உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிடம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திராவிடம்

இரா. நெடுஞ்செழியன் M. A.

விலை 2 அணா

பைந்தமிழ்ப் பதிப்பகம்,
கோவில்பட்டி.

முதற் பதிப்பு. ஜனவரி-51.


கிடைக்குமிடம்:-

S.ராமையா,
திராவிடச் செய்தி மன்றம்.
மெயின் ரோடு, கோவில்பட்டி.


முகவுரை.

திராவிடம் என்றால் என்ன என்பதை விவரித்தும்; திராவிட மக்களின் இன்றைய இழிநிலையை விளக்கி; புத்துலக பாசறைக்கு இளைஞர்களை அழைத்து நாம் ஒரே இனம் என்பதை மக்கள் உணருமாறு செய்யப்பணியாற்ற வேண்டி அறிஞர்: நெடுஞ்செழியன் விண்ணப்பித்து கொண்டுள்ளார் இச்சிறு நூல் மூலம்.


இந்நூலை அன்பர்கள் ஆதரித்து; பேராதரவு நல்குவரென்று நம்புகிறோம்.


பைந்தமிழ்ப் பதிப்பகம்.

*

திராவிடம்

*


இரா. நெடுஞ்செழியன் எம். ஏ.


இது ஒரு கட்சியின் முழக்கமல்ல; ஒரு இனத்தின் இருதயகீதம்! மூலாதார உண்மை எங்கும் எந்த வகையான மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இந்தக்கருத்தை நாம் கூறுகிறோம் என்ற காரணத்தால் எதிர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அலட்ச்சியப்படுத்துபவர்கள் நமக்கல்ல நாட்டுக்கு கேடு செய்கிறார்கள். தங்கள் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்!

சின்னஞ்சிறு நாடுகள், இயற்கை வளமற்ற நாடுகள், இரவல் பொருளில் வாழ்வு நடத்தவேண்டிய நாடுகள் கூட, தனி அரசுரிமை பெற்றுவிட்டன இங்கோ, இலக்கியச் செறிவை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வாழ்ந்துவந்த நாடு, இன்று மற்ற நாடுகளுடன் பிணைக்கப்பட்டு, பிடி ஆளாகிக்கிடக்கிறது. தங்கள் வாழ்நாளில் தாய் நாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்தெறிவதை, பெரும்பணி என்று கருதும் வீரர்களுக்கு அழைப்புவிடுகிறோம், திராவிடநாடு திராவிடருக்கே, என்பதை மூலை முடுக்கிலுள்ளோரும் அறியச்செய்யுங்கள், அணி வகுப்பில் சேருங்கள் என்று கூறுகிறோம்.

நமது கொள்கையின் மாசற்ற தன்மையை, திட்டத்தின் அவசியத்தை இலட்ச்சியத்தின் மேன்மையை அனைவரும் அறியும்படி விளக்க, இந்த ஜூலை 1-ந் தேதி திராவிடப் பிரிவினை தினமாகக் கொண்டாடத் திராவிடர் இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது "திராவிட நாடு திராவிடருக்கு" என்ற திட்டத்தை நாம் அர்த்தமற்றுத் தீட்டிக்கொள்ளவில்லை -- தக்க --மறுக்கமுடியாத காரணங்கள் உள்ளன. 

கண்டனம் செய்வோர், கேலிசெய்வோர், அலட்ச்சியமாக கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே திராவிட நாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களை கொஞ்சம், ஆரஅமர இருந்து யோசித்துப்பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்ளுகிறோம். பன்முறை நாம் கூறிஇருக்கிறோம் இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்தில் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஓர் முறை, அதே காரணங்களை, இம்முறை, இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்தில் நாட்டுமக்களுக்கு மீண்டும் ஓர்முறை அதே காரணங்களை கூறுகிறோம்:-

1. இந்தியா என்பது ஒரு கண்டம் எனவே அது பல நாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பாமுழுவதும் ஒரு குடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

2. இந்தியா பிரிட்டீஸ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சிகொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது பிரிட்டீஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச்சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரே நாடு என்று கருதினர், மற்றவரையும் கருதும்படி செய்தனர்.

3. மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடி மக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பந்தத்துவம இவைகள் தான் இன இயல்புகள் இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாக கொள்ளலாம். திராவிடரும் முஸ்லிமும் அதிகமான வித்தியாசம், இன இயல்புகளில் இல்லாதவர்கள். ஆரிய இனஇயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது. பகைமை பெரிதும் உண்டு. இந்தத்தனித்தனி இன இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும் இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும் சூது சூழ்ச்சியிலும் தன்னலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுபாவத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.

4. இந்தியா ஒரே நாடு என்றுகூறி வருவதால் ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இன நலன்கள் தவிடு பொடியாயின.

5. முரண்பாடுள்ள இயல்புகளைக்கொண்ட இனங்களை ஒன்றாகச்சூழ்ச்சியால் பிணைத்துக்கட்டுவதால், கலவரமும் மனக்கிலேசமும் தொல்லையுமே வளர்ந்தன, எனவே எதிர்காலத்தில் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக் காடாகாதிருக்க வேண்டுமானால், இப்போதே சமரசமாக இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.

6. இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல கேட்டறியாததுமல்ல, ஏற்கனவே இந்தியாவில் பிராஞ்சு இந்தியா, டச் இந்தியா, போர்த்துகல் இந்தியாக்கள் உள்ளன. இது போல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என்று மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

7. சுதேச சமஸ்தானங்கள் 574 உள்ளன. அவைகளில் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை, அது போல், மூன்று பெரும்பகுதிகள் தனித்தனி ஆட்சி முறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக் கொள்ள வழிதேடிக் கொள்வது, தடுக்க முடியாத உரிமை. 8. ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டது துருக்கி வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும் தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.

9. தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி வளர்க்க ஏது உண்டாகும்.

10.அசோகர், கனிஷகர், ஹர்ஷர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிட நாடு எனத் தனிநாடு இருந்தது.

11. தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்குள்ள வசதிக்கேற்படி பொருளாதார விருத்திசெய்து கொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச்சுரண்டும் கொடுமையை ஒளிழிக்கவும் முடியும்.

12. அந்தந்த இனத்துக்கெனத் தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான் அந்தந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சம அந்தஸ்து பெறமுடியும்.

13. இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித் தான், ஆரியர்கள் இமயம் முதல் குமரிவரை உள்ள இடத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக்கொண்டு அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய் உழைத்து உருவின்றி சிதைபவர்களாய் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக் கொடுமை நீங்க வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்த வழி.

14. ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கையில்லை. ஒரு இனத்து ஆட்சியின்கீழ் மற்றொரு இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உணடாகிவிட்டது. அச்சமும் அவ நம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே பயங்கரப் புரட்சியைத் தடுக்கவே, இப்போது பிரியவேண்டும் என்கிறோம்.

15. இந்தியா பிரியாது இருந்ததால் இதுவரை, ராணுவ, பொருளாதார, அறிவு, பலம், வளர்ந்ததாகவோ இந்திய இனம் என்ற புதிய சமுதாயம் அமைந்ததாகவோகூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல் வளையை மற்றொரு இனம் அழுத்தி நெரித்துக் கொல்லாது போனதற்குக்காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஸ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கி வைத்திருந்ததால்தான் எனவே இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க, இனவாரியாக இடம் பிரித்து விடுவதே ஆபத்தைத் தடுக்கும் வழி.

எனவே இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச்சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதிக்கம் அடங்கவும் பொருளாதாரச் சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம், சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாக பிரிக்கவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர் இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்க வேண்டும், இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இன இயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை, மற்றவைகள் மிதித்துத் துவைத்து அழிக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங்கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோலா, இந்தியாவைச் செய்து வீட்டு, தாங்கள் வாழ எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும். என்ற கேடுகால யோசனையுங் கொண்டவர்களே. இந்தப்பிரிவினைத்திட்டத்தை எதிர்ப்பார்.

