திருக்குறள் செய்திகள்/125

விக்கிமூலம் இலிருந்து

125. நெஞ்சொடு கிளத்தல்

தலைவி கூற்று

“நெஞ்சே இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து நீ அறிந்து சொல்வாயாக!”

“நெஞ்சே! அவருக்கு நம்மிடம் காதல் இல்லை; நீ மட்டும் அவர் பின்னால் சென்றுகொண்டிருக்கிறாய்! நீ என்ன சாதிக்கப் போகிறாய்? சொல்லுக.”

“நெஞ்சே! அவர் வருகையை நினைத்து நீ வருந்திக் கொண்டிருந்தால் ஆகப்போவது என்ன? அவர் இங்கு வரப்போவது இல்லை; நம்மைப்பற்றி அவர் நினைத்து வருந்துவதாகவும் இல்லை.”

“நெஞ்சே! நீமட்டும் அவரிடம் செல்ல எண்ணுகிறாய்; என் கண்கள் அவரைக் காணத் துடிக்கின்றன, அவற்றையும் அழைத்துச் செல்; அவை இங்கே அடம்பிடிக்கின்றன.”

“காதலர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நாம் வெறுத்து ஒதுங்கி வாழ முடியுமா? முடியாது.”

“காதலரைக் காணும்போது பொய்யாகச் சற்று ஊடி நில் என்று கூறினேன்; உன்னால் அவரை விளையாட்டுக்குக் கூட வெறுத்து ஒதுக்க முடியவில்லை. நீ அவரைக் கொடியவர் என்று இப்பொழுது என்னிடம் கூறுகிறாய; இது வெறும் நடிப்பு.”

“காதல் அதனை விடவேண்டும்; அதனை விடமுடியாது என்றால் வெட்கத்தை விட்டு வெளிப்படையாகப் பேச வேண்டும். எதையாவது ஒன்றனை நெஞ்சே செய்க.”

“பிரிந்தவர் நமக்கு அருள் செய்யார்; அவர்பின் நீ செல்வது ஏன்? மடமைதான்.”

“உள்ளத்தில் காதலர் இருக்கும்போது நீ வெளியே எங்கே சென்று தேடப்போகிறாய்? வீண் முயற்சி.”

“முற்றும் துறந்துவிட்டார்; இனி நாம் என்ன செய்ய முடியும்? அவரை நினைந்து நினைந்து அழகை இழக்க வேண்டியதுதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/125&oldid=1107157" இலிருந்து மீள்விக்கப்பட்டது