள்ளத்தின்போது சேரி ஜனங்களுக்கு மாட்டுக் கொட்டகையில் இடங்கொடுத்ததை வியாஜமாக வைத்துக் கொண்டு, ஊரார் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். அவர் வீட்டுக்கு நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதென்றும், அவர் வீட்டில் நடக்கும் சுபாசுப காரியங்களுக்குப் போகக் கூடாதென்றும் கட்டுப்பாடு செய்தார்கள்.

அக்கிரகாரத்தில் எல்லாருமே இந்த நடவடிக்கைகளை விரும்பினார்கள் என்பதில்லை. பாதிப்பேருக்கு மனத்திற்குள் சம்பு சாஸ்திரியின் பேரில் அன்பும் அநுதாபமும் உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் சாதுக்களாயும், பயந்த சுபாவமுடையவர்களாயும் இருந்தார்கள். தீக்ஷிதர், சாமாவய்யர், முத்துசாமி அய்யர் முதலியவர்களை எதிர்த்து நின்று சண்டை போட அவர்களுக்குத் தைரியமில்லை. "ஊரோடு ஒக்க" என்று அவர்கள் வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தார்கள். சம்பு சாஸ்திரி தமது நிலம் மண்ணடித்துப் போனதை அவ்வளவாய்ப் பொருட்படுத்தவில்லை. அந்த செய்தி தெரிந்த அன்று இரவு அவர், "என் செயலாலாவது யாதொன்றுமில்லை, இனித் தெய்வமே, உன் செயலேயென்றுணரப் பெற்றேன்" என்பதாகப் பாடி மனத்தை நிம்மதி செய்து கொண்டார். ஆனால், ஊரார் தம்மைச் சாதிப் பிரஷ்டம் செய்தது குறித்து அவருடைய மனம் சிறிது புண்பட்டது. அதுவும் தம்மைப் பற்றியல்ல; 'ஐயோ! இவர்கள் இவ்வளவு தயாளமற்றவர்களாயும் ஞானமற்றவர்களாயும் இருக்கிறார்களே!' என்றுதான். இந்த எண்ணங்களுக்கிடையில், "நல்ல வேளையாய், குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதே! இதெல்லாம் போன வருஷம் நடந்திருந்தால் எவ்வளவு தொல்லையாயிருந்திருக்கும்?" என்று நினைத்து அவர் ஆறுதல் அடைந்தார்.

சாவித்திரிக்கோ கோபம் கோபமாய் வந்து கொண்டிருந்தது. கதையில் வரும் கண்ணகிக்கு இருந்த சாப சக்தி சாவித்திரிக்கு இருந்திருக்குமானால், நெடுங்கரையில் அப்போது மண்மாரி பொழிந்து ஊரே நாசமாகியிருக்கும்! அப்படிப்பட்ட சக்தி தனக்கு இல்லையே என்று அவள் பொருமினாள். 'நல்ல வேளை! இந்தச் சனியன் பிடித்த ஊரைவிட்டுச் சீக்கிரம் போய்விடப் போகிறோம்' என்று எண்ணியபோது அவளுக்குக் குதூகலம் உண்டாயிற்று. தீபாவளிக்கு ஸ்ரீதரன் வரும்போது எப்படியாவது இரண்டு நிமிஷம் தனியாகப் பார்த்துப் பேச வேண்டும்; அப்போது தன்னைச் சீக்கிரம் அழைத்துக் கொண்டு போகும்படி சொல்ல வேண்டும் என்று அவள் அடிக்கடி எண்ணமிட்டாள். ஸ்ரீதரனைத் தனியாகப் பார்த்துப் பேசுவதற்கு அநேக யுக்திகளை அவளுடைய உள்ளம் ஓயாமல் கண்டு பிடித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் சாவித்திரி மேற்கண்டவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு மூன்று நாள் இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் தான் மாப்பிள்ளை வருவார் என்று சாவித்திரிக்குத் தெரியும். ஆனாலும், ஆசைக்கு அளவில்லையல்லவா? ஒருவேளை இவர்தான் கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாமோ என்று எண்ணி, பரபரப்புடன் எழுந்து சென்று வாசற் கதவைத் திறந்தாள். மங்களத்தின் தாயார் சொர்ணம்மாள் வண்டியிலிருந்து இறங்கி, மூட்டை முடிச்சுக்களுடன் வந்து கொண்டிருந்தாள்!

