உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் கட்டுரைகள்/சான்றாண்மை

விக்கிமூலம் இலிருந்து
திருக்குறள் கட்டுரைகள்

சான்றாண்மை


இன்னா செய்தார்க்கும் இனியேவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?

திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அது தமிழகத்தின் செல்வம். அதன் திரண்ட கருத்தெல்லாம் ஒன்றே ஒன்று. அது மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும் என்பது. அத்தகைய பண்பு.களில் ஒன்றே சான்றாண்மை. அதனையுடையவரே சான்றோர்.

தமிழகம் சான்றோரைத் தனது நாட்டுச் செல்வமாக கொண்டிருக்கிறது. சேரநாடு வேழமுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சோழநாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது ஒளவையின் வாக்கு. இதிலிருந்து நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும், தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை நன்கு உணரலாம்.

சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.சான்றாண்மைத் தன்மை, தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு, தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது.

ஆண்மை, ஆண் தன்மை; பெண்மை, பெண் தன்மை, ஆண்மையை வீரத்திற்கும், பெண்மையை அன்பிற்கும் ஒப்புக் கூறுவது உலக வழக்கு. என்றாலும், ஆண்மை என்பது வீரத்திற்கும் வலிமைக்கும் மட்டும் வேண்டுவதன்று; அஃது அன்புக்குஞ் சகிப்புத் தன்மைக்குங்கூட வேண்டப்படும் ஒன்று. அப்போதுதான் அந்த ஆண்மை சான்றாண்மையாக மாறுகிறது.

ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுந் தன்மை என்பது பொருள். வாளாண்மை வாளை ஆள்வதும். தாளாண்மை தாளை ஆள்வது, வேளாண்மை (வேளை) மண்ணை ஆள்வதும், சான்றாண்மை தன்னை ஆள்வதுமாகும். ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று. நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்! அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர். அக் குணங்களில் எதுவுந் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வருபவர் சான்றாண்மையுடையோர். சான்றாண்மை உள்ளவரே சான்றோர். சான்றோர் என்பவர் உயர்ந்தோர். உயர்ந்தோரையே உலகம் என்பர்.

உலகின் பிற நாடுகள் யாவும் (மெஜாரிடிக்கு) மிக்க எண்ணிக்கைக்கு உயர்வு தருகின்றன. தமிழகம் மட்டும் (மைனாரிடிக்கு) குறைந்த எண்ணிக்கைக்கு உயர்வு தருகிறது. இந்த உண்மையை, “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” என்று தமிழ்த் திருமறையும், “சீலம் இனிதுடையான் ஞாலம் எனப்படுவான்” என்று திரிகடுகமும் கூறி மெய்ப்பிக்கின்றன. இந்தக் கருத்து, இன்றைய ஜனநாயகக் கொள்கையுடைய நாடுகளை நடுங்க வைத்து விடும்.

சான்றாண்மை என்பது, மற்றவர் பின்பற்றும்படி நடந்து காட்டிய ஆண்மை என்றும், சான்றோர் என்பவர் பிறருக்குச் சான்றாக வாழ்ந்தோர் என்றும் பொருள் கூறினாலும் தவறாகாது. என்றாலும், சான்ற என்ற சொல் “சிறந்த” என்ற பொருள்களிலேயே கையாளப் பெற்றிருக்கின்றது. இவ்வுண்மையை “தகை சான்ற சொல்”, “உரை சான்ற நூல்”, “வாய் சான்ற பொருள்” என்ற சொற்களால் நன்கறியலாம்.

சான்றாண்மைக்குத் தமிழகம் தந்த பெருமை மிகப் பெரியதாகும், “தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாதே” -என்பது அறிஞர் நல்லாதனார் கொடுத்த அடி “நல்ல மகனாய்ப் பிறந்தும் சும்மா திரியாதே; சான்றோன் எனத்திரி” என்பது ஒளவையின் வாக்கு. “ஆண்டு பலவாகியும் என் தலையில் ஏன் நரையில்லை தெரியுமா? நான் வாழும் ஊரில் சான்றோர் பலர் வாழ் கின்றனர்” என்பது புறநானூறு காட்டும் புதுமை. பெருமையில் அடங்காதவை பலசான்றாண்மையில் அடங்கியிருக்கின்றன என்பது வள்ளுவர்பெருமான்கருத்து.

