தியாக பூமி/ கோடை/சாவித்திரியின் அலறல்
சாவித்திரியின் அலறல்
சாவித்திரிக்குச் சாபங் கொடுத்த குரல் எந்த வீட்டிலிருந்து வந்ததோ, அந்த வீடு நெடுங்கரை அக்கிரகாரத்திலேயே பெரிய வீடாய்க் காணப்பட்டது. அதுதான் சம்பு சாஸ்திரியின் வீடு என்பதை நாம் சுலபமாய் ஊகிக்கலாம்.
அந்த வீட்டின் முன் வாசற்படிக்கு மேலே 'ஸ்ரீராமஜயம்' என்றும் 'நல்வரவு' என்றும் எழுதியிருப்பதைப் பார்த்ததும், நமக்கும் உள்ளே போகலாம் என்ற தைரியம் ஏற்படுகிறது. வீட்டுக்குள்ளிருந்து வரும் புஷ்பங்களின் நறுமணமும் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது.
உள்ளே சென்றதும், விஸ்தாரமான கூடத்தைப் பார்க்கிறோம். கூடத்தின் சுவரில் படங்கள் மாட்டப் பட்டிருக்கின்றன. ஒரு படத்தில், ஸ்ரீராமன் மகுடாபிஷேகம் செய்து கொள்கிறான். இன்னொரு படத்தில் குழந்தை கிருஷணன் கட்டைவிரலை ருசி பார்த்துக் கொண்டிருக்கிறான். மற்றொரு படத்தில் வேணுகோபாலன் பசுமாட்டின் மீது சாய்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கிறான். வேறொரு படத்தில் சீதை மாயமானைப் பிடித்துத் தரும்படி இராமனைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இன்னொரு படத்தில் ஸ்ரீசுப்பிரமண்ய சுவாமி மயில் வாகனத்தில் வீற்றிருக்கிறார்.
இவற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், இனிமை ததும்பும் பெண் குரலில், செஞ்சுருட்டி ராகத்தில்,
'எப்போ வருவாரோ எந்தன் - கலிதீர'
என்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனை கேட்கிறது. பாட்டு வந்த பக்கம் திரும்பிப் பார்த்தால், கூடத்தின் ஒரு பக்கத்திலுள்ள பூஜை அறையில் ஓர் இளம்பெண் உட்கார்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த அறையின் சுவரோரத்தில் அமைந்த பூஜை மண்டபத்தில் பித்தளைப் பீடம் ஒன்றில் தேவியின் விக்கிரகம் இருக்கிறது. பின்னால் சில படங்களும் இருக்கின்றன. மண்டபத்துக்கு எதிரில் அழகாக இழை கோலம் போட்டிருக்கிறது. குத்துவிளக்கு எரிகிறது.
பாடிக்கொண்டிருந்த பெண்ணுக்கெதிரில் இரண்டு தாம்பாளங்கள் இருக்கின்றன. ஒன்றில் உதிரிப்பூக்களும், இன்னொன்றில் தொடுத்த பூமாலைகளும் இருக்கின்றன. அப்போது அந்தக் குழந்தை-ஆம், குழந்தையென்றுதான் சொல்லவேண்டும்; வயது பதின்மூன்று பதினாலுக்குள் தான் இருக்கும். ஊசியும் நூலும் வைத்துக்கொண்டு சம்பங்கிப் பூக்களை நீளவாக்கில் கோத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பால் வடியும் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.
பின்கட்டிலிருந்து, முன்னமேயே நாம் கேட்ட ஸ்திரீயின் குரல், "அடியே சாவித்திரி! நீ நாசமாய்ப் போக! இப்போ உடனே எழுந்து வர்றயா இல்லையா?" என்று உரத்துக் கத்தியது கேட்டது.
"நான் நாசமாய்ப் போய்ட்டா அப்புறம் நீ சௌக்யமா யிருப்பாயா, சித்தி?" என்றாள் சாவித்திரி. இப்படி அவள் மெதுவான குரலில்தான் சொன்னாள். ஆனாலும் அது பின்கட்டுக்கு எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த கணம், உள்ளே இன்னொரு வயதான ஸ்திரீயின் குரல், "வாயைப் பார்த்தயோல்லியோ, வாயை!" என்று சொல்வது கேட்டது.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "என்ன சொன்னே?" என்று கேட்டுக் கொண்டு ரௌத்ராகாரமாக ஒரு ஸ்திரீ சமையலுள்ளிருந்து வந்தாள். அவளுக்கு வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். அவளுக்குப் பின்னால் முதுமைப் பிராயத்து ஸ்திரீ ஒருத்தியும் வந்தாள்.
