திருநீலகண்ட பதிகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்


காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்


முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்


மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே
திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே
"https://ta.wikisource.org/w/index.php?title=திருநீலகண்ட_பதிகம்&oldid=1107219" இருந்து மீள்விக்கப்பட்டது