பிற நூல்களைக் காட்டிலுந் திருக்குறளில் சான்றாண்மைக்கு உயர்ந்த இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறது. இது வள்ளுவரது உள்ளத்தில் சான்றாண்மை பெற்றிருந்த தனி இடத்தையே நமக்கு அறிவிக்கிறது. திருக்குறளில் 100 ஆம் அதிகாரமாகப் பண்புடைமை கூறப்பெற்றிருக்கிறது. இது “முழு மனிதன் நூறாண்டு வாழ்வான்:முழு மனிதன் பண்போடு வாழ்வான்” என்று கூறுவதுபோல இருக்கிறது. இதற்கு முன்னே 99 ஆம் அதிகாரமாகச் சான்றாண்மை கூறப் பெற்றிருக்கிறது. இது சான்றாண்மை இன்றேல் மனிதப் பண்பே இல்லையென்று கூறுவதுபோல இருக்கிறது. அதுவும் 90, 91,92, 93, 94, ஆம் அதிகாரங்களில் பெரியாரைப் பிழையாதே; பெண் வழி மயங்காதே; பொருட் பெண்டிர்த் தழுவாதே; கள்ளை உண்ணாதே; சூதை விரும்பாதே என அறிவுறுத்தி, 96 ல் குடிப்பெருமை எடுத்துக்காட்டி 97, 98ல் மானத்தையும், பெருமையையுங் கூறிப் பிறகு 99ல் சான்றாண்மையை விளக்குஞ் சிறப்பு எண்ணி மகிழக் கூடியதாகும். 

சான்றாண்மைக்குப் பிற புலவர்கள் தருகின்ற விளக்கத்தைவிட வள்ளுவர் நல்கும் விளக்கம் மாசு அற்றதாகக் காணப்படுகிறது. சான்றாண்மைக்கு மட்டுமல்ல, முத்தியடைவதற்குங்கூட மூன்று வழிகளை விளக்கினார் ஒரு புலவர் அது, “வாயின் அடங்குதல் துப்புரவாம், மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம், பொய்யின்றி நெஞ்சமடங்குதல் வீடாகும்” என்பது. இதன் பொருள்! “உள்ளத்தால் தீமைதனை ஒரு பொழுதும் எண்ணாதே, வாயால் தீமைதனை ஒரு பொழுதுஞ் சொல்லாதே! உடலால் தீமைதனை ஒரு போதுஞ் செய்யாதே!” என்பதாகும். வள்ளுவர் விளக்கத்தில், ‘தீமை’ என்ற சொல்லுக்கே இடமில்லாது போயிற்று. அவர், ‘கடன் என்ப நல்லவை எல்லாம்’ எனக்கூறிப் போனார். ‘யாருக்கு?’ ‘சான்றாண்மை மேற்கொள்பவர்க்குக் கடன் என்ப நல்லவை எல்லாம்’ என்பது அவரது வாக்கு. இது கேட்போரது உள்ளத்தையும் மிக உயர்த்தி மகிழ்விக்கிறது.

சான்றோரை நமக்குக் காட்டுவது அவரது குணநலனே. பிற நலன்கள் அல்ல. கல்வி, கேள்வி, செல்வம் அழகு, வண்டி, வாகனம், ஆடை அணிகலன், பட்டம், பதவி முதலிய நலன்களையெல்லாம் அடக்கி, அதன்மேல் உயர்ந்து நிற்பது குணநலன் ஒன்றேயாகும். குணநலன் இன்றேல், ஒருவன் சான்றோன் ஆகான். அவன் அடைந்த பிறநலன்களால் அவனுக்குச் சிறப்புச் சிறிதுமில்லை என்பது வள்ளுவருடைய முடிவு.

சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல் ஐந்து குணங்களேனும் வேண்டும். அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல், எவரையும் உற்ற உறவாய்க் கொள்ளுதல். இயன்றவரையில் எளியவர்க்குதவுதல், எப்போதும் உண்மையே பேசி மகிழ்தல் என்பன. இவை ஐந்தையும் துண்களாக நிறுத்தி, மேலே சால்பைப் பரப்பி வள்ளுவர் கட்டித் தந்த கட்டடமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சான்றாண்மைக் கட்டடமாகும்.

‘இவை ஐந்தையும் பின்பற்ற முடியாவிட்டாலும், இரண்டு குணங்களையாவது கைக்கொள்ளுங்கள்; அது போதும் சான்றாண்மைக்கு என்று வள்ளுவர் கூறுகிறார் ஒன்று; உயிர்களைக் கொல்லாதே; மற்றொன்று; பிறர் தீமை சொல்லாதே என்பன. முன்னதை நோன்பு என்றும், பின்னதை சால்பு என்றும் அவர் கூறுகிறார். இதிலிருந்து கொல்லர் நலத்தைவிடப் பிறர் தீமை சொல்லா நலமே சிறந்தது என்றுந் தெரிகிறது. வாள் இல்லாத ஒருவன் கொல்லாது இருந்துவிடக்கூடும். நா இருந்தும் தீமை சொல்லாதிருப்பதே ஆண்மையாகும். வாள்முனை கண்டவரை மட்டுமே கொல்லும்; நா முனை கோட்டை கட்டி வாழ்பவரையும் கொன்று குவித்துவிடும். அத்தகைய வலிமையுடைய நாவை அடக்கி ஆள்வதும், எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி வாழ்வதுமாகிய இரு குணங்களேனும் சான்றாண்மைக்கு வேண்டாமா? என வள்ளுவர் சலுகைகாட்டி வேண்டுகிறார்.

இந்த இரண்டையுங்கூடச் செய்ய முடியாவிட்டால் ஒன்றையாவது செய்யுங்கள் என்று, வள்ளுவர் இரக்கங் காட்டி வேண்டுகிறார் அது, தீமை செய்தவனுக்கு நன்மை செய்துவிடு என்பதே இஃது அவனுக்குப் பெரிய தண்டனை என்றும் அவர் கூறுகிறார். அது மட்டுமன்று; வேறு தண்டனைகளால் அவனைத் திருத்த முடியாது; இத்தண்டனையால் அவன் கட்டாயம் திருந்தியே விடுவான் என்றும் நம்புகிறார். அவனால் உனக்கு நன்மை; உன்னால் அவனுக்கு நன்மை; இருவரால் நாட்டிற்கும் நன்மை.இந்தப் பண்பு ஒன்று மட்டும் உன்னிடந்தோன்றி விட்டால், நீ வறுமையிற் கிடந்து உழன்றாலும் உனக்கு இழிவு வராது; மாறாக சிறப்பேமிகும். “இந்த ஒன்றுகூட உன்னாற் செய்ய முடியாமற் போகுமானால், நீ மனித னாய்ப் பிறந்து தான் என்ன?” என்று அவர் வருந்திக் கேட்பது உள்ளத்தையே உருக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

கனவு என்பது பெரும்பாலும் நடவாததையும்,நடக்க முடியாததையுந் தழுவியிருக்கும். நனவு என்பது பெரும்பாலும் நடந்ததாகவும் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். வள்ளுவர் காண்பதில் எதுவுங் கனவு இல்லை; யாவும் நனவே எனத்துணிந்து கூறப் பலர் முன் வருவார்கள். ஆனால் வள்ளுவர் கண்ட கனவை அவர்கள் அறிவார்களா?

“நாற்புறமும் கடல் நடுவே ஒரு தீவு அதில் ஆயிரக்கனக்கான மக்களின் கூட்டம் அவருள் ஆண்மையுடையோர் சிலர். அவருள்ளும் சான்றாண்மையுடையோர் இரண்டொருவர். அவர்களும் தங்கள் பண்பின் மாறு நீட்டு, சால்பிற் குறைந்து, சான்றாண்மையில் சிறிது குன்றிப்போய் விட்டவர்கள். அவ்வளவுதான்; அங்கு நடந்தது என்ன தெரியுமா? உடனே அத்தீவு அங்குள்ள மக்களைத் தாங்க முடியாமல் தடதடத்துத் தவித்தது மறுவிநாடியே அந்நிலம் பிளந்து கடலிலேயே ஆழ்ந்து போய்விட்டது” என்பதே அவர் கண்ட கனவு. அவரது கனவை அவரது வாயாலேயே கேளுங்கள். “சான்றவர் முன்றாண்மை குன்றின் இரு நிலத்தான் தாங்காது முன்னோ பொறை” என்பது சான்றாண்மை அதிகாரத்தில் இறுதியாகக் கூறிய குறள். எப்படி வள்ளுவர் கண்ட கனவு?

