திருக்குறள் செய்திகள்/57

விக்கிமூலம் இலிருந்து

57. வெருவந்த செய்யாமை (அச்சுறுத்தல் செய்யாமை)

குற்றவாளிகளைத் தண்டிப்பது அரசனின் கடமை யாகும்; அளவுகடந்து அவர்களுக்கு தண்டனை விதிக்கக் கூடாது. கடுமையாகத் தண்டிப்பது போலத் தோற்றம் அளிக்க வேண்டும்; ஆனால் அதில் கடுமை இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கும்போது பிரம்பை வேகமாக மேலே ஓங்குவார்கள்; அடிக்கும்போது மெல்லவே அடிப்பார்கள்; அச்சம் ஊட்ட வேண்டும்; ஆனால் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடாது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்; சிறைக்கைதி என்றால் அவர்களை அடித்துத் துன்புறுத்தலாம் என்பது கூடாது. அதிகாரிகள் தட்டிக் கேட்கலாமே தவிர முட்டிக்கு முட்டி அடிக்கக் கூடாது.

அதேபோலக் குடிமக்களிடமும் கடுமை காட்டக் கூடாது. அவர்கள் குறைகள் கூறச் சந்திக்க விரும்பினால் வந்து கவனிக்க வேண்டும்; காட்சிக்கு எளிமையாக அவர்களுக்கு அமைய வேண்டும்; கடுகடுத்த முகத்தோடு அவர்களை நடுங்க வைக்கக் கூடாது.

அரசன் சினத்தினால் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது; விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது; தக்க அமைச்சருடன் கலந்து யோசித்தே எதனையும் முடிவு எடுக்க வேண்டும்; தன்னிச்சையாக எதையும் செய்வது நல்லது அன்று.

நாட்டுத் தற்காப்புக்கு அரண்கள் தக்கபடி அமைக்க வேண்டும். பகைஅரசர் எளிதில் வந்து தாக்கி மக்களை அவதிக்கு உள்ளாக்க இடம் தரக்கூடாது. கடமைகளைச் செய்யத் தவறுவதும் கொடுஞ்செயலாகும்.

தீயவர்களைத் துணையாகக் கொண்டு ஆட்சி செலுத்தக் கூடாது; முரடர்களைக் கும்பல் சேர்த்துக் கொண்டு அவர்கள் கைப்பாவையாக இயங்கக் கூடாது; அவர்கள் ஆட்சிக்குச் சுமையாவர்; அரசன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/57&oldid=1106392" இலிருந்து மீள்விக்கப்பட்டது