திருக்குறள் செய்திகள்/85
பேதைமை என்பது முற்றிலும் அறியாமை. புல்லறிவாண்மை என்பது தெரிந்தும் தவறாக நடப்பது. முட்டாள் என்று ஒருசிலரை அழைத்துவிடுகிறார்கள்; யார் இந்த ஆள்? எப்படி அவன் இருப்பான்? என்ன அப்படி அவன் தவறு செய்கிறான்? எதனை வைத்து இவன் அறிவின்மையைச் சாடுகிறார்கள்? இதுவும் வறுமையில் ஒரு வகை என்றே கூறலாம்.
இவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டான்; இவனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது.
இவன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான்; பகை வரும் அத்தகைய கேடு செய்யமாட்டார்கள்.
படிப்பு அரைகுறை; எதனையும் சரியாகப் படித்து அறியமாட்டான். ஆனால், தான் மேதாவி என்று சொல்லிச், செருக்குக்கொள்வான்.
எதனையுமே அவனால் மறைக்கத் தெரியாது; நல்ல காலம் உடம்பை மறைக்க ஆடையாவது கட்டி இருக்கிறான்; எல்லாவற்றையும் கொட்டிவிடுவான். எது சொல்லலாம்; எது கூடாது என்பனவற்றை எண்ணிக்கூடப் பார்க்க மாட்டான்.
யார் பேச்சையும் கேட்கமாட்டான்; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பான்; மற்றவர்கள் உண்டு என்றால் இவன் இல்லை என்பான். எதனையும் மறுத்துப் பேசுவது அவனுக்குப் பழக்கமாகிவிடுகிறது. இந்த அறிவின்மையைச் சுட்டத்தான் மற்றவர்கள் இவனை அறிவிலி என்று அழைக்கின்றனர். அதுவே புல்லறிவு ஆண்மை எனப்படுகிறது.
மற்றவர்கள் புத்தி சொன்னால் அதனைக் கேட்க மாட்டான்; தொடர்ந்து பிழைகளைச் செய்துகொண்டே இருப்பான். பிடிவாதம் அவனுடைய போக்காக இருக்கும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இருக்காது. அதனால் அவன் அந்தக் குடும்பத்திற்குச் சுமையாகி விடுகிறான். நல்லது செய்யாவிட்டாலும் மன்னித்து விடலாம். தொடர்ந்து தவறுகளையே செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது?