திருக்குறள் செய்திகள்/51
ஓர் ஆளை வேலைக்கு அமர்த்த அவன் விவரப் பட்டியலைக் கேட்டுப் பெறுக.
திருட்டுப் புத்தி எப்படி? நாலு பேரை விசாரித்து அறியவும்.
இன்ப வேட்கையனா? பெண்ணைக் கண்டதும் கண்ணைத் திறந்து பார்த்தால் பரவாயில்லை; கண்ணியத் தோடு நடந்துகொள்வானா? இன்பத் துறையில் எளியனா?
தொடை நடுங்கியாக இருந்தால் அவன் எதற்கும் உதவமாட்டான். ‘ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்’ என்று அடிக்கடி கேட்பவனாக இருந்தால் அவனை ஏற்க வேண்டா; கோழையாக இருப்பான்.
தருமத்தில் நம்பிக்கை உள்ளவனா? நல்லது கெட்டது அறிந்து யோக்கியனாக நடந்துகொள்வானா? அதற்குத் தக்க நற்சான்று இதழ் கேட்டுப் பெறுக. அதாவது அவன் நற்குடியில் பிறந்தவனா? அவன் சூழ்நிலை சுற்றுப்புறம் எப்படி? படிப்பும் பட்டமும் ஆராய்க.
பட்டம் பெற்றவனாக இருந்தால் மட்டும் போதாது; தொழில் திறமை இருக்கிறதா? இதனைக் கேட்டு அறியவும்.
குறை இல்லாத மனிதரே இருக்க முடியாது; குணம் குற்றம் இவற்றை ஆராய்க; சிறு குறைகள் இருக்கலாம்; அவற்றைப் பொருட்படுத்தாதே.
“நான் அநாதை; சுற்றம் இல்லாதவன்; அக்குதொக்கு இல்லை” என்றால் பக்கத்திலேயே சேர்க்காதே. அவன் பழிக்கு நாணமாட்டான்; வழிக்கு வரமாட்டான்.
உறவுக்காரன் என்றால் வீட்டோடு வைத்துக் கொள்ளவும்; அலுவலகத்தில் அனுமதிக்காதே. அங்கு அவன் பிறர் வேலைகளில் தலையிடுவான்; வீட்டில் உன் மனைவியிடம் கோள் மூட்டுவான்; அதிகாரம் அனைத்தும் அவன் கையில் கொண்டுவர முனைவான்; மற்றவர்களைப் பற்றிக் கோள் சொல்வான்.
இவ்வளவும் அவனுக்கு வைக்கப்ப்ட்ட தேர்வுகள்: அதற்கப்புறமும் அவனைச் சந்தேகித்துக் கொண்டிருந்தால் நீ உருப்படமாட்டாய். அவன் தொழிலைச் செய்து முடிப்பான்; உன் தலையீடு அடிக்கடி கூடாது. அப்புறம் அவன் சுயமாகச் சிந்தித்துத் தொழில் செய்யமாட்டான்; பொறுப்பைத் தட்டிக் கழித்து உனக்குச் சுமை கொடுப்பான். நீ ஒவ்வொன்றிலும் தலையிட்டால் அந்த ஆள் தேவையே இல்லை.