திருப்புமுனை/7

விக்கிமூலம் இலிருந்து

7

இனியனைத் தேடிக்கொண்டு வந்த அருள் தெருமுனை திரும்பவும் இனியன் அங்கே வரவும் சரியாக இருந்தது.

“எங்கே இனியன் போயிருந்தே, உன்னை எங்கேயெல்லாம் தேடறது?”

சற்று சலிப்புடன் இனியனை நோக்கிக் கேட்டான் அருள். அவன் கேட்ட கேள்வியிலிருந்து நீண்ட நேரமாக அவனைத் தேடி அலைந்திருக்கிறான் என்பது இனியனுக்குப் புரிந்தது. அலைந்து வந்த அவனைச் சமாதானப்படுத்தும் வகையில் பதில் கூறினான் இனியன்.

“நம்ம மாணிக்கத்தோட அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமாயிடிச்சுடா. வேலைக்குப் போயிருந்த எங்கப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே சொன்னேன். அவர் உடனே

புறப்பட்டுப் போய் மாணிக்கத்தின் தாயாரை ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய் `பெட்’ல சேர்த்திட்டாரு. நான் மாணிக்கத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு இப்பத்தான் வர்றேன். மாணிக்கம் பாவம்’டா”.

“அது சரி’டா. போட்டிக்குக் கட்டுரை கொடுக்க இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு கட்டுரை எழுதியாச்சா?

அருளின் கேள்விக்கு இனியன் பதில் சொல்வதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் மணி. அருளின் கேள்விக்கு மணி பதில் கூற முனைந் தான்.

“அவனுக்கென்னடா அருள், ச்சூ! மந்திரக் காளி’ன்னு மந்திரவாதி மாங்காயை வரவழைக்கிற மாதிரி,எழுத உட்கார்ந்தா போதும்,கட்டுரையும் முடிஞ்சிடும்; பரிசும் வந்திடும். உ.ம்...”

எனக் கூறிய கையோடு பெரிதாக ஒரு பெருமூச்சுவிட்டான். தொடர்ந்து “நம்மைச் சொல்.” என்று அருளைப் பார்த்து வினா எழுப்பி தன் இயலாமையை வெளிப்படுத்தினான்.

மணி பேசிய தோரணை இனியனுக்கு மனக் கூச்சத்தைக் கொடுத்தது. நேருக்கு நேராக

மணி தன்னைப் புகழ்வது அவனுக்குஎன்னவோ போல் இருந்தது.

“அதெல்லாம் இல்லேடா, மனசிலே நினைக்கிறதை எழுதறேன். அருள்கூட ஒவ்வொரு போட்டிலேயும் ஏதாவது பரிசு வாங்காமல் விடறதில்லையே.”

இனியன் அடக்கமாகப் பதில் கூறினான்.

“இருந்தாலும் எப்பவும் முதற்பரிசு உனக்குத் தானடா கிடைக்குது.” தொடர்ந்து கூறினான் மணி.

“ஏதோ பூவோட சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்'பாங்க. அதுபோல இனியனோட சேர்ந்திருக்கேன்’ல அதனால ரெண்டாவதோ மூணாவதோ, இல்லாட்டி ஆறுதல் பரிசோ கிடைக்குது.”

இனியன் தன்னைப் பாராட்டும் வகையில் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில் தன்னடக்கமாகப் பதில் கூறினான் அருள்.

இனியன் பார்வை மணியை நோக்கிச் சென்றது.

“இந்த ஆண்டு மணிகூட போட்டியிலே கலந்துக்கப் போறான்'டா.”

அருளை நோக்கி வியப்பாகக் கூறினான் இனியன்.

“அதை ஏன்'டா கேக்கிறே தங்கதுரை, கண்ணன், கண்ணாயிரம் இவங்கள்'லாம் போட்டிக்குப் பேர் கொடுத்தாங்க. அவங்க வற் புறுத்தினாங்கன்’னு நானும் பேர் கொடுத்திட்டேன். இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலே. எனக்குக் கொஞ்சம் உதவுடா இனியன்!”

கெஞ்சும் பாவனையில் இனியனை நோக்கி வேண்டுகோள் விடுத்தான் மணி.

மணியின் அன்பு வேண்டுகோள் இனியன் மனதை நெகிழச் செய்தது. அவனுக்கு உதவ இனியன் உள்ளம் துடித்தது, 'என்னோடு என் வீட்டுக்கு வாடா கட்டுரை சம்பந்தமா ஏதாவது புத்தகம் தாறேன், உனக்குப் பயன்படும்,” எனக் கூறி அன்போடு அழைப்பு விடுத்தான்.

“கரும்பு தின்னக் கூலியா? . இப்பவே வர்றேன்'டா, வா போகலாம்.” எனக் கூறி வாய்ப்பை நழுவவிடாது இனியன் வீட்டை நோக்கி அவனோடு நடையைக் கட்டினான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/7&oldid=489835" இலிருந்து மீள்விக்கப்பட்டது