திருக்குறள் கட்டுரைகள்/எது அறிவு!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
எது அறிவு?

“அறிவு” என்பது எது? எது அறிவு? என்னென்னவோ எவராலோ ஆராயப்பெற்று வருகிற இக் காலத்தில், நாம் இதையாவது இப்போதாவது ஆராய வேண்டாமா? ஆராய்வோம். இன்றேல், “நாம் அறிவைப் பெற்றிருக்கிறோம்” என்று எவ்வாறு கூறுவது?

அறிவு கண்களாற் காணக்கூடிய ஒரு பொருளன்று; என்றாலும், மக்களின் செயல்களைக் கொண்டு அதை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது. அறிவுடையவர்கள் நல்லவர்கள் என்றும், அறிவற்றவர்கள் பொல்லாதவர்கள் என்றும் சொல்லப்பெற்று வருகிறது.

இஃது உணைமையானால் எதை அறிவு என்று கூறுவது என்பது விளங்கவில்லை. இதனை ஆராயும் பொழுது நமக்கும் பல ஐயப்பாடுகள் தோன்றுகின்றன.

அறிவைக் காண வேண்டுமானால், உண்டு, உறங்கி ஓய்ந்து கிடக்கும் நல்ல பிள்ளைகளிடஞ் சென்று பயனில்லை; ஓயாது சேட்டை செய்து, விரைவாகத் துன்பத்தை விளைவிக்கும் பொல்லாத பிள்ளைகளிடத்துத்தான் அதைக் காண முடிகிறது.

பணத்தை முடிந்து தோளிற் போட்டுக்கொண்டு. நடந்து செல்லும் நல்ல மனிதர்களைவிட, அதனை அவிழ்த்து எடுக்கின்ற முடிச்சவிழ்க்கிகள் அறிவை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

உயர்ந்த பொருளை வைத்து, உள்ள விலை கூறி விற்கின்ற நல்ல வியாபாரிகளைவிட, மட்ட பொருளை அதிக விலைக்கு விற்றுப் பொய்கூறிப் பொருள் தேடும் பொல்லாத வியாபாரிகள் அதிக அறிவுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.

நேர்மையாகத் தொழில் செய்கிற உத்தியோகத்தர்களைவிட, இலஞ்சம் வாங்கித் தொழில் செய்யும் உத்தியோகத்தர்களுக்கு மிக்க அறிவு வேண்டியிருக்கிறது.

உடலை வருத்தி, உழைத்துழைத்து உண்ணுகின்ற கிராம மக்களைவிட, உழைக்காது உண்டு வாழ்கின்ற நகர மக்கள் மிகவும் அறிவுடையார்களாகத் தோன்றுகிறார்கள்.

பொதுநலங் கருதித் தொண்டு செய்து வருகின்ற உண்மையான உழைப்பாளிகளைவிட, தந்நலங் கருதி பொதுத் தொண்டு செய்வதாக நடிக்கின்ற தீய மக்களிடத்து அதிக அறிவு காணப்படுகின்றது.

நெறி தவறாது வாழ்க்கை நடத்திவரும் பெண்களைவிட, நெறி தவறி வாழ்வை நடத்தும் பெண்கள் மிக அறிவுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.

முடிவாகக் கூறுமிடத்து, “யோக்கியர்களைவிட அயோக்கியர்களே மிக்க அறிவுடையவர்களாகக் காணப் படுகிறார்கள்” எனக் கூறலாம். “நல்ல மனிதன்” என்றால், “பாவம்! ஒன்றும் தெரியாதவன்” என்றும் “பொல்லாத மனிதன்” என்றால், எவராலும் ஏமாற்ற முடியாதவன் என்றும் பொதுவாக நம்மிடையே வழங்கி வருகிற ஒரு வழக்கும் இதனை மெய்ப்பிக்கும்.

அவ்விதமாயின், “எது அறிவு? எவரிடத்துக் காண்பது அறிவு? பொல்லாத மக்களிடத்திலிருந்துதான் அறிவு ஒளி வீசுமா? நல்ல மக்களிடத்திலிருந்து அஃது ஒளி வீசாதா?” என்ற கேள்விகள் நம்மிடையே எழும்.

இக்கேள்விகளைப் பலரிடத்தும் கேளுங்கள். வருகின்ற விடை உங்கள் அறிவுப்பசிக்கு ஏற்ற உணவாக இருக் கிறதா? என்று சுவைத்துப் பாருங்கள். பிறகு இதே கேள்வியைத் திருவள்ளுவரிடம் போய்க் கேளுங்கள், ஏனெனில், இவர் தாம் “எது அறிவு?” என்பதைக் காட்டகூடியவர். அவர் ஒருவரே ‘அறிவு எது?’ என்பதைக் காட்டியிருக்கிறார். அது எது?

