திருக்குறள் செய்திகள்/91

விக்கிமூலம் இலிருந்து

91. பெண்வழிச் சேறல்
(அடிமை இன்மை)

உன் மனைவிக்கு ஏவல் செய்து நீ அடிமையாகாதே. அவளுக்கு உலக நன்மை முன் நிற்காது. தன் சொந்த நலன் தான் அவள் கருதுவாள்.

நீ துணிந்து ஒரு தரும காரியம் செய்ய முடியாது; அவள் உன்னைத் தட்டிக் கேட்பாள்.

உழைத்துச் சேர்த்த பணம்; அவள் ஊதாரித் தனமாகச் செலவு செய்வாள். மாடுபோல் உழைக்கும் நீ பின் ஓடு எடுக்க வேண்டிய நிலைக்கு உன்னைத் தள்ளி விடுவாள்.

நாணம் என்பது பெண்மைக்கு அழகு சேர்ப்பது; நீ நாலு பேர் மத்தியில் நாணி வெட்கப்படும்படி உன்னைச் செய்துவிடுவாள், மானம், மரியாதை இவை உன்னை விட்டு விலகிவிடும்.

அம்மா உத்தரவு இல்லாமல் எதனையும் நீ செய்ய முடியாது; உன் செயல்திறன் அடங்கிவிடும்.

அவள் பேச்சுக் கேட்டால் குளிருக்கு அவள் இதம் தருவாள்; வெற்றிலை மடித்துத் தருவாள்; மென்று கொண்டே இருக்கலாம். நீ பாயில் சுருண்டு கிடக்க வேண்டியதுதான். உன் பெருமை எல்லாம் அங்கே படுக்கையில் சுருட்டி வைக்க வேண்டியதுதான். அவள் சிவந்த இதழ் உன்னைக் கருகச் செய்துவிடும்.

அவள் பேச்சைக் கேட்க நீ ஆணாகப் பிறக்கத் தேவை இல்லை; உன்னைவிடப் பெண்பிறப்பே மேல்; பேசாமல் நீயும் சேலை கட்டிக்கொள்; அவளுக்குச் சமமாகவாவது நீ வாழ முடியும்.

நீ மொத்தத்தில் ஒரு பூஜ்யம் ஆகிவிடுவாய்; எண் சேர்ந்தால்தான் இயக்கம் அமையும்; அவள் அந்த எண்ணாக இயங்குவாள்.

சுயமதிப்பும் திடசித்தமும் சிதறாமல் இருக்கச் சுய சிந்தனையோடு செயல்படுக. அவள் பக்கம் அதிகம் சாயாதே; சாயம் ஒட்டிக்கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/91&oldid=1106501" இலிருந்து மீள்விக்கப்பட்டது