திருக்குறள் செய்திகள்/97

விக்கிமூலம் இலிருந்து

97. மானம்

மானம் என்றால் உயர்வு என்று பொருள்படும்; உச்சியை அடைந்தவர் உயரத்தைவிட்டு இறங்க விரும்பமாட்டார்கள். இவர்கள் முதற்கண் குடிப் பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். புகழ் குன்றிவிடும் செயல்களை இவர்கள் எப்பொழுதும் செய்ய மாட்டார்கள்.

செல்வம் பெருகிய காலத்தில் அடக்கமும், சுருங்கிய நிலையில் நிமிர்வும் இருக்க வேண்டும்; தாழக்கூடாது. மானத்துக்குத் தக்க உதாரணம் சொல்ல வேண்டுமா? தலையில் இருக்கம்போது மயிர் சிறப்பு அடைகிறது. அதனை வாரி முடிக்கிறார்கள்; மலரும் இட்டு அழகு செய்கின்றனர். திருப்பதி மொட்டை அவனைக் கேள்; அது தூக்கி எறியும் குப்பை ஆகிவிடுகிறது. மானம் இழந்து தாழ்ந்துவிட்டால் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள்.

மலைபோல் உயர்ந்து இருப்பவர் நிலையில் தாழ்ந்து விட்டால் அவர்கள் குலைந்துவிடுவர்; பிறரை நச்சி வாழும் அளவுக்குத் தாழ்ந்துவிடுவர். சிலர் பகைவரை அடைந்து அவர்கள் காலில் வீழுந்து கிடப்பர். பெருமை கெட்டு விட்டால் பிறரை அண்டி வாழும் நொண்டி வாழ்க்கை மதிப்பற்றது ஆகும். பெருமை அழிந்த பிறகு உயிர்வாழ்க்கை பயனற்றதாகும்; சாவதற்கு வழி தேடலாம்.

கவரிமான் ஒரு மயிர் உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அஃது உயிர் வாழாது என்பர்; மானம் மிக்கவர்களும் தம் பெருமை குன்றுமானால் வாழ்வை முடித்துக்கொள்வர். மானத்துக்காக உயிர்விட்டான் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இவர்கள் உயர்ந்த மதிப்புகளுக்கு வாழ்க்கை நடத்துபவர் ஆகின்றனர். அவர்கள் புகழை உலகம் பாராட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/97&oldid=1106514" இலிருந்து மீள்விக்கப்பட்டது