மண்ணை, பெண்ணை, பொன்னை, பொருளைக் கண்டால் மனம் அவற்றையடையத் தாவுமாம். தவறான வழியிலும் அடைய எண்ணுமாம். மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து, தீய எண்ணங்கள் தீய செயல்களிடத்திலிருந்து விலக்கிக் காப்பாற்றி, நல்ல எண்ணங்கள், நல்ல செயல்களிடத்து அதைச் செலுத்துவது எதுவோ, அதுவே அறிவு என்று வள்ளுவர் கூறுகிறார்.

இக் கருத்துக்களடங்கிய வள்ளுவருடைய சொற்களை அவருடைய வாக்கினாலேயே கேளுங்கள்.

சென்ற விடத்தாற் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

என்பதே அவரது வாக்கு.

“மனம் சென்றவிடமெல்லாம் அதனைச் செல்ல விடாது தடுத்து, அதைத் தீமைகளிலிருந்து விலக்கி: நல்லவைகளிடத்துச் செலுத்துவது எதுவோ, அதுவே அறிவு” என்பது இதன் பொருள்.

“மனமே அறிவு” என மயங்கியிருப்பதனாலும், மனத்தின் செயல்களனைத்தும் அறிவின் செயல்களெனக் கருதியிருப்பதனாலுமே, மேலே கண்ட ஐயப்பாடுகள் நமக்குத் தோன்றின.

மனம் வேறு அறிவுவேறு என்றும், மனத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றே அறிவு என்றும், மனத்தை அடக்கி ஆள்வதே அறிவு என்றும் திருவள்ளுவர் வகுத்துக் காட்டுவதிலிருந்து நம் ஐயப்பாடுகள் அனைத்தும் அழிந்து ஒழிகின்றன.

மனம் செல்லும் வழிகளைத் “தவறு” என எடுத்துக் காட்டித்திருத்தி நல்வழிசெல்ல அறிவு அறிவுறுத்தினாலும் அதனையும் மீறிச் செயலாற்றும் வலிமை மனதிற்கு உண்டு என்பதை வள்ளுவர், “நன்றின்பா லுய்ப்பது அறிவு” என்ற சொற்களால் கூறாமற் கூறுகிறார்.

திருடனுடைய மனம் திருட எண்ணுகிறது. திருடத் துணிகிறான்; பிறகு திருடுகிறான். திருடும்போது அஞ்சி நடுங்குகிறான், ஏன்? அது தவறு என்று அவனுடைய மனதுக்கு அறிவுறுத்துகிறது. அறிவு உணர்த்தியும், தான் உணர்ந்தும், அறிவின்வழிச் சொல்லாமல், ஆசையால் தூண்டப்பட்ட மனதின் வழிச்சென்று திருடிவிடுகிறான். அறிவையும் மீறி மனம் செயலாற்றும் முறையை விளக்க இஃது ஒன்றே போதுமானதாகும்.

திருடுவது, பொய்சொல்லுவது, இலஞ்சம் வாங்குவது ஏமாற்றுவது, நெறி தவறுவது ஆகியவை எவ்வளவு திறமையாகச் செய்யப்பட்டாலும்; அது அறிவின் செயல் அன்று, ஆசையின் வயப்பட்ட மனதின் செயல் என்றும்: அதன் தவறுகளை உணர்த்தி நல்ல வழியில் செல்லத் தூண்டும் செயலே அறிவின் செயல் என்றும், திருவள்ளுவரின் திருக்குறள் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

கண்டவிடமெல்லாம் கருத்தைச் செலுத்தி ஓடி அலையும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி, நல்வழி நடத்தும் பெற்றோர்கள் அறிவின் உரு ஆவார்கள். துள்ளித் திரியும் இளங்காளைகளை அடக்கி உழவுக்குப் பயன்படுத்தி வரும் உழவன் அறிவுருவாளன் திமிர் பிடித்த குதிரைகளை அடக்கி வண்டியிற் பூட்டி ஒழுங்காகச் செல்லும்படி நடத்துகின்ற வண்டிக்காரனும் அறிவின் உரு மதங்கொண்ட யானையை அடக்கித் தீமை செய்வதினின்றும் விலக்கி நேரான வழியில் நடத்துகின்ற பாகனும் அறிவுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவன் என்று இக் குறளால் அறிய முடிகிறது.

இதிலிருந்து அறிவின் வழிச்செல்லும் மக்கள் அறிவைப் பெற்றவர்கள் என்றும், மனதின்வழிச் செல்லும் மக்கள் அறிவை இழந்தவர்கள் என்றும் நன்கறிகிறோம்.

ஆகவே, தம்பிகளே, தங்கைகளே, உங்களுடைய ஐயப்பாடு என்னாயிற்று? வள்ளுவர் கூறுகிற விடை எப்படி இருக்கிறது? எது அறிவு? என்பது இப்போது விளங்குகிறதா? வள்ளுவர் காட்டும் அறிவு உங்கள் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா?

எடுங்கள் திருக்குறளை, படியுங்கள் நன்றாக. மனம், செல்லும் வழியெல்லாம் செல்லாமல், அறிவு செலுத்தும் வழியில் செல்லுங்கள். செய்வன செய்து சிறப்பெய்தி வாழுங்கள்.

வாழட்டும் தமிழகம்!