உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/18

விக்கிமூலம் இலிருந்து

18. வெஃகாமை

பிறரை வஞ்சித்துப் பொருள் ஈட்ட நினைத்தால் அவன் குடி கெடும்; குற்றங்கள் சேரும்.

நேர்மை தவறாதவர்கள் மிக்க பயனைக் கருதிப் பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.

அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள். நிலைத்த இன்பம் இவை பயக்கா.

தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்பவர் தம் வறுமையைப் போக்கப் பெருமை கெடும் செயல்களில் ஈடுபட மாட்டார்; பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள்.

நூல் பல கற்றவரும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பிறரிடம் கைநீட்டிப் பொருள் கேட்டுத் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். இவர்கள் தம்மைக் கற்றவர் என்று கூறிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது?

அருளறத்தில் நம்பிக்கை வைத்து வாழ்பவன் பொருள் வேட்கையில் நம்பிக்கை வைத்துப் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது தகாது; அஃது அறமாகாது.

பிறர் பொருளைத் தவறான வழியில் பெற்றுச் சேர்த்து வைக்கும் பொருள் நிலைக்காது; கைக்கெட்டுவது வாய்க்கு எட்டாமற் போய்விடும்.

பிறரிடம் கையேந்திப் பொருள் சேர்த்தால் தம்மிடம் உள்ள பொருளும் கைவிட்டுப் போகும்; அவரவர் தத்தம் உழைப்பால் உயர்வது உறுதி தரும்.

பிறரை வஞ்சிக்காதவன்; அவனைத் திருமகள் தேடி வருவாள்; நாடியதை அவள் தந்து அவனை உயர்த்துவது உறுதி.

சிந்தனை அற்று நிந்தனை தரும் செயலாகிய பிறர் பொருளை விரும்புவது அழிவைத் தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறன் பொருள் வேண்டா என்ற உறுதியான கொள்கை உடையவனாக இருந்தால் அதுவே வாழ்க்கையில் வெற்றிதரும்; பெருமிதத்தோடு வாழ முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/18&oldid=1106299" இலிருந்து மீள்விக்கப்பட்டது