திருக்குறள் செய்திகள்/88

விக்கிமூலம் இலிருந்து

88. பகைத்திறம் தெரிதல்

பகையே பொதுவாக இல்லாமல் இருந்தால் கவலை இல்லாமல் உவகையோடு வாழமுடியும்; விளையாட்டுக்குக் கூட வீண் பகை தேடிக்கொள்ளாதே.

வீரர்களின் பகையைத் தேடிக்கொண்டாலும் அறிஞர்களின் பகையைத் தேடிக்கொள்ளாதே.

தனி ஒருவனாக இருந்து பலரோடு பகைகொண்டால் அவன் பித்தம் பிடித்தவன் என்றே மதிக்கப்படுவான்.

பகைவரையும் நட்பினராக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் உடையவன் எல்லா வகையிலும் உயர்வு பெறுவான்.

பகைவர் இருவர்; நீ ஒருவன்; உன்னால் என்ன செய்ய முடியும்? அந்த இருவரில் ஒருவனை உன்பக்கம் சேர்த்துக் கொள். அந்த உறவு தற்காலிகமாகவாவது இருக்கட்டும்; நிலையானது ஆகவாவது இருக்கட்டும்.

நண்பனாகக் கொள்கிறாயோ வேறுபட்டு இயங்குகிறாயோ உனக்கு அழிவு வரும் காலங்களில் அவர்களோடு எந்த உறவும் புதுப்பிக்காதே; நடுநிலைமையில் இருந்து அவர்களைச் சாராமல் இருக்க வேண்டும்.

நண்பன் உன் துன்பத்தை அவனாக அறிந்துகொள்ள வேண்டும்; உன் கஷ்டங்களை அவனிடம் எடுத்து உரைக்காதே; அதேபோல உன் எதிரியிடமும் உன் மெலிவுகளைக் கூறாதே.

செயல்படும் வகை அறிந்து, தன்னை வலிமைப் படுத்திக்கொண்டு தற்காப்பு ஆராயும் இயல்பினர் பகைவரின் செருக்கை அடக்க முடியும்.

முள்மரத்தைத் தொடக்கத்திலேயே களைக; முற்றிய பிறகு களைவது கடினம்; கையை அந்த முள் வருத்தும்.

பகை பெரிது; தீது என்று தெரிந்தும் புறக்கணித்து விட்டால் எதிரிகள் தக்க சமயம் பார்த்து உன்னை ஒழித்துவிடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/88&oldid=1106495" இலிருந்து மீள்விக்கப்பட்டது