திருக்குறள் செய்திகள்/66

விக்கிமூலம் இலிருந்து

66. வினைத்தூய்மை
(செயலில் தூய்மை)

உனக்கு உன் நண்பர்கள் உதவி செய்யலாம்; ஆனால் நீ எடுத்துக்கொண்ட செயல், அதனின் தூய தன்மை, அதனைப் பொறுத்துதான் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. வினை தூயதாக இருக்க வேண்டும்.

புகழும நன்மையும் தாராத செயலை எப்பொழுதுமே தொடங்கக் கூடாது; வாழ்க்கையில் உயர விரும்புபவர் புகழ் கெடக்கூடிய செயலில் இறங்கவே கூடாது.

தெளிந்த அறிவுடையவர்கள் இடர்கள் மிகுதியாகப் பெற்றாலும் இழிவான செயல்களை மேற்கொள்ள மாட்டார்கள். ஏன் இதனைச் செய்தோம் என்று இரங்கத்தக்க வகையில் ஒரு காரியத்தைச் செய்யாதே; தவறிச் செய்து விட்டால் அதனை மேலும் தொடராதே.

பெற்ற தாய் பசித்தாலும் அதற்காக நீ தாழ்ந்து போகாதே; அவளை வாழ்விக்கவும் தவறு செய்யாதே; பழியோடு கூடிய செயல் செல்வத்தைக் குவிக்க உதவினாலும் அது மதிக்கத்தக்கது அன்று. சான்றோர் வறுமை அவர்களுக்குப் பெருமை தரும். பிறர் அழும்படி வருத்தி ஈட்டிய செல்வம் நிலைக்காது; நல்ல வழியில் ஈட்டியவற்றை இழந்தாலும் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

வஞ்சித்துப் பொருளைச் சேர்த்து வைப்பது பச்சை மண்குடத்தில் நீர் சேமித்து வைப்பதுபோல் ஆகும்; அது நிற்காது; நாலாவழியும் கசிந்து போகும்; பொருள் நசிந்து போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/66&oldid=1106425" இலிருந்து மீள்விக்கப்பட்டது