திருக்குறள் செய்திகள்/35

விக்கிமூலம் இலிருந்து

35. துறவு


செல்வமும் இளமையும் யாக்கையும் நிலைப்பது இல்லை என்பதை உணர்பவர் உலகத் தளைகளினின்று விடுபட நினைப்பர். எது எதிலிருந்து விடுபட முடியுமோ அது அதனின்று விடுபடுவதே துறவு ஆகும். ஒருசிலர் வீட்டைத் துறக்கின்றனர்; இல்வாழ்வைத் துறக்கின்றனர்; அரச வாழ்வைவிட்டு அறக்கோட்டங்களை நாடுகின்றனர்; பாசபந்தங்களை நீக்கித் தேச பந்துக்களாக மாறுகின்றனர்.

துன்பங்களினின்று விடுபடவே துறவை மேற் கொள்கின்றனர். மறுபடியும் துன்பம் தரும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஒழுக்கம் உயர்வு தருகிறது; ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அறிவைப் பெருக்குதல் துறவு ஆகும். முதற்கண் ஐம் புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு காமநுகர்வைக் கைவிட வேண்டும். துறவிக்கு இஃது அடிப்படையாகும்.

மற்றொன்று அவன் தனக்கு என்று வாழும் மன நிலையை மாற்றிக்கொண்டு, பிற உயிர்களுக்குத தொண்டு செய்யவே வாழ்கிறோம் என்ற மனநிலையைப் பெற வேண்டும். அதற்குத் ‘தான்’, ‘தனது’ என்னும் செருக்குகள் முதலில் அவனைவிட்டு நீங்கவேண்டும். அப்பொழுதே அருளறத்தில் அவன் நின்று நிலைபெற முடியும்.

அடுத்தடுத்துப் பற்றுகள் நீங்கி வாழவேண்டும்; உறவுகளைவிட்டு விலகி வாழவேண்டும். எதனையும் விலகி நின்று ஆராய்ந்தால்தான் தெளிவு ஏற்படும்; மயக்கம். நீங்கும்.

காவி உடை அணிந்துகொண்டு காணிநிலம் வாங்கினால் அவனைத் துறவி என்று கூறமுடியாது. ஆண்டிக்கு அம்பாரம் கணக்குத் தேவை இல்லை; உண்பது ஒருவேளை: உடுப்பது நான்கு முழம்; எளிமை அவன் பின்பற்றும் வழியாக இருக்கவேண்டும். செல்வ வாழ்வின் சுகபோகங்களுக்கு அடிமையாகாமல் தொண்டு வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் காணவேண்டும். எந்தக் காரியம் செய்தாலும் அதில் பற்றுக் காட்டாமல் செயல்பட வேண்டும்.

பற்றுகள் நீங்குவது எளிதன்று; உலகப் பற்றுகள் நம்மைவிட்டு விலக மேலான ஒரு பொருளைப் பற்றிக் கொள்ளவேண்டும். அதனைப் பரம்பொருள் என்று கூறலாம். இறைப்பற்று மிகுந்தால் இந்தப் பாசச்சிறை கழன்று விடுதலை பெறமுடியும்; பிறப்பு என்னும் தளையினின்றும் விடுபடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/35&oldid=1106333" இலிருந்து மீள்விக்கப்பட்டது