திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

"திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்" அடியார் ஆசாரியருக்குக் கூறியது. திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க எம்பெருமான் இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி. அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ

அக்ரூரரைப் போலே

2. அகம் ஒழித்து விட்டேனோ

விதுரரைப் போலே

3. தேகத்தை விட்டேனோ

ரிஷி பத்தினியைப் போலே

4. தசமுகனைக் செற்றேனோ

பிராட்டியைப் போலே

5. பிணம் எழுப்பி விட்டேனோ

தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்து இட்டேனோ

கண்டாகர்ணனைப் போலே

7. தாய்க்கோலம் செய்தேனோ

அநுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ

துருவனைப் போலே

9. மூன்றெழுத்து சொன்னேனோ

கந்திரபந்துவைப் போலே

10. முதல் அடியைப் பெற்றேனோ

அகலிகையைப் போலே

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ

ஆண்டாளைப் போலே

12. எம் பெருமான் என்றேனோ

பட்டர்பிரானைப் போலே

13. ஆராய்ந்து விட்டேனோ

திருமழிசையார் போலே

14. அவன் சிறியன் என்றேனோ

ஆழ்வாரைப் போலே

15. ஏதேனும் என்றேனோ

குலசேகரர் போலே

16. யான் சத்யம் என்றேனோ

கிருஷ்ணனைப் போலே

17. அடையாளம் சொன்னேனோ

கபந்தனைப் போலே

18. அந்தரங்கம் சொன்னேனோ

திரிசடையைப் போலே

19. அவன் தெய்வம் என்றேனோ

மண்டோதரியைப் போலே

20. அஹம் வேத்மி என்றேனோ

விசுவாமித்திரரைப் போலே

21. தேவு மற்று அறிவேனோ

மதுரகவியார் போலே

22. தெய்வத்தைப் பெற்றேனோ

தேவகியாரைப் போலே

23. ஆழிமறை என்றேனோ

வாசுதேவரைப் போலே

24. ஆயனை வளர்த்தேனோ

யசோதையாரைப் போலே

25. அநுயாத்திரை செய்தேனோ

அணிலங்களைப் போலே

26. அவல்பொரியை ஈந்தேனோ

குசேலரைப் போலே

27. ஆயுதங்கள் ஈந்தேனோ

அகத்தியனைப் போலே

28. அந்தரங்கம் புக்கேனோ

சஞ்சயனைப் போலே

29. கர்மத்தால் பெற்றேனோ

சனகரைப் போலே

30. கடித்து அவனைப் பெற்றேனோ

திருமங்கையார் போலே

31. குடைமுதலானது ஆனேனோ

அனந்தாழ்வான் போலே

32. கொண்டு திரிந்தேனோ

திருவடியைப் போலே

33. இளைப்பு விடாய்த் தீர்த்தேனோ

நம்பாடுவான் போலே

34. இடைகழியே கண்டேனோ

முதலாழ்வார்களைப் போலே

35. இருமன்னர் பெற்றேனோ

வால்மீகரைப் போலே

36. இருமாலை ஈந்தேனோ

தொண்டரடிப் பொடியார் போலே

37. அவன் உரைக்கப் பெற்றேனோ

திருக்கச்சியார் போலே

38. அவன் மேனி ஆனேனோ

திருப்பாணரைப் போலே

39. அனுப்பி வையும் என்றேனோ

வசிட்டரைப் போலே

40. அடிவாங்கினேனோ

கொங்குப் பிராட்டியைப் போலே

41. மண் பூவை இட்டேனோ

குருவ நம்பியைப் போலே

42. மூலம் என்று அழைத்தேனோ

கஜராசனைப் போலே

43. பூசக் கொடுத்தேனோ

கூனியைப் போலே

44. பூவைக் கொடுத்தேனோ

மாலாகாரரைப் போலே

45. வைத்த இடத்து இருந்தேனோ

பரதனைப் போலே

46. வழி அடிமை செய்தேனோ

இலக்குமணனைப் போலே

47. அக்கரைக்கே விட்டேனோ

குகப்பெருமானைப் போலே

48. அரக்கனுடன் பொருதேனோ

பெரிய உடையாரைப் போலே

49. இக்கரைக்கே சென்றேனோ

விபீடணரைப் போலே

50. இனியது ஒன்று வைத்தேனோ

சபரியைப் போலே

51. இங்கும் உண்டு என்றேனோ

பிரகலாதனைப் போலே

52. இங்கில்லை என்றேனோ

ததிபாண்டனைப் போலே

53. காட்டுக்குப் போனேனோ

பெருமானைப் போலே

54. கண்டு வந்தேன் என்றேனோ

திருவடியைப் போலே

55. இருகையும் விட்டேனோ

திரௌபதியைப் போலே

56. இங்குப் பால் பொங்கும் என்றேனோ

வடுக நம்பியைப் போலே

57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப்

பிள்ளையைப் போலே

58. நில்என்று பெற்றேனோ

இளையாற்றுக்குடி நம்பியைப் போலே

59. நெடுந்தூரம் போனேனோ

நாதமுனியைப் போலே

60. அவன் போனான் என்றேனோ

மாருதியாண்டான் போலே

61. அவன் வேண்டா என்றேனோ

ஆழ்வானைப் போலே

62. அத்வைதம் வென்றேனோ

எம்பெருமானாரைப் போலே

63. அருள் ஆழம் கண்டேனோ

நல்லானைப் போலே

64. அனந்தபுரம் புக்கேனோ

ஆளவந்தாரைப் போலே

65. ஆரியனைப் பிரிந்தேனோ

தெய்வ வாரியாண்டானைப் போலே

66. அந்தாதி சொன்னேனோ

அமுதனாரைப் போலே

67. அநுகூலம் சொன்னேனோ

மாலியவானைப் போலே

68. கள்வன் இவன் என்றேனோ

லோககுருவைப் போலே

69. கடலோசை என்றேனோ

பெரிய நம்பியாரைப் போலே

70. சுற்றிக் கிடந்தேனோ

திருமாலை யாண்டான் போலே

71. சூளுறவு கொண்டேனோ

திருக்கோட்டியூரார் போலே

72. உயிராய பெற்றேனோ

ஊமையைப் போலே

73. உடம்பை வெறுத்தேனோ

திருநரையூராரைப் போலே

74. என்னைப் போல் என்றேனோ

உபரிசரனைப் போலே

75. யான் சிறியன் என்றேனோ

திருமலை நம்பியைப் போலே

76. நீரில் குதித்தேனோ

கணபுரத்தாளைப் போலே

77. நீருகம் கொண்டேனோ

காசி சிங்கனைப் போலே

78. வாக்கினால் வென்றேனோ

பட்டரைப் போலே

79. வாயில் கை விட்டேனோ

எம்பாரைப் போலே

80. தோள்காட்டி வந்தேனோ

பட்டரைப் போலே

81. துறைவேறு செய்தேனோ

பகவரைப் போலே