திருக்குறள் செய்திகள்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து

அணிந்துரை
தமிழவேள் புலவர் இராம. சுப்பிரமணியன், எம்.ஏ. அவர்கள்
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி - ஓய்வு

தொலைபேசியில் ஒலிகேட்டது; பேராசிரியர் ரா.சீயின் பேச்சுத் தொடர்ந்தது; “திருக்குறள்செய்திகள்” என்னும் நூல் எழுதுவதாய் அறிவித்தார்; சில வரிகள் படித்தார்; வியப்பில் ஆழ்ந்தேன். ‘அரிய தொண்டு’ என்று கூறிப் பாராட்டினேன். வாழ்த்தினேன்.

டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர் 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர்; அவர் தலைமையில் பணியாற்றும் பேறு எனக்குக் கிடைத்தது; எந்தவித முரண்பாடும் அவரிடம் நான் கண்டதே இல்லை. காட்சிக்கெளியர்; இன் சொல்லினர்; பழகற்கினியர்; பண்பாளர்; நான் மதிக்கும் பேராசிரியருள் ஒருவராய் அவரைக் கருதிவருகிறேன்.

அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கிவருகிறது: மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது. மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்றும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு

நிலம்’. ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப் பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது.

1991முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.

இத்தகு எழுத்துப் பின்னணியில் அதன் உச்சகட்டமாய்த் ‘திருக்குறள் செய்திகள்’ எனும் இவ் வரைநடை நூல் வெளிவருகிறது; இம் முயற்சியே கவர்ச்சியாய் இருக்கிறது. “இதற்கு வரவேற்பு உண்டு” என்று வாழ்த்தினேன; பாராட்டினேன்.

நூல் வந்ததும் பேராவலொடு புரட்டிப் பார்த்தேன்; ஒரு காவியத்தைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அறநெறி கூறும் அறிவுநூலை ஒரு காவியமாயத் தந்திருப்பதனைக் காண்கிறேன்; இதற்கு அவரது தனித்தமிழ் நடையே காரணம் என்பதனை அறிகிறேன்; ‘உரைநடைக்கும் யாப்பும் அணி நலமும் அமைக்க முடியும்’ என்பதனை அவர் எழுத்தில் காணமுடிகிறது.

திருக்குறள் பாக்களை அச்சிடாமல் ஆற்றொழுக்காய்த் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருப்பது புதுமுயற்சியாகும்; டாக்டர் மு.வ. தெளிவுரை தந்தார்; இவர் அதனைத் தொடர்ந்து செய்திகளைமட்டும் தந்திருக்கிறார். இந் நூல் இன்றைய தேவை; இதனால், இஃது ஓர் அரிய சேவையாயும் அமைந்திருக்கிறது; மீண்டும் என் பாராட்டுகள்: வாழ்த்துகள்: வாழ்க பல்லாண்டு!

இராம. சுப்பிரமணியன்

சென்னை - 106
1–8–1994