திருக்குறள் செய்திகள்/100

விக்கிமூலம் இலிருந்து

100. பண்புடைமை

‘பண்’ என்னும் சொல்லில் இருந்து பண்பு என்னும் சொல் உண்டாகி இருக்க வேண்டும். பண் இசை எனப்படும்; இனிமை தருவது பண்புடைமை. அந்த இனிமை எவ்வாறு உண்டாகிறது?

எளிமையாகப் பழகு; மற்றவர்கள் உன்னைப் பார்க்க இடம்கொடு; கெடுபிடி கூடாது; பண்புடைமை தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காட்டும்; நற்சொற்களும், செயல்களும் பண்புடைமை எனப்படும்.

மனிதன் என்பதற்குக் கை, கால், கண் இவை தக்கன வாக அமைந்தால் மட்டும் போதாது; நற்பண்புகளும், செயலும் அவனிடம் அமைவதே மனிதன் என்பதற்கு வேண்டிய அடையாளங்களாகும்.

நீதியும் நன்மையும் நிலவச் செயல்படுவார் பண் புடையார் எனப்படுவர். அவர்களை உலகம் பாராட்டும்.

பகைவனாயினும் அவனை நகைத்துப் பேசாதே; விளையாட்டுக்குக் கூட மற்றவர்களை எள்ளிப் பேசி விடாதே, அஃது உன் பண்பைக் கெடுத்துவிடும்.

பண்புடையார் இருப்பதனால்தான் இந்த உலகம் வாழும் தகுதி பெற்றிருக்கிறது; இல்லாவிட்டால் மண் புகுந்து புரையோடிப்போகும். அரம்போலும் கூரிய அறிவு படைத்தவராக இருக்கலாம்; மக்கட் பண்பு இல்லாதவர் மரம் போல்வர் ஆவர்; நல்லுணர்வு அற்றவராகக் கருதப்படுவர்.

பகைவனாக இருந்தாலும் அவனிடம் நகைமுகம் காட்டுவது நற்பண்பு ஆகும்; பண்பு கெட எந்தத் தீமையும் செய்யக்கூடாது. சிரித்துப் பழகுவது சீர்மை பயக்கும்; நகைத்து மகிழ முடியாதவர்க்கு உலகம் பகலாயினும் இருட்டாகத்தான் தெரியும். பண்பு இல்லாதவன் செல்வம் மிகுதியாகப் பெற்றிருந்தாலும் அது பயன்படாது; களிம்பு பொருந்திய கலத்தில் பால் பெய்தால் அது யாருக்கும் பயன்படாது; திரிந்து கெட்டுவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/100&oldid=1106519" இலிருந்து மீள்விக்கப்பட்டது