இன்னோரன்ன காரணங்களையும் ஆரிய ஆதிக்கம் வளர்ந்தவிதம் அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதின் அவசியம் ஆகியவைகளை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினோம். இந்தத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதன வென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தை சவாடலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக் கெடுக்கவும். நமது எதிரிகள் முனைந்து நிற்பதைக் பொருட்படுத்தாது நம் கடனைநாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம்.

இஸ்லாமியர்கள் இதை உணர்ந்து தங்கள் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர் வடக்கே, இன அரசு, பாக்கிஸ்தான் ஏற்பட்டு விட்டது. அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போ ராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள், முழக்கமாக கொள்ளாததற்கு முன்பு நாம் கொண்டோம், அவர்கள் லாகூரில் பாகிஸ் தான் தீர் மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் "திராவிட நாடு திராவிடருக்கே” என்று தீர்மானம் செய்தோம், நாடெங்கும் இந்த லட்சியத்தை விளக்கிப்பிரச்சாரம் செய்தோம் - செய்து வருகிறோம்.

பாக்கிஸ்தான் தேவை என்பதற்கு கூறப்பட்ட காரணங்களைவிட அதிகமான சிலாக்யமான காரணங்கள் திராவிடத்தனி அரசுதேவை என்பதற்கு உள்ளன. ஆனால் திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாககாணோம்.

இலட்சியச் “சொல்” திராவிடம்

திராவிடம்!

"திராவிடம்" என்ற சொல்லாராய்ச்சிபற்றி பலரும் தங்கள் தங்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். “திராவிடம்,” தமிழ்ச் சொல் அல்லவே, அதை எப்படி நீங்கள் வைத்துக்கொள்ளல் சரியாகும் என்று நம்மைக் கேட்கிறார்கள். "திராவிடம்" என்பது தமிழகத்தைக் கிரேக்கர் வழங்கிய சொல்லாகும். அது அவர்களால் இறக்குமதி செய்யப்பட்டதாகும் என்று அன்பர் ஆர். கே. சண்முகம் கூறுகிறார். வேறு சிலர் வடமொழியாளர் வழங்கிய சொல் "திராவிடம்" என்கிறார்கள். தோழர் அண்ணல்தங்கோ. அது "திராவி" என்ற இழிசொல்லிலிருந்து பிறந்தது என்கிறார். பலரும் பலவிதக் காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால், "திராவிடம்" என்ற சொல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தார், வரலாற்று அடிப்படிடையை ஆதாரமாகக்கொண்டு வழங்குகிறார்களே யல்லாமல் சொல்லாராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டல்ல.


கண்டமாகக் கருதும்போது.... ?

ஒரு பழம்பெரும் நாகரீகத்திற்கு அந்த நாகரிகத்தை அடிப்படையாகக்கொண்ட மக்கள் வாழும் பகுதிக்கு, மொழிக்கு. உலக வரலாற்றறிஞர்களும். மொழி நூல் அறிஞர்களும் "திராவிடம்"" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உலக அறிஞர்களும், வரலாற்று ஏடுகளும் வழங்கும் பெயரையே நாமும் வழங்குகிறோம். அது ஒரு நாட்டிற்கு, மொழிக்கு மக்களுக்கு, நாகரிகத்திற்கு இடுகுறி சிறப்புப்பெயர் என்ற முறையில் வந்து விட்டது. அதன் ஓசையும் தமிழ் உச்சரிப்புக்கு மாறானதல்ல ஆகவேதான். அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நாம் தம்பிமார்களால் அழைக்கப்படும்போது. அண்ணன்மார்களாகிறோம். அண்ணன்மார்களுக்கு முன் தம்பிகளாகிறோம். மொழியால் தமிழர்களாகிறோம். வரலாற்றால், இடத்தால் இனத்தால் திராவிடர்களாகிறோம். துணைக்கண்டப்பிரிவால் இந்தியர்களாகிறோம். கண்டமாகக் கருதும்போது ஆசியாக்காரர்களாகிறோம். நமது கழகம் வரலாற்று முறையில் அரசியல் கழகமாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு ஒப்ப வரலாறு அழைக்கும் "திராவிடம்" என்ற சொல்லையே நாமும் வழங்குகிறோம்.

