திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்
திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்
[தொகு]இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது.
நூற் சிறப்பு
[தொகு]எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1
மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? - பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க்
கெவ்வேலை வேண்டும் இனி? 2
சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக
அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்? 3
அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக்
கருணையினாற் பாடுங் கவிபோற் - பிரியமுற
வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில்
ஏறுமோ? என்னே இனி? 4
ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி
தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ்
சாத்திடவும் ஓதிடவும் தா. 5
திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது
[தொகு]வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம். 6
நூற் பயன்
[தொகு]ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு. 7
ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால். 8
அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது
[தொகு]பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9
அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது
[தொகு]திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10
நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது
[தொகு]ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன்
பேரால் அருணகிரி பேருலகில் - சீராருந்
தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார். 11
வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத்
தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே - உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக்
கற்பார் கரையேறு வார். 12
திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல்
[தொகு]அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென்
றுரைசெய் திருப்புகழை யோதீர், - பரகதிக்கஃ
தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக்
காணி; பிறவிக் கரம். 13
திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது
[தொகு]திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ. 14
திருப்புகழின் பிரபாவம்
[தொகு]மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15
திருப்புகழடியார் பெருமை
[தொகு]திருப்புகழ் வல்ல சு
ரர்மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16
முற்றும்.