திருக்குறள் செய்திகள்/103

விக்கிமூலம் இலிருந்து

103. குடிசெயல் வகை

குடிப்பெருமை என்பது அதில் பிறந்த மகன் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தது ஆகும். தனக்கு உள்ள புகழ், செல்வம், கல்வி இவை போதும் என்று ஒதுங்கிவிடக் கூடாது.

குடும்பம் என்பது ஆலமரம் போன்றது, அதனில் ஒதுங்கி வாழ்பவர் பலர்; சிலருக்குத் திறமை இருக்கலாம். சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். வாய்ப்புகள் ஒருசிலருக்கே அமைகின்றன. அவர்கள் தன்னலம் கருதாது குடும்ப நலம் கருதி உழைப்பது கடமையாகும்.

“எனக்கு என்ன வந்தது? எது எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்” என்பவன் கடமையில் இருந்து நெகிழ்பவன் ஆகிறான். கருமம் செய்வது தன் கடமை என்று எவன் கொள்கிறானோ அவனே விரும்பத் தக்கவன்; பெருமைக்கு உரியவன் ஆகிறான்.

விடாமுயற்சியும், கடின உழைப்பும், நிறைந்த அறிவும் குடியை உயர்வு பெறச் செய்யத் தேவையாகும்.

குடியை உயர்த்துவேன் என்று முற்பட்டுச் செயலில் இறங்கினால் தெய்வமும் அவனுக்கு உறுதுணையாக நின்று உதவி செய்யும். அஃது அவனை வந்து தாங்கிக் கொள்ளும். அவனுக்குத் தான் மேற்கொண்ட காரியம் சிரமம் இன்றி எளிதில் கைகூடிவிடும்.

11

நேர்வழியில் உழைத்துக்குடியை உயர்த்துபவனை உலகம் உயர்த்திப் பாராட்டும்.

நல்ல ஆளுமை என்பது ஒருவனுக்குத் தான் பிறந்த குடியை உயர்த்தும் தன்மையை ஒட்டியது ஆகும்.

போர்க்களத்தில் வீரர்க்கே பெருமை; வீட்டுச் சூழலில் எதனையும் தன் மேலே போட்டுக்கொண்டு தயங்காமல் உழைப்பவனையே எதிர்பார்த்து நிற்பர்.

“எப்பொழுது செய்வது?” என்று காலம் கருதிக் காத்துக் கொண்டிருக்க மாட்டான். பருவம் அவனுக்குத் தேவை இல்லை; “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சோம்பிக் கிடப்பவர்க்கு எந்த நன்மையும் கிடைக்காது.

“நானா வேலை செய்வது? எனக்கு இஃது அவமானம்” என்று நடப்பது தக்கது ஆகாது; குடும்பத்துக்குத் தொடர்ந்து உழைப்பவன் துயரங்களைத் தடுக்கும் கவசம் போன்றவன் ஆவான். அடுத்துத் தாங்கும் ஆள் இல்லாத குடும்பம் துன்பம் வந்தால் சரிந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/103&oldid=1106524" இலிருந்து மீள்விக்கப்பட்டது