திருக்குறள் செய்திகள்/40
கல்வி என்பது கற்றுக்கொள்வது; அஃது அறிவுக்குத் துணை செய்வது. கற்கும் நூல்கள் நீதிநூல்களாக இருப்பது நல்லது; அவை உணர்த்தும் அரசநீதிகளை அரசன் பின்பற்றினால்தான் ஆட்சி செம்மையாக அமையும்.
கல்வி என்பதை எண்ணும், எழுத்தும் என இருவகையாகப் பிரிக்கலாம். அவை மக்கள் உயிர்வாழ்வுக்குக் கண் போன்றவை ஆகும்.
கல்வி அறிவு தருவதோடு இன்பமும் பயக்கிறது. நூல் நயங்களைப் புலவர்கள் எடுத்துக் கூறும்போது அவை கேட்போரை மகிழ்விக்கின்றன. அவர்கள் சொல்லாடச் சோர்வு நீங்குகிறது. அவர்கள் முத்துகளைப் போன்ற கருத்துகளை எடுத்துக் கூறும்போது அவை சிந்தனையைத் தூண்டுகின்றன; புலவர்கள் அளவளாவுவதே தனி இன்பம்.
கல்வி கற்பது சிரமமான காரியம்தான்; ஆசிரியர்களை அணுகி அடக்கமாக நின்று கேட்டு அறிவு பெறவேண்டும். அரசன் மகனாக இருந்தாலும் ஆசான்முன் அடங்கியிருந்தே கற்கவேண்டும். அறிவுப்பசி அவனைத் தூண்ட வேண்டும். விடாமுயற்சியும், பலகால் கேட்டு அறிவுபெறும் பயிற்சியும் தேவையாகின்றன.
கல்வி ஊற்றுப் போன்றது; மணலின்கண் தோண்டும் கேணிநீர் எடுக்க எடுக்கக் குறையாது; தோண்டத் தோண்டச் சுரந்துகொண்டே இருக்கும். கல்வியும் அத்தகையதே; கற்கக் கற்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு அளவே இல்லை.
கற்றோர்க்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்புக் கிடைக்கிறது. அவர்களுக்கு யாதும் ஊரே; யாவரும் உறவினர் ஆகின்றனர்; கல்விக்குக் கரையே இல்லை; வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். பயிற்றுவதும் இன்பம் பயப்பதாகும்.
செல்வம் மிகையானாலும் பகைதான் உண்டாகும்; அஃது அழியக் கூடியது; கைமாறக் கூடியது. கல்வி பலருக்கும் பயன்படுகிறது; ஏழு தலைமுறைக்கும் அது சென்று பயன்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வம் கல்வி ஆகும்.