உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/உரைப்பாயிரம்

விக்கிமூலம் இலிருந்து

திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள் என்னும் முப்பால்

[தொகு]

==பரிமேலழகர் உரை

உரைச்சிறப்புப் பாயிரம்:

[தொகு]
திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர்தங்
கருத்தமைதி தானே கருதி- விரித்துரைத்தான்
பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனு
மன்னு முயர்நாமன் வந்து.

திரு தகு சீர் தெய்வத் திருவள்ளுவர் தம்
கருத்து அமைதி தானே கருதி - விரித்து உரைத்தான்
பன்னு தமிழ் தேர் பரிமேல் அழகன் எனும்
மன்னும் உயர் நாமன் வந்து.

பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ- நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
றெரித்தவுரை யாமோ தெளி.

பால் எல்லாம் நல் ஆவின் பால் ஆமோ? பாரில் உள்ள
நூல் எல்லாம் வள்ளுவர் செய் நூல் ஆமோ? - நூலில்
பரித்த உரை எல்லாம் பரிமேல் அழகன்
தெரித்த உரை ஆமோ? தெளி.

நூல் உரைப்பாயிரம்

[தொகு]
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்.
தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.
அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்.