திருக்குறள் செய்திகள்/133

விக்கிமூலம் இலிருந்து

133. ஊடல் உவகை

தலைவி கூற்று

“அவரிடத்துத் தவறு இல்லை; எனினும் அவர் அன்பைப் பெற ஊடுதல் தேவையாகிறது.”

“ஊடல் அது துன்பம் தரத்தான் செய்யும்; அவர் காட்டும் அன்பு சற்று வாடினும் அது பெருமை உடையதே ஆகும்.”

“மண்ணோடு மழைநீர் கலத்தல் போல் எம் அன்புடைய நெஞ்சம் கலந்துவிட்டது. அவரோடு ஊடுவது ஒப்பற்ற இன்பமாகும்; விண்ணவருக்கும் இந்த வாய்ப்பு அவர்கள் உலகத்தில் கிடையாது.”

“கூடலுக்கு இடையே அமையும் ஊடல் அஃது என் உள்ளத்தை உடைக்கும் ஈட்டி ஆகும்.”

“தவறு இல்லை அவர்மாட்டு எனினும் சற்று ஊடலின் காரணமாக விலகி இருப்பதில் ஒர் இன்பம் உள்ளது.”

தலைவன் கூற்று

“உணவு உண்பதனைவிட அது சீரணித்தல் இன்பம் தருவதாகும். கூடலைவிட ஊடல் இன்பம் பயக்கும்.”

“ஊடலில் தோற்றவர் அவர்க்கு அத் தோல்வி நன்மையதே; கூடலில் வெற்றி காண்பர்.”

“மற்றும் ஒரு முறை ஊடியபின் கூடுவோம்; அது புதிய இன்பம் தரும்.”

“அழகிய ஆபரணம் அணிந்த என் தலைவி ஊடிக் கொண்டே இருப்பாளாக; அதற்கு ஏற்ப இந்த இரவு நீடித்துக்கொண்டே இருப்பதாக!”

“ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதனோடு நிற்கக் கூடாது; மறுபடியும் கூடுதல் பெற வேண்டும்; அதுவே இன்பமாகும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/133&oldid=1107188" இலிருந்து மீள்விக்கப்பட்டது