திருக்குறள் செய்திகள்/120

விக்கிமூலம் இலிருந்து

120. தனிப்படர் மிகுதி
(தனிமை தரும் துயரம்)

தலைவி கூற்று

“காதலரைப் பிரியாமல் மகிழ்ந்து வாழ்பவர் கொடுத்து வைத்தவர்; எனக்கு அப் பேறு அமையவில்லை.”

“பயிருக்கு மழைநீர் தரும் ஆதரவு போன்றது காதலர் காட்டும் பரிவு; அந்த வாய்ப்பு எனக்கு இல்லை.”

“பிரிவுத்துயர் பெரிது அன்று; காதலர் அருள் இருக்கிறது என்றால் எந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.”

“காதலரின் விருப்பமும் விழைவும் இல்லாத மகளிர், வருந்தும் வாழ்க்கையே வாழ்வர்; வருந்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.”

“அவர் என்னைக் காதல் செய்யாமல் நான் மட்டும் அவர்மீது பிரியம் வைத்துக்கொண்டிருந்தால் யாருக்கு என்ன நன்மை பயனில்லாத வாழ்வு.”

“ஒருதலைராகம் இசை தாராது; இருபக்கம் காதல் இருந்தால் அது காவடிபோலச் சுமையாக இருந்தாலும் தாங்க எளிதாகும்.”

“மன்மதன் நடுநிலை பிறழ்ந்துவிட்டான்; அவன் நீதி குன்றுகிறான்; ஒருவரை மட்டும் வாட்டி வதைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?”

“கணவரோடு இனிமையாக உரையாடிக் கொண்டிராமல் பிரிந்து உழல்கின்ற பெண்கள் கல் நெஞ்சு உடையவர் ஆவர்."

“அவர் எனக்கு அருள் செய்யாமல் இருக்கலாம்; அவர் கடமை காரணமாக அடையும் வெற்றி புகழைச் சேர்க்கிறது; அஃது எனக்கு இனிக்கிறது.”

“நெஞ்சமே! உன் மடத்தனத்துக்கு இரக்கப் படுகிறேன். உன்னோடு உறவு கொள்ளாதவரிடம் ஏன் துன்பத்தைக் கூறுகிறாய்? வீண் முயற்சி; அதனைவிட இந்தக் கடலையே நீ தூர்த்துவிடலாம். அரிய சாதனையாக அமையும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/120&oldid=1107144" இலிருந்து மீள்விக்கப்பட்டது