சாவித்திரி சாந்தமாக, "சித்தி! நான் ஒன்றும் சொல்லிவிடவில்லையே! இப்ப, ஊரிலிருந்து அப்பா வந்துடுவாளே; வந்ததும் பூஜைக்கு எல்லாம் தயாராயிருக்கவேண்டாமா? அதுக்கோசரம் இந்தப் பூவை ஒரு நிமிஷத்திலே தொடுத்து வைச்சுட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே நீ கோவிச்சுண்டு நூறு கட்டேலே போறதுக்கும், ஆயிரம் நாசமாய்ப் போறதுக்கும் இழுத்துட்டயே" என்றாள். "ஆமாண்டி, ஆமாம்! உனக்கு நாலு வயதிலேருந்து வேளா வேளைக்குச் சாதம் போட்டு, தலை பின்னி, எண்ணெய் தேச்சுவிட்டு, எல்லா எழவும் எடுக்கிறதுக்கு எனக்குப் பாத்தியதை உண்டு; ஒரு வார்த்தை சொல்றதுக்கு மட்டும் பாத்தியதை இல்லை! ஆமானே?" என்றாள் மங்களம்.
"இப்ப என்னடி ஆச்சு, பெண்ணே! இன்னும் கல்யாணம், கார்த்தி, தீபாவளி, சங்கராந்தி, திரட்சி, சீமந்தம் எவ்வளவோ பாக்கி இருக்கே! அவ்வளவு எழவும் நீ தானே எடுத்தாகணும்?" என்றாள் மங்களத்தின் தாயார்.
"பாட்டி! எனக்குக் கல்யாணமும் வேண்டாம். கழுத்தறுப்பும் வேண்டாம். சித்திக்கு ஏற்கனவே வையத் தெரியாது! நீங்க வேறே கத்துக் கொடுங்கோ!" என்றாள்.
இதைக் கேட்ட பாட்டி! "பார்த்தாயா? பார்த்தாயா? நான் கத்துக் கொடுக்கிறேனாமே! முளைச்சு முளையாகலே? அதுக்குள்ளே இவ்வளவு அகமா? இந்த வீட்டிலே நான் என்னத்துக்கடி இருக்கேன் இனிமேல்? இதோ போறேன்! நீயாச்சு, உன் பொண்ணாச்சு" என்றாள்.
அதற்கு மங்களம், "நன்னாயிருக்கே? நீ என்னத்துக்குப் போறது? நாளைக்கு வீட்டைவிட்டு ஓடப்போற நாய்க்காக நீ ஏன் போகணும்? பேசாமே இரு. நானும் போனால் போறது, போனால் போறது என்று விட்டு விட்டுத்தான் இப்படிக் கட்டை துளுத்துப்போச்சு, இதோ கரண்டியைக் காய்ச்சிண்டு வந்து இவ முதுகிலே சூடு போடாத போனால், என் பேர் மங்களமில்லை" என்று சொல்லிவிட்டு, அவசரமாகச் சமையற் கட்டுக்குள் போனாள். அவளைத் தொடர்ந்து பாட்டியும் சென்றாள்.
அவர்கள் போன பிறகு, சாவித்திரி சற்று நேரம் மேலே பார்த்த வண்ணம் மௌனமாயிருந்தாள். பிறகு குனிந்து பூவைக் கோக்க ஆரம்பித்தாள். அவள் கண்ணில் துளித்திருந்த ஜலம் முத்து முத்தாகப் பூக்களின் மீது உதிர்ந்தது. கண்ணீரை நிறுத்துவதற்காகவோ என்னவோ அவள் கண்ணை இறுக மூடிக்கொண்டு சற்று நேரம் இருந்தாள். கூடத்தில் காலடிச் சத்தத்தைக் கேட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
மங்களம் சமையலறையிலிருந்து கையில் இரும்புக் கரண்டியுடன் வருவது தெரிந்தது. அந்த இரும்புக் கரண்டியின் அடிப்பாகம் பழுக்கக் காய்ந்து அதிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது.
"ஐயோ!" என்று அலறிப் புடைத்துக்கொண்டு சாவித்திரி எழுந்தாள். பூஜை அறையிலிருந்து வெளியே முற்றத்தைப் பார்க்க ஓடினாள். மங்களமும் அவளைத் தொடர்ந்து போனாள். முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் பாய்ந்து ஏறினாள் சாவித்திரி. மங்களம் அப்படியும் விடவில்லை. அவள் ரொம்ப நெருங்கி வந்துவிடவே, சாவித்திரி ரேழிக் கதவைத் திறந்து கொண்டு ரேழியில் ஓடினாள்.
அதே சமயத்தில், வாசற்பக்கத்திலிருந்து வாசற்கதவும் திறந்தது.
சம்பு சாஸ்திரி உள்ளே வந்தார்!