சொல் குற்றமல்ல

"திராவிடம்" என்றசொல் தூய தமிழ்ச்சொல்லே என்று கூறுவதற்கும் ஆராச்சி கருத்துக்கள் இருக்கின்றன. திரை இடத்தைச் சேர்ந்தவர்கள் “திராவிடர்கள்” என்றபெயர் பெற்றனர் என்று, ஹீராஸ் பாதிரியார் கூறுவார். வடமொழியாளர். கிரேக்கர்கள் ஆகியோர் 'தமிழகத்தை' அப்பெயரால் வழங்கினர்: 'தமிழகம்' என்ற சொல்லை ‘திராவிடம்’ என்று திருத்தி வழங்கினர் என்று கொண்டாலும் அதிக தவறு ஒன்றுமில்லை. ஏன் என்றால், திராவிடம் என்ற சொல்லுக்கு அடிப்படை தூய தனித்த தமிழ்ச்சொல் திரிந்துவிட்ட காரணத்தாலேயே அது எப்படித் தமிழ்ச்சொல் அல்லாமற்போய் விடும். இப்படிப்பார்த்தால், 'திராவிடம்' என்ற சொல். அண்ணல்தங்கோ போன்றவர்களுக்குப் பிடிக்கமலிருக்கக் காரணமில்லை. 'திராவிடம்' என்ற சொல் அவருக்கும், ஆர்.கே.சண்முகனாருக்கும் பிடிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் 'திராவிடம்' என்ற சொல்லிலுள்ள குறை அல்ல. அவர்கள் தவறான கருத்துக்களின் மீது தங்களுடைய காதையும், கருத்தையும் ஆக்கிவைத்துக் கொண்டிருக்கும் குறையேயாகும்.

தவறு என்ன?

'திராவிடம்' என்ற சொல் வேதம். ஸ்மிருதி, உபநிஷத்துக்கள் எதிலும் இல்லை. ஆகவே பிடிக்கவில்லை என்கிறார் சண்முகம். 'பாக்ஸ்தான்' எந்த வேதத்திலே. எந்த ஸ்மிருதியிலே. எந்தக் குரானிலே. எந்த வரலாற்று ஏட்டிலே இருந்தது? பாக்கிஸ்தானிகளின் எந்த அகராதியிலே இடம் பெற்றிருந்தது? ஒன்றுமில்லையே! பத்து ஆண்டுகளுக்குள்ளாவே உண்டாக்கப்பட்டு. இன்று அவனி முழுவதும் பரவி நிற்கும் சொல்லாக இருக்கிறதே. 'பாக்கிஸ்தான்' என்ற சொல். ஆனால் 'திராவிடம்' என்ற சொல் அப்படிக்கூட இல்லையே: பழந்தமிழ் நூல்களிலும். இருக்கின்றனவே!

'பாக்கிஸ்தான' என்ற புதுப்பெரை ஒரு நிலப்பகுதிக்குப் புதிய பொருள் கொள்வோம்! திரு-இடம். திருவிடம் -- திரவிடம்-திராவிடம் என்று ஏன் கொள்ளக் கூடாது? அழகிய இடம் என்னும் பொருள் தரும் சொல்லை. நாம் பயன்படுத்துவதாக ஏன் கொள்ளக் கூடாது? வரலாற்றால் அழைக்கப்படும் சொல்லும். 'திராவிடம்' நம்மால் அழகிய இடம் என்று பொருள்பட அழைக்கப்படும் சொல்லும்'திராவிடம் இரண்டு விதத்திலும் இணங்கியிருக்கும் 'திராவிடம்' என்ற சொல்லை ஏன் பயன்படுததக்கூடாது? திராவிடத்தில் வாழ்பவர்கள் திராவிடர்கள். இதில் தவறு என்ன? வரலாற்றையும். மொழியையும் ஆராய்ந்து, அதனோடு அரசியல் பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளையும் ஒட்டிவைத்துப் பார்க்க தோழர் அண்ணல்தங்கோ சிறிதுபழக்கம் பெறுவாரானால் 'திராவிடம்' என்ற சொல்லின் இன்றியமையாமையை அவர் உணர்வார் என்பதில் ஐயமில்லை.

