திருக்குறள் செய்திகள்/2
வானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை; அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர்.
உண்பவர்க்கு உணவு படைத்துத் தருவது மழை; பருகுவதற்குப் பயன்படுவதும் மழையே, மனித உயிர் வாழ்வுக்குத் தனித்து உதவுவது மழையேயாகும்.
வான்மழை பொய்த்துவிட்டால் இந்த உலகுதான் எப்படி வாழ முடியும்? பசி இதனை வாட்டுவது உறுதி.
கார் காலத்து மழை பெய்யாவிட்டால் ஏர் பிடித்த உழவன் என்ன செய்ய முடியும்? உழவும் வேறு வழி யில்லாமல் அழிவுதான் பெற வேண்டும்.
ஆவதும் அழிவதும் மழையாலே, மழையின் துளி விழவில்லை என்றால் பசும்புல்லும் தலை காட்டவே காட்டாது.
ஆழநீர்க் கடல்தான்; அதுவும் மழை இல்லாவிட்டால் பாழ்பட்டுப் போகும்; அதன் தன்மை திரியும்; அழுகிவிடும்; மழைநீரே அதனைப் புதுப்பிக்கும்.
வானம் வறண்டுவிட்டால் தானம் இல்லை; தருமம் இல்லை; கோயில் இல்லை; பூசை இல்லை; மணி ஓசையும் இல்லை.
நீர் இல்லை என்றால் உயிர் வாழ்க்கை இல்லை; அதன்பின் அவரவர்தம் ஒழுக்கம் கடைப்பிடிக்க இயலாது; அறத்துப் பாலே மழைக்கு அப்பால்தான்.