திருக்குறள் செய்திகள்/77

விக்கிமூலம் இலிருந்து

77. படைமாட்சி

மனைமாட்சி, இறைமாட்சி இவற்றைப்போன்று ஒரு புதிய சொல்லாட்சி இது. அரசனுக்கு வேண்டியது படைமாட்சி. போர்ப் படையின் நற்குண நற்செயல்கள் இங்குக் கூறப்படுகின்றன.

படை என்பது எல்லா வகையிலும் முழுமை பெற்றுள்ளதாக இருக்கவேண்டும். ஆள்மிகுதி, போர்க் கருவிகள் மற்றும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. படைவீரர்கள் துன்பங்களுக்கு அஞ்சக் கூடாது; வெற்றி பெற்றுத் தரவேண்டும், அத்தகைய துணிவும் ஆற்றலும் தேவைப்படுகின்றன.

படைவீரர்கள் தொடை நடுங்கிகளாக இருக்கக் கூடாது. இடையில் ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதனை அவர்கள் பொருட்படுத்தக்கூடாது. இந்த மனநிலை வீரமரபில் பிறந்த குலத்தினருக்கே வாய்க்கும்.

படை மிகுதி கண்டு அஞ்சத் தேவை இல்லை; எலிகள் கூட்டமாக வந்தாலும் நாகம் அஞ்சுவது இல்லை. அது வெறும் மூச்சுவிட்டாலே அவை நடுங்கிவிடும்.

போர்முனையில் திடீர் என்று அச்சம் ஆட்கொள்ளச் செயலிழப்பர் சிலர்; அந்த நிலைமை தோன்றக்கூடாது; அச்சம் என்பது அறவே கூடாது; பகைவரை முறியடிக்கும் செயலாற்றல் வேண்டும்.

கூற்றுவனும் தன்னை எதிர்க்க வந்தாலும் அதற்கு மாற்று என்று மதிக்கும் படி படைதிரண்டு நிற்க வேண்டும்; மாற்றரசன் முன்னேற அஞ்சும்படி செய்ய வேண்டும்.

மறம், மானம், சிறந்த வழிகளில் இயங்குதல், தெளிவு பெறுதல் இந் நான்கும் கொண்டது படையின் தன்மை.

எதிரியின் தூசிப்படை (முன்னணிப்படை) மிக்க வலிமை உடையது; ஆயினும் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் நாட்டில் படைவீரர்களுக்கு இருத்தல் வேண்டும். அலைகள் வரும்போது தடுத்து நிறுத்துவதே அணைகள் கட்டியதன் பயனாகும்.

அடுகின்ற ஆற்றலும், மற்றவர்கள் விடுகின்ற படையைத் தாங்கும் வலிவும் இல்லாவிட்டாலும் வீரர்களின் தோற்றம் ஏற்றம் உடையதாக இருக்க வேண்டும். ஆளைக் கண்டே பகைவர் நடுங்க வேண்டும்.

அரசனுக்கு உரிய படை அளவில் சிறிதாக இருத்தல் கூடாது. வீரர்களுக்கு அரசனிடம் தொடர்ந்த வெறுப்பும், தமக்குப் பற்றாக்குறையும் இருத்தல் கூடாது; இவை நீங்கிய மனநிறைவு உடைய படையே வெற்றி கொள்ளும்.

படைமாட்சி உடையதாயினும் அதனை இயக்கும் படைத் தலைவன் தக்கவனாக அமைய வேண்டும்; தலைமையும் சிறப்பாக இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/77&oldid=1106463" இலிருந்து மீள்விக்கப்பட்டது