ஊழிக்காலம் வந்து, கடலும் மலையும் தம் நிலை பெயர்ந்தாலும், நற்குணம் படைத்த சான்றோர்கள் தங்கள் நிலை தவறுவதில்லை. அப்படித் தவறினால், உலகம் பொறுப்பதுமில்லை என்று வள்ளுவர் பெருமான் சான்றாண்மையை அதன் பண்போடு கூறி முடிக்குத் தன்மை சான்றாண்மைக்கே ஒரு தனிச்சிறப்பை அளிக்கின்றது.

திருக்குறளில் சான்றாண்மையானது, அவ்வதிகாரத்தில் மட்டுங் கூறப்பட்டில்லை; அந்நூல் முழுவதுமே சான்றாண்மையாகக் காட்சியளிக்கிறது சான்ற, சான்று, சான்றவர், சான்றோர், சான்றோரான் என்ற சொற்களைப் பலவிடங்களிற் காணலாம். நாட்டாண்மை, நகராண்மை, ஊராண்மை, வாளாண்மை, வேளாண்மை, போராண்மை யெல்லாங் கண்ட வள்ளுவர், அவற்றைச் சிறிதாக்கிப் பிறர்மனை நோக்காத பேராண்மை என்று ஒரு பெரிய ஆண்மையைக் கூறியிருப்பது ஆணுக்கு அறமும், ஆண்மைக்கு இலத்கணமும் ஆகும். எந்த குற்றஞ் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானெனில், ஒரு சிறு குற்றமும் பொறாத சான்றோர் முன்னே அவன் என்னாவான்? என்று வள்ளுவர் நம்மிடம் வந்து கேட்கிறார். அது மட்டுமன்று? குடிகாரனிடஞ் சென்று, ‘தம்பி நீ சான்றோரால் வெறுக்கப்பட வேண்டுமானால் குடி!’ என்றுங் கூறுகிறார். எத்தனையோ விளக்குகளைக் கண்டும், அவன் சிறந்த ஒளிகளைப் பார்த்தும் வள்ளுவர் அவற்றைப் போற்றாமல், சான்றோர் உள்ளத்தே தோன்றும் பொய்யா விளக்கே விளக்கு என வியந்து கூறுகிறார். தன் மகனை ஈன்ற பொழுதைவிடச் ‘சான்றோன்’ எனப் பிறருங் கூறக் கேட்ட பொழுதுதான், ஒரு தாய் பெருமகிழ்ச்சியடைவாளாம். இதைக் கூறும்பொழுது தாயின் மகிழ்ச்சியைவிட வள்ளுவர் அடையும் மகிழ்ச்சியே நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுகாறும் கூறியவாற்றால், சாள்றாண்மையின் தன்மை, அதற்கு தமிழகத்தில் உள்ள சிறப்பு, அதற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம், இதற்குரிய இடம், அதை அடையும் வழி, அதனாற் பெறும் பேறு ஆகிவைகளை ஒருவாறு அறியலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கட் குலத்திற்கு வள்ளுவர் தந்த பெருஞ் செல்வமே நமது திருக்குறள். மக்கள் அதனைப் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது எனது விருப்பம். அதனைச் செய்து தந்து உதவிய வள்ளுவரை வாயார வாழ்த்த வேண்டும். என்பது எனது வேண்டுகோள். பழந்தமிழகத்தில்நிலைத்து நின்ற சான்றாண்மை இன்றும் நின்று நிலவி, எதிர்காலத்தும் வளர்ச்சி பெற்று, சான்றோர் வாழும் நாடாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் சான்றாண்மை!