பகவான் பிரத்தியட்சமாவார் என்று எதிர்பார்த்தவனுக்கு முன்னால், கோரமான பிசாசு தோன்றினால் எப்படியிருக்கும்? சாவித்திரிக்கு அவ்வளவு ஏமாற்றமாயும் அருவருப்பாயும் இருந்தது. ஆனாலும் புத்திசாலிப் பெண்ணாகையால், அந்த ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. சொர்ணம்மாள் வாசற்படி தாண்டி உள்ளே வந்ததும், "வாங்கோ, பாட்டி!" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினாள். எழுந்திருந்து, பாட்டி எடுத்துக் கொண்டு வந்த கூடையையும் மூட்டையையும் வாங்கிக் கொண்டு உள்ளே வைக்கப் போனாள்.

இதற்குள் மங்களமும் வந்து தாயாரைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். சமையலறைக்குள் போய் உட்கார்ந்தாளோ, இல்லையோ, சொர்ணம்மாள், "ஏண்டி பொண்ணே! இதென்னடி நான் கேள்விப்படறது? உங்களைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்காமே?" என்றாள்.

"ஆமாண்டி, அம்மா! ஆமாம். உன் மாப்பிள்ளை இன்னும் என்னெல்லாம் பண்ணி என்னைச் சந்தியிலே நிறுத்தப் போறாரோ, அந்தப் பகவானுக்குத்தான் தெரியும்" என்றாள் மங்களம்.

"யாராவது தீண்டாதவாளை அக்கிரகாரத்துக்குள்ளே வரச் சொல்லுவாளா? அதிசயமாயிருக்கே? இந்தப் பிராமணனுக்கு ஏண்டி இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு!" என்றாள் தாயார். இந்தச் சமயத்தில், காமரா உள்ளில் மூட்டையைக் கொண்டு வைக்கப்போன சாவித்திரி, திரும்பிச் சமையலறைக்கு வந்தாள். சொர்ணம்மாள் சொன்னது அவள் காதில் விழுந்தது.

அப்பாவுக்குப் புத்தி கெட்டுப் போச்சு என்று பாட்டி சொன்னது சாவித்திரிக்குச் சகிக்கவில்லை. அவளுக்குத் தன்னையறியாமல் கோபம் வந்தது. வழக்கத்தை விட உரத்த குரலில் சொன்னாள்:

"எங்க அப்பாவுக்கு ஒண்ணும் புத்தி கெட்டுப் போகலை, பாட்டி! ஊரிலே இருக்கிறவாளுக்குத்தான் புத்தி கெட்டுப் போச்சு! வீடு வாசல்லாம் வெள்ளத்திலே போய் மழையிலே நனைஞ்சுண்டிருந்தவாளுக்கு இருக்க இடங்கொடுத்தால், அது ஒரு குத்தமா? - சித்தி! ஊரார்தான் இப்படியெல்லாம் சொல்றான்னா, நீ கூட இப்படிப் பேசறது நன்னாவேயில்லை."

இவ்வாறு சொல்லி விட்டுச் சாவித்திரி சட்டென்று வெளியே சென்றாள்.

சொர்ணம், இரண்டு கையையும் ஒரு தடவை தட்டி, மோவாய்க் கட்டையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, "ஏண்டி, மங்களம்! இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாயும் கையும் எப்போடி வந்தது?" என்றாள்.

"ஏற்கனவே, வாய்த் துடுக்கு ஜாஸ்தி, கல்யாணம் ஆனதிலிருந்து தலைகீழாய்த்தான் நிக்கறது" என்றாள் மங்களம்.

"ஐயையோ! இது புக்காத்திலே போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பை கொட்டப் போறதோ, தெரியலையே?"

"முதல்லே புக்காத்துக்குப் போகணுமேடி, அம்மா! அதைச் சொல்லு! ஊரிலே யாரோ சம்பந்தியாத்துக்குக் கடிதாசி எழுதிப் போட்டிருக்கான்னு சொல்றா. என்ன நடக்கப் போகிறதோ, என்னமோ?"

இந்த மாதிரி இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சாவித்திரி பூஜை அறைக்குள் போய் அம்பிகைக்கு நமஸ்காரம் செய்தாள். பிறகு தலைநிமிர்ந்து கைகூப்பிக் கொண்டு, "அம்பிகே! தாயே! அப்பாவை ஊரார்தான் கரிக்கிறார்கள் என்றால், உற்றாரும் கரிக்க வேண்டுமா? ஐயோ! நான்கூடச் சீக்கிரத்தில் கல்கத்தாவுக்குப் போய் விடுவேனே? அப்புறம், அப்பாவுக்கு யார் இருக்கிறார்கள்? அம்பிகே! சித்தியையும், பாட்டியையும் நல்லவாளாய் ஆக்கிவிடக் கூடாதா? எங்க அப்பாவை இப்படிக் கரிக்காமல் செய்யக் கூடாதா?" என்று பிரார்த்தித்தாள்.