திருக்குறள் செய்திகள்/48

விக்கிமூலம் இலிருந்து

48. வலி அறிதல்

எடுத்துக்கொண்ட செயலின் வலிமை, தன் வலிமை, பகைவரின் வலிமை, இரு பக்கமும் உதவி செய்யக் கூடியவர்தம் வலிமை இவற்றை எல்லாம் ஆராய்ந்து, தனக்கு வெற்றி கிடைக்கும் என்றால்தான் அந்தச் செயலில் இறங்கலாம்.

‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்பது பழமொழி; செயல் இத்தகையது என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும்; பின் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும்; அவர்கள் எதனையும் சாதிக்க முடியும்.

நம்பிக்கையும் ஊக்கமும் மட்டும் கைகொடா; வினை வலிவுடையது என்றால் அதற்கு எளியவரால் ஈடு கொடுக்க இயலாமல் போகலாம்; பாதிவழிக் கிணறு தாண்டி இடையில் விழுபவரும் உண்டு.

நேரிற் சென்று தக்க துணைவரோடு செயல்படாமல் தன்னைத் தானே வியந்துகொண்டால் கடையை இழுத்துப் போட்டு மூட வேண்டியதுதான்.

மயிற்பீலி பெய்த வண்டியும் பாரம் மிகுமானால் அது முறிந்துவிடும். மரத்தின் நுனிக்கு மேலும் ஏறியவர் மேலே ஏறினால் விழுந்து கை கால் முரிய வேண்டியதுதான்.

எந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கும் பொருள் வேண்டும்; அப் பொருளைக்கொண்டு முதலீடு செய்கிறாய்; அளவறிந்து செயல்படுக; பணியாளர்க்கு அளவோடு ஊதியம் தருக; வருவாய்க்கு மீறிய செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அளவறிந்து வாழாவிட்டால் திடீர் என்று கவிழ்ந்துபோக நேரிடும். பிறர் உதவியைத் தேடித் தாராளமாக நடந்துகொண்டால் சேர்த்துவைத்த சேமிப்பு பூஜ்யம் ஆகிவிடும். எதுவும் உன் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டால் உழைப்பும் உறுதியும் முயற்சியும் எல்லாம் பாழாகிவிடும். யாருக்குமே நன்மை கிடைக்காமல் போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/48&oldid=1106372" இலிருந்து மீள்விக்கப்பட்டது