தமிழ்ச் சொல்லே

பெயரைவிட நமக்குப் பொருளே முக்கியம். ஆகவே தான், பொருளைப்பற்றிச் சற்று மிகவாகக் கவலைப்படுகிறோம்: அண்ணல் தங்கோவைப் போன்றவர்கள் நாட்டில் பெருவாரியாகத் தோன்றி, பெயர் ஒன்றிலேதான் எங்களுக்கு வேறுபாடு, மற்றெவற்றி லும் ஒப்புதலுடையவர்ளே என்று கூறுவார்களேயானால். அந்த நிலையில் அந்தப் பெயர் மாற்றத்திற்கு நாங்களெல்லாம் அவசியம் இசைந்து சொல்கிறோம் என்பதை இப்பொழுதே உறுதிகூறுகிறேன். 'திராவிடம்' என்ற சொல் இன்றைய நிலையில் உணர்ச்சியின், ஊக்கத்தின், தன் மதிப்பின், தனி நாகரிகத்தின் இருப்பிடமாக இருக்கிற காரணத்தாலும், அது தமிழ்ச்சொல்லே என்றுகொள்ள இடமிருக்கிற காரணத்தாலும் அதை நாம் வழங்குகிறோம். அதில் வெட்கப்படவோ, துக்கப்படவோ அவசியம் எதுவுமில்லை.

நாம் நம்முடைய நாட்டை அழகிய நாடு என்றே அழைக்கிறோம். மாநிலத்தில் அழகிய நாடாகத்தான் நமது திராவிடம் விளங்குகிறது. நமது நாட்டின் மூன்று புரத்திலும் அலைகடல்கள் முத்தமிட்டுத் தழுவி நிற்கின்றன: இரண்டு பக்கமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும். மேற்குத்தொடர்ச்சி மலையும்.வடக்கே விந்தியமும் இயற்கை அரண்களாக விளங்குகின்னற: மலைகளிலே நீரருவிகள்; நீரருவிகள் கானாறுகளோடு சென்று கலக்கின்றன,கானாறுகளின் இருமடங்கும் மலைச்சாரல்கள், அவைகளிலே யானைகள்; வானைவளைத்திடும் காடுகள் அவைகளில் உலகோர் புகழும் சந்தனமும், அகிலும்,எங்குபார்த்தாலும் சாலைகளும், சோலைகளும் ; அவைகளிலே மான்கள் துள்ளுகின்றன குயில் பாடுகின்றன; வற்றாத ஆறுகள் வளைந்துவளைந்து ஓடுகின்றன; அவற்றின் அருகெல்லாம் விளைவைப்பெருக்கும் வயல்கள்; கதிர்கள் விளையும் கழனிகள்; கடலிலே முத்து நிலத்திலே தங்கம், வெள்ளி இரும்பு போன்ற உலோகங்கள்; இவற்றை யெல்லாவற்றையும்விட பண்பட்ட நாகரிகத்தைத் தாங்கி நிற்கும் தமிழ் அதனை வழங்கும், மனவளம் படைத்த மக்கள்; இவ்வளவு அழகான பொருள்கள் காணப்படும் நாட்டை நமது நாட்டை ஏன் அழகிய நாடு என்று அழைக்கக்கூடாது?


"https://ta.wikisource.org/w/index.php?title=திராவிடம்&oldid=1638300" இலிருந்து மீள்விக்